சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு - பதில்

.

அன்புடையீர் வணக்கம்.
இலங்கையில் கொழும்பில் நாம் அடுத்த ஆண்டு (2011) நடத்தவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு தொடர்பாக ஏற்கனவே நான் பல பத்திகள் எழுதியிருக்கின்றேன்.
2009 ஆம் ஆண்டு நடந்த அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டத்திலும் தெரிவித்துள்ளேன்.

2009 ஆம் ஆண்டு வெளியான மல்;;லிகை 44 ஆவது ஆண்டு மலரில் நான் எழுதியிருந்த கட்டுரையிலும் பின்னர் 2010 ஆம் ஆண்டு ஜனவரியில் மல்லிகை 45 ஆவது ஆண்டு மலரிலும் மகாநாட்டின் தேவை குறித்து விரிவான கட்டுரை எழுதியிருக்கின்றேன்.

கடந்த 2009 டிசம்பர் 27 ஆம் திகதி கொழும்பிலிருந்து வெளியாகும் தினக்குரல் ஞாயிறு இதழில் விரிவான (முழுப்பக்கம்) எனது நேர்காணல் வெளியாகியிருக்கிறது.

அதன் பின்னர்தான் கொழும்பில் யழ்ப்பாணத்தில் வவுனியாவில் மட்டக்களப்பில் ஆலோசனைக்கூட்டங்கள் நடந்தன. நாம் என்ன செய்யப்போகின்றோம் என்பதையும் இலங்கை இணைப்பாளர்களூடாக சுற்றறிக்கை வடிவில் சகலருக்கும் தெரிவித்திருந்தோம்.

இவ்வளவும் நடந்துள்ளன. எட்டு மாதங்கள் வரையில் ஆழ்நத நித்திரையில் இருந்த சிலர் இப்போது, இலங்கையில பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காகவும் காலம்காலமாக மலையகத்தில் அல்லல்படும் மக்களுக்காகவும் எதுவித உதவியும் செய்யாமல் (கல்வி, கலை, இலக்கியம்) அவதூறாக பேசத்தொடங்கியுள்ளதுதான் கவலைக்குரியது.

அவுஸ்திரேலியாவில் 2001 ஆம் ஆண்டு முதல் தடவையாக தமிழ் எழுத்தாளர் விழாவை தன்னந்தனியனாக நான் நடத்த முன்வந்தபோது எத்தனை தடைகள், எதிர்ப்புகள் வந்தன என்பது எனக்கும் அதில் கலந்துகொண்டவர்களுக்கும் தான் தெரியும்.

அத்திவாரம்போடுவதற்கு மண்ணோ கல்லோ சுமக்காதவர்களையும் எஸ்.பொன்னுத்துரை உட்பட பலரை நாம் எமது எழுத்தாளர் விழாக்களில் பாராட்டி கௌரவித்திருக்கின்றோம்.

எஸ்.பொ. அவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் யார் முதல் முதலில் இலக்கிய முகவரி தேடிக்கொடுத்தார்கள், என்பதையும் மாத்தைள சோமு என்பவரை முதல் முதலில் மெல்பனில் மேடையேற்றியவர் யார் என்பதையும் பேராசிரியர் ஆசி. கந்தராஜா என்பவருக்கு அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தில் யார் தலைமைத்துவத்திற்கு பிரேரித்தார்கள் என்பதையும் மலையக இலக்கிய முன்னோடி தெளிவத்தை ஜோசப் அவர்களை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து பாராட்டி கௌரவிப்பதற்கு யார் முன்னின்று உழைத்தார்கள் என்பதையும் அவரவரிடமே கேட்டுத்தெரிந்து கொள்ளலாம்.

காலம்பூராவும் கலை, இலக்கியத்தையும் படைப்பாளிகளையும் உலகம் பூராவும் நேசித்துவந்த நான், இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களையும் படைப்பாளிகளையும் நேரில் சென்று பார்த்து வந்தவன். அத்துடன் சுனாமி; கடல்கோளின்போதும் இரண்டு கொள் கலன்களில் பொருட்களுடன் சென்றவன்.

எனது வாழ்வு இங்கிருந்தாலும் எனது வேர் எனது தாயகத்தில்தான் படர்ந்திருக்கிறது.

காணமல்போயுள்ள நண்பர் புதுவை ரத்தினதுரையின் குடும்பத்தினரை திருகோணமலைவரை சென்று பார்த்து ஆறுதல் கூறியதுடன் அவர்பற்றிய உண்மைத்தகவல்களை அறியும் முயற்சியிலும் பல மாதங்களாக ஈடுபடுகின்றேன்.

பாதிக்கப்பட்ட எங்கள் தேசத்தை எட்டியும் பார்க்காதவர்கள் எனக்கு அவதூறு செய்யப்புறப்பட்டுள்ளனர்.

இப்படியெல்லாம் இருக்கும்போது என்றைக்குமே பொறுப்புணர்வுடன் கருத்துச்சொல்லாத எஸ்.பொ. அவர்களின் அவதூறான எழுத்துக்களுக்கும் பேச்சுக்களுக்கு ஒத்து ஊதுபவர்களாக சில படைப்பாளிகள் ( என்னையும் எனது குண இயல்புகளையும் நன்கு தெரிந்தவர்கள்) மாறிப்போனதும்தான் எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.

அவுஸ்திரேலியாவில் கலை, இலக்கியத்துறையில ஒருவகை சூனியத்தை உருவாக்கப்போகிறார்களா?

அல்லது இலங்கையில் கலை, இலக்கியவாதிகளின் ஒன்றுகூடலுக்காக பலவருடங்களாக காத்திருக்கும் எமது உடன்பிறப்புகளான எழுத்தாளர்களுக்கு நம்பிக்கையுடையவர்களாக மாறப்போகிறார்களா என்பதை அவரவர் மனச்சாட்சிக்கே விட்டுவிடுகின்றேன்.

மலேசியாவில்;, சிங்கப்பூரில் தமிழ்நாட்டில் மகாநாட்டை நடத்தியிருக்கலாம் எனச்சொல்பவர்கள் கடந்த பத்துவருடங்களா அவுஸ்திரேலியாவில் மெல்பனில் , சிட்னியில், கன்பராவில் எமது எழுத்தாளர் விழாக்களும் இலக்கியசந்திப்புகளும் நடந்தபோது எட்டியும் பார்தார்களா?

அப்படித்தான் இவர்கள் சொல்வது போன்று செய்திருந்தாலும் தமது இருப்பை வானொலிகளில் காட்டுவதற்காக எதிர்த்து கண்டனம்தான் தெரிவித்திருப்பார்கள்.
நரம்பில்லா நாக்கு நயமின்றிப்பேசும்.
இடத்துக்கு தக்கவாறு பேசும்.
ஒரு நிகழ்வைப்பற்றி கருத்துக்கூறுவது வேறு,அபாண்டமாக நானும் இந்த மகாநாட்டில் என்னுடன் இணைந்தவர்களும் லஞ்சம் வாங்கித்தான் நடத்தப்போகின்றோம் எனறு இழிவாகச்சொல்வது வேறு.

என்னிடமே பல தடவைகள் நன்கு பலனடைந்த எஸ்.பொ. எனது முதுகில் குத்தும்போது வேடிக்கை பார்த்த சிலர் வானொலிகளில் (ஆழ்ந்த உறக்கத்திலிருந்து மீண்டு) எரியும் நெருப்பை அணைக்காமல் எண்ணெய் ஊற்றி தீ வளர்த்து குளிர்காய்ந்திருக்கிறார்கள்.

அவர்கள் தமக்குத்தெரிந்ததை பேசுவார்கள், செய்வார்கள்.நான் எனக்குத்தெரிந்ததை செய்வேன் , பேசுவேன். காலம் யாவற்றுக்கும் பதில் சொல்லும்

இந்த மகாநாட்டை திட்டமிட்டு குழப்பும் நோக்கத்துடன் சிலர் இப்பொழுது முனைந்திருப்பது கவலைக்குரியது. எம்முடன் கடந்த காலங்களில் அவுஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் விழாக்களில் இணைந்து பயனடைந்த சிலரும் தற்போது மிகவும் இழிவான முறையில் வானொலிகளில் பேசத்தொடங்கியுள்ளனர். படைப்பாளிகளை வெட்கித்தலைகுனியச்செய்யும் இந்த ஈனச்செயலின் சூத்திரதாரியாக தமிழ்நாட்டிலிருந்து எஸ்.பொ. இயங்குகிறார். அவரது இற்றுப்போன கயிற்றில் தொங்குவதற்கு சிலர் முனைந்துள்ளனர்.

இதுநாள் வரையில் மதில் மேல் பூனைகளாக இருந்த சிலர் இப்போது, தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் கீற்று இணைய இதழில் எஸ்.பொன்னுத்துரை என்பவர் மிகவும் அவதூறாகவும் எமது பணிகளை கேவலப்படுத்தும்விதமாகவும் எழுதியுள்ளதையடுத்து (குறிப்பிட்ட சில எழுத்தாளர்கள்) இதுவரை ஆழ்ந்த நித்திரையிலிருந்து எழுந்து சோம்பல் முறித்து பிதற்றத்தொடங்கியுள்ளனர்.

இலங்கை அதிபரையும் எம்மையும் தொடர்புபடுத்தி நாம் லஞ்சம் வாங்கித்தான் இம்மகாநாட்டை நடத்தமுன்வந்திருப்பதாக பொன்னுத்துரை அவதூறு செய்துள்ளார். எனவே அவருக்கும் குறிப்பிட்ட கீற்று இணைய இதழுக்கும் எதிராக நாம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

நன்றி; அன்புடன் லெ.முருகபூபதி (அமைப்பாளர்- சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு 2011)

( இது தொடர்பான எஸ்பொ வின் கட்டுரை சென்றவார தமிழ்முரசில் பிரசுரமாகியுள்ளது - முரசு )
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

கீற்று இணைய இதழில் ‘எஸ்.பொ.’ சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு தொடர்பாக அவதூறு:



மகாநாட்டு அமைப்பாளர் இந்திய ரூபாவில் பத்துக்கோடி நட்டஈடு கோருகிறார்
இலங்கையில் எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டுக்கு எதிராக தமிழ்நாடு கீற்று இணைய இதழில் அவதூறான முறையில் செய்தி வெளியிட்டிருப்பதுடன் அதனை உலகெங்கும் பரவச்செய்து மகாநாட்டையும் மகாநாட்டுப்ணியாளர்களையும் அவமானப்படுத்தியுள்ள ‘எஸ்.பொ.’ என அழைக்கப்படும் எஸ்.பொன்னுத்துரை என்பவருக்கு எதிராக இம்மகாநாட்டின் அமைப்பாளர் நட்டஈடுகோரி வழக்கு தாக்கல் செய்யவுள்ளார்.

இம்மகாநாடு இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடனும் அரச அதிபர் திரு. மகிந்த ராஜபக்ஷவிடம் லஞ்சம் பெற்றும் நடத்தப்படவிருப்பதாக உண்மைக்குப்புறம்பான முறையில் முற்றிலும் தவறான செய்தியை விஷமத்தனமாக எஸ்.பொன்னுத்துரை பரப்பியுள்ளார்.

தமிழ் இலக்கிய உலகிற்கும் தமிழ் ஊடகங்களுக்கும் உலகமெல்லாம் பரந்துவாழும் தமிழர்களுக்கும் இந்த சர்வதேச மகாநாட்டின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துவதற்காகவும் எவ்வாறு இம்மகாநாடு பல வருடங்களாக திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்டது என்பதை விளக்குவதற்காகவும் அதன் பிரதம அமைப்பாளர் என்ற முறையில் மகாநாட்டின் அமைப்பாளரும் எழுத்தாளருமான திரு.லெ.முருகபூபதி அவுஸ்திரேலியாவிலிருந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

இம்மகாநாடு பல வருடங்களாக ஆலோசிக்கப்பட்டு இலங்கையில் அமைதியான சூழ்நிலைக்காக காலம் தாழ்த்தி தற்போது அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு எதிர்வரும் ஜனவரி மாதம் கொழும்பில் 6,7,8,9, ஆம் திகதிகளில் நடத்தப்படவிருக்கிறது.

கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் திகதி கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் சுமார் 120 பேர் கலந்துகொண்ட விரிவான ஆலோசனைக்கூட்டம் காலை முதல் மாலை வரையில் நடந்தது.

இக்கூட்டத்தில் 12 அம்ச கலை, இலக்கிய , கல்;வி சார்ந்த ஆக்கபூர்வமான யோசனைகள் முன்வைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பின்னர் யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு ஆகிய நகரங்களிலும் மகாநாடு தொடர்பான விரிவான கூட்டங்கள் நடைபெற்றன. யாழ்ப்பாணத்தில் கொக்குவிலில் இது சம்பந்தமாக பத்திரிகையாளர் சந்திப்பும் நடந்துள்ளது.

அத்துடன் மகாநாட்டின் இலங்கை இணைப்பாளரும் ஞானம் இதழின் ஆசிரியருமான டொக்டர் தி. ஞானசேகரன் வடக்கு, கிழக்கு, மற்றும் மலையகம் சென்று விரிவான தகவல் அமர்வு சந்திப்புகளையும் நடத்திவருகிறார்.

சர்வதேச தரத்தில் அமைந்த ஒரு கட்டுரைத்தொகுதியும் புகலிடத்தை சித்திரிக்கும் புத்தம் புதிய கதைகளின் தொகுப்பும் ஈழத்து சிறுகதைகளின் தொகுப்பொன்றும் இம்மகாநாட்டை முன்னிட்டு தயாராகி வருகின்றன.

அத்துடன் மகாநாட்டில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேசியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா உட்பட சில ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு மகாநாட்டு கருத்தரங்குகளில் கட்டுரைகளும் சமர்ப்பிக்கவிருக்கின்றனர்.

தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் சில இலக்கிய இதழ்கள் மகாநாட்டை முன்னிட்டு சிறப்பு மலர்களை வெளியிடவுள்ளன.

இவ்வளவு பணிகளும் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், தமிழ் ஊடகவியலாளர்களின் ஆதரவுடனும் நிதிப்பங்களிப்புடனும்தான் முன்னெடுக்கப்படுகின்றன.

இதுபற்றிய பல பத்தி எழுத்துக்கள் நேர்காணல்கள் இலங்கை மற்றும் தமிழ்நாடு இதழ்களிலும் இணைய இதழ்களிலும் ஏற்கனவே கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

இந்தத்தகவல்கள் யாவற்றையும் தெரிந்து வைத்துக்கொண்டே யாரையோ திருப்திப்படுத்தும் நோக்கத்துடன் இலங்கையின் மூத்த படைப்பாளியும் பல வருடங்களாக அவுஸ்திரேலியாவிலும் தமிழ் நாட்டிலும் வாழ்ந்துவருபவருமான எஸ்.பொ. என அழைக்கப்படும் திரு.எஸ்.பொன்னுத்துரை தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் ‘கீற்று’ என்னும் இணைய இதழில் மகாநாட்டுக்கு எதிராகவும் மகாநாட்டை இழிவுபடுத்தும்விதமாகவும் மகாநாட்டு அமைப்பாளர் இலங்கை அதிபர் திரு.மகிந்த ராஜபக்ஷவிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு இம்மகாநாட்டை நடத்தவிருப்பதாகவும் உண்மைக்குப்புறம்பான முறையில் முற்றிலும் தவறான தகவல்களுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் 2001 ஆம் ஆண்டு முதல் தமிழ் எழுத்தாளர் விழாவை, அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் என்ற அமைப்பை ஸ்தாபித்து நடத்திவரும் முருகபூபதி ஆகிய நான் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வதியும் ஏராளமான தமிழ் எழுத்தாளர்களின் வேண்டுகோளின் நிமித்தம் இந்த மகாநாட்டுக்கான பணிகளை பலரதும் ஆலோசனைகளைப்பெற்று முன்னெடுத்தேன்.

சில வருடங்களுக்கு முன்னர் மேற்குறிப்பிட்ட திரு.எஸ்.பொன்னுத்துரை அவர்களையும் அவுஸ்திரேலியாவில் நடந்த தமிழ் எழுத்தாளர் விழாவுக்கு அழைத்து அவரது பவளவிழாவை முன்னிட்டு பாராட்டி விருது வழங்கி கௌரவித்துமிருக்கின்றேன்.

எமது கலை,இலக்கிய வளர்ச்சியையும் பரிமாணத்தையும் நன்கு தெரிந்து வைத்திருக்கும் எஸ்.பொ. அவர்கள் தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட கலை, இலக்கிய இயக்கமானது சர்வதேச மட்டத்தில் வளர்த்தெடுக்கப்படுவது கண்டு பூரிப்படைந்து, தாமும் ஒரு பங்காளராக இணைந்து செயற்பட்டிருக்கவேண்டும். அதுவே அவர் மூத்த எழுத்தாளர் என்ற முறையில் இனி வரும் வருங்காலத் தலைமுறைக்கு எடுத்துக்காட்டாகவும் முன்மாதிரியாகவும் திகழ்ந்திருக்கும்.

இது சம்பந்தமாக கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதியிலேயே அவரது கவனத்திற்கு தமிழ்நாடு யுகமாயினி இதழ் ஆசிரியர் திரு.சித்தன் அவர்கள் ஊடாக தெரிவித்துமிருக்கின்றேன்.

எனினும் அவர் யாரையோ திருப்திப்படுத்துவதற்காகவும் விஷமத்தனமாகவும் அவதூறாகவும் அவர் கீற்று இணைய இதழில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

எதுவித நம்பகத்தன்மையுமற்றவிதத்தில் அநாவசியமாக இலங்கை அதிபரையும் இதில் இணைத்து மகாநாட்டுக்கு எதிராக அவதூறு பிரசாரத்தை எஸ்.பொ. என்ற எஸ்.பொன்னுத்துரை மேற்கொண்டுள்ளார். எனவே அவருக்கு எதிராக இந்திய நாணயத்தில் பத்துக்கோடி ருபா நட்ட ஈடுகோரி நான் வழக்கு ஒன்றை தாக்கல் செய்யவிருக்கின்றேன்.

‘நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்திறனும் இன்றி வஞ்சனை செய்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி’- என்ற மகாகவி பாரதியின் கவிதை வரிகள்தான் இச்சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகிறது.

லெ.முருகபூபதி
அமைப்பாளர்
சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு 2011
அவுஸ்திரேலியா
P.O.Box 350, Craigieburn,Victoria,Australia.

E.Mail: international.twfes@yahoo.com.au
letchumananm@gmail.com
T.Phone : 00 11 61 3 9308 1484
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

முருகபூபதியின் கடிதத்திற்கு கீற்று ஆசிரியர் நந்தனின் பதில் ( பூபதியின் கடிதம் கீளே உள்ளது )


மிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை: கீற்று நந்தன்

மதிப்பிற்குரிய முருகபூபதி அவர்களுக்கு,

வணக்கம். தாங்கள் கீற்று ஆசிரியர் குழுவுக்கு அனுப்பியுள்ள மேற்கண்ட மின்னஞ்சலைக் கண்டோம். அதில் தாங்கள் கீற்று மீது தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம். கீற்று இணையதளம் அனைத்துவிதமான சிந்தனைகளுக்குமான ஒரு வெளியாகத் திகழ்கிறது. கீற்றில் வெளிவரும் கட்டுரைகள் படைப்பாளிகளின் சிந்தனையைச் சார்ந்தே வெளிவரும் கருத்துக்களாகும். இதில் கீற்றிற்கு எவ்வித தனிப்பட்ட நலனும் ஆர்வமும் இல்லை. இதுபோன்ற மின்னஞ்சல்களை எமது கருத்துச் சுதந்திரத்திற்கான மிரட்டலாக நாங்கள் உணர்கிறோம்.

உலக நாடுகளினால் ‘போர்க்குற்றம் நடந்தது’ என அறிவிக்கப்பட்ட நாட்டில் நிகழும் ஒவ்வொரு பொதுநிகழ்வும் அரசியல் தன்மை கொண்டதாகவே கவனிக்கப்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. அத்தகைய நிகழ்வுகளின் மீதான விமர்சனத்தை முன்வைப்பதற்கு மனித உரிமைகளில் ஆர்வம் கொண்ட எழுத்தாளர்களுக்கும் அதை வெளியிடுவதற்கு கீற்று மாதிரியான ஊடகங்களுக்கும் உரிமை இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினருக்கும், மனித உரிமையாளர்களுக்கும் இன்னமும் இலங்கையில் நுழைய அனுமதி மறுக்கிற சிங்கள அரசின் ஆதரவில்லாமல் இலங்கையின் தலைநகரில் எவ்விதக் கூட்டமும் நடத்திட முடியாது என்பது அனைவராலும் புரிந்துகொள்ள முடிந்ததே. இந்நிலையில் தங்களது அமைப்பின் அறிவிப்பும் மாநாடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் என்பதைத் தாங்கள் ஏற்கனவே அறிந்தே இருப்பீர்கள். அப்படியிருக்கும்போது மதிப்பிற்குரிய எஸ்.பொ. அவர்களின் விமர்சனத்தால் மனவுளைச்சலுக்கு ஆளானேன் என்று கூறுவது பொருத்தமற்றது.

மேலும் அக்கட்டுரையில் எஸ்.பொ. அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு எதிரான எதிர்வினை ஆற்ற வேண்டுமாயின், கீற்று இணையதளத்திற்கு நீங்கள் தாராளமாக அனுப்பலாம். அவற்றையும் நாங்கள் வெளியிடத் தயாராக இருக்கிறோம். மற்றபடி, தங்களையோ, தங்கள் அமைப்பையோ தனிப்பட்ட முறைமையில் தாக்க வேண்டிய அவசியம் கீற்று இணையதளத்திற்கு இல்லை. பத்து கோடி ரூபாய் மானநட்ட வழக்கு தொடர்வேன் என்பதுபோன்ற மிரட்டல்களால் கீற்று போன்ற பொதுவான சிந்தனைவெளியின் செயல்பாடுகளை முடக்க முடியாது. அப்படி வழக்குத் தொடரப்படுமாயின் அதனை சட்டரீதியில் எதிர்கொள்ள கீற்று தயாராகவே இருக்கிறது. எந்த மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்சப்போவதில்லை.

- கீற்று நந்தன் ( editor@keetru.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

முருகபூபதி கீற்று இணைய இதழுக்கு எழுதிய கடிதம் இங்கு பிரசுரிக்க படுகிறது.

 ஆசிரியர்

கீற்று இணைய இதழ்
தமிழ்நாடு

அன்புடையீர் வணக்கம்.

தங்களின் கீற்று இணையத்தளத்தில் (07-ஆகஸ்ட்2010) நாம் இலங்கையில் அடுத்த ஆண்டு (2011 ஜனவரி 6,7,8,9 ஆம் திகதிகளில்) நடத்தவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு தொடர்பாக அவதூறான செய்தி பரப்பப்பட்டிருக்கிறது.

இந்த மகாநாடு சிலவருடங்களுக்கு முன்னரே ஆலோசிக்கப்பட்ட கலை, இலக்கிய செயற்திட்டமாகும். அவுஸ்திரேலியாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்திவரும் முருகபூபதியாகிய நான், இந்த நிகழ்வை நடத்தும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஸ்தாபகர்.

இலங்கையிலும் பல வெளிநாடுகளிலும் வதியும் தமிழ் எழுத்தாளர்களினது வேண்டுகோளுக்கிணங்கவே இந்த சர்வதேச ஒன்றுகூடல் மகாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு பலரதும் ஆலோசனைகளைப்பெற்று கடந்த 03-01-2010 ஆம் திகதி இலங்கையில் கொழும்பில் தமிழ்ச்சங்க மண்டபத்தில் சுமார் 120 பேரளவில் கலந்துகொண்;ட ஆலோசனைக்கூட்டத்தை நடத்தினேன். இக்கூட்டத்தில் படைப்பாளிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் இலங்கையில் கொழும்பில் வெளியாகும் வீரகேசரி, தினக்குரல், தினகரன் ஆகிய தமிழ்த்தேசிய நாளிதழ்களின் ஆசிரியர்கள் மற்றும் மல்லிகை, ஞானம், கொழுந்து, செங்கதிர் முதலான சிற்றிதழ்களின் ஆசிரியர்கள் பயிற்சிப்பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர். இதுபற்றிய விரிவான செய்திகள் பல ஊடகங்களில் கடந்த ஜனவரி மாதமும் அதன் பின்னரும் வெளியாகியிருக்கிறது.

தமிழ் நாட்டில் இனிய நந்தவனம் மற்றும் யுகமாயினி இதழ்களிலும் விரிவான செய்திகள் பிரசுரமாகியுள்ளன.

இம்மகாநாடு தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா ஆகிய நகரங்களிலும் விரிவான ஆலோசனைக்கூட்டங்கள் நடந்திருக்கின்றன. இவற்றில் நான் கலந்துகொண்டது சம்பந்தமான செய்திகளும் ஊடகங்களில் வெளிவந்தன. சமீபத்திலும் மகாநாட்டு இணைப்பாளர் தலைமையில் இப்பகுதிகளில் கூட்டங்கள் நடந்துள்ளன. விரைவில் மலையகத்தில் ஹட்டன் நகரத்தில் மற்றுமொரு கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்திய வம்சாவளி மலையக எழுத்தாளர்கள், கலைஞர்களும் இம்மகாநாட்டில் பங்கேற்று கருத்தரங்குகளில் தமது கட்டுரைகளை சமரப்பிக்கவிருக்கின்றனர்.

இம்மகாநாடு முடிந்த பின்னர் இலங்கை மலையகத்தில் பேராதனைப்பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், வவுனியா பல்கலைக்கழக வளாகம், கிழக்கு பல்கலைக்கழகம், தென் கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியனவற்றில் கலை, இலக்கிய கருத்தரங்குகள் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டு குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், வளாக முதல்வர், கலைப்பீட பேராசிரியர்கள் ஆகியோரது சம்மதமும் பெறப்பட்டுள்ளது. இந்த மகாநாட்டினால் தமிழ் எழுத்தாளர்கள் மட்டுமன்றி பல்கலைக்கழக மாணவர்களும் பயனடையத்தக்கவிதமாகத்தான் நிகழ்ச்சி நிரல்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இந்த மகாநாடு அரசியல் சார்ந்தோ இலங்கை அரசாங்கம் சார்ந்தோ நடைபெறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்படவில்லை என்பது இக்கூட்டங்களில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்கு தெரியும். ஊடகங்களுக்கும் தெரியும்.

12 அம்ச கலை, இலக்கியம் , கல்வி சார்ந்த யோசனைகளை முன்வைத்தே நாம் இந்த மகாநாட்டை கூட்டுகின்றோம்.

இந்த மகாநாட்டிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எதுவித சம்பந்தமும் இல்லை. எழுத்தாளர்களினதும் இலக்கிய ஆர்வலர்களினதும் சமூகநலன் விரும்பிகளினதும் நிதிப்பங்களிப்புடன்தான் இம்மகாநாடு நடைபெறவிருக்கிறது.

அப்படியிருக்க தங்களது கீற்று இணைய இதழில் மகாநாட்டு அமைப்பாளரான என்னையும் என்னோடு இணைந்து பணியாற்றவுள்ள கலை, இலக்கியவாதிகளையும் ஊடகவியலாளர்களையும் கேவலப்படுத்தும் விதமாகவும் எமக்கு எதிராக அவதூறு பரப்பும் விதமாகவும் எஸ்.பொ. என்று அழைக்கப்படும் திரு. எஸ்.பொன்னுத்துரை அவர்கள் கருத்துக்கூறியிருக்கிறார்.

அமைப்பாளராகிய நான் இலங்கை அதிபர் திரு. ராஜபக்ஷ அவர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு மகாநாடு நடத்துவதாக தங்களது கீற்று இதழில் எழுதப்பட்டிருப்பதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

நான் ஒரு இருதய நோயாளி. சில வருடங்களுக்கு முன்னர் பைபாஸ் சத்திர சிகிச்சைக்கும் உட்படுத்தப்பட்டிருக்கின்றேன். கடந்த சில வருடங்களாக மருந்து மாத்திரைகளுடன்தான் எனது வாழ்க்கை நடக்கிறது.

1972 ஆம் ஆண்டு முதல் நான் எழுத்தாளனாக இலங்கையில் நன்கு அறியப்பட்டவன். வீரகேசரி நாளிதளில் உதவி ஆசிரியராகப்பணியாற்றியிருக்கின்றேன். அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னரும் எனது இலக்கியப்பணி இதழியல் பணி தொடர்கிறது. நான் ஒரு படைப்பாளி அத்துடன் பத்திரிகையாளன். இதுவரையில் 18 நூல்கள் எழுதியிருக்கின்றேன். இரண்டு நூல்களுக்கு சாகித்திய விருதுகளும் பெற்றுள்ளேன். பல நாடுகளுக்கும் பயணித்து பயண இலக்கியங்கள் எழுதியிருக்கின்றேன். நான் அவுஸ்திரேலியாவிலிருந்துகொண்டு மேற்கொள்ளும் பல சமூகப்பணிகளுக்காக 2002 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய தினத்தின்போது சிறந்த பிரஜைக்கான (யுரளவசயடயைn ஊவைணைநn யுறயசன 2002) விருதும் பெற்றுள்ளேன். அத்துடன் அவுஸ்திரேலியாவில் சில தமிழ் சமூக அமைப்புகளினதும் விருதுகளையும் பெற்றுள்ளேன். தமிழ்ச்சமூகத்தில் மிகுந்த கவனிப்புக்குள்ளாகியிருக்கும் எனக்கு, கீற்று இணைய இதழ் ஆசிரியரான தாங்களும் திரு. எஸ்.பொன்னுத்துரையும் அபகீர்த்தி ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.

தங்களது கீற்று இதழில் என்னைப்பற்றியும் நான் ஒழுங்குசெய்துள்ள சர்வதேச எழுத்தாளர் மகாநாடு பற்றியும் அவதூறாக எழுதப்பட்டிருப்பதனால் நான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றேன்.

தங்களது கீற்று இதழில் என்னைப்பற்றியும் எனது மகாநாட்டுப்பணி பற்றியும் மிகவும் அவதூறாக எழுதியுள்ள திரு. எஸ்.பொ. என்ற எஸ்.பொன்னுத்துரைக்கும் தங்களது கீற்று இணைய இதழுக்கும் எதிராக நான் மானநட்ட வழக்கு தொடருவதற்கு தீர்மானித்துள்ளேன். இதுசம்பந்தமாக நான் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என்பதை இத்தால் அறியத்தருகின்றேன்.

தங்களது குறிப்பிட்ட கீற்று இதழ் அவுஸ்திரேலியா சிட்னியிலிருந்து ஒலிபரப்பாகும் 24 மணிநேர ஒலிபரப்புச்சேவையான இன்பத்தமிழ் ஒலி வானொலியில் கடந்த 10 ஆம் திகதி செவ்வாய்கிழமை இரவு கருத்துக்களம் நிகழ்ச்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டு, மேலும் பல நேயர்களினால் நான் அவமானப்படுத்தப்பட்டிருக்கின்றேன். இதற்கெல்லாம் காரணம் தாங்களும் தங்கள் இதழும் திரு.எஸ்.பொன்னுத்துரையும்தான் என்பதை மிகுந்த வேதனையுடன் அறியத்தருகின்றேன்.

எனவே மானநட்ட வழக்கு தொடருவதைத்தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. இந்திய நாணயத்தில் பத்துக்கோடி ரூபா நட்ட ஈடுகோரி தங்களுக்கும் திரு. எஸ்.பொன்னுத்துரைக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யவிருக்கின்றேன்.

இக்கடிதத்தை சுயசிந்தனையுடனும் எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு தங்கள் இருவராலும் நேர்ந்த அபகீர்த்தியினாலும் எழுதுகின்றேன்.

முருகபூபதி
அமைப்பாளர்
சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு 2011

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

No comments: