.
நடிப்பு: விமல், ஓவியா, இளவரசு, சரண்யா, கஞ்சா கருப்பு, திருமுருகன்
இசை: எஸ்எஸ் குமரன்
ஒளிப்பதிவு: ஓம்பிரகாஷ்
தயாரிப்பு: நஸீர்
இயக்கம்: ஏ சற்குணம்
பிஆர்ஓ: நிகில்
விவசாயி மீது ஒட்டியிருக்கும் வயல்சேற்றைப் போல இயல்பான காதலைப் பார்த்து எத்தனை நாளாச்சு… மண்ணும் மனிதர்களும் இயல்பான வாழ்நிலையையும் திரையில் காண முடியாதா? என ஏக்கப் பெருமூச்சு விட்டவர்களுக்காகவே மண்வாசனையுடன் வந்திருக்கிற படம் களவாணி!
பல காட்சிகளில், ‘அட இது எங்கூர்ல நடந்ததுப்பா…’, ‘ஆஹா பங்காளி, இது நம்ம வாழ்க்கைல நடந்ததாச்சே..’ என ரசிகனின் நினைவுகளை றெக்கை கட்டிப் பறக்க வைக்கிறது படம்.
படத்தின் இயக்குநர் சற்குணம் புதியவராம். நம்ப முடியவில்லை. விமர்சனத்துக்குள் போகும் முன்பே இந்த வீரியமிக்க இளைஞரை முதுகு வலிக்கத் தட்டிக் கொடுத்துப் பாராட்டி விடுவோம்.
தஞ்சை மாவட்டத்தின் சமகால கிராமம் ஒன்றில் வழக்கமான தமிழ் இளைஞர்கள் செய்யும் அத்தனை களவாணித்தனங்களையும் செய்து கொண்டு அதகளப்படுத்தும், இளைஞன் அறிக்கி என்கிற அறிவழகன் (விமல்).
மகன் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பதாக நம்பிக் கொண்டு அப்பா (இளவரசு) துபாயில் வேலை பார்த்து பணம் அனுப்ப, அறிக்கியோ ப்ளஸ் டூவை டுடோரியல் கல்லூரி உதவியுடன் கடக்க முயற்சிப்பதை உபதொழிலாகவும், நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு கூட்டுறவுக் கடை உர மூட்டையைத் திருடுவது, சந்தைக்குப் போகும் மாடுகளை களவாண்டு வந்து வயலை உழுவது, கிரிக்கெட் போட்டி நடத்துவதாக ஊரில் வசூல் வேட்டையாடி நண்பர்களுடன் பாரில் நீந்துவது, டாஸ்மாக் பாரில் கஸ்டமர்களிடம் ஆர்டர் எடுப்பது போல் காசடிப்பது, நண்பன் காதலிக்கிறானா இல்லையா என்றுகூட தெரியாமல், அவன் விரும்பிய பெண்ணைத் தூக்குவது… என களவாணித்தனத்தை மெயின் தொழிலாகவும் வைத்துக் கொண்டு வலம் வருகிறார்.
ஒரு நாள் அறிக்கியின் வயலில் நெல் திருடும் பக்கத்து ஊர் ப்ளஸ்டூ பட்டாம் பூச்சி மகேஷ்வரியை (ஓவியா) பார்க்கிறான். நெல்லோடு சேர்த்து என் மனசையும் எடுத்துக்கோ என இவர் எடுத்த எடுப்பிலேயே காதலில் விழ, ஒரு அழகான கோலத்துக்கான முதல் புள்ளி அங்கே விழுகிறது.
சீண்டலாகத் துவங்கும் அறிக்கி – மகேஷ் உறவு, ‘LC 112 கூட்டாக’ மலர்ந்து மணம் வீச ஆரம்பிக்கிறது. ஆனால் இந்தக் காதலுக்குத் தடையாக இரு ஊருக்குமிடையிலான பழைய பகையும், மகேஷ்வரியின் அண்ணன் இளங்கோவும் நிற்கிறார்கள்.
மகேஷ்வரிக்கு ரகசியமாக திருமணம் செய்து வைக்க இளங்கோ முயற்சிக்க, அதை உடைத்து எப்படி அறிக்கியும் மகேஷும் கைகோர்க்கிறார்கள் என்பது மகா ரகளையான க்ளைமாக்ஸ்!
படத்தின் ஒவ்வொரு காட்சியும் அத்தனை புதுசு. வயலும் வயல் சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையையும் அத்தனை யதார்த்தமாக, கதையோடு கதையாக சமீப காலத்தில் யாரும் சொன்னதில்லை.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேல் வயல்காடு, மனதைத் தளும்ப வைக்கும் வாய்க்கால்கள், இருபுறமும் மரங்களடர்ந்த கிராமத்து சாலைகள், உழவு மாடுகள், விதை நெல் வியாபாரி, பாட்டுப்பாடும் நடவுப் பெண்கள், கதிரறுப்பு, மாடுமேய்க்கப் போகும் சாக்கில் காதல் வளர்ப்பது, வைக்கோல் போர்… இப்படி பார்க்கும் ஒவ்வொன்றிலும் மனதைக் கிடந்து தவிக்க வைத்துவிடுகிறார் இயக்குநர் சற்குணம்.
முதல் நடவுக்கு பெண்கள் வராத நிலையில், அந்த வழியில் போகும் ஓவியாவை அழைத்து இளவரசு நாத்து நடச் சொல்ல, அதை அவர் நடும்விதம், அத்தனை பாந்தம்!
பசங்க படத்துக்குப் பிறகு கிடைத்த வாய்ப்பை பக்குவமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார் விமல்.
வெள்ளை வேட்டி – ஏற்றிக் கட்டிய வேட்டி, வெறும் பாக்கெட்டில் சீப்புடன் வந்து ‘பணம் கொடுப்பியா டிவியை உடைக்கட்டுமா?’ என அம்மாவை மிரட்டும் அந்த அறிமுகமே அவரது கேரக்டரைச் சொல்லிவிடுகிறது. கிடைத்த வாய்ப்பிலெல்லாம் வெளுத்துக் கட்டியுள்ளார். நம்பிக்கை தரும் நடிப்பு.
நாயகி ஓவியா இந்தப் படத்துக்கு பெரிய ப்ளஸ். ஏதோ நம்ம ஊரு பொண்ணு மாதிரியே இருக்கேப்பா என்று பார்வையாளர்கள் கமெண்ட் அடிக்கும் அளவுக்கு முதல் பார்வையிலேயே மனதில் ஒட்டிக் கொள்ளும் இயல்பான, வசீகரமான முகம். ஆசை, பிணக்கு, கோபம், காதல், படபடப்பு என அத்தனை உணர்வுகளையும் வெகு சரளமாகக் காட்டுகிறார். இளைஞர்களைப் பொறுத்தவரை நிஜமான களவாணி இவர்தான்!
படத்தின் தூண்கள் மாதிரி அசராமல் தூள் கிளப்பியிருப்பவர்கள் இருவர்… இளவரசு – சரண்யா. தஞ்சை மண்ணின் அச்சு அசலான ஒரு நடுத்தர விவசாயக் குடும்பத்துப் பெற்றோரை கண்முன் நிறுத்துகிறார்கள். ‘ஆடி போயி ஆவணி வரட்டும்… அவன் டாப்பா வருவான்’ என மகனைப் பற்றி பெருமிதமாக கண்கள் விரிய சரண்யா பேசுமிடத்திலெல்லாம், அந்த அறியாமையைக் கூட வென்றுவிடும் தாய்மையைப் பார்க்க முடிகிறது.
மகன் இப்படி இருக்கிறானே என்று மறுகும் அப்பா இளவரசு, தோளுக்குமேல் வளர்ந்த அவனைக் கண்டிக்கவும் முடியாமல் பாராட்டவும் வழியில்லாமல் தவிக்கிற தவிப்பு, பெரும்பாலான கிராமங்களின் நிகழ்கால நிஜம்.
‘ஒரு ஏக்கர்ல ஒரு ஊரை வெச்சிக்கிட்டு இந்த ராணி மங்கலத்துக்காரங்க நம்ம கூட மல்லுக்கு நிக்கிறாங்க’ எனும் வசனத்தில் அக்மார்க் கிராமத்து எள்ளல்.
படம் முழுக்க கலகலப்புக்கு பஞ்சமில்லாத காட்சிகள் என்பதால், கஞ்சா கருப்பு பெரிதாக மெனக்கெடவில்லை. அறிக்கி கூட்டணியிடம் அவர் அடிக்கடி ‘செத்துப் பிழைப்பது’ அரங்கை அதிர வைக்கிறது.
அப்புறம் அந்த உயர்ந்த மனிதர் திருமுருகன்… மிரட்டல் பார்வையுடன் பிடறி சிலிர்க்க கிளம்புவதும், போட்டிருக்கும் துளசி மாலையை கழற்றி வைத்துவிட்டு போட்டு சாத்துவதும்.. கலக்குகிறார்.
எஸ்எஸ் குமரனின் பின்னணி இசையில் ராஜாவின் வாசம். அதனால்தானோ என்னமோ அத்தனை எளிதில் மனதை வசப்படுத்திவிடுகிறார். ‘டம்மா டம்மா’ பாடல் இனிமை. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு, அப்படியே நம்மை தஞ்சை கிராமத்துக்கு ஒரு டூர் அழைத்துப் போகிறது.
எடுத்த எடுப்பிலேயே டிஸ்டிங்ஷனில் தேர்ச்சி பெற்றிருக்கும் சற்குணம், நம்பிக்கை தரும் இன்னொரு படைப்பாளியாகத் தெரிகிறார்.
களவாணி… மனதைத் திருடிவிட்டான்!
நன்றி -வினோ
என்வழி
No comments:
Post a Comment