கோடையொன்றை எதிர்கொள்ளத் தயாராகிறேன் - அ.வெண்ணிலா

 


கோடையொன்றை

எதிர்கொள்ளத் தயாராகிறேன்
இலைகளும் பூக்களும்
நிரம்பியிருந்த
என் மரம்
உதிர்க்கத் துவங்குகிறது
தன் பசுமையை
கூட்டிற்குள் மூடங்கிக் கிடந்த
என் பாடும் பறவை
சிறகு கோதி
வசந்தத்தின் பாடலொன்றை
இசைக்கத் துவங்குகிறது
ஓடிச் சலித்த
என் நதி
முணுமுணுப்புடன் மெல்ல
நடக்கத் துவங்குகிறது
அழுத்தமான நிறத்துடன்
இலைகள் அடர்ந்திருந்த
என் மல்லிகைச் செடி
மொட்டு விடத் தயாராகிறது
அழுத ஓய்ந்த
பெண்ணொருத்தியின்
கலங்கிய கண்களைப் போலிருந்த
என் வானம்
தன் வசீகர நீலத்திற்குத்
திரும்பிக் கெண்டிருக்கிறது
தோல் தீய்க்கும்
சுட்டுப் பொசுக்கும்
வியர்வைப் பெருகி
வீழ்த்திச் சாய்க்கும் உடலை
என்றாலும்
கோடை
மணங்களைச் சுமந்து வருகிறது
சுவைகளை
திகட்ட திகட்ட தருகிறது
ஓராயிரம்
கைகளை கொடுக்கிறது


உலகை அணைக்க
எல்லாவற்றையும் விட
இன்னொரு மழைக்கான
அட்சாரமே கோடை
வறண்டு பிளந்த பூமி
மழைநீரை சப்தமின்றி
அள்ளி விழுங்குவதைப்போல்
இறுகிச் சுருங்கிய
என் உடல் நரம்புகள்
நெகிழ்ந்து
வெயில் அள்ளிப் பருக
கோடையை
வரவேற்கத் தயாராகிறேன்

No comments: