சாதனையின் போர்வையில் மறக்கடிப்பட்ட ஆதித் தீ

.
                                                                                                 - எம்.ரிஷான் ஷெரீப்,


முத்தையா முரளிதரனின் சாதனையின் போர்வையில் மறக்கடிப்பட்ட ஆதித் தீ

கடந்த ஜூலை 22 இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுக்களை வீழ்த்தி மிகப் பெரும் சாதனையை நிலை நாட்டினார். பேரானந்தத்தில் வெறிபிடித்தவர்கள் போல மைதானத்துக்குள் குதித்த ரசிகர்கள், சிங்கக் கொடியை அசைத்தபடி முரளியின் பின்னால் ஓடினர். சிங்கக் கொடியின் பிண்ணனியில் சக விளையாட்டு வீரர்களின் தோள்களில் பயணிக்கும் முரளியின் புகைப்படங்கள் தேசத்தின் எல்லாப் பத்திரிகைகளையும் பூரணப்படுத்தின. தனது திறமைக்குக் களம் தந்த விளையாட்டினை, வெற்றிகரமான ஒரு சாதனையோடு முடித்துக்கொண்ட முரளி, முழு இலங்கைக்குமே பெருமையைத் தேடித் தந்த ஒருவரென பத்திரிகைகள் எழுதி எழுதி மகிழ்ந்தன.

எனினும், சிங்கக் கொடியசைந்த அந்த வெற்றிக் கணத்தில் மகிழ்ந்து, எழுத மறந்த கதையொன்றும் உள்ளது. முத்தையா முரளிதரனின் இவ் வெற்றிக் களிப்புக்கு முற்றிலும் நேர்மாறாக மரண பயமும், கண்ணீரும், இழப்பும் மட்டுமே அவருக்கென எஞ்சியிருந்த நாட்களும் இதே போன்றதொரு ஜூலை மாதத்திலேயே வந்தன. சரியாக இருபத்தேழு வருடங்களுக்கு முன்பு ஓர் நாள், சிங்கக் கொடியை அசைத்தபடி கூக்குரலிட்ட ஒரு கும்பல், கண்டி, நத்தரம்பொத, குண்டசாலையில் அமைந்திருக்கும் முத்தையா முரளிதரனின் வீட்டைச் சூழ்ந்தது. முரளியின் தந்தைக்குச் சொந்தமான தொழிற்சாலை அக் கும்பல் வைத்த தீயில் எரிகையில், மரண பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த பதினொரு வயதான முரளிதரனின் உயிர் தெய்வாதீனமாகக் காப்பாற்றப்பட்டது. அன்று சிங்கக் கொடியை அசைத்து வந்த மரணம் குறித்து, இன்று சிங்கக் கொடிகளின் மத்தியில் சிங்களவர்களின் தோள்களில் பயணிக்கும்போது முரளி என்ன நினைத்துப் பார்த்திருப்பார்?

இறுதியாக முத்தையா முரளிதரன் சாதனையை நிலைநாட்டியது 2010, ஜூலை 22. அன்று முரளிதரனின் இருப்பிடங்களைச் சேதப்படுத்திய நெருப்பெரிந்தது 1983, ஜூலை 23. எரித்துக் கருக்கியபடி தொடர்ந்து சென்ற அந்த ஊழித் தீ எத்தனை முரளிதரன்களைப் பழி கொண்டிருக்குமென்று அறிந்துகொள்ளும் வழி கூட எப்பொழுதுமே எமக்குக் கிடைத்ததில்லை. 1983 கறுப்பு ஜூலைக்கு இப்பொழுது வயது இருபத்தேழு.

இரத்தக் கறை படிந்த ஆதி வரலாற்றின் பக்கங்களை இன்று மீளப்புரட்டுவது எதனாலென உங்களில் சிலர் சிலவேளை எண்ணக் கூடும். ஆனாலும், இலகுவாக மூடி மறைத்து வைக்கப்பட்டுள்ள பக்கங்களுக்கிடையில் சிக்கியிருக்கும் இருள் சூழ்ந்த வரலாற்றின் நினைவுகளை இதுபோல இலகுவாக ஒளித்துவைக்க ஒருபோதும் முடியாது. கறுப்பு ஜூலை - காலத்தால் அழிக்கப்பட முடியாத, இருள் சூழ்ந்த வரலாற்றில் தேங்கியிருக்கும் நினைவுகளிலொன்று. அந்தத் தீயிலிருந்து தப்பி இன்று உயிர்வாழ்ந்துகொண்டிருக்கும் உள்ளங்களிலும், அந்த இருள் சூழ்ந்த நாட்களில் நெருப்பில் மறைந்துபோனவர்கள் குறித்து கைவிட முடியாத துக்கத்தைச் சுமந்தலையும் உள்ளங்களிலும் மட்டுமே அது நினைவுகளாகத் தேங்கியிருக்கிறது .

அறிவும், தொடர்ந்து வந்த சகோதரத்துவமும் குறித்த எங்கள் தேசத்துப் பாரம்பரியக் கீதங்கள் இருபத்தேழு வருடங்களுக்கு முன்பு இருளாய் வந்த கறுப்பு ஜூலைக்குள் மறைந்தே போயின. அப்பாவிகளைக் கொன்றொழித்த அந்த மிலேச்சத்தனமான செயல்களைக் கூட வெற்றிக் களிப்போடு செய்த நாட்களவை. தென்னிலங்கையின் வீதிகளில் வீடுகள், கடைகள், வாகனங்கள், சொத்துக்கள் எல்லாவற்றோடும் ஆயிரக்கணக்கில் எரிந்து மாண்டுபோன உயிர்கள், தமது குடியுரிமையின் மீது நிகழ்த்தப்பட்ட கோரமான வன்முறையின் சாட்சிகள்.

அது 'அறிவீனர்கள் சிலரால்' நிகழ்த்தப்பட்ட வன்முறையொன்றெனச் சொல்வதற்கு வளரும் சந்ததி இன்று பழக்கப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இதைக் கேட்டு வளரும் சந்ததியின் இதயங்களில் கேள்வியொன்று உள்ளது. அன்றைய நாட்களில் அறிவீனர்கள் சிலரால் இவ் வன்முறை நிகழ்த்தப்பட்ட போது, நாட்டில் மீதமிருந்த மற்ற எல்லோரும் அதாவது அறிவாளிகள் பலரும் இக் கொடூர நிகழ்வுகளின் போது என்ன செய்துகொண்டிருந்தனர்? நாட்டில் பிரசித்தமாக இக் கேள்வியைக் கேட்கமுடியாத போதும் இப்பொழுதும் கூட தட்டிக் கழித்துவிட முடியாத கேள்வியொன்று இது. இருபத்தேழு வருடங்களுக்கு முன்னர் படிந்த இரத்தக் கறை இன்றும் கூட முழுதாக நீங்கியிருக்கிறதா என்ன?

இன்று கொட்டாஞ்சேனை சாந்த லூசியா தேவாலயத்திலோ, வெள்ளவத்தை இந்துக் கல்லூரி சரஸ்வதி மண்டபத்திலோ, கொள்ளுப்பிட்டிய மெதடிஸ்த தேவாலயத்திலோ கறுப்பு ஜூலைத் தீக்கு தங்கள் உடைமைகளை எரியக் கொடுத்துத் தப்பி வந்து தஞ்சமடைந்தவர்கள் எவரும் இல்லை. அண்மைய வருடங்களைப் போல வடக்கு வீதிகளில், ஒழுங்கைகளில் பிணங்களெரியும் வாடைகளை முகர்ந்தபடி தப்பித்து விரையும் எவரையும் இன்று காண்பதற்கில்லை. எனினும் இச் சரணாலய முகாம்களும் மயான வாசமும் வேறு நிலங்களில் எழுப்பப்பட்டுள்ளன இன்று. தவறிழைத்தவர்கள் பகிரங்கமாக எல்லா சௌபாக்கியங்களுடனும் வாழ, அன்று தொட்டு இன்று வரை தமிழ் பேசும் இனங்கள் மட்டும் இனவாத வன்முறையின் சிலுவையை கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தங்கள் தோள்களில் சுமந்தவாறு ஒழுங்கான இருப்பிடமற்று அச்சத்தோடு அலைய விதிக்கப்பட்டிருக்கிறது.

இருபத்தேழு வருடங்களுக்கு முன்னர் உயிர் தப்பிய முத்தையா முரளிதரன் கூட இன்று தேசாபிமானத்தின் ஒரு குறியீடு. எனினும், அவரைப் போல உயிர் தப்பிய இலட்சக்கணக்கான மக்களால் இன்றும் கூட மறந்துவிட முடியாத இந்த ஜூலை மாதத்தில், அந்தத் தேசாபிமானத்துக்கும் குடியுரிமைக்குமான இடைவெளி, மற்ற மாதங்களை விடவும் அதிகமாகத்தான் இருக்கிறது.

(சுமுது திவங்க கமகேயின் கருத்தினை வைத்து எழுதியது)

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
mrishanshareef@gmail.com

1 comment:

kirrukan said...

[quote] அன்று சிங்கக் கொடியை அசைத்து வந்த மரணம் குறித்து, இன்று சிங்கக் கொடிகளின் மத்தியில் சிங்களவர்களின் தோள்களில் பயணிக்கும்போது முரளி என்ன நினைத்துப் பார்த்திருப்பார்?[/quote]

நான் தான் சிங்கம்.சிங்கிளாக இருந்து சாதனை படைத்து விட்டேன்......

அவன்கள் கூட்டமாக வந்தும் என்னை ஒன்றும் செய்யவில்லையே என்று நினைத்திருப்பார்.