“ எங்கள் பாகிஸ்தானுக்கு வந்துவிடுங்கள். நான் உங்களை எமது
நாட்டில் கௌரவப் பிரஜையாக ஏற்கின்றேன். காஸ்மீரை இந்தியாவுக்கு விட்டுக்கொடுத்துவிடுகிறேன் “ என்று ஒரு சமயம் சொன்னவர் பாகிஸ்தான் அதிபர் ஷியாவுல் ஹக்.
இவ்வாறு ஒரு நாட்டின் தலைவர்
தனது அண்டை நாடான இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்காரிடம் சொன்னதாக ஒரு செய்தியை
நாம் முன்பு படித்திருக்கின்றோம்.
அந்தளவுக்கு அனைவராலும்
நேசிக்கப்பட்ட இந்த இசைக்குயில், இம்மாதம்
06 ஆம் திகதி தனது இறுதி மூச்சைவிட்டு, விடைபெற்றுவிட்டது.
உலகில் எங்காவது ஒரு தேசத்தில் - ஓரிடத்தில் ஒவ்வொரு நிமிடமும்
ஒலித்துக்கொண்டிருக்கும் மதுரமான குரலுக்குச் சொந்தக்காரரான லதா மங்கேஷ்கார் தனது ஐந்து வயதில் இசைப்பயணத்தை தொடங்கியவர்.
முப்பத்தியாறு மொழிகளில்
பாடி புகழ்பெற்றிருக்கும் லதா, இந்திய அரசின் பத்மபூஷன், பத்ம விபூஷன் விருதுகள் உட்பட,
வாழ்நாள் சாதனைக்கான ஜீ சினி விருது, தாதா சாகேப்
பால்கே விருது உட்பட பல விருதுகள் மற்றும் கௌரவங்களைப் பெற்ற சாதனையாளர்.
2001 ஆம் ஆண்டில்
இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதும் பெற்றவர் இந்த இசைக்குயில்.
1974 ஆம் ஆண்டில்,
உலக சாதனைகள் பற்றி பதிவுசெய்யப்படும் கின்னஸ்
புத்தகத்திலும் லதா மங்கேஷ்கார் வரலாற்றில்
மிகவும் முக்கிய கலைஞராக பட்டியலிடப்பட்டுள்ளார்.
இந்தியா – சீனா போர் மூண்ட காலப்பகுதியில்,
அந்தப்போரை தவிர்க்கவேண்டியதன் அவசியம் குறித்து 1963
இல் கவிஞர் பிரதீப் இயற்றிய
“ ஏ மேரே வதன் கே லோகோன் “ என்ற பாடலை
லதா ஒரு மேடையில் பாடினார். அதனை அந்த சபையில் கேட்டுக்கொண்டிருந்த அன்றைய பாரதப்பிரதமர்
ஜவஹர்லால் நேரு கண்ணீர் சிந்தியதாக அக்காலப்பகுதியில்
செய்திகள் வெளியாகின.
அந்த நிகழ்ச்சி முடிந்ததும்,
அவர் மேடைக்குப்பின்புறம் சென்று காப்பி அருந்திக்கொண்டிருந்த லதாவை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
இந்தியாவில் மராத்திய மாநிலத்தில் தீனநாத் – ஷெவாந்தி தம்பதியரின் மூத்த புதல்வியாக 1929 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் "ஹேமா" – தந்தையின் பாவ்பந்தன் என்ற நாடகத்தில் லத்திகா என்ற பாத்திரத்தில் நடித்து பாராட்டுப்பெற்றவர். அதனால், அவர் அன்று முதல் லதா என்றே அழைக்கப்படலானார்.
லதாவின் சகோதரிகள் மீனா, ஆஷா, உஷா மற்றும் ஹிருதய்நாத்
என்ற சகோதரர் ஆகியோரும் இசை – பாடல் துறையில் ஈடுபாடு மிக்கவர்களாத் திகழ்ந்தனர். இவர்களில் ஆஷா போஸ்லே, லதாவைப்போன்று திரையுலகிலும் இசைஅரங்குகளிலும் பெரும் புகழ்பெற்றவர்.
இவரும் பல உயர் விருதுகளைப்
பெற்றவர்.
இளம் பருவத்தில் தந்தையாரின்
மேடை நாடகங்களில் நடித்தும், பாடிக்கொண்டுமிருந்த லதா, காலப்போக்கில்
இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று திரைப்படப் பாடல்களும் பாடி பெரும் புகழ் பெற்றார்.
தமிழகத்தின் கர்னாடக இசையரசி
எம். எஸ். சுப்புலட்சுமியின் மீதும் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மீதும் அளவற்ற பாசம்
கொண்டிருந்த லதா மங்கேஷ்கார், ஒருதடவை சென்னை
வந்த சமயத்தில் சிவாஜி வீட்டில் நடந்த விருந்தில் கலந்துகொண்டபோது, சிவாஜி குயில் இறைச்சியை
விரும்பிச்சாப்பிடுபவர் என்பதை அறிந்து, “
இனிமேல் அவ்வாறு சாப்பிடவேண்டாம் “ என்று அன்புக்கட்டளை
விடுத்தவர்.
அதனை அன்று சத்திய வாக்காக
ஏற்ற நடிகர் திலகம், அதன் பிறகு குயில் இறைச்சியை
உண்பதை முற்றாக தவிர்த்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதி முதல் உலகெங்கும் கண்களுக்குத்
தெரியாமல் பரவியிருக்கும் கொவிட் பெருந்தொற்று இந்திய தென்னாட்டில், 2020 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி , உலகப்புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை பலியெடுத்தது.
தற்போது உலகம் கவர்ந்த லதா
மங்கேஷ்காரை கடந்த 06 ஆம் திகதி கவர்ந்துசென்றது.
இந்திய அரசு அவருக்கு அரசமரியாதையுடன்
விடைகொடுத்திருக்கிறது.
அவருடைய மறைவுக்கு
இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ்
தலைவர் ராகுல் காந்தி உட்பட பல தலைவர்களும் மாநிலங்களின் முதல்வர்களும் இரங்கல்
தெரிவித்துள்ளனர்.
லதா சிறந்த
பாடகியாகவிருந்தபோதிலும் கிரிக்கட் விளையாட்டின் தீவிர ரசிகையாகவும் விளங்கியவர்.
அவரது இறுதி நிகழ்வில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்றார்.
லதா மங்கேஷ்கார், இறுதியாக எழுதிய பதிவொன்று
வெளியாகியிருக்கிறது.
வாழ்வின் மீதான அவரது பார்வை உலக மாந்தர் அனைவருக்கும்
பொருந்தும்.
அதனை இங்கு தருகின்றோம்:
மரணத்தை_விட_உண்மையானது, இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. !
இந்த உலகத்தில் விலை உயர்ந்த பிராண்டட் கார் என்னுடைய கேரேஜில் நிற்கிறது. ஆனால் நான் சக்கரநாற்காலியில் அழைத்து செல்லப் படுகிறேன்.!
இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான டிசைன்களிலும் கலர் களிலும் விலை உயர்ந்த ஆடைகள் விலை உயர்ந்த காலணிகள் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் என் வீட்டில் உள்ளது.
ஆனால், நான் மருத்துவமனை வழங்கிய சிறிய_கவுனில் இருக்கிறேன்.!
என் வங்கி கணக்கில் ஏராளமான பணம் கிடக்கிறது ஆனால் எதுவும் எனக்குப் பயன் இல்லையே.!
என் வீடு அரண்மனை போன்று , கோட்டை போன்று உள்ளது ஆனால் நான் மருத்துவமனையில் ஒரு சிறு படுக்கையில் கிடக்கிறேன்.
இந்த உலகத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு நான்
பயணித்துக் கொண்டே இருந்தேன்.* *ஆனால் மருத்துவமனையில் உள்ள ஆய்வகங்களுக்கு மற்றொரு லேபிற்க்கும் மாற்றி மாற்றி அழைத்துச் செல்லப்படுகிறேன்.!
அன்று தினசரி 7 சிகை அலங்கார நிபுணர்கள் எனக்கு அலங்காரம் செய்வார்கள்.ஆனால் இன்று என் தலையில்_முடியே இல்லை .
உலகிலுள்ள
பல வகையான உயர் நட்சத்திர ஓட்டல்களில், உணவுகளை உண்டு கொண்டிருந்தேன். ஆனால், இன்று பகலில் இரண்டு மாத்திரைகள். இரவில் ஒரு
துளி உப்பு. !
யார் ஜெட்டில் உலகம் முழுவதும் பறந்து கொண்டிருந்தேன்.ஆனால் இன்று மருத்துவமனை வராந்தா விற்கு வருவதற்கு இரண்டு_நபர்கள் உதவுகிறார்கள். ?
எல்லா வசதி வாய்ப்புகளும் எனக்கு உதவவில்லை.
எந்த
விதத்திலும் ஆறுதல் தரவில்லை. ! ஆனால்,
சில அன்பானவர்களின்
முகங்களும்
அவர்களது தொழுதல்களும் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. !
இவ்வளவு தாங்க வாழ்க்கை...
யாருக்கும் உதவாத... வெறும் பணம் பதவி அதிகாரம் என்று இருக்கும் மனிதர்களை மதிப்பதை தவிருங்கள்...
நல்ல மனித நேயமுள்ள மனிதர்களை நேசியுங்கள்.. “
தனது குரலால் இனம் மதம் மொழிகளுக்கு
அப்பால் மட்டுமன்றி, தேசங்கள் கடந்தும் நேசிக்கப்பட்ட
இசைக்குயில் லதா மங்கேஷ்காரின் குரல் தொடர்ந்தும் ஒலித்துக்கொண்டேயிருக்கும். பாடிப்பறந்த அந்தக் குயிலின் குரல் சாகா வரம் பெற்றது.
---0---
No comments:
Post a Comment