போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மெல்பன் இளம் கலைஞரின் ஆதரவு

                                                            .
                                                                                  முருகபூபதி (அவுஸ்திரேலியா)

அவுஸ்திரேலியாவில் கடந்த 22 வருடங்களுக்கும் மேலாக இயங்கிவரும் இலங்கை மாணவர்கல்வி நிதியம் சமீபத்தில் வவுனியா தடுப்பு முகாம் காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள முன்னாள் தமிழ் போராளிச்சிறார்களின் கல்வி சார்ந்த நலன்களையும் கவனிக்க சில பணிகளை முன்னெடுத்துள்ளது.

 வவுனியாவில் நீண்டகாலமாக இயங்கும் தொண்டுநிறுவனமான நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பு (Voluntary Organization For Vulnerable Community Development- VOVCOD) நிறுவனர் த.கணேஸ் அவர்களுடைய நேரடி கண்காணிப்பில் மேற்படி மாணவர்களுக்கு உதவும் திட்டத்தை கல்வி நிதியம் ஊடாக ஆரம்பித்துவைத்துள்ளது.

இதுசம்பந்தமான முதலாவது ஆலோசனைக்கூட்டம் மெல்பனில் 03-07-2010 ஆம் திகதி பிரஸ்டனிலும் 17-07-2010 ஆம் திகதி வேர்மண்சவுத்திலும் நடைபெற்றது. இக்கூட்டங்களில் பல அன்பர்கள் கலந்துகொண்டு தமது ஆதரவை வழங்கினர்.

வவுனியா பூந்தோட்டம் கூட்டுறவுப்பாடசாலையில் 114 மாணவிகளும் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 232 மாணவர்களும் தங்கியிருந்து இந்த ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த.(உயர்தர) பரீட்சைக்குத்தோற்றுகின்றனர்.

இம்மாணவர்களின் கல்வி நலன்சார்ந்த தேவைகளான பாடப்புத்தகங்கள் கடந்த ஆண்டு பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் முதலானவற்றைப்பெற்றுக்கொடுப்பதற்காகவும் இம்மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக நியமிக்கப்பட்ட சுமார் எட்டு ஆசிரியர்களின் அலவன்ஸ் உட்பட இதர செலவீனங்களுக்காகவும் அவுஸ்திரேலியா, இலங்கை மாணவர்கல்வி நிதியம் அன்பர்களின் நிதி ஆதரவைப்பெற்று வழங்கியுள்ளது. இதுவரையில் பத்தாயிரம் அவுஸ்திரேலியன் வெள்ளிகள் (($10,000) அன்பர்களினால் வழங்கப்பட்டிருக்கிறது. விக்ரோரியா மாநில ஆளுநர் (Governo) பேராசிரியர் டேவிட் டீ கிரெஸ்டர் உட்பட பல அன்பர்கள் இந்தத்திட்டத்திற்கு உதவ முன்வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இம்மாணவர்களின் கல்வி சார்ந்த தேவைகளுக்காக இதுவரையில் மூன்றுதடவைகள் நிதியுதவி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இலங்கை நாணயத்தில் ஏழு இலட்சத்து எண்பத்தி ஏழாயிரத்து இருநூற்றி நாற்பத்தியைந்து ரூபா (7.87,245 ரூபா) வழங்கப்பட்டுள்ளது. நான்காவது கட்ட நிதியுதவியும் விரைவில் அனுப்பிவைக்கப்படும்.

இளம் கலைஞரின் ஆதரவு




இந்தத்திட்டம் பற்றி அறிந்த மெல்பன் இளம் கலைஞரான செல்வன் பிரகதீஸ் சண்முகராஜா சமீபத்தில் நடந்த தமது மிருதங்க அரங்கேற்றத்தில் தமக்கு கிடைக்கப்பெற்ற பணப்பரிசில்களை இந்த மனிதநேயத்திட்டத்திற்கு வழங்கியுள்ளார். திரு. சண்முகராஜா மருத்துவ கலாநிதி குமுதினி சண்முகராஜா தம்பதியரின் மகன் பிரகதீஸ் கடந்த ஆண்டு தமது வாய்ப்பாட்டு அரங்கேற்றத்தையும் மெல்பனில் சிறப்பாக நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. Keysborough Haileybury உயர்தரக்கல்லூரியில் புலமைப்பரிசில் பெற்று அங்கு பத்தாம் தரத்தில் பயிலும் மாணவரான செல்வன் பிரகதீஸ் சண்முகராஜாவுக்கு இலங்கை மாணவர்கல்வி நிதியம் அனுப்பியிருந்த நன்றி கலந்த வாழ்த்துச்செய்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

“ இளம் கலைஞரான தாங்கள் தங்களது அரங்கேற்றம் மூலம் பெற்றுக்கொண்ட அன்பளிப்புகளை அல்லல்படும் தமிழ் மாணவ சமுதாயத்தின் நலனுக்காக தந்துதவ முன்வந்திருப்பதை மிகுந்த நன்றியுணர்வுடன் பாராட்டுகின்றோம். கலைஞர்கள் எப்பொழுதும் மனிதநேயப்பண்பாளர்களாக விளங்கவேண்டும் என்பதற்கு தாங்கள் மிகச்சிறந்த முன்னுதாரணமாக விளங்கியிருக்கிறீர்கள். நாளைய உலகை நிர்மாணிக்கும் நிர்ணயிக்கும் இளம் தலைமுறையின் பிரதிநிதியாக தாங்கள் செயல்பட்டிருப்பதாகவே கருத முடிகிறது.”

அவுஸ்திரேலியா அன்பர்களின் ஆதரவின்மூலம் இந்த ஆண்டு க.பொ.த.( உயர்தர) பரீட்சைக்கு தோற்றும் முன்னாள் போராளிச்சிறார்கள் இம்மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமாகும் பரீட்சைக்குத்தோற்றுகின்றனர். இம்மாணவர்களை அவர்களின் பெற்றோர் சென்று பார்வையிடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இம்மாணவர்களின் நலன்களை வவுனியா மாவட்ட முன்னாள் கல்விப்பணிப்பாளர் திரு.பொன்னையா மற்றும் ஆசிரியர் தேவதாஸ் தலைமையிலான ஆசிரியர்கள் கவனித்துவருகின்றனர்.



-

No comments: