கீற்றில் எஸ்.பொ வின் கட்டுரைக்கு வந்த மாயவனின் குறிப்பு

.
சர்வதேச எழுத்தாளர்கள் ஒன்று கூடல்கள் சந்திப்பு சம்பந்தமாகக் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகப் பல்வேறு சஞ்சிகைகள், இணைய இதழ்களிலெல்லாம் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. அவற்றிலெல்லாம் விரிவான செய்திகள் வெளிவந்திருக்கின்றன. இவ்விதமானதொரு சூழலில் மதிப்புக்குரிய எஸ்.பொ.அவர்கள் இந்த மாநாடு சம்பந்தமாகத் தனது ஆதங்கங்களை வெளியிடுவதில் தவறெதுவுமில்லை. ஆனால் அவற்றை அவர் வெளியிட்ட விதம் ஏற்றுக் கொள்ளத்தக்கதாயில்லை. மேற்படி ஒன்றுகூடல் பற்றி செய்திகள் வந்திருக்கும்போதே அவர் தனது கண்டனத்தை வெளியிட்டிருக்க வேண்டும். ஏன் வெளியிடவில்லை.

ஏற்கனவே ஒருவரையொருவர் துரோகிப்பட்டங்கள் கட்டி, உணர்ச்சிவெறியில் நடாத்திய அரசியலுக்கு ஏற்பட்ட முடிவு யாவரும் அறிந்ததே. மீண்டும் அத்தகைய வழிமுறைகளைப் பின்பற்றி எஸ்.பொ. அவர்கள் தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்துவது சரியானதொரு செயலாகத் தெரியவில்லை. அதே மாதிரி எழுத்தாளர் முருகபூபதியும் ஆத்திரப்பட்டு வழக்கு, அது , இதுவென்று மிரட்டியிருப்பதும் சரியாகப் படவில்லை. தற்போதுள்ள சூழ்நிலையில் இதுபோன்ற விழாக்களை, ஒன்று கூடல்களை நடத்துவதைப் பின் போடுவதே நல்லது என்ற தனது கருத்தை, தேவையற்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தாமல், எஸ்.பொ. வலியுறுத்தியிருக்க வேண்டும். அது போல் அவர் தனது குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டிருக்க வேண்டும். அதற்கு முருகபூபதியும் ஆத்திரப்படாமல் தர்க்கபூர்வமாகத் தனது பதிலைக் கீற்று இணையத்தளத்திற்கு அனுப்பிருக்க வேண்டும். மேலும் எஸ்.பொ. அவர்கள் மேற்படி ஒன்று கூடலை மட்டும் எதிர்க்கக் கூடாது. அண்மைக் காலத்தில் இலங்கை அரசால் நடாத்தப்பட்ட இலக்கிய விழாக்கள் பற்றிய செய்திகள் பல அவ்வப்போது ஈழத்துப் பத்திரிகைகளில் , சஞ்சிகைகளில் வெளிவந்திருக்கின்றன. பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான் கூட சாகித்திய இரத்தினா என்ற விருதினை ஜனாதிபதி மகிந்த இராஜபக்சவிடமிருந்து பெற்றுக் கொள்ளும் புகைப்படங்களையெல்லாம் பத்திரிகைகளில் பார்த்த ஞாபகமுண்டு. அது போல் கவிநாயகர் கந்தவனம் கூடக் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் விநோதன் மண்டபத்தில் மகவம் கலைஞர் வட்டம் புனிதக் கூட்டுறவுச் சங்கத்தின் ஆதரவுடன் நடாத்திய இலக்கியச் சந்திப்பொன்றில் 29.11.2009 அன்று கலந்து கொண்டு 'கனடாவில் கலை இலக்கிய முயற்சிகள்' பற்றிக் கட்டுரை வாசித்துள்ளார். இன்னுமொரு கனடிய எழுத்தாளர் சந்திரபோஸ் மலையகத்தில் நடந்த இலக்கியச் சந்திப்பொன்றில் கலந்து கொண்டிருக்கின்றார். இலங்கை அரசால் வழங்கப்படும் சாகித்திய விருதுகளைப் பல புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் (எழுத்தாளர் உதயணன் உட்பட) பெற்றுள்ளதாகக் கருதுகிறோம். மேலும் இவை தவிர இன்றைய சூழலில் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் ஈழத்துத் தமிழர்கள் இலங்கையில் இந்தக் கணத்தில் தங்களது பயணத்தை மேற்கொண்டிருக்கின்றார்கள். பல்வேறு முதலீடுகளைச் செய்துகொண்டிருக்கின்றார்கள். இன்னும் சிலர் அண்மைக்காலமாக வடபகுதிக்கு அதிகரித்த எண்ணிகையில் விஜயம் செய்யும் தென்னிலங்கை மக்கள் தங்குவதற்கு இருப்பிட வசதிகளை அங்கிருக்கும் தமது இருப்பிடங்களை மாற்றி வருவதாகவும், இதனால் ஏற்கனவே அவ்விருப்பிடங்களில் வாடகைக்குக் குடியிருந்த மக்களை வெளியேற்றிவருவதாகவும் இணையத்தளமொன்றில் வாசித்த ஞாபகம். உண்மையில் எஸ்.பொ. இதயசுத்தியுடன் கண்டிப்பதாகவிருந்தால் இவற்றையெல்லாம் கண்டிக்க வேண்டும். 1. பலவேறு நாடுகளில் வாழும் தமிழ் எழுத்தாளர்களோ, மக்களோ இன்றைய சூழலில் இலங்கைக்குச் செல்லக்கூடாது. அகதிகளாக ஈழத்தமிழர்கள் அன்னிய நாடுகளுக்குக் கப்பல்களில் படையெடுக்கும் சூழலில் அவ்விதம் செல்வது சரியானதல்ல. நீங்கள் இலங்கை சென்று இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்வது அங்கு இயல்பான நிலை இருப்பதை வெளிப்படுத்தும். ஏற்கனவே அவ்விதம் அங்கு சென்ற எழுத்தாளர்களுக்கு இலங்கை அரசு ஏதாவது பண உதவி செய்துள்ளதா என்பது பற்றி ஆராய வேண்டும். 2. இலங்கை அரசு கொடுக்கும் விருதுகளை, இலக்கிய விழாக்களை எழுத்தாளர்கள், கலைஞர்கள் புறக்கணிக்க வேண்டும். ஏற்கனவே அவ்விதம் தற்போதுள்ள அரசிடமிருந்து விருது பெற்றவர்கள் தங்களது விருதுகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். 3. மேலும் அங்கு இலங்கையில் வாழும் தமிழ் எழுத்தாளர்களுக்கெல்லாம் கொழும்பில் இவ்விதமான சந்திப்புகளை நடத்துவதைக் கண்டித்து தனது எதிர்ப்பினை எஸ்.பொ. தெரிவிக்க வேண்டும். இவற்றிற்கெல்லாம் தனது கண்டனக் குரலினைக் கொடுத்துவிட்டு எழுத்தாளர் முருகபூபதியின் மேலும், ஞானம் ஆசிரியர் ஞானசேகரன் மீதும் (இவர்கள் இருவரும் தான் மேற்படி ஒன்று கூடலின் பிரதான ஏற்பாட்டாளர்கள்) மீதும் தனது குற்றச்சாட்டுகளை எஸ்.பொ. வைப்பாரென்றால் அது நேர்மையான செயலாகவிருக்கும். மேலும் எஸ்.பொ.வின் மேற்படி ' கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு - சில சந்தேகங்களும் சில ஆதங்கங்களும் ' என்னும் கட்டுரையில் எஸ்.பொ. அவர்கள் கூறும் பின்வரும் கருத்துகளைப் பார்ப்போம். 1. அவசர அவசரமாக இந்த மாநாடு கொழும்பில் நடத்தப்படுவதற்கான பின்னணி என்ன? [இணைய, பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகள் செய்திகளின்படி மேற்படி கலந்துரையாடல் பற்றிய முயற்சிகள் ஆரம்பமாகி ஒருவருடத்திற்கும் மேலாகி விட்டன். அவசர அவசரமாக என்று கூறமுடியாது.] 2. 1983-ஆம் ஆண்டிற்குப் பின்னர் மடை திறந்த வெள்ளம் போல் பல வெள்ளைத்தோலர் நாடுகளில், உலக அநுதாபத்தைச் சாதகமாக்கிக் கொண்டு தமிழ் ஈழர் பல்லாயிரக்கணக்கில் குடியேறினார்கள். அவர்களுள், வாழ்வாதாரங்களை இழந்த விடுதலை வெறியர்கள் மட்டுமல்லாமல், பொருளாதார நாடோடிகளும் இருந்தார்கள். இவர்களிலே பலர் ஈ.பி.ஆர். எல்.எவ்., புளட் போன்ற போராட்டக் குழுக்களில் இருந்தவர்களும் அடங்குவர். இருபத்தைந்து ஆண்டுகள் பணம் சம்பாதித்த பின்னர் மீளவும் ஈழத்தில் கால்பதிக்கும் அவசரத்தில் இந்த மாநாடு கூடுவதற்கு உடந்தையாகச் செயற்படுகிறார்களோ என்று எழும் சந்தேகம் நியாயமானது. இவர்கள் மார்க்சிய சிந்தனையுடன் உறவாடியவர்கள் என்பதும் கவனத்திற்குரியது [விடுதலைப்புலிகளுட்படச் சகல போராட்டக் குழுக்களிலிருந்தவர்கள் என்பதே சரியான கூற்றாகவிருக்க முடியும். எதற்காக மேற்படி தற்போது இலங்கை அரசுடன் இயங்கும் ஒரு சில அமைப்புகளின் பெயர்களை மட்டும் எஸ்.பொல் குறிப்பிட்டிருக்கின்றாரோ? இவ்விதமான தந்திரமான கூற்றுகள் மிகவும் ஆபத்தானவை. பிழையான உணர்வுகளை வாசிப்பவர்கள் மத்தியில் ஏற்படுத்திவிடும் வலிமை மிக்கவை.] 3. சீன கம்யூனிஸ்ட் ஆதரவு நிலைப்பாட்டினையும், உள்ளூர இந்திய எதிர்ப்பு மனோபாவத்தையும் கொண்டுள்ள ஆட்சியாளருக்கு உதவும் அவசரமே இந்த மாநாட்டின் பின்னணியில் மேலோங்கி நிற்பதாகவுந் தோன்றுகிறது. இன்று இந்திய வெளியுறவுக் கொள்கை இலங்கையிலே தோற்றது போல, எல்லா இடங்களிலும் சீனக்கொடிகளும் சீனர்களின் கட்டுமானப் பணிகளும் நடைபெறுகின்றன. இந்தச் சீன ஆக்கிரமிப்பின் மான்மியத்தைப் பறைசாற்றுவதற்காவா இந்த மாநாடு? [இதனை எதற்காக எஸ்.பொ. கூறினாரோ அவருக்கே வெளிச்சம். முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப் போட முனைந்திருக்கின்றார். ] எம்மைப் பொறுத்தவரையில் மேற்படி சந்திப்பானது இலங்கை அரசின் எந்தவித ஆதரவுமற்ற , எழுத்தாளர்கள் முருகபூபதி, 'ஞானம்' ஞானசேகரன் ஆகியோரின் தனிப்பட்ட முயற்சிகள் வழியாக நடைபெறவுள்ளதொரு சந்திப்பே; கலந்துரையாடலே. அவ்விதமானதொரு தீர்மானத்தைத்தான் ஊடகங்களிலிருந்து எமக்குக் கிடைக்கப்பெறும் செய்திகளின் அடிப்படையில் தீர்மானிக்க முடிகிறது. அவ்விதமில்லாமல் இலங்கை அரசின் ஒத்துழைப்புடன், இலஞ்சப்பணத்தில் நடைபெறும் சந்திப்பு என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எஸ்.பொ.விடம் இருக்குமென்றால் அவற்றை உடனடியாக வெளியிட வேண்டும். அவ்விதம் வெளியிடுவதன் மூலம் மாத்திரமே எஸ்.பொ. தனது வாதத்திற்கும், சந்தேகங்களுக்கும் வலுச் சேர்க்க முடியும். மேலும் முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மெளனித்ததன் பின்னர் இலங்கை அரசிடமிருந்து விருதுகள் பெற்ற எழுத்தாளர்களை மேற்படி விருதுகளைத் திருப்பி அனுப்பும்படி எஸ்.பொ. கண்டிக்க வேண்டும். அத்துடன் அடிக்கடி இலங்கை சென்று இலக்கிய நிகழ்வுகள், நூல் வெளியீடுகளென்று கலந்து கொள்ளும் எழுத்தாளர்களை அவர் கண்டிக்க வேண்டும். அவ்விதமான பிரயாணங்களை அவர்கள் தவிர்க்க வேண்டுமென்று அவர் வலியுறுத்த வேண்டும். அவ்விதம் அவர் செய்யாது விட்டால் அவரது தற்போதைய குற்றச்சாட்டுகளெல்லாம் அர்த்தமற்றவையாகப் போய்விடும். எம்மைப் பொறுத்தவரையில் இதுவரை காலமும் போர்ச் சூழல்களினால் பெரிய அளவில் ஈழத்துப் படைப்பாளிகளும், ஏனைய நாடுகளில் வாழும் படைப்பாளிகளும் சந்திப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவிருந்தன. தற்போது அதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருப்பதால் தனிப்பட்டரீதியில் எழுத்தாளர்கள் சந்திப்பதில் தவறில்லை. ஏனெனில் மேற்படி சந்திப்பானது அரசின் ஆதரவுடன், அரசின் அமைப்புகளினூடு நடாத்தப்படுமொரு சந்திப்போ அல்லது விழாவோ அல்ல. வெளிநாடுகளில் இருந்து கலந்து கொள்ளும் எழுத்தாளர்கள் இலங்கையின் உண்மை நிலவரத்தை அறிவதற்கு இதனையொரு வாய்ப்பாகக் கருத முடியும். தமிழகத்திலிருந்து திருமாவளவன் செல்லவில்லையா? அந்தச் சந்திப்புடன் ஒப்பிடும்பொழுது இந்தச் சந்திப்பு அரசியல்ரீதியில் அஞ்சும் வகையிலானதல்ல. தேவையற்ற சந்தேகங்களை வெளியிட்டுத் தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் பிளவுகள் ஏற்படுவதை எஸ்.பொ. தவிர்க்க வேண்டும். அதே சமயம் அரசியல் பேச மாட்டோமென்று மேற்படி சந்திப்பின் ஏற்பாட்டாளர்கள் அடம் பிடிக்க கூடாது. மேற்படி ஒன்று கூடலில் தற்போதுள்ள ஈழத்தின் நிலைமைகளையிட்டு நியாயமான தமது கண்டனங்களை எழுத்தாளர்கள் வெளியிட்டு இறுதியில் அறிக்கை வெளியிட வேண்டும். வடகிழக்கின் அத்து மீறிய அரசின் குடியேற்றத் திட்டங்கள், இராணுவமயமாக்கல், தடுப்பு முகாமகளில், சிறைச்சாலைகளில் வாடும் மக்கள், மீளக்குடியேற்றப்பட்டவர்களின் ஆதரவற்ற நிலை, பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்... இவை பற்றியெல்லாம் தங்களது கருத்துகளை எழுத்தாளர்கள் வெளியிட அனுமதிக்க வேண்டும். யுத்தக் குற்றங்கள் பற்றிய நியாயமான சர்வதேச, உள்ளூர் விசாரணைகளை வலியுறுத்த வேண்டும். இவ்விதம் செய்யாமல் ஒருவரையொருவர் சந்திப்பதற்காகத்தான் இந்தக் கலந்துரையாடலென்றால் அதற்கு அர்த்தமேயில்ல

1 comment:

kirrukan said...

கட்டுரையாளர் மாயவன் கொமேடி கிமேடி க்காக இதை எழுதவில்லைத்தானே?

[quote]அதே சமயம் அரசியல் பேச மாட்டோமென்று மேற்படி சந்திப்பின் ஏற்பாட்டாளர்கள் அடம் பிடிக்க கூடாது. மேற்படி ஒன்று கூடலில் தற்போதுள்ள ஈழத்தின் நிலைமைகளையிட்டு நியாயமான தமது கண்டனங்களை எழுத்தாளர்கள் வெளியிட்டு இறுதியில் அறிக்கை வெளியிட வேண்டும். வடகிழக்கின் அத்து மீறிய அரசின் குடியேற்றத் திட்டங்கள், இராணுவமயமாக்கல், தடுப்பு முகாமகளில், சிறைச்சாலைகளில் வாடும் மக்கள், மீளக்குடியேற்றப்பட்டவர்களின் ஆதரவற்ற நிலை, பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்... இவை பற்றியெல்லாம் தங்களது கருத்துகளை எழுத்தாளர்கள் வெளியிட அனுமதிக்க வேண்டும். யுத்தக் குற்றங்கள் பற்றிய நியாயமான சர்வதேச, உள்ளூர் விசாரணைகளை வலியுறுத்த வேண்டும்[/quote][quote][/quote]
இவ்வளவு கேள்வியையும் அரசாங்கத்தை கேட்டுப்போட்டு அந்த படைப்பாளி திரும்பி புலத்து வரஏழுமோ? இது நல்ல பகிடியா கிடக்குது.. எழுத்தாளர் விழா முடிந்து வெளியால வர வெள்ளை வான் ஆளை தூக்கி போடும்..

போனமா பாரத இலக்கியம் பற்றி கதைச்சமா ,மாலையை போட்டமா .கைதட்டு வாங்கினமா,பொன்னாடை போட்டாமா,வாங்கினாமா, புலத்திற்கு திரும்பி வந்து புளுகினமா என்று இருக்கிற............