உலகச் செய்திகள்

உக்ரைனிலிருந்து அமெரிக்கர்களை உடன் வெளியேற பைடன் அழைப்பு

நவம்பர் முதல் இதுவரை ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்கு ஐந்து இலட்சம் பேர் வரை பலி

தாய்வானுக்கு ஆயுதம் விற்க அமெரிக்கா ஒப்புதல்

உக்ரைன் பதற்றத்தை தணிக்க இராஜதந்திர முயற்சிகள் தீவிரம்

ஈரான் தடையில் விலக்கு


உக்ரைனிலிருந்து அமெரிக்கர்களை உடன் வெளியேற பைடன் அழைப்பு

ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை பற்றிய அச்சம் காரணமாக உக்ரைனில் இருக்கும் அனைத்து அமெரிக்க பிரஜைகளும் உடன் அங்கிருந்து வெளியேறும்படி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா ஆக்கிரமிப்புத் தொடுத்தால் அமெரிக்கர்களை மீட்பதற்கு படைகள் அனுப்பப்பட மாட்டாது என்று பைடன் வலியுறுத்தியுள்ளார்.

பிராந்தியத்தில் நிலைமை விரைவாக மாறக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் மீது தாக்குதல் தொடுக்கும் திட்டம் இல்லை என்று ரஷ்யா தொடர்ந்து மறுத்தபோதும் எல்லைப் பகுதியில் அது 100,000க்கும் அதிமான துருப்புகளை குவித்துள்ளது.

இந்நிலையில் ரஷ்யா அண்டை நாடான பெலாரஸுடன் பாரிய போர் ஒத்திகையை ஆரம்பித்திருப்பதோடு ரஷ்யா கடலில் முற்றுகையில் ஈடுபட்டிருப்பதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

தனது முன்னாள் சோவிட் அண்டை நாடான உக்ரைன் நேட்டோவில் இணையாதிருப்பதை உறுதி செய்வதற்கு கெடு ஒன்றை நிர்ணயிக்க வேண்டி இருப்பதாக ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.

இந்த பதற்றத்திற்கு மத்தியில் ஐரோப்பா கடந்த பல தசாப்தங்களில் மிகப்பெரிய பாதுகாப்பு பிரச்சினையை எதிர்கொள்வதாக பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் உடன் வெளியேறும்படி அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

‘அமெரிக்க பிரஜைகள் இப்போதே வெளியேற வேண்டும்’ என்று என்.பி.சி செய்திக்கு அளித்த பேட்டியில் பைடன் தெரிவித்துள்ளார்.

‘உலகின் மிகப் பெரிய இராணுவங்களில் ஒன்றையே இப்போது நாம் எதிர்கொண்டிருக்கிறோம். இது மிகவும் மாறுபட்ட நிலைமை என்பதோடு நிலைமை விரைவாக மாறிவிடும்’ என்றும் பைடன் எச்சரித்துள்ளார்.

தப்பிவரும் அமெரிக்கர்களை மீட்பதற்கு துருப்புகள் அனுப்பப்படுமா என்று கேட்டபோது, ‘இல்லை. அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒருவருக்கு ஒருவர் சூடு நடத்த ஆரம்பித்தால் அது உலகப் போராக மாறிவிடும்.

நாம் இதுவரை இருந்ததை விட வித்தியாசமான உலகில் இருக்கிறோம்’ என்று பைடன் பதிலளித்தார்.

மறுபுறம் உக்ரைன் விவகாரம் தொடர்பான தற்போதைய பதற்ற நிலையை தணிப்பதற்கு உலகத் தலைவர்கள் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.

கிழக்கு உக்ரைனில் இடம்பெற்று வரும் மற்றைய மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு ஒன்று எட்டப்படவில்லை என்று உக்ரைன் மற்றும் ரஷ்யா கடந்த வியாழக்கிழமை அறிவித்தன.

உக்ரைனுக்கு சொந்தமாக கிரிமாய தீபகற்பத்தை ரஷ்யா தனது ஆட்புலத்திற்குள் இணைத்து எட்டு ஆண்டுகளின் பின்னரே தற்போதைய பதற்றம் ஏற்பட்டுள்ளது. அது தொடக்கம் ரஷ்ய எல்லையை ஒட்டிய கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மற்றும் உக்ரைன் இடையே மோதல் இடம்பெற்று வருகிறது.

இதேவேளை அடுத்த வாரம் ரஷ்யா கடற்படை பயிற்சியில் ஈடுபட தயாராகிவரும் நிலையில், அந்நாடு தாங்கள் கடலை அணுகத் தடையாக இருக்கும் வகையில் முற்றுகையிட்டுள்ளதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.

உக்ரைனுடனான தனது எல்லையில் ரஷ்யா பெரும் படைகளைக் குவித்து வருவதால் ஏற்பட்டுள்ள பதற்றத்துக்கு நடுவில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது உக்ரைன். அசோவ் கடல் முழுவதையும், கருங்கடலில் பெருமளவையும் தாங்கள் அணுக முடியாதபடி ரஷ்யப் படையினர் தடுத்துக் கொண்டு நிற்பதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்தார்.

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணையக் கூடாது, கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோவின் இராணுவ நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும், ரஷ்யாவை ஒட்டி உள்ள நாடுகளில் நேட்டோ படையினர் ஏவுகணைகளைக் களமிறக்கக் கூடாது என கடந்த மாதம், மேற்கு நாடுகளிடம் வலியுறுத்தியது ரஷ்யா.

உக்ரைன் நாட்டுக்கு, தன் கூட்டாளிகளைத் தேர்வு செய்ய முழு உரிமை உண்டு என அமெரிக்கா மற்றும் நேட்டோ தரப்பு பதிலளித்தது. ஆனால், ஏவுகணைகளை களமிறக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்காவும், நேட்டோவும் கூறியுள்ளன.   நன்றி தினகரன் 




நவம்பர் முதல் இதுவரை ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்கு ஐந்து இலட்சம் பேர் வரை பலி


உலக சுகாதார அமைப்பு தகவல் 

கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன், உலகளவில் கடந்த நவம்பர் மாதம் முதல் இதுவரை சுமார் 05இலட்சம் பேரை பலிகொண்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

இந்த ஒமிக்ரோன் பெரிதாக பாதிப்பில்லையென்றே கருதி வந்தபோதும், இந்த எண்ணிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் மேலாளர் அப்டி மஹமுட் கூறியதாவது, 

“கொரோனாவின் திரிபான ஒமிக்ரோன், தொற்று அறிவிக்கப்பட்டது முதல், இதுவரை உலகளவில் 130மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 05இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 

இது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையில் அரை மில்லியன் இறப்புகள் பதிவாகியுள்ளது. இது மிகவும் அபாயகரமான விஷயம். 

கொரோனாவின் மேலாதிக்க மாறுபாடாக கருதப்பட்ட டெல்டா தொற்றையே ஒமிக்ரோன் தொற்று முந்தியுள்ளது. ஒமிக்ரோன் லேசான அறிகுறியை ஏற்படுத்து வதாக தோன்றினாலும், இது மிக வேகமாக பரவக்கூடியது.  திறமையான தடுப்பூசிகள் செலுத்தும் யுகத்தில் அரை மில்லியன் மக்கள் இறந்திருப்பது கவலையை அளிக்கிறது. ஒமிக்ரோனின் பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை வியக்க வைத்தாலும், உண்மையான பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும். 

ஒமிக்ரோன் தொற்றை நாம் இன்னும் முழுமையாக கடக்கவில்லை. அதன் முடிவை நெருங்கி வருகிறோம் என்று நம்புகிறோம். பல நாடுகள் இன்னும் ஒமிக்ரோனின் தொற்று உச்சத்தை கடக்கவில்லை.  பல வாரங்களாக தொடர்ச்சியாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளமை மிகவும் கவலையளிப்பதாக  அவர் கூறினார்.   நன்றி தினகரன் 




தாய்வானுக்கு ஆயுதம் விற்க அமெரிக்கா ஒப்புதல்

தாய்வானுக்கு ஆயுதங்களையும் சேவைகளையும் விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது.

அந்த விற்பனையின் மதிப்பு கிட்டத்தட்ட 100 மில்லியன் டொலராக இருக்கும் என்று கூறப்படுகிறது. தாய்வானின் ஏவுகணைத் தற்காப்பு அமைப்பை மேம்படுத்துவது அந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.

அந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் தேசிய, பொருளாதார, பாதுகாப்பு நலன்களுக்குப் பயனளிப்பதாக அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு கூறியது.

வட்டாரத்தில் அரசியல் நிலைத்தன்மையையும் இராணுவச் சமநிலையையும் நிர்வகிக்க அந்த ஒப்பந்தம் தாய்வானுக்கு உதவும் என்றும் அமைப்பு குறிப்பிட்டது   நன்றி தினகரன் 




உக்ரைன் பதற்றத்தை தணிக்க இராஜதந்திர முயற்சிகள் தீவிரம்

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் சூழல் அதிகரித்திருக்கும் நிலையில் இராஜதந்திர நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பிரான்ஸ் மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகள் நேற்று திங்கட்கிழமை மொஸ்கோவில் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் வெள்ளை மாளிகையில் நேற்று சந்தித்தனர்.

மறுபுறம் ஜெர்மனி, செக் குடியரசு, சுலோவாக்கியா மற்றும் ஆஸ்திரிய வெளியுறவு அமைச்சர்கள் உக்ரைனில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

உக்ரைன் நாட்டு எல்லைக்கு அருகில் ரஷ்யா 110,000 துருப்புகளை குவித்திருப்பதாக அமெரிக்கா கூறுகிறது.

பெப்ரவரி நடுப்பகுதியில் முழு அளவிலான ஆக்கிரமிப்பு ஒன்றை நடத்த 150,000 அளவு படைகளை குவித்து வருவதாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த அளவான படைகள் உக்ரைன் தலைநகர் கீவை 48 மணி நேரத்திற்குள் கைப்பற்ற போதுமானது என்றும் இந்த மோதல் 50,000 பேர் வரை உயிரிழக்கக் காரணமாகக் கூடும் என்றும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். புலனாய்வு தகவல்களை அடிப்படையாகக் கொண்டே அமெரிக்க அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சுழற்சி முறையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய தலைமையை ஏற்றிருக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவேல் மெக்ரொன் நேற்று ரஷ்யாவை சென்றடைந்தார். அவர் இன்று உக்ரைன் பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது தற்போது ஸ்தம்பித்திருக்கும் கிழக்கு உக்ரைனில் ரஷ்யா ஆதரவு பிரிவினைவாதிகள் மற்றும் உக்ரைனுக்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்கும் முயற்சியிலும் மெக்ரோன் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை அமெரிக்கா சென்றிருக்கும் ஜெர்மனி பிரதமர் வொசிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு கூறும்போது, 'உக்ரைனில் தலையிட்டால் அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்ற தெளிவான செய்தியை ரஷ்யாவுக்கு வழங்க நாம் கடுமையாக செயற்பட்டு வருகிறோம்' என்றார்.

பதற்றத்தை தணிக்க உக்ரைன் நேட்டோ கூட்டணியில் இணைவதில்லை என்ற உறுதி மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் அங்கத்துவ நாடுகளில் இருந்து நேட்டோ படைகளை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை ரஷ்யா முன்வைத்துள்ளது. எனினும் இந்தக் கோரிக்கைகளை அமெரிக்க மற்றும் நோட்டோ நிராகரித்துள்ளன.   நன்றி தினகரன் 




ஈரான் தடையில் விலக்கு

ஈரான் அணுசக்தி திட்டங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் சிலவற்றுக்கு அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது.

வல்லரசு நாடுகளுடன் மேற்கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகளை மீண்டும் நிறைவேற்றுவதற்கு ஈரானை சம்மதிக்கவைக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த ஒப்பந்தத்தைத் தக்கவைப்பதற்காக ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

புதிய உத்தரவின் கீழ், சர்வதேச நிறுவனங்கள் ஈரான் அணுசக்தி திட்டங்களுக்கு பொருட்களையும் சேவைகளையும் விற்பனை செய்வதற்கான தடையில் விலக்கு அளிக்கப்படுகிறது.   நன்றி தினகரன் 


No comments: