பிறப்பும் - மதிப்பும் - சோனா பிறின்ஸ்

.



செய்யும் தொழிலே தெய்வம் என்று சொல்லிவைத்த நம் முன்னோர்களே,தொழிலின் அடிப்படையில் சாதி வேறுபாட்டையும் உருவாக்கி வைத்தார்கள். அந்த வேறுபாட்டினை தொடர்ந்து வந்த நம் தமிழினம் கடைப்பிடித்துக் கொண்டே வருகின்றது. எத்தனையோ நல்ல விடயங்களை நம் முன்னோர்கள் சொல்லி வைத்த போதிலும், எது மனித சமுதாயத்தைப் பிரிக்கின்றது என்ற சிந்தனையில்லாமல், சாதி என்னும் சாவி கொண்டு தமிழர்களை உள்ளே விடாமல் தடை போடுகின்றது.

 அது இல்லமாகட்டும்,இல்லை கல்விக்கூடமாகட்டும், ஏன் கோவில் தேவாலயங்கள் ஆகட்டும் அனைத்திற்கும் பூட்டுக்களைப் போட்டு பூட்டி வைக்கிறது.
எவ்வாறு பிராமண இனத்தை சார்ந்த்தவர்கள் பூசை வழிபாடு செய்வதற்கு உகந்தவர்கள் என்று தெரிவு செய்யப்பட்டார்களோ, அது போலவே கத்தோலிக்க சமயத்திலும் மேற்றிராணி போன்றோராக வரக்கூடிய தகுதி உள்ளவர்கள் ஒன்றிரண்டு கிராமத்தை சார்ந்த்தவர்கள் என்னும் நிலையே இன்றுவரை உள்ள நிலை. ஆகவே அன்பே கடவுள், அன்பேசிவம், என்று கூறினாலும், அத்தனை மனிதரிலும் அன்புக்கடவுளைக் காண ஆன்மீகவாதிகளே தயங்குகிறார்கள் என்பதே உண்மை.

ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை எனக் கவிஞர் பாடி வைத்தது போல், நமது அத்தியாவசிய உணவாகிய கமத்தொழில் எமக்கு பிரதானமானதுதான். அதற்காக அத்தொழிலை வைத்து மக்களிடம் உயர்வு தாழ்வு ஏற்படுத்துவது எந்தவகையில் நியாயமாகும். என்மாமனார் மண்டைதீவில் வசித்த காலத்தில் பாடசாலை அதிபர், மீனவசமூகத்தவர், பாடசாலை விட்டு வீடு வந்தததும் தம் வளர்ந்த பிள்ளைகளுடன், தனது சொந்த நிலப் பரப்பில் கமத்தொழில் செய்யப் புறப்பட்டுவிடுவார்.

ஒவ்வொரு சித்திரை வருடப் பிறப்பு தினத்திலும், புதுஅரிசி பொங்க வைத்து, உறவினர்களுக்கு விருந்து படைப்பார்கள். அப்படியானால் அவர்களை எந்த சமுகத்தில் பார்ப்பது ?.இன்னும் ஒரு உதாரணத்தையும் குறிப்பிட விரும்புகின்றேன் .கிறிஸ்தவர்கள் வழிபடும் தெய்வம் ஏசுநாதர், முதன்முதலில் அவரால் தம் சீடராகத் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் மீன்பிடித் தொழில் செய்து கொண்டிருந்தவர்கள்தான்.

அவர்களிடம் "இன்றுமுதல் உங்களை மனிதரைப் பிடிப்பவர்கள் ஆக்குகின்றேன்" என்று சொன்னது மட்டுமல்லாமல், மீனவத் தொழில் செய்த இராயப்பர் என்பவரிடம் "நீ பாறை இந்தப் பாறையின் மீது என் திருச்சபையைக் கட்டுவேன்"என்றார். அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதை வைத்துக் கொண்டு மீனவர்கள் தாங்கள்தான் உயர்வானவர்கள் என்று சொல்ல முடியுமா? எனவே தொழிலின் அடிப்படையிலோ இல்லை சம்பவங்களின் அடிப்படையிலோ யாரும் யாருக்கும் தாழ்ந்தவர்கள் அல்ல.

எனக்கு தெரிந்த ஒருவரினது மறைவிற்குப் பின்பு, அந்த மறைந்தவரின் பிள்ளைகள், மறைந்தவரைப் பற்றி ஒரு மலர் வெளியிட்டிருந்தார்கள். அதில் தாயாரைப் பற்றி குறிப்பிடுகையில் கரவெட்டியை சேர்ந்த உயர் வேளாளர் என்றும், தந்தையைப் பற்றி குறிப்பிடுகையில் மானிப்பாய் வேளாளர் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள். அவர்களிடமே கேட்டேன் எதற்காக இருவரையும் இப்படி பிரித்து போட்டீர்கள் என்று. எனவே ஒரு சமூகம் என்று சொல்லிக் கொள்பவர்களுக்குள்ளும் கூட இந்த உயர்வு தாழ்வு இருக்கத்தான் செய்கின்றது. எப்போது இது மாறுகின்றதோ அப்போதுதான் இனத்திற்குள் ஒற்றுமை மேலோங்கும்.

1 comment:

kirrukan said...

அட சோனா பிரிண்ஸின் கதை ஆக்கும் என்று நினைத்து வாசிச்சால் அது சாதி பற்றிய கட்டுரை ......

எப்ப அடுத்த கதை வெளிவரும்?