தமிழ் சினிமா

.
1. முத்துக்கு முத்தாக

2. சிங்கையில் ஒரு குருஷேத்திரம்

3. குள்ளநரி கூட்டம்


1. முத்துக்கு முத்தாக


தார் சாலையே கொதிக்கிற வெயில் காலத்தில்தான் தர்பூசணிக்கு மரியாதை! குடும்ப உறவுகள் கேள்விக்குறியாகி வரும் இந்த காலத்தில்தான் இதுபோன்ற படங்களுக்கு வரவேற்பும், வணக்கமும் தேவை! இதையெல்லாம் சொந்த பணத்தில் சொல்ல வந்திருக்கிறார் ராசு.மதுரவன் என்கிறபோது அக்கறையோடு இப்படத்தை அரவணைக்க தோன்றுகிறது.





ஐந்து பெண்ணை பெற்றவன் ஆண்டியாவான் என்கிறது கிராமத்து பழமொழி. ஆனால் ஐந்து ஆண் பிள்ளைகளை பெற்ற இளவரசு-சரண்யா தம்பதிகளின் இறுதிகாலம் என்னவாகிறது என்பதுதான் இந்த படத்தின் க்ளைமாக்ஸ்.

தனது அப்பாவை தரக்குறைவாக பேசிவிட்டான் என்பதற்காக யாரோ ஒருவனை இழுத்துப் போட்டு அடிக்கும் களேபர காட்சியோடு துவங்குகிறது படம். இவ்வளவு பாசமுள்ள ஆண் பிள்ளைகள் அதே பாசத்தோடு வளர, இடையில் வரும் மருமகள்கள்தான் கொள்ளிக்கட்டையை சீப்பாக்கி குடும்பத்துக்கே சிக்கெடுக்கிறார்கள்.

ஐந்து மகன்களில் மூத்தவரான 'நட்டு' வாத்தியார் ஆகிவிடுகிறார். அவருக்கேற்ற 'போல்ட்'டாக சுஜிபாலாவை தேர்ந்தெடுத்து திருமணமும் செய்து வைக்கிறார்கள். பணி காரணமாக பத்து கிலோ மீட்டர் தள்ளி தனிக்குடித்தனம் போய்விடுகிறார் அவர். ஹரிஷ§க்கு வேலை கிடைத்து சென்னைக்கு போய்விடுகிறார். பிரகாஷை வீட்டோடு மாப்பிள்ளையாக வேறு ஊருக்கு அனுப்பிவிடுகிறார்கள். விக்ராந்த் மனைவியின் கட்டாயத்தால் டவுனிலேயே குடியேறிவிடுகிறார். எஞ்சியிருக்கிற வீரசமர், ஒரு கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போய்விட, கூட்டமாக வாழ்ந்த இல்லம், குருவிக்கூடு போலாகிறது.

பாசத்தோடு பேரப்பிள்ளைகளை பார்க்க கிளம்புகிற பெரிசுகளுக்கு மருமகள்கள்களின் நஞ்சு கலந்த வார்த்தையே விருந்தாகிவிட, கண்ணீரும் கவலையுமாக ஊர் திரும்புகிறார்கள். அப்புறம்...? பின்னணி இசையில் ஷெனாய் கிழிய, பிழிய பிழிய அழுகிறது தியேட்டர்.

எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், 'இளவரசு'க்கு இந்த படம்தான் பொருத்தமான சிம்மாசனம். சரண்யா கொடுத்தது விஷம் என்று தெரிந்த பின்பும், ஆத்தா... கறிக்கொழம்பு இன்னைக்கு அம்புட்டு ருசியாருக்கே... என்று பெருமையோடு விழுங்குகிற காட்சியில் தேம்பி அழ வைக்கிறார். சரண்யாவுக்கு மட்டுமென்ன, இதுபோன்ற கேரக்டர்களில் பலமுறை நடித்திருந்தாலும், இந்த படத்தில் இன்னும் ஒரு ஸ்டெப் மேலேறி நின்று கதற வைக்கிறார்.

ஒரு புறம் மனசை கிள்ளிவிட்டு அழ வைத்தாலும், மறுபுறம் வயிற்றை கிள்ளி விட்டு சிரிக்க வைக்கவென்றே கொண்டு வந்திருக்கிறார்கள் சிங்கம்புலியை. ஆள் நடமாட்டம் இல்லாத அத்துவான மைதானத்தில் வேனை நிறுத்தி, வண்டி பத்து நிமிஷம் நிக்கும். டீ காபி சாப்பிடுறவங்க சாப்பிட்டுக்கலாம் என்று அலப்பறை கொடுக்கிறார் மனுஷன். இவரது ஹேர் ஸ்டைலும், காஸ்ட்யூமும், பாடி லாங்குவேஜும் பார்த்த மாத்திரத்திலேயே பற்ற வைக்கிறது சிரிப்பை. டாக்டராக வரும் தேவராஜ் கேரக்டர் இரண்டே சீன்களில் வந்தாலும், மருத்துவர்களின் மார்க்கெட் ரகசியத்தை உடைக்கிறது.

விக்ராந்த்-மோனிகா காதலில் இருக்கிற அழகும், நேர்த்தியும், ஹரிஷ்-ஓவியா ஜோடியிடம் இல்லாமல் போனது துரதிருஷ்டம்தான்.

ஜெயிலுக்கு போன காரணத்தை யாருக்கும் சொல்ல மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் வீரசமர். ஆனால் கோர்ட் வாசலில் நிற்கிற அத்தனை பேருக்கும் கேட்கிற மாதிரி சொல்லி, அந்த லாஜிக்கையும் உடைப்பதுதான் ஐயகோ. இவரால் கொலையுறப்படும் ரகுவண்ணன் இன்னும் நன்றாக நடித்திருக்கலாம்.

கவி பெரியதம்பி இசையில் என்ன பண்ணி தொலைச்சே... விசேஷம்! பின்னணி இசையில் 'சின்ன' தம்பியாகி விட்டதுதான் சோகம். யு.கே செந்தில் குமாரின் ஒளிப்பதிவு வழக்கம் போல அழகு. படத்தொகுப்பு சுரேஷ் அர்ஸ் என்கிறது டைட்டில். நம்ப முடியாத அளவுக்கு இழுவை.

அந்த காலத்து மாடர்ன் தியேட்டர்ஸ் மாதிரி தனக்கென்று சில நடிகர் நடிகைகளை வைத்துக் கொண்டு திரைப்பயணம் செய்கிற வித்தை தெரிந்திருக்கிறது ராசு மதுரவனுக்கு.

இது பாலிஷ் போடாத முத்து!

ஆர்.எஸ்.அந்தணன்

2. சிங்கையில் ஒரு குருஷேத்திரம்


ஒரே மிக்சியில் அடிக்கப்பட்ட பாலையோ, விஷத்தையோ ருசித்துக் கொண்டிருந்த கோடம்பாக்கத்து ரசிகர்களுக்கு இந்த சிங்கப்பூர் இறக்குமதி படம் திடீர் ஷாக் கொடுத்திருக்கும். ஏனென்றால் நிழல் உலக கதை வரிசையில் நிஜம் சொல்லும் படம் இது. அதுவும் யதார்த்தம் பிசகாமல்!

மலேசியா, சிங்கப்பூரின் வனப்பு மிகு பில்டிங்குகளையும், ஆடம்பர அலட்டல்களையும் மட்டுமே இதுவரை பார்த்து வந்திருக்கிறோம். அங்கேயும் ஒரு மர்ம பிரதேசம் உண்டு என்பதை மிகவும் டீட்டெயிலாக சொல்லியிருக்கிறார்கள். போதை பவுடர் கடத்துகிற கும்பல்களுக்கு குடும்ப உறவுகள் கூட இரண்டாம் பட்சம்தான். சமயம் கிடைத்தால் அவர்களையே கூட பகடைக் காயாக்கி விடுவார்கள் என்பதையெல்லாம் பார்க்க பார்க்க பகீரென்கிறது.

மாமாவின் வற்புறுத்தலால் போதை மருந்து கடத்தி சிறை செல்லும் அம்மா பிறகு து£க்கிலிடப்படுவதை கண்டு ஆத்திரப்படும் சிறுவன், வளர்ந்து பெரியவனாகி மாமாவை போட்டு தள்ளுவதுதான் கதை. ஆச்சர்யம் என்னவென்றால் வளர்கிற வரைக்கும் இவனுக்கும் மாமாவின் போதை கடத்தல்தான் தொழில். சென்ட்டிமென்ட் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை. அதற்காகவே மன வளர்ச்சி குன்றிய சிறுவன் ஒருவனை துணைக்கு வைத்துக் கொள்கிறார்கள்.

இப்படத்தில் கவனிக்கப்பட வேண்டியவர்களில் முதலிடத்தில் இருப்பவரும் இந்த மனவளர்ச்சிய குன்றிய சுப்ராதான். இவர் ஒரிஜனலா, நடிப்பா என்பதையே உணர முடியாதளவுக்கு குழப்பியடிக்கிறார். அப்புறம் விஷ்ணு. படத்தின் நாயகனே இவர்தான். முகத்தில் எந்நேரமும் ஒரு இறுக்கம். பாடி லாங்குவேஜில் நடிகர் சூர்யா என்று பளிச்சென்று கவனிக்க வைக்கிறார். க்ளைமாக்ஸ் சண்டையில் இவரும் மாமாவும் மாறி மாறி தாக்கிக் கொள்வதை அவ்வளவு நிஜமாக பதிவு செய்திருக்கிறார்கள். சண்டை இயக்குனரை தனியாக முதுகில் 'தட்டிக்கொடுக்கலாம்!'

மாமா கேரக்டரில் வரும் சிவகுமார்தான் கேங் லீடர். வயிற்றில் குத்துப்பட்ட பின்பும் மருமகனை வெறியோடு தாக்கி இருவரும் செத்துப் போகிற காட்சி பகீரென்கிறது. சமூக சேவகி அவமானத்திற்கு அஞ்சக்கூடாது என்று சொல்லப்படுவதும், கடைசியில் அந்த சிறுவன் சமூக சேவகி கையில் ஒப்படைக்கப்படுவதும் மன நிறைவு. சிங்கப்பூர் போதை தடுப்பு போலீசின் அதிரடி ஆக்ஷன்களுக்கும், அந்த போலீஸ் அதிகாரியின் தத்ரூபமான நடிப்புக்கும் ஒரு சபாஷ்.

அமானுஷ்ய பீதியை வரவழைக்கிறது லுகாஸ் ஜொடானின் ஒளிப்பதிவு. ரஃபியின் பின்னணி இசையும் அதற்கு வலு சேர்த்திருக்கிறது.

கன கச்சிதமான படம். டிடிஎஸ் ஒலிப்பதிவு இருந்திருந்தால் இன்னும் மிரட்டலாக இருந்திருக்கும்.

-ஆர்.எஸ்.அந்தணன்


3. குள்ளநரி கூட்டம்


நதியில் விழுந்த பூ மாதிரி சலனமில்லாமல் செல்லும் திரைக்கதை. ஆங்காங்கே அள்ளி வீசப்படும் நகைச்சுவை என்று இந்த நரிக்கூட்டத்தில், ஆளை மிரட்டும் ஊளை சப்தம் இல்லை என்பதுதான் முதல் அட்ராக்ஷன்! முதல் பாதி ஒரு கதையும் இரண்டாம் பாதி ஒரு கதையுமாக தொடர்வதும், இரண்டுமே மனசை இடறிவிட்டு போவதுமாக ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல படம்!

எம்பிஏ படித்துவிட்டு வேலை தேடும் விஷ்ணுவுக்கு சொல்லி வைத்தாற் போல காதல் வருகிறது. அதுவும் செல்போனுக்கு டாப் அப் பண்ணும்போது நம்பர் தவறி ரம்யா நம்பீசனின் செல்போனில் ரீசார்ஜ் ஆகிவிட, "ஏங்க... அந்த ஆயிரத்து ஐநு£று ரூபாயை திருப்பி கொடுத்திருங்க. எங்கப்பாவோட பணம்" என்று கெஞ்ச ஆரம்பிக்கிறார் விஷ்ணு. பைசா பாக்கியில்லாமல் வந்து சேர்வதற்கு முன்பாகவே ரம்யா நம்பீசனின் மனசு சுளையாக வந்துவிடுகிறது விஷ்ணுவிடம்! போலீஸ் என்றாலே பிடிக்காத விஷ்ணுவின் அப்பாவுக்கு மகனே போலீஸ் வேலைக்கு போனால்தான் ரம்யா கிடைப்பார் என்பதையெல்லாம் எப்படி ஏற்று கொள்ள முடியும்? விஷ்ணு போலீஸ் ஆனாரா? அப்பா கல்யாணத்துக்கு சம்மதித்தாரா? என்று சுலப முடிச்சுக்களோடு பரபரக்கிறது பிற்பாதி!

இந்த படத்தை பொறுத்தவரை பல காட்சிகள் விஷ்ணுவின் 'டாக் டைம்'தான்! அப்பா கொடுத்த பணம் அநாமத்தாக போய்விட, அதை சமாளிக்க அண்ணனின் கம்பெனியில் கை நீட்டுவதும், பின்பு அதை திருப்பி கொடுப்பதற்குள் அண்ணனை திண்டாட விடுவதுமாக ரவுசு கட்டுகிறார் விஷ்ணு. இவரும் ரம்யா நம்பீசனும் காதல் வளர்க்கிற காட்சிகள் குட்டி குட்டி கவிதைகள்.

பணத்தை கொடுக்க வருகிற ரம்யா நம்பீசன், விஷ்ணுவை பார்த்ததும் தோழியின் தாவணியை உருவி போட்டுக் கொண்டு வந்து நிற்பதெல்லாம் அழகு. அதுமட்டுமா, அவரே மூக்கும் முழியுமாகதான் இருக்கிறார். கோவிலுக்கு வரும் விஷ்ணுவின் குடும்பத்தோடு போட்டோ எடுத்துக் கொள்ள ரம்யா செய்யும் டெக்னிக்குகளை இனி பல ஜோடிகள் ஃபாலோ செய்யக்கூடும்!

பிற்பாதி முழுக்க போலீஸ் அகடமி ரகசியங்கள். அட இப்படியெல்லாம் நடக்குமா என்ற அதிர வைக்கிறார்கள். குறைந்தபட்ச நம்பிக்கையை விதைக்கும் அந்த காட்சிகள் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு திரியும் லட்சிய இளைஞர்களுக்கு பாடம்! ஆனால் திடீரென்று சேரும் நண்பர்கள் ஒண்ணு மண்ணா திரிவதும், பெரிய பெரிய போலீஸ் அதிகாரிகளையே கடத்துகிற முயற்சியில் ஈடுபடுவதும்தான் அஹ்ஹ்ஹ்....

பெரிய நட்சத்திர கூட்டத்தில் தனித்து ஜொலிக்கிறார்கள் விஷ்ணுவின் அம்மாவும், அப்பாவும். தோழியாக நடித்திருக்கும் அந்த ப்ரியா மிதுனும் கூடதான்!

போலீஸ் அதிகாரியின் மகன் நடித்த படம் என்பதாலோ என்னவோ, தமிழ்சினிமாவுக்கு பர்மிஷன் கிடைக்காத நாயகர் மஹால், எம்எல்ஏ ஆஸ்டல் போன்ற இடங்களில் அனுமதி கிடைத்திருக்கிறது. ஆங்... எம்எல்ஏ என்றதும்தான் நினைவுக்கு வருகிறது. சொந்த தொகுதி மக்களிடமே எம்.எல்.ஏ வெளியே போயிருக்காரு என்று சமாளிக்கும் சிட்டிங் எம்எல்ஏ வின் சீன் செம ஜாலி...

லஷ்மணனின் ஒளிப்பதிவு, காசிவிஸ்வநாதனின் எடிட்டிங் இவற்றுடன் சரியான விதத்தில் மிக்ஸ் ஆகியிருக்கிறது செல்வகணேஷின் இசையும். குறிப்பாக விழிகளிலே... பாடல் இந்த வருடத்தின் மனசை வருடும் மெலடி!

டி.வி நிலையத்தில் முடியும் அந்த க்ளைமாக்ஸ்சில்தான் பழைய நெடி. (பல படங்களில் வந்திருச்சே தலைவா) மற்றபடி புதுமுக இயக்குனர் ஸ்ரீபாலாஜி நரிமுகத்தில்தான் விழித்திருக்கிறார்.

-ஆர்.எஸ்.அந்தணன்
நன்றி தமிழ்சினிமா.கொம்

No comments: