புராதன இலங்கையில் பௌத்த பிக்குகளும் பௌத்த சங்கமும் - பாகம் 01

.
வட இந்தியாவில் கி.மு 3ஆம் நூற்றாண்டளவில் பெரும் பேரரசை அமைத்த அசோகன் கலிங்கப்போரில் தனக்கேற்பட்ட துயர அனுபவங்களின் பின்னர் போரின் மூலம் நாடுகளை இணைத்துக் கொள்ளும் திக்விஜயத்தைக் கைவிட்டு அறவழியில் செல்லும் தர்மவிஜயத்தை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்தான்.

போரில் ஏற்பட்ட துயரங்களைத் தணிக்கும் அறவழியை நிலைநாட்ட பௌத்த சமயத்தில் காணப்பட்ட தர்மம் பற்றிய சிந்தனைகள் தகுந்தனவெனக் கண்டான்.

அவை சாதாரண பொதுமக்களும் பின்பற்றுவதற்கு தகுந்த சமூகதர்மமாக விளங்கியமையால் அவற்றைத் தான் பின்பற்றுவது மட்டுமன்றித் தனது நாட்டிலும் பரப்புவற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டமையைச் சான்றுகள் பலவும் எடுத்துக்காட்டுகின்றன.

தனது நாட்டிலுள்ளவர்கள் மட்டுமன்றி அயல்நாட்டவர்களும் அக்கொள்கையைப் பின்பற்றி, அமைதியையும் நல்வாழ்வையும் பெறவேண்டும் என்ற ஆவலினால் சமய தூதுவர்களை அந்நாடுகளுக்கு அனுப்பினான்.

தனது குடும்ப உறுப்பினர்களைக் கூட இப்பணியில் ஈடுபடுத்தியமையானது அசோகப்பேரரசன் புத்தரது தர்மக்கொள்கைகளைப் பரப்புவதில் கொண்டிருந்த ஈடுபாட்டினைப் புலப்படுத்துவதாக அமைகின்றது.

இப்பின்னணியில் இலங்கையில் தேவநம்பியதீசனின் ஆட்சியில் அசோகனின் மகனாகிய மகிந்தரின் தலைமையில் பௌத்தமதம் அறிமுகம் செய்யப்பட்டமையைக் காணலாம்.

கி.மு.3ஆம் நூற்றாண்டில் இலங்கையில் அறிமுகமாகிய பௌத்தம் அன்று தொடக்கம் ஆட்சியாளர்களின் அனுசரனையைப் பெற்று இன்றுவரை முக்கியமான இடத்திலுள்ளமையை அவதானிக்கலாம்.

துறவினைப் பின்பற்றிப் புத்தரின் கொள்கைகளை ஏற்று அவற்றைப் போதனை செய்யும் பணிகளை மேற்கொள்வோர் பிக்குகள் எனப்பட்டனர்.

இந்து மதத்தில் காணப்பட்ட சடங்குகள், கிரிகைகள், சமூக ஏற்றத்தாழ்வுகள் என்பவற்றுக்கு எதிராகத் தோற்றம் பெற்றதே பௌத்த சமயமாகும். இதனால் இந்து சமயத்தின் சிலஅம்சங்கள் பௌத்தத்தில் காணப்படுவது தவிர்க்கமுடியாததே.

இந்துக்களின் நான்குஆச்சிரம தர்மங்களில் பிரமச்சரியம், சந்நியாசம் என்பன வாழ்வின் இடை,கடைப் பகுதியில் கடைப்பிடிக்க வேண்டியவையாகும். இவ்விரு நெறிகளே பௌத்தமதத்தில் பிக்குகளின் தோற்றத்தில் செல்வாக்குச் செலுத்தியிருக்கக் கூடுமெனக் கருதப்படுகின்றது.

உபசம்பதா என்ற சடங்கு மற்றவர்களிடமிருந்து பிக்குகளை வேறுபடுத்தவும் அவர்களுக்குரிய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கவும் உதவியது. அநுராதபுர கால பௌத்தத்தின் வளர்ச்சியில் பௌத்தசங்கத்தின் தோற்றமும், எழுச்சியும் குறிப்பிடத்தக்கதாகும்.

இச்சங்கத்தில் பிக்குகள் தம்மை இணைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. சாதிப் பாகுபாடுகளோ, பிறபாகுபாடுகளோ பௌத்தபிக்குகளாவதற்குத் தடையாக இருக்கவில்லை. புத்தம், தர்மம் ,சங்கம் என்பனவே அவர்களின் தாரக மந்திரமாகும்.

வளரும்.

சாந்தினி அருளானந்தம்
யாழ் பல்கலைக்கழகம்
நன்றி யாழ் மண்

1 comment:

putthan said...

அந்த காலத்தில் வாழ்ந்த டமிழ் பிக்குகளைப்பற்றியும் எழுதுங்கோ...பெளத்தம் சிங்களவருக்கு மட்டும் சொந்தம் என்ற கருத்தை மாற்ற வேண்டும் அதிகமான பட்டதாரிகள் அப்படியான எண்ணம் கொன்டவர்கள்