தமிழீழ தேசிய அட்டை வழங்கும் நிகழ்வு

.
ஒஸ்றேலியாவில் தமிழீழ தேசிய அட்டை வழங்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது


தமிழீழ தேசிய அட்டை வழங்கும் நிகழ்வு ஒஸ்றேலியாவின் மெல்பேணில் சிறப்பாக 26 மார்ச் 2011 சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

சிறப்பழைப்பாளர்களாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமாகிய பேராசிரியர் செல்வநாதன், நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் ஆலோசகருமான கலாநிதி சிவேன் சீவநாயகம் ஆகியோருடன் ஒஸ்றேலிய தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பேராளர்கள் என பலரும் பங்கெடுத்திருந்தனர்.


முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு பின்னர், புதிய போராட்ட பொறிமுறையாக திறக்கப்பட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகளுக்கு அனைவரும் உறுதுணையாக பயணிக்க வேண்டுமென தமிழ்செயற்பாட்டளர் உதயன் தனது தலைமையுரையில் குறிப்பிட்டார்.

சர்வதேச சூழல் மாறும்போது ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரனையின் உதவியுடன் சர்வசன வாக்கெடுப்பொன்று தமிழர் தாயகத்தில் நடாத்தப்படக்கூடிய சூழநிலை ஏற்படாலம் என எதிர்வுகூறிய துணைப்பிரதமர் பேராசிரியர் செல்வநாதன் அவர்கள், தென்சூடானில் தமிழீழ அரசின் செயற்பாடுகளுக்கு கிட்டியுள்ள அங்கீகாரத்தை இறுக்கமாக பேணி, இன்னும் பல நாடுகளின் அங்கீகாரத்தைப் பெற பாடுபட வேண்டுமென தனதுரையில் குறிப்பிட்டார்.

அடிப்படைக் கோட்பாடுகள் வரையறுக்கப்பட்ட பின்னரேயே, நாடுகடந்த தமிழீழ அரசுக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு, அரசமைப்பு உருவாக்கப்பட்டு, குறுகிய காலத்தில் அதன் செயற்பாடுகள் ஆரோக்கியமானதாக உள்ளதென ஆலோசகர் கலாநிதி சிவேன் சீவநாயகம் அவர்கள் எடுத்துரைத்தார்.

தாயகம்-தேசியம்-தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களுடைய அடிப்படை அரசியல் கோட்பாட்டை தாங்கி நிற்கின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு பாதகமாக அமையாமல், மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பது, ஆரோக்கியமானதாக இருக்குமென ஈழத்தமிழ் சங்கம் சார்பில் உரையாற்றிய தர்மகுலராஜா குறிப்பிட்டார்.

தொடர்ந்து தமிழ்செயற்பாடளர்களான சிவகுமார், மருத்துவர் ராசன் ராசையா, ஈஸ்வரன் கணபதிப்பிள்ளை, ஆகியோர் நாடுகடந்த தமிழீழ அரசின் முக்கியத்துவம் குறித்தும், தமிழ் சமூகத்தின் அரசியல் பங்களிப்புகள் குறித்தும் உரையாற்றினர்.

துணைப்பிரதமர் பேராசிரியர் செல்வநாதன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பரப்புரை பொறுப்பாளர் சபேசன் உட்பட பல தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் தமிழீழ தேசிய அட்டைகளை வழங்கியிருந்தனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பான மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் மக்கள் அரங்காக நிகழ்வுகள் யாவும் உறுதியுரையுடன் நிறைவடைந்தன.

No comments: