இசைக்கலைஞர் மிருதங்க வித்துவான் சந்தானகிருஸ்ணன் கெளரவிக்கப்பட்டார்.


.

அண்மையில் நடைபெற்ற சிட்னி கலாபவனத்தின் பத்தாவது ஆண்டு விழாவில் மிருதங்கக் கலைஞர் கலாபூசணம் ஆறுமுகம்பிள்ளை சந்தானகிருஸ்ணன் கலாதிலகம் எனும் பட்டம் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.

திருமதி சுகந்தி தயாசீலனின் சிட்னி கலாபவனம் கடந்த பத்துவருடங்களாக சிட்னி நகரில் நடன வகுப்புகளை நடாத்தி வருவதுடன் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அரங்க நிகழ்வுகளையும் நடாத்தி வருகிறது.



யாழ். கொக்குவில் கலாபவனத்தில் திருமதி சாந்தினி சிவனேசனின் மாணவியான சுகந்தி தயாசீலன் பின்னர் யாழ். பல்கலைக்கழக நுண்கலைப் பீடத்தில் நடனக்கலையில் பட்டம்பெற்றதோடு வட இலங்கை சங்கீத சபையின் ஆசிரிய தராதரச் சான்றிதழும் பெற்றவர். வேம்படி மகளிர் கல்லூரியில் நடன ஆசிரியராகப் பணியாற்றிய சுகந்தி நியூசிலாந்துக்குப் புலம்பெயர்ந்த போது அங்கு கலாபவனம் எனும் நடனப்பள்ளியை நிறுவி நடனக்கலையைப் பயிற்றுவித்துவந்தார். 2001இல் சிட்னிக்கு குடிபெயர்ந்த பின்னர் சிட்னி கலாபவனத்தை நிறுவி நூற்றுக்கணக்கான மாணவருக்கு நடனக்கலையைப் பயிற்றுவித்து வருகிறார். கலாபவனம் என்ற பெயரில் அவர் நடனப்பள்ளிகளை நடாத்துவது அவரின் குரு மீது கொண்ட அளவிலாத பக்தியைக் காட்டுகிறது. அவரின் மாணவிகள் சிலர் யாழ்ப்பாணம்இ மெல்பேர்ன் மற்றும் நியூசிலாந்தில் தமது சொந்த நடனப்பள்ளிகளை நடாத்தி வருகின்றனர். சிட்னியில் சமூக நிறுவனங்கள் அழைக்கும் போது எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி முழுமனதோடு அவர்களின் கலைவிழாக்களில் தரமான நடன நிகழ்ச்சிகளை வழங்குவதில் சிட்னி கலாபவனம் என்றும் முன்னிற்கத் தயங்கியதில்லை.


இத்தகைய சிறப்புவாய்ந்த நடனப்பள்ளியின் பத்தாவது ஆண்டு விழாவில் ஒரு மூத்த இசைக்கலைஞரைக் கௌரவிக்க வேண்டும் விரும்பியது ஒன்றும் ஆச்சரியமானதல்லவே!

திருமிகு சந்தானகிருஸ்ணன் அவர்கள் இலங்கையில் தொலைத்தொடர்புத் துறையில் பணியாற்றிப் பின்னர் மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில்செய்து ஓய்வுபெற்றவர். தனது சிறுவயது முதலே இசையில் ஈடுபாடுகொண்ட சந்தானகிருஸ்ணன் அவர்கள் தனது தந்தையார் புகழ்பூத்த நாதஸ்வரக்கலைஞர் மூளாய் ஆறுமுகம்பிள்ளயிடம் இசையினை குருகுலமுறைப்படி பயின்றவர்.

ஈழத்தின் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களான பொன்.சுந்தரலிங்கம், எஸ்.கணபதிப்பிள்ளை, குலசீலநாதன், குலபூசணி கல்யாணராமன், சத்தியபாமா இராஜலிங்கம் முதலானோருடைய அரங்கேற்றங்களின் போது மிருதங்கம் வாசித்துள்ளார். அவுஸ்திரேலியாவிலும் புகழ்பூத்த நடன ஆசிரியர்களான ஆனந்தவல்லி, தமயந்தி, சித்திரா ஆகியோரின் மாணவிகளது நடன அரங்கேற்றங்களுக்கும் மிருதங்கம் வாசித்துள்ளார். மூன்றாவது தலைமுறையினருக்கும் மிருதங்கம் வாசித்த பெருமை இவருக்குரியது.



இத்துணை சிறப்பு வாய்ந்த இசைக்கலைஞரை சிட்னி கலாபவனம் தனது பத்தாவது ஆண்டுவிழாவில் கௌரவிக்க முடிவெடுத்தமை பொருத்தமானதும் பாராட்டவேண்டியதுமான ஒரு செயலாகும். சிட்னியில் தமிழ்க் கல்வி கற்பித்தலில் பத்துவருடங்களாக ஈடுபட்டுவருபவரும், சிறந்த பேச்சாளரும், இலங்கைக் கம்பன் கழகத்தின் முன்னாள் தலைவருமான திரு திருநந்தகுமார் அவர்கள் இவ்விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தார். பிரதம விருந்தினர் கலைஞர் சந்தானகிருஸ்ணனுக்குப் பொன்னாடை போர்த்தி கலாதிலகம் எனும் பட்டம் வழங்கிக் கௌரவித்தார். திருமதி சுகந்தி தயாசீலன் திருமதி இரஞ்சனி சந்தானகிருஸ்ணனுக்கு பொன்னாடை போர்திக் கௌரவித்தார். முன்னதாக தனது உரையில் பிரதம விருந்தினர், சந்தான கிருஸ்ணனின் கலைச் சேவையைப் பாராட்டிப் பேசினார். மூத்த கலைஞர் ஒருவரை அவர் வாழும் காலத்தில் கெளரவிக்கும் பெருமை தனக்குக் கிடைத்தமை தனது பெரும்பேறு எனக் குறிப்பிட்ட திருநந்தகுமார் அவர்கள், சிட்னி கலாபவனத்தின் பெருமைகளையும் சாதனைகளையும் விதந்துரைத்ததோடு, திருமிகு சந்தானகிருஸ்ணனைப் கௌரவிக்கும் கலாபவனத்தின் செயல் ஏனையோருக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகிறது என்றும் குறிப்பிட்டார். “இசைக்கு மொழி இல்லையென்பார்கள். அதனை நான் இன்றைய நிகழ்ச்சியில் கண்ணாரக் கண்டேன். தமிழ் பேசாத, தமிழரல்லாத சிறுமியரும் இன்றைய நிகழ்ச்சியில் பாடல்களுக்கு ஏற்ற பாவத்தோடு நடனமாடியதைக் கண்டு சொக்கிப்போனேன்” என்று குறிப்பிட்ட திருநந்தகுமார்இ “ஆனால் மொழிக்கு இசை தேவை. இசை, நடனம் மூலமும் மொழியைத் தக்க வைக்கலாம். அதனை இசை, நடன ஆசிரியர்கள் மனங்கொண்டு செயற்படவேண்டும்” என்று வேண்டிக்கொண்டார். அவர் நேரடியாக சபையினரைப் பார்த்து ”உங்கள் குழதைகளின் தாய்மொழி எதுவோ அதனைத் தயவு செய்து உங்கள் குழந்தைகளுக்குக் கற்பியுங்கள். தாய்மொழியில் அவர்களோடு உரையாடுங்கள்” என்று ஆங்கிலத்தில் வேண்டுகோள் விடுத்தார். தமிழரல்லாத மாணவிகளையும் அவர்தம் பெற்றோரையும் நோக்கியதாக இந்த வேண்டுகோள் அமைந்திருந்தது.

பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டபோது தனது இருக்கையில் இருந்து எழும்பி ஒரு கணம் நின்று அதனை வாங்கிய சந்தானகிருஸ்ணன் அவர்கள் உடனடியாகவே அமர்ந்துகொண்டார். சுகயீனம் காரணமாக கணநேரமேனும் துணையின்றி நிற்கமுடியாத நிலையிலும் அவர் இவ்விழாவுக்கு வருகைதந்தது அவரின் பெருந்தன்மையையும், கலையின் மீது அவர் கொண்ட அளவிலாப் பற்றையும் காட்டுகிறது.

தன்னைக் கௌரவித்த சிட்னி கலாபவனத்தை மிகச்சுருக்கமாகப் பாராட்டிய கலாதிலகம் சந்தானகிருஸ்ணன் அவர்கள் தனது நன்றிகளைத் தெரிவித்ததோடு, தனது மனைவியினதும் சுகந்தி தயாசீலனினதும் ஊரான இணுவில் மண்ணின் பெருமையையும் தொட்டுக்காட்டி நடன மாணவர்களை வாழ்த்தி விடைபெற்றார். தொடர்ந்து நடனநிகழ்சிகளில் அணிசெய் இசைக்கலைஞர்களாக சிறப்பித்த கலைஞர்களை பிரதம விருந்தினர் திரு திருநந்தகுமாரும், கலாபவன இயக்குநர் சுகந்தி தயாசீலனும் பொன்னாடைபோர்த்தி கௌரவித்தனர்.

பாராட்டு விழாவைத் தொடர்ந்து நடன நிகழ்வுகள் தொடர்ந்தும் நடைபெற்றன.

நீண்டகாலத்தின் பின் இனியதும் பயனுள்ளதுமான ஒரு விழாவைப் பார்த்த நிறைவுடன் சபையினர் வீடு திரும்பினர்.

கலைரசிகன்




























































1 comment:

Anonymous said...

கலாபவனம் நடனப் பள்ளியின் முயற்சிக்குப் பாராட்டுக்கள்
ஈழத்தில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் வந்திருந்த போது அவருக்கு மிருதங்கம் வாசித்த
பெருமைக்குரியவர் திரு சந்தானகிருஷ்ணன் அவர்கள் அந்த மாபெரும் இசை கலைஞனை
கௌரவித்து கலாபவனம் தனது கலை சேவயை நிரூபித்திருக்கிறது.