தரைமேல் பிறந்தவர்களை கண்ணீரில் குளிக்கவைக்கும் கடல் எல்லைப் பிரச்சினை அவதானி

“ உலகத்தின் தூக்கம் கலையாதோ

உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ
ஒரு நாள் பொழுதும் புலராதோ

தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தன்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்.  “


இந்த பாடல் வரிகள் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும்  அரை நூற்றாண்டுக்கு முன்னர்  பட்டி தொட்டி எங்கும் கடலோரக் கிரமங்களிலும்  ஒலித்த பிரபல்யமான திரைப்படப் பாடல்.

எம்.ஜி.ஆர் . நடித்த படகோட்டி ( 1964 )  திரைப்படத்திற்காக கவிஞர் வாலி இயற்றி, ரி. எம். சௌந்தரராஜன் பாடி, மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் – இராமமூர்த்தி இசையமைத்த பாடல்.

எப்பொழுதும் தன்னை ஏழைப் பங்காளனாகவே திரையில் காண்பிக்கும் மக்கள் திலகத்திற்கு பெரும் புகழைத் தேடித்தந்த மற்றும் ஒரு படம். பாடல்.

மக்கள் திலகமும்  உழைக்கும் வர்க்கத்தின் துயரத்துக்கு அபிநயம்


காண்பித்து, தமிழக முதல்வராகவும் பதவி வகித்துவிட்டு நிரந்தரமாக  விடைபெற்றுவிட்டார்.

இந்தியாவிலும், இலங்கையிலும் தமிழகத்திலும் அதிகாரங்கள் போதியளவு இல்லாத வடமாகாண சபையிலும்  ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.

ஆனால், தாய் நாடு – சேய்நாடு என்று காலம் காலமாக பேசப்படும் இரண்டு நாடுகளையும் பிரிக்கும் கடல் பரப்பில் நீடித்திருக்கும்  உழைக்கும் வர்க்கத்தின் வாழ்வாதாரப்பிரச்சினை உட்பட தொழில் சார்ந்த பிரச்சினைகளுக்கு இன்னமும் நிரந்தரத்தீர்வு கண்டுபிடிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டிலிருந்து இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் மீன்பிடிக்கவரும் இந்திய ( தமிழக )  மீனவர்கள் எல்லை கடந்து வந்து, இலங்கைக்கு சொந்தமான கடல்பரப்பில் ட்ரோலர் படகுகள் மூலம் கடல்வளங்களை அள்ளிச்சென்றுவிடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.

அதேசமயம்,  தமக்கும் இக்கடலில் மீன் பிடிக்க உரிமையிருக்கிறது என்று தமிழக மீனவர்களும் தொடர்ந்து குரல் எழுப்பி போராட்டம் நடத்துகின்றனர்.


இதேவேளை, ராஜேந்திர சோழன் காலத்தில் கடல்கடந்து வந்து இலங்கையை கைப்பற்றிய வம்சத்தை சேர்ந்தவர்கள் நாம், இக்கடல் எமக்கு சொந்தமில்லையா..? என்று தமிழ்நாட்டில் பட்டிமன்றப் பேச்சாளர்கள் முதல் தமிழ்த்திரைப்பட வசனங்களை எழுதும் எழுத்தாளர்களும்  சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.

ஊடகங்களில் தினம் தினம் இலங்கை – இந்திய மீனவர் சம்பந்தப்பட்ட நெருக்கடி குறித்து செய்திகள் வெளிவந்தவண்ணமே இருக்கின்றன.

கடந்த வாரம் காரைநகர் கடற்படைத்  தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களின் 135 ட்ரோலர் படகுகள் ஏலத்தில் விடப்பட்டன. இந்த ஏல விற்பனையின் மூலம் இலங்கை அரசுக்கு 52 இலட்சம் ரூபாவுக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது. இதே சமயம் காங்கேசன் துறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் மேலும் சில படகுகள் ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, குறிப்பிட்ட ஏலத்தொகையில் இலங்கை அரசு


பெற்றுள்ள பணத்தை, தாங்களே தருகின்றோம், எமக்கு,  எமது படகுகளை கையளித்துவிடுங்கள் என்று இராமேஸ்வரம் படகு உரிமையாளர் சங்கம் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளது.

அத்துடன் 2018 ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட நூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள்  நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய விடுவிக்கப்பட்டிருந்ததாகவும், தமது சங்கத்தினைச் சேர்ந்தவர்கள் சென்று பார்த்து வந்திருப்பதாகவும், இடையில் வந்த கொவிட் நெருக்கடியினால், அவற்றை மீட்டு எடுத்துச்செல்ல முடியாது போய்விட்டதாகவும் இச்சங்கத்தின் தரப்பில் சொல்லப்படுகிறது.

இது இவ்விதமிருக்க, வடபகுதி மீனவர்கள் யாழ். அரசாங்க செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்திவிட்டனர். இலங்கை மீன் பீடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையும் சரிவரவில்லை.

இந்நிலையில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், கடந்த வாரம் இந்தியா சென்று,  வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெய்சங்கரை சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக பேசியிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இலங்கை அமைச்சர், இந்த மீனவர் பிரச்சினைபற்றி மாத்திரம் பேசுவதற்காக இந்தப்பயணம் மேற்கொள்ளவில்லை என்பதும் தெளிவு.

அதாவது, இலங்கை – இந்திய உறவின் 75 ஆவது ஆண்டு நிறைவை நினைவுபடுத்தி, தொடர்ந்தும் அந்த உறவை ஆரோக்கியமாக பேணுவதற்காகவும், பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் இந்த சந்திப்பு நடத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது.

அதில் மீனவர் பிரச்சினை,  விருந்தில் பரிமாறப்படும் உணவுடன் தொட்டுக்கொள்ள வைக்கப்படும் ஊறுகாய் போன்று அமைந்துள்ளது.

இதற்கு முன்னரும் இலங்கை – இந்திய மீனவர் விவகாரம் எத்தனை தடவைகள் இரண்டு தரப்பினராலும் பேசப்பட்டிருக்கிறது..?  என்பதை கடந்த காலங்களில் வெளியான பத்திரிகை ஊடகங்களிலிருந்து தெரிந்துகொள்ள முடியும்.

தமிழக முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரும் இந்த விவகாரம் குறித்து அவர்களது பதவிக் காலத்தில் மத்திய அரசின் பிரதமர்களுக்கு பல கடிதங்கள் எழுதினர்.

அதேபோன்று இலங்கை மீனவர்களும் தங்கள் நாட்டின் மீன்பிடித்துறை அமைச்சருக்கும்  அரசுக்கும் பல தடவைகள் முறையிட்டுள்ளனர்.

பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் நடந்திருக்கின்றன.

 கடந்த 30 ஆண்டு காலத்தில்  தமிழக மீனவர்கள்  ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள், இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கும் செய்தி ஆழ்ந்த கவலைக்குரியது.

பாக்கு நீரிணை, மன்னார் வளைகுடா, இலங்கை – தமிழக கடல் எல்லைகளிலேயே அத்துமீறிவரும்   மீனவர்களுக்கு எதிரான துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படுகின்றன.

சர்வதேச கடல் எல்லை கோட்டுக்கான  ( International Maritime Boundary Line ( IMBL) ஒப்பந்தம் ஒன்று நடைமுறையிலிருக்கிறது. இதுபற்றி இரண்டு தரப்பு மீனவர்கள் மத்தியில் விழிப்புணர்வு  இருக்கிறதா…? என்பது தெரியவில்லை.

ஆனால், இந்த விவகாரத்தை முன்வைத்து அரசியல் நடத்தும் அரசியல் தலைவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள் என்பது தெளிவானது.

மீனவர்கள் கடலை நம்பி வாழ்பவர்கள்.  அதனால் அவர்கள் கடல் தொழிலாளர்கள் எனவும் அழைக்கப்படுபவர்கள். அந்த உழைக்கும் வர்க்கம் உயிரைப் பணயம் வைத்தே கடலுக்குள் செல்கின்றது.

அதற்கு இயற்கையின் சீற்றமும் முன்னர் முக்கிய காரணம். ஆனால்,  சமகாலத்தில்,  கடல் எல்லைகளில் கடற்படையினரால் நடத்தப்படும் துப்பாக்கி வேட்டுக்கள்தான் பிரதானமான காரணமாகவும் விளங்குகிறது.

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய ட்ரோலர் படகுகள் வந்து கடல் வளங்களை அள்ளிச் சுருட்டிச்செல்வதனால், தங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாக இலங்கை வடபகுதி மீனவர்கள் தொடர்ச்சியாக முறையிட்டு  வருகின்றனர்.

இதனை வடபகுதி தமிழ் அரசியல் தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.  இவர்கள் தமிழக முன்னாள் – இந்நாள் முதல்வர்களுடன் நல்லுறவை பேணியவர்கள். அடிக்கடி தாய் நாடு சேய்நாடு பல்லவியும் பாடுபவர்கள்.

விவசாயி சேற்றில்  கால் வைப்பதனால், நாம் சோற்றில் கை வைக்கின்றோம். அதுபோன்று மீனவர்கள் கடலில் உயிரைப் பணயம் வைத்து இறங்குவதனால்தான் நாமும் மீனை வாயில் வைக்கின்றோம்.

எனவே இந்த நீடித்த பிரச்சினையை அரசியலாக்கி ஆதாயம் தேடாமல்,  மனிதாபிமான கண்ணோட்டத்தில் அணுகி தீர்வுகாண்பதற்கு இரண்டு தரப்பு மீனவர்களும்தான் முயற்சிக்கவேண்டும்.

இரண்டு தரப்பிலுமிருக்கும்  சிவில் அமைப்புகள், தன்னார்வத் தொண்டர் இயக்கங்கள் இது தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வரவேண்டும். 

---0---

No comments: