இலங்கையில் தமிழர் பிரதேசங்கள் - பாகம் 02

.
யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கேயரால் சிதைக்கப்பட்டபோது கைலாயவன்னியன் அவர்களுக்கு அடங்காமல் சுதந்திரமாக தனது பற்றுக்களைப் பரிபாலனம் செய்தான்.

பிறவன்னியர்கள் அவரைத் தமது தலைவராக ஏற்றுக் கொண்டதன் காரணமாகவே வன்னி நாடு கைலாயவன்னியன் நாடு என்று 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்களாற் குறிப்பிடப்பட்டுள்ளது.

வன்னியர்கள் போர்த்துக்கேயருக்குப் பின்பு ஒல்லாந்தர்களுக்கும் அடங்கிவிடாது கிளர்ச்சி புரியும் வழக்கம் உடையவர்கள். இதன்காரணமாகவே 'அடங்காப்பற்று வன்னி' என்று வர்ணிக்கப்பட்டது.

மேற்கிலும் கிழக்கிலும் கடல்வரை பரந்திருந்த வன்னிநாட்டை அடங்காப்பற்று என்றனர். அங்கே கைலாய வன்னியனுக்குப் பின்பு அத்திமாபாணன், நல்லமாப்பாணன், சேனாதிராய முதலியார், பண்டாரவன்னியன் என்னும் பிரபலமான வன்னியர்கள் வெவ்வேறு காலங்களில் அதிகாரம் செலுத்தினர்.

வன்னிநாட்டில் பனங்காமம், கரிகட்டுமூலை, கருநாவல்பற்று, மேல்பத்து, முள்ளியவளை, தென்னமரவடிப்பற்று, செட்டிகுளம் பற்று எனும் ஏழு பிரிவுகள் இருந்தன.

இவை ஒவ்வொன்றையும் வன்னிபம் என்ற பட்டம் பெற்ற தலைவர்கள் ஆட்சி செய்தனர். இவர்கள் முடிசூடிக் கொள்வதில்லை. நாணயங்களை வழங்கவில்லை. மற்ற எல்லா அம்சங்களிலும் அரசருக்குரிய அதிகாரங்களைப் பெற்றிருந்தனர்.

நிர்வாகம், நீதி பரிபாலனம், ஆலயபரிபாலனம், வேளாண்மை முதலான துறைகளில் அவர்கள் அதிக அதிகாரம் கொண்டிருந்தனர்.

அதேபோல மட்டக்களப்பிலும் வன்னியரின் ஆட்சி பூர்வகாலம் முதலாக நிலைபெற்றிருந்தது. வெருகல் ஆறு முதலாக பாணமை வரையான சும்மார் 150 மைல் நீளமுடைய நிலப்பரப்பை கொண்டது முற்காலத்து மட்டக்களப்பு தேசம்.

அது எழுவான்கரை, படுவான்கரை என்ற பிரிவுகளைக் கொண்டது. நடுவிலமைந்த ஏரியின் காரணமாக இந்தப் பாகுபாடு அமைந்தது.

அங்கே ஏறாவூர், மட்டக்களப்பு, மண்முனை, பழுகாமம், போரதீவு, சம்மாந்துறை, நாடுகாடு, பாணமை என்ற குறுநிலப் பிரிவுகளைப் பற்றி மட்டக்களப்பு பூர்வ சரித்திரம், நாட்டார் பாடல், ஆலயங்களில் படிக்கும் பாடல்கள், ஐரோப்பியர் எழுதிய ஆவணங்கள் என்பவற்றின் மூலமாக அறிய முடிகின்றது.

அங்கு அதிகாரம் செலுத்தியவர்கள் குறுநில மன்னர்கள் என்று வர்ணிக்கப்படுகின்றனர். ஆயினும் ஒல்லாந்தர் காலத்து ஆவணங்கள் சிலவற்றில் இவர்களை 'அரசர்' என்றும் அவர்களின் ஆட்சிபுலங்களை இராச்சியங்கள் என்றும் குறித்துக் கொண்டனர்.

முற்காலங்களில் இவர்கள் சுதந்திரமாக இருந்தார்கள் என்றும் கண்டி மன்னனின் மேலாதிக்கம் ஏற்பட்டது என்றும் புர்ணண்ட் குறிப்பிடுகின்றார்.

கண்டி மன்னரின் மேலாதிக்கம் ஏற்பட்டிருந்த காலத்தில் மட்டக்களப்பு தேசம் என்று குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. சில சமயங்களில் அதனை முக்குவர் தேசம் என்றனர்.

வன்னியர்களிற் சிலர் முக்குவர் சமூகத் தலைவராக இருந்தனர். மட்டக்களப்பு தேசத்தில் வேளாண்மை முறை, சமுதாய அமைப்பு என்பன தனிப்பண்புகள் உடையவை.

இவற்றிற்குரிய மரபுகள் இலங்கையில் வேறெங்கும் காணப்படாதவை. வன்னியர் படைபலமும், அதிகாரங்களும் மட்டக்களப்பு தேசத்து வன்னிபங்களின் சுயாட்சி உரிமையின் அடிப்படையில் பிரதேசத்து நிர்வாக அதிகாரம் பெற்ற்றிருந்தனர்.

அவர்களுக்கு உரித்தான பற்றுக்களின் நிர்வாகம், நீதிபரிபாலனம், வரி சேகரித்தல், வேளாண்மை, ஆலயபரிபாலனம் முதலானவற்றில் அவர்கள் அதிகாரம் கொண்டிருந்தனர்.

யானை, தேன், மெழுகு ஆகியவற்றை சம்பிரதாய பூர்வமாக அரசனுக்கு திறையாகச் செலுத்த வேண்டும். போர் ஏற்படும் காலங்களில் அரசனுக்கு ஆதரவாக படைத்துணை வழங்க வேண்டும்.

அதுமட்டுமின்றி பலசமயங்களில் அரச படையின் தலைவர்களாக வன்னிபங்கள் கடமையாற்றியதாக அறிய முடிகின்றது. இராசாதானியில் குழப்பமும் தகராறும் ஏற்பட்டபோது சில சமயங்களில் ஒருசாராருக்கு ஆதரவு வழங்க நேர்ந்தது.

விமலதர்மனுக்கும் ஜெயவீரபண்டாரனுக்கும் இடையே போர் ஏற்பட்டபோது, மட்டக்களப்பு தேசத்து வன்னிபங்கள் ஜெயவீர பண்டாரனுக்கு ஆதரவாக அனுப்பியிருந்த படைகளின் விபரங்களைப் பிலிப்பூஸ் போல்டே (Philippus Baldaeus) வர்ணிக்கின்றார்.

பல்லாயிரக்கணக்கான போர்வீரர்களையும் அலியன் யானைகளையும் பொருள்களை ஏற்றிச்செல்வதற்கான வண்டிகளையும் காளை மாடுகளையும் இவர்கள் அனுப்பியதாக சொல்லப்படுகின்றது.

தமது பிராந்தியங்களில் சுயாட்சி அதிகாரம் பெற்றிருந்ததோடு, கிழக்கிலங்கை வன்னியர்கள் இராசதானியிலும் இராட்சியத்தின் அதிமுக்கியமான விடயங்கள் தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டங்களிலும் பங்கு பற்றினார்கள்.

அயல் நாட்டவரோடு மேற்கொள்ளப்போகும் போர் நடவடிக்கைகள், உள்நாட்டுக் கலகங்கள் தொடர்பான விடயங்கள், ஆளும் அரசனுக்கு பின்பு அவனுடைய வாரிசை நிர்ணயித்தல் போன்ற விடயங்களைப் பிரதானிகளோடு கலந்து ஆலோசனை நடத்திய பின்னரே அரசன் தீர்மானிப்பான்.

இவ்வாறான கூட்டங்களில் சிங்களப் பிரதானிகளோடு கிழக்கிலங்கைத் தமிழ்ப் பிரதானிகளும் கலந்து கொள்கின்றமை குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டியதாகும்.

ஒரு சமயத்தில் மட்டக்களப்பு வன்னிபம் குமார பண்டாரம், பழுகாமத்து வன்னிபம் செல்லப்பண்டாரம், போரதீவு வன்னிபம் தர்மசங்கரி, பாணமை வன்னிபம் சமரவாய் முதலானவர்கள் இராசதானியில் நடைபெற்ற கூட்டத்தில் பிரசன்னமாய் இருந்தார்கள்.

ஒல்லாந்து நாட்டைச் சேர்ந்தவரான ஸ்பில்பேர்கன் (Soilbergen) 17 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வந்திறங்கி, கண்டிராச்சியம் சென்றான்.

மட்டக்களப்பில் இறங்கிய போது அங்கு தர்மகங்காதரன் வன்னிபமாக விளங்கினான். அவனுடைய நிர்வாகத்துக்குப் பொறுப்பாக இருந்த முதலியார் ஒருவர் கடற்கரைக்கு சென்று ஸ்பில்பேர்கனைச் சந்தித்தார்.

இருசாராரும் பரிசில்களை பரஸ்பரம் வழங்கிவிட்டு அடுத்தநாள் வன்னிபத்தின் ஏற்பாட்டினால் ஸ்பில்பேர்கனுக்கும் கப்பலில் வந்தவர்களுக்கும் விருந்துபசாரம் நடைபெற்றது.

அவர்களை வரவேற்கும் வண்ணமாக மூன்று யானைகள் கால்களை மடக்கி மரியாதை செய்தன என்று சொல்லப்படுகின்றது. வன்னிபத்தைச் சுற்றி 1400 வாட்படையினர் வந்திருந்த ஐரோப்பியர்களுக்கு மரியாதை செய்தார்கள்.

அதன் பின்னர், அதனை அடுத்த நாட்களில் வன்னிபத்தின் ஆதரவோடு ஒல்லாந்தர் கண்டி இராசதானிக்குச் சென்றனர்.

தொடரும்..

கலாநிதி சி.பத்மநாதன்

ஓய்வுநிலை பேராசிரியர்
பேராதனை பல்கலைக்கழகம்
நன்றி யாழ் மண்

No comments: