புஷ்பிகா டி சில்வாவின் அழகு ராணி பட்டம் நீக்கம்
இந்திய பிரதமர் மோடி மார்ச்சில் இலங்கை விஜயம்
இந்திய மீன்பிடி படகுகள் இலங்கையில் ஏலம்; இந்திய உயர் ஸ்தானிகராலயம் பதில்
TNA தனிநாட்டை கோரி நிற்கவில்லை!
கொள்கலன்களை உடன் விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு
புஷ்பிகா டி சில்வாவின் அழகு ராணி பட்டம் நீக்கம்
- பல்வேறு சர்ச்சைகள், செயற்பாடுகள் காரணமாக நடவடிக்கை: ஏற்பாட்டாளர் விளக்கம்
இலங்கையின் தற்போதைய திருமதி அழகு ராணியான (Mrs. Sri Lanka) புஷ்பிகா டி சில்வாவின் பட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டின் இலங்கையின் திருமதி அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்ட புஷ்பிகா டி சில்வாவுக்கு வழங்கப்பட்ட குறித்த பட்டத்தை நீக்குவதாக, Mrs. Sri Lanka for Mrs. World அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற உலக திருமதி அழகு ராணி (Mrs. World) போட்டியில் தானே வெற்றி பெற்றிருக்க வேண்டும் எனவும், இப்போட்டியின் ஏற்பாட்டுக் குழுவில் அங்கம் வகிக்கும் முன்னாள் திருமதி அழகியான ரோஸி சேனாநாயக்கவினால், தனக்கு கிடைக்க வேண்டிய பட்டம் பறி போனதாக புஷ்பிகா டி சில்வா YouTube அலைவரிசை ஒன்றிற்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்திருந்தார்.
குறித்த உலக திருமதி அழகு ராணி போட்டியில் சில நடுவர்கள் தனக்கு வாக்களித்திருந்தாக தெரிவித்திருந்தாகவும், தனது அதிகாரத்தை பயன்படுத்தி ரோஸி சேனாநாயக்க ஏற்பாட்டாளர்களிடம் தனக்கு இப்பட்டம் கிடைக்காமல் செய்திருக்க வாய்ப்பு இருப்பதாக தான் சந்தேகிப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.
இதேவேளை, உலக திருமதி அழகு ராணி நிகழ்வின் உப தலைவர் தனா ஜோன்ஸன் (Tana Johnson) உடன், டெய்லி மிர்ரர் நிறுவனத்தில் தொகுப்பாளராக கடமையாற்றும் தனு இன்னாசித்தம்பி மேற்கொண்ட பேட்டி தொடர்பில், குறித்த தொகுப்பாளருக்கு அழைப்பை மேற்கொண்டு அச்சுறுத்தல் விடுத்ததாக, புஷ்பிகா டி சில்வா மீது, தனு இன்னாசித்தம்பி முறைப்பாடொன்றையும் பதிவு செய்ள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த பேட்டியில், புஷ்பிகா டி சில்வா அண்மையில் தெரிவித்திருந்த பல்வேறு விடயங்களை தனா ஜோன்சன் மறுப்புத் தெரிவித்திருந்தார் என்பதே அதற்கு காரணமென குறிப்பிடப்பட்டுள்ளது.
2021 உலக திருமதி அழகு ராணியாக அமெரிக்காவைச் சேர்ந்த Shaylyn Ford தெரிவானதோடு, திருமதி ஜோர்தான் மற்றும் திருமதி ஐக்கிய இராச்சியம் ஆகியன இரண்டாம் 3ஆம் இடங்களைப் பிடித்தனர்.
அதே நேரத்தில் இலங்கையின் புஷ்பிகா டி சில்வா முதல் ஆறு போட்டியாளர்களில் ஒருவராக தெரிவாகியிருந்தார்.
ஆயினும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த புஷ்பிகா டி சில்வா, குறித்த போட்டியில் தான் 4ஆம் இடத்தை பெற்றுள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்.
ஆயினும் உலக திருமதி அழகு ராணி போட்டியில் முதல் 3 இடங்களைத் தவிர வேறு எந்த இடங்களும் வழங்கப்படுவதில்லையென, தனு இன்னாசித்தம்பி உடனான பேட்டியில் தனா ஜோன்சன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு உலக திருமதி அழகு ராணிப் போட்டி தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட பட்டத்தை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை திருமதி அழகு ராணி அமைப்பு கொண்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டுள்ள புஷ்பிகா சில்வாவிற்கு எதிரான, ஒழுக்காற்று மற்றும் கொள்கை ரீதியான நடவடிக்கைகளுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, குறித்த அமைப்பின் தேசிய பணிப்பாளரான சந்திமால் ஜயசிங்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நேற்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்ளுர் அல்லது சர்வதேச ரீதியில் புஷ்பிகா டி சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள Mrs. Sri Lanka for Mrs. World மற்றும் 2021 Mrs. Sri Lanka for Mrs. World ஆகிய பெயரை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாகவும், அவ்வாறு பயன்படுத்தும் நிலையில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஏப்ரல் 04ஆம் திகதி இடம்பெற்ற இலங்கை திருமதி அழகு ராணி இறுதி நிகழ்வின் போது, வெற்றியாளராக மகுடம் சூட்டப்பட்ட, புஷ்பிகா டி சில்வா கணவருடன் இருந்து விலகி இருப்பதால் அவருக்கு பட்டத்தை வழங்க முடியாது என, 2020 உலக திருமதி அழகு ராணியாக தெரிவான கரோலின் ஜூரி அவரது கிரீடத்தை அகற்றி 2ஆம் இடம்பெற்ற பெண்ணுக்கு அணிவித்திருந்தார்.
இது தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சை பொலிஸ் நிலையம் வரை சென்றதோடு, பின்னர் கரோலின் ஜூரி தனது உலக திருமதி அழகு ராணி பட்டத்தை மீள வழங்குவதாக அறிவிக்கும் நிலை வரை சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் குறித்த கிரீடம் புஷ்பிகா டி சில்வாவுக்கு மீண்டும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில், தற்போது 2021 இலங்கை திருமதி அழகு ராணி போட்டியில் 2ஆமிடம் பெற்ற பெண்ணுக்கு மீண்டும் குறித்த மகுடம் அணிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய பிரதமர் மோடி மார்ச்சில் இலங்கை விஜயம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமையை இலங்கை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அறிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடில்லி சென்றிருந்த அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஜெய்சங்கருக்கு அழைப்பு விடுத்தார். மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமையை இலங்கை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கடந்த 06 முதல் 08 ஆம் திகதி வரை இந்தியாவுக்கு மேற்கொண்ட இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
இந்திய மீன்பிடி படகுகள் இலங்கையில் ஏலம்; இந்திய உயர் ஸ்தானிகராலயம் பதில்
இந்திய மீன்பிடி படகுகள் இலங்கையில் ஏலம் விடப்படுகின்றமை தொடர்பில் பல்வேறு ஊடகங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, இந்திய உயர் ஸ்தானிகராலயம் பதில் வழங்கியுள்ளது.
அந்த வகையில், இது தொடர்பில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,
இலங்கையில் இந்திய மீன்பிடி படகுகள் ஏலம்விடப்படுகின்றமை தொடர்பாக வெளியான பல்வேறு அறிக்கைகளும் செய்திகளும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கவனத்துக்கு வந்துள்ளன.
இவ்விடயம் தொடர்பாக இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இருதரப்பு புரிந்துணர்வு ஒன்று ஏற்கனவே உள்ளது என்பதை முதலில் வலியுறுத்தி கூறுகின்றோம்.
இந்த புரிந்துணர்வுக்கு அமைவாக இலங்கையில், இயக்க முடியாத நிலையிலுள்ள இந்திய மீன்பிடி படகுகளை அகற்றுவது குறித்த தீர்மானங்களை மேற்கொள்வதற்காக இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகள் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவிருந்தனர். இந்த விஜயத்திற்கு தேவையான அனுமதியை இலங்கை அரசாங்கத்திடம் உயர் ஸ்தானிகராலயம் மீண்டும் கோரியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
TNA தனிநாட்டை கோரி நிற்கவில்லை!
எமது பிரச்சினைகளை தீர்த்து வையுங்கள்
தமிழ் தேசிய கூட்டமைப்பு தனிநாடு கோரவில்லை. எமது மக்களின் பிரச்சினைகளுக்கு நியாமான தீர்வு வழங்குமாறே கோருகிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,
ஆஸ்பத்திரிகளில் மருந்துத் தட்டுப்பாடு காணப்படுகிறது. தோட்ட மக்களுக்கு கோதுமை மா வழங்குவதாக அரசு அறிவித்திருந்தது. ஆனால் தோட்டமக்கள் கோதுமை மா இன்றி கஷ்டப்படுகின்றனர்.
தடைசெய்யப்பட்ட டோலர் படகுகளை தடுக்குமாறு வடபகுதி மீனவர்கள் கோருகின்றனர். வெளிநாட்டு மீனவர்கள் 300 கிலோமீற்றர் தொலைவில் மீன்பிடிக்கின்றனர். ஆனால் அரசு அதனை தடுக்கவில்லை.
நீதி அமைச்சர் வடக்கிற்கு சென்று காணமல் போனவர்களின் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா வழங்குவதாக தெரிவித்துள்ளார். தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என தாய்மார் கேட்கின்றனர். ஒரு இலட்சம் ரூபா வழங்கி ஜெனீவா பிரச்சினையை தீர்க்க முடியாது. எந்த தவறும் செய்யாத முஸ்லிம்இளைஞர்கள் சிறையில் உள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டதின் கீழ் கைதான ஹிஜாஜ் ஹிஸ்புல்லா விடுவிக்கப்பட்டுள்ளார். இது பற்றி மகிழ்ச்சி அடைகிறோம். பயங்காரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக எமது கட்சி நாடுபூராவும் சென்று மக்களை அறிவூட்ட இருக்கிறோம்.
எமது பிரதேசங்களில் வனஜீவராசிகள் திணைக்களம் மேற்கொள்ளும் அநியாயங்களை நிறுத்த வேண்டும். 30-, 40 வருடங்கள் பயிரிட்ட காணிகளை பலாத்காரமாக பெற்றுள்ளளனர். தொல்பெருள் பிரதேசங்களை பாதுகாக்க வேண்டும். ஆனால் மட்டக்களப்பில் கோயிலுக்கு சொந்தமான காணியில் நிர்மாணம் செய்ய தடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் குறுந்தூர்மலையில் பாரிய நீர்த்தாங்கி அமைக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் திணைக்களம் ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு விதமாக செயற்படுகின்றன. நாம் தனிநாடு கோரவில்லை. நாட்டை துண்டாட கோரவில்லை. நான் பேசுகையில் எல்ரீரீஈ என்று சொல்வது எனக்கு பிரச்சினை கிடையாது.எமக்கு திருப்பி ஏசமுடியும் என்றார்.
அமைச்சர் சீ.பி ரத்னாயக்க குறிப்பிடுகையில்,
தொல்பொருள் பகுதியை கைப்பற்றி 4 ஏக்கரில் வயல் பயிரிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் தொல்பொருள் திணைக்களம் தொடர்பான பிரச்சினை குறித்து பேச தயாராக இருக்கிறோம் என்றார்.
லோரன்ஸ் செல்வநாயகம்,ஷம்ஸ் பாஹிம் - நன்றி தினகரன்
கொள்கலன்களை உடன் விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு
பொருட்களின் தேவையை நிவர்த்திக்க பணிப்பு
அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். சுங்கத் திணைக்களத்தின் வசமுள்ள அத்தியாவசியப் பொருட்களை விடுவிப்பது தொடர்பாக நேற்று முன்தினம் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சந்தையில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைத் தட்டுப்பாடின்றி வழங்குவதற்காக, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான குழுவொன்றை நியமிக்கவும் அக்கலந்துரையாடலில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பண்டிகை காலத்தின்போது, உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைத் தட்டுப்பாடின்றி பொதுமக்கள் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென குறிப்பிட்ட ஜனாதிபதி, அதற்காக தற்போது முதல் உரிய திட்டமிடல்களை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தெரிவு செய்யப்பட்ட சில அத்தியாவசியப் பொருட்களின் கொள்வனவுக்குச் சந்தர்ப்பம் வழங்குமாறும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார். நன்றி தினகரன்
No comments:
Post a Comment