தேரா மன்னனை தெருவுக்கு இழுக்கும் தீர்மானம் - ஆர். பாலகிருஷ்ணன்.

 .

பிடித்தால்

"பிடிக்கிறது" என்று சொல்.
இல்லை என்றால்
"பிடிக்கவில்லை" என்று
கடந்து செல்.
வன்முறை எதற்கு?
மூக்கை அறுப்பது
எந்த "ராஜ்ஜியத்தின்" நியாயம்.
பேரரசன் தம்பியாம்.
பெரிய வீரனாம்!
அவமானம்.
அவளுக்கும் தான்
அண்ணன் இருக்கிறான்.
மூக்கை அறுப்பதை
தவிர்த்து இருந்தால்
முன்னேறி இருக்காது கதை .
தேவையில்லாமல்
நடந்திருக்காது ஒரு போர்.
ஆளில்லாத கடையில்
யார் ஆத்துவார் காபி.
காப்பியத்தை
காட்டிலேயே மங்களம் பாடி
முடித்திருக்கலாம்!
அக்னிப்பரிட்சையிலும்
அறுபட்டிருக்காது
யாருடைய மூக்கும்!
தென்கோடியில்
இன்னொரு காப்பியம்.
எழுதிய மொழி வேறு
உடல் மொழி
முற்றிலும் வேறு!
"கொன்று அச்சிலம்பு
கொணர்க" என்று
தீர விசாரிக்காமல்
தீர்ப்பளித்தான்
மதுரை மன்னன்.
புகார் கொடுத்துவிட்டு
புரண்டு அழுபவள் அல்ல.
புகார் நகரத்துப் பெண்.
மனு நீதி கேட்டு
மனு கொடுக்க
வரவில்லை அவள்.
தேரா மன்னனை
தெருவுக்கு இழுக்கும்
தீர்மானம் அது!
அவள் கையில் பேசியது
ஒற்றைச் சிலம்பு
உடைந்து கசிந்தது
பேரரசன் மூக்கு....
பொய் சொன்ன
பொற்கொல்லனின்
செய்கூலியில் சேதாரம்
ஆனது மன்னவன் உயிர்.
இரண்டு மன்னர்கள்..
இரண்டு பெண்கள்..
இருவேறு உலகம்...
இன்னும்
சொல்வதற்கு என்ன
இருக்கிறது....
இதோ
ஊளையிட்ட
நரிகளைக் கடந்து
நிமிர்ந்து நடக்கிறாள்
ஒரு தனியாய்
இந்த ஒற்றைப் பெண்.
மைதானம் முழுவதும்
சிதறிக்கிடந்தன
மாதர் தம்மை
இழிவு செய்த
மடமையின் மூக்குகள்!
ஆர். பாலகிருஷ்ணன்.
11.02.22
புவனேஸ்வரம்

நன்றி Min Ithaz

No comments: