பசுமைக் கட்சியின் (Greens) வேட்பாளர்கள் மெல்பேர்ன் வாழ் தமிழ் மக்களுடன் நடாத்திய பொதுக்கூட்டம்

.


எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21 ம் திகதி நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய பொதுத் தேர்தலை முன்னிட்டு Tamils for Greens என்னும் அமைப்பின் ஏற்பாட்டில், அவுஸ்திரேலிய அரசியலில் 3 வது பிரதான கட்சியான ”GREENS” (பசுமை) கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும், வேட்பாளர்களும் நேற்று ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி சனிக்கிழமை கிளேட்டன் மொனாஸ் பல்கலைக்கழக ரொருன்டா மண்டபத்தில், மெல்பேர்ண் வாழ் தமிழ் மக்களை, பொதுக் கூட்டமொன்றில் நேரடியாக சந்தித்து கலந்துரையாடினார்கள்.


இக்கூட்டம் சரியாக மாலை 5.30 மணிக்கு அவுஸ்திரேலிய தேசிய கீதத்துடன் தொடங்கி, அவுஸ்திரேலிய பூர்வீக குடிமக்களுக்கும் மரியாதை செய்யப்பட்டு, அதனைத் தொடர்ந்து தமிழ் கலாச்சாரப்படி மங்கள விளக்கு திருமதி ரஜனி கோபாலினால் ஏற்றப்பட்டு, தாயகத்தில் உயிரிழந்த உறவுகளுக்காக அகவணக்கம் செலுத்தப்பட்டு கூட்டம் ஆரம்பமாகியது.
இக்கூட்டத்தினை Tamils for Greens என்னும் அமைப்பின் சார்பில் மூத்த தலைவர் திரு செந்தூரன் தலைமை தாங்கினார். அவர் தனது ஆரம்ப உரையில் அவுஸ்திரேலிய வாழ் தமிழ் மக்களினதும், தாயக மக்களினதும் தேவைகளையும், அபிலாசைகளையும் தமிழர் சார்பான கோரிக்கைகளையும் பசுமைக்கட்சியின் வேட்பாளர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததோடு, ஈழத்தமிழரின் பிரச்சனைகளிற்காக அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தமைக்காகவும் நன்றியைத் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து கிறீன் கட்சியின் தெற்கு அவுஸ்திரேலிய மாநில செனட்டர் சேரா ஹான்சன் யங் இக்கூட்டத்திற்காக பிரத்தியேகமாக மெல்பேர்ண் வந்திருந்தார். அவரை மகளீர் அமைப்பின் சார்பில் திருமதி யோகா கஜேந்திரா அவர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். தொடர்ந்து அவுஸ்திரேலிய தமிழர் பேரவை சார்பில் திருமதி காஞ்சனா செந்தூரன் அவர்கள், மலர்ச்செண்டு கொடுத்தும் மற்றும் தமிழ் மக்களுக்கும் அகதிகளாக வரும் ஈழத்தமிழரிற்கும் அவர் ஆற்றிய பணிகளிற்காகவும் விருது வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.
சேரா ஹான்சன் யங், தனது உரையில் கிறீன் கட்சியின் மனிதாபிமான கொள்கைகளையும், அகதிகள் விவகாரத்தில் தமது கட்சியின் நிலைப்பாட்டையும் விரிவாக எடுத்துக் கூறியதுடன், தொடர்ந்தும் தமிழ் மக்களுடன் இணைந்து மேலும் கூடுதலான நல்லுறவை வளர்ப்பதுடன் எமக்காகவும் எமது தாயக மக்களின் தேவைகள், அபிலாசைகளுக்காகவும் தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கவும் உறுதி வழங்கினார்கள். அவரது உரையைத் தொடர்ந்து சபையோரின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விளக்கமாக பதில் வழங்கினார்.
அவரைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய பொதுத் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக பிரதான கட்சிகளின் சார்பாக போட்டியிட இருக்கும் முதல் ஈழத்தமிழ் பெண்மணியான செல்வி பிராமி ஜெகன் அவர்கள் உரையாற்றினார். இவர் பசுமைக் கட்சியின் நியுசவுத்வேல்ஸ் மாநிலம் சார்பில் செனட் சபைக்காக 3 வது வேட்பாளராக போட்டியிட்டாலும், மெல்பேர்ன் தமிழ் மக்களின் பலத்த வரவேற்பையும், ஆசிகளையும் தனது உரையை ஆரம்பிக்க முதலே பெற்றார். இவர் தனதுரையில் இந்த நிலத்தின் சொந்தக்காரர்களான பூர்வீகக் குடிகளுக்கு நன்றியைத் தெரிவித்து கொண்டு பேசத் தொடங்கினார். மேலும் தனது உரையில் “தன்னைப் போன்ற இளைய சமுதாயத்தவர்கள், எமது மக்களின் பிரச்சனைகளை எடுத்துக்கூறி, அதற்காக முன்னெடுத்த கவனயீர்ப்புப் போராட்டங்கள் பிரதான 2 கட்சிகளாலும் உதாசீனப்படுத்தப்பட்டபோது, எம்மை அரவணைத்து ஆறுதல் கூறியும், எமது கோரிக்கைகளையும் நாடாளுமன்றத்திற்கு எடுத்துச் சென்றமையையும் நினைவு கூர்ந்ததுடன், தான் தமிழ் மக்களின் போராட்ட கவனயீர்ப்பு நிகழ்வுகளில் கலந்து ஆதரவு தெரிவித்த கிறீன் கட்சியின் செயற்பாடுகளின் பால் ஈர்க்கப்பட்டதாகவும், அவர்களுடைய கொள்கைகள் பல, கீழ்தர மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு அனுகூலமான கொள்கைகளாகவும் இருந்ததானால் கிறீன் கட்சியுடன் இணைந்து பணியாற்றிய போது, இத்தேர்தலில், வேட்பாளர் வாய்ப்பை கிறீன்ஸ் கட்சியின் நியுசவுத்வேல்ஸ் மாநில தலைமையினால் தனக்கு ஊக்கமளித்து வழங்கப் பட்டதாகவும் கூறினார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் எவ்வாறு தமிழ் மக்கள் கிறீன் கட்சிக்கு தங்கள் வாக்குகளை, அவுஸ்திரேலிய செனற் சபைக்கும், கீழ் சபைக்கும் வாக்களிக்க வேண்டுமென்பதையும் எடுத்துக் கூறினார்.
இவரைத் தொடர்ந்து கிறீன் கட்சிக்கும், தமிழ் மக்களுக்கும் இருக்கும் நெருங்கிய உறவையும் அவர்களது கொள்கைகளையும் விளக்கும் ஒளிப்படத் தொகுப்பும் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கிறீன் கட்சியின் விக்டோரிய மாநில செனற் சபையின் முதன்மை வேட்பாளர் கலாநிதி ரிச்சார்ட் டி நற்றாலி அவுஸ்திரேலிய பல்லின சமுதாயத்தின் செழுமையையும், சிறப்பையும் எடுத்துக் கூறி தனது பெற்றோரின் பின்புலத்தையும் அவர்களது கஷ்டஙகளையும் கூறி அதன் காரணமாக தாங்கள் நல்ல நிலைமைக்கு வந்தமையையும் கூறி, இதனுாடாக தற்போதைய தமிழ் மக்களின் வலிகளையும் தான் உணரக்கூடியதாக இருப்பதாகவும் கூறினார். தொடர்ந்தும் தமிழ் சமுதாயத்துடன் சேர்ந்து பல காலங்களுக்கு இணைந்து பணியாற்ற தமது விருப்பத்தையும் அங்கு வெளிப்படுத்தினார்.
அவரைத் தொடர்ந்து நியுசிலாந்து நாட்டின் கிறீன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கீத் லொக், ஒரு தசாப்தகாலத்திற்கும் மேலான நியுசிலாந்து வாழ் தமிழ்மக்களுடான தனது நெருங்கிய உறவையும், அவர்களின் ஓர் குரலாக நியுசிலாந்து பாராளுமன்றத்தில் அவர்களின் அபிலாசைகளையும் கோரிக்கைகளையும் கொண்டு வருவதனையும் கூறியிருந்தார்.
அவரைத் தொடர்ந்து விக்டோரிய மாநில சட்டமன்றத்தில் கிறீன் கட்சியின் மேற்கு பிராந்திய செனற் சபை அங்கத்தவரான கொலின் ஹாட்லண்ட் உரையாற்றினார். இவரும் தமிழ் மக்களுடன் நெருங்கிய உறவைப் பேணுவதுடன் எம்மக்களின் நிகழ்வுகளிலும் அதிகம் பங்குபெறும் அங்கத்தவருமாவார். இவர் தனது உரையில் தமிழ் மக்கள் கிறீன் கட்சியில் கடந்த காலங்களைப் போலவே நம்பிக்கை வைத்து செயற்பட வேண்டுமெனவும் உங்களுக்காக தனது அலுவலக கதவுகள் என்றும் திறந்திருக்கும் என்று கூறி சுருக்கமாக தனது உரையை முடித்துக் கொண்டார். ஒவ்வொரு பேச்சாளரும் தமது உரையின் பின்னர் மக்களது கேள்விகளுக்கு பதில்களை வழங்கியமர்ந்தனர். மேற்கூறிய கிறீன் கட்சியின் பேச்சாளர்களுடன் மேலும் சில கிறீன் கட்சியின் பிரமுகர்களும் அங்கு பிரசன்னமாகி இருந்தனர். நன்றி உரையுடன் இப்பொதுக் கூட்டம் இனிதே இரவு 7.30 மணியளவில் நிறைவு பெற்றது.

கூட்டத்தின் முடிவில், Tamils for Greens அமைப்பினரால் சிற்றுண்டி, தேநீர் விருந்தும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதிலும் கிறீன் கட்சி வேடபாளர்களுடன் சகல தமிழ் மக்களும் உரையாடி, உண்டு மகிழ்ந்தனர். கூட்டத்திற்கு வந்திருந்த அனைத்து தமிழரும் கிறீன் கட்சியின் நேர்மையான, வெளிப்படையான விளக்கத்தை கேட்டு மன நிறைவுடன் வீடு திரும்பினர்.

No comments: