உனக்கான காத்திருப்பின் இடைவெளிகளில்-கவிதை

.
                                       பனித்துளி சங்கரின் நண்பர்கள் தினம் சிறப்புக் கவிதை !!!   

உனக்கான காத்திருப்பின் இடைவெளிகளில்

நழுவிப்போன சந்திப்புகளை மீண்டும்
மெல்ல சிறை செய்கிறது
நம் நட்பின் ஞாபகங்கள் .

என் மௌனம் பற்றி நீயும்
உன் மௌனம் பற்றி நானுமாய்
சில நேரங்களில் பதில்களற்ற
கேள்விகள் மட்டும்
நம் இருவரின் புன்னகையிலும்
அவ்வப்பொழுது தோன்றி
தொலைந்து போகிறது.

“தா“ என்று கேட்காமல் கொடுத்தலில் தொடங்கி,
“வலி“ என்று சொல்லுமுன் விழிகள் அழுது
உனக்காக நானும், எனக்காக நீயுமாய்
உறவாடிய நட்பின் இனிய கணங்களில்
மகிழ்ச்சியாய் கடந்துபோனது காயப்படாமல்
நமது உறவின் முதல் வருடமும் .

உன்னுடன் பேசாத கணங்களின் நிசப்தத்திலும்
மௌனத்தின் மொழி இவ்வளவு
தெளிவாகக் கேட்கும் என்பதை
உன் நட்பில் தான் உணர்ந்துகொண்டேன் .

பாதி ஓவியம் தீட்டி
களைத்துப் போன
தூரிகையின் பெரு மூச்சாய்
எப்பொழுதும் நமது மறு
சந்திப்பை பற்றிய உடன்படிக்கைகள் .

எல்லோருக்கும் இல்லை என்ற போதும்
எனக்கு மட்டுமான தேவைகளை
நான் கேட்காமல் வாரி இறைத்துவிடுகிறது
நமது நட்பில் பிறக்கும் வார்த்தைகள் .

சந்தோசத்திலும் ஒரு சோகம்
சோகத்ததிலும் ஒரு சந்தோசமென
அனைத்தையும் ஒன்றாய் ரசிக்க வைக்கிறது
நம் இருவருக்கும் இடையிலான
நட்பென்ற உறவு .

தாய்மடி இல்லையென்றபோதும்
உன் தோழமையின் அரவணைப்பில்
உறங்கிப்போகிறேன் பல இரவுகளில்
மெய்மறந்து சிறு குழந்தையாய் .

ஆயிரம் உள்ளங்கள் அருகில் இருந்தும்
ஏனோ தனிமையில் இருப்பதாய்
தவிக்கும் இந்த உள்ளம் .
உன் நட்பு மட்டும் உடன் இருந்தால்
இந்த உலகமே அருகில் இருப்பதாய்
உள்ளுக்குள் துள்ளும்

தினமும் என்னைப் பற்றி நீயும்
உன்னைப் பற்றி நானும்
நலம் விசாரித்து சிதறிச்செல்லும்
புன்னகையின் மிச்சங்களில்தான் இன்னும்
சிரித்துக்கொண்டு இருக்கின்றன
சாலையோரப் பூக்கள் .

ஒவ்வொரு இரவின் இடைவெளிகளிலும்
உன்னை மீண்டும் சந்திக்கப்போகும்
அந்த நிமிடங்கள் எண்ணியே பசியின்றி ,
தாகமின்றி உடையாத நீர்குமிழியாய்
இங்கும் அங்கும் நகர்ந்துகொண்டே இருக்கிறது
உன் நட்பின் நினைவுகள் .
மீண்டும் நம் நட்பைக்கொண்டாட
எதற்க்கு இந்த வருடம் என்னும்
நீண்ட இடைவெளி..??
வா தோழா இன்றே தொலைத்துவிடுவோம்
நமது நட்பிற்குள் இந்த வருடத்தை
நிரந்தரமாக.

காதல் கொண்ட உள்ளத்தின்
எதிர்பார்ப்புககளைவிட ஆயிரமாயிரம்
கற்பனைகள் நிரம்பி வழிகிறது
இந்த நட்புக் கொண்ட இதயத்தில் .

நானும் நீயும் சுவாசிக்கும்
ஒவ்வொரு கணமும் நம் அனுமதியின்றியே
நம் இதயங்கள் உள்ளுக்குள்
நம் நட்பை கொண்டாடிக்கொண்டே இருக்கட்டும்
இனி வரும் நாட்களில்...

5 comments:

karuppy said...

very good kavithai. It describes the true love / frienship in a lovely way. Yes true friends are better than lovers. No expectations from each other.

Ramesh said...

கவிதை மிக நன்றாக நகர்ந்து செல்கின்றது. ஒரு ரம்மியமான நீரோடையின் குளிர்மையின் சுகத்தை அனுபவித்த சுகம். இப்படி ஒரு நட்பு கிடைக்காதா என்று மனம் ஏங்குகின்றது. கவிதையில் மட்டும்தான் இப்படியான நட்பை பார்க்க முடிகின்றது மன வருத்தம் தான் "“தா“ என்று கேட்காமல் கொடுத்தலில் தொடங்கிஇ
“வலி“ என்று சொல்லுமுன் விழிகள் அழுது

இந்த வரிகள் வைரவரிகள் கவிஞரே

tamilmurasu said...

நன்றி கறுப்பி. நட்பின் ஆழத்தை புரியவைக்கும் கவிதைக்கு உங்கள் வரிகள் பொருத்தமானதே

அருமையான பார்வை ரமேஸ் . நிச்சயமாக கவிஞர் பனித்துளி சங்கர் பார்வையிடுவார் நன்றி.

எங்களை சிந்திக்கவைத்த கிறுக்கனை இன்னும் காணவில்லையே? கிறுக்கல் இல்லாத ஓவியமும் கிறுக்கன் பதியாத முரசும் முழுமையடையாது நண்பரே .

kirrukan said...

நன்றி கறுப்பி. நட்பின் ஆழத்தை புரியவைக்கும் கவிதைக்கு உங்கள் வரிகள் பொருத்தமானதே

அருமையான பார்வை ரமேஸ் . நிச்சயமாக கவிஞர் பனித்துளி சங்கர் பார்வையிடுவார் நன்றி.

[quote]எங்களை சிந்திக்கவைத்த கிறுக்கனை இன்னும் காணவில்லையே? கிறுக்கல் இல்லாத ஓவியமும் கிறுக்கன் பதியாத முரசும் முழுமையடையாது நண்பரே .[/quote]

நன்றி........நன்றி....நன்றி



வருவமல்ல....வந்திட்டமல்ல.....

கருத்து வைப்பமல்ல.....வைச்சிட்டமல்ல

பனித்துளி சங்கர் said...

வணக்கம் தமிழ் முரசு நண்பரே இன்றுதான் இந்த பக்கத்தை பார்வை இட்டேன் . எனது நண்பர்கள் தினம் சிறப்புக் கவிதை மீண்டும் இங்கு வெளியிட்டு இருப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது . ஒரு தோழியின் வேண்டுதலுக்கிணங்கி கிறுக்கிய கவிதைதான் இது . இந்த கவிதை முடித்தப் பிறகு கதறி கதறி அழுகவேண்டும் என்று எண்ணியது உள்ளம் . பகிர்வுக்கு நன்றி