( அவுஸ்திரேலியா சிட்னியில் வதியும் நடன நர்த்தகி திருமதி கார்த்திகா கணேசரின் பவளவிழா, அண்மையில் மெய்நிகரில் நடைபெற்றது. இந்த அரங்கில், அவரது மாணவி, இங்கிலாந்தில் வதியும் ஆனந்தராணி பாலேந்திரா நிகழ்த்திய உரை )
நாட்டியம், இலக்கியம், எழுத்து, ஊடகம் என பல துறைகளில் தடம் பதித்துள்ள ஆளுமை மிக்க பெண்மணியான திருமதி. கார்த்திகா கணேசர் அவர்களின் பவள விழா மெய்நிகர் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் என்னை உரையாற்ற அழைத்த
ஒருங்கிணைப்பாளர் திரு. முருகபூபதி அவர்களுக்கும் விழா ஏற்பாட்டாளர்களுக்கும் முதலில்
எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த உலகில் ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம் என்றில்லாமல், பத்தோடு
பதினொன்றாக இல்லாமல், வாழும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக்
கொண்டு ஒரு தனித்துவமானவராக வாழ்வது எல்லோராலும் முடியாது. அதற்கு சமூகம் சார்ந்த சிந்தனை,
நிறைய அர்ப்பணிப்புடனான தன்னலமற்ற சேவை, திறமை, துணிச்சல், நம்பிக்கை என பல வேண்டும்.
இவை அனைத்தையும் தன்னுள் கொண்ட ஒருவர்தான் எனது குரு கார்த்திகா மிஸ்.
கொழும்பில் என்னுடைய இள வயதில் இருந்தே நானும் எனது அக்கா
பாலராணியும் கார்த்திகா மிஸ்ஸிடம் பரதம் பயின்று வந்தோம். அக்கா இடையில் நடனத்தை விட்டாலும் நான் தொடர்ந்து கற்று வந்தேன். அந்தக் காலங்களில் ஆசிரியர்கள் என்றால் பொதுவாக கண்டிப்பானவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் எப்போதும் ஒரு பெரிய இடைவெளி இருக்கும். ஒரு திரை என்று சொல்லலாம். கார்த்திகா மிஸ் அதற்கு விதிவிலக்கானவர். மாணவிகளுடன் மிக அன்பாக ஒரு தாயைப்போல, சகோதரியைப் போல, நண்பியைப் போலத்தான் பழகுவார். மாணவிகளின் குடும்பத்தினர் மீதும் மிக அக்கறை உள்ளவர். இவரது அணுகுமுறை மிக வித்தியாசமானதாக இருக்கும். இதனால்தான் இவரிடம் எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் நடனம் பயின்ற மாணவிகளும் இன்றும் தொடர்பில் இருக்கிறார்கள்.
எனது பதின்ம வயதில் தனிப்பட்ட வகுப்புகளுக்காக இவரது வீட்டிற்குச்
செல்வது வழக்கம். 50 வருடங்களுக்கு மேலாகி விட்டபோதும் அந்த வீடு இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது.
வீட்டிற்கு முன்னால் ஒரு ஜாம் பழ மரம். வகுப்பு முடிந்து போகும்போது பழுத்த பழங்களைப்
பிடுங்கிச் செல்வேன். மிஸ் வீட்டுக்குள் போனவுடனேயே “ ராணி, என்ன குடிக்கப் போறீர்? தேநீர் - குளிர்பானம் ஏதும் தரவா
என்று கேட்டு அதற்குப் பின்னர்தான் வகுப்பு எடுப்பார். இவரின் ஒரே பிள்ளையான அமிழ்தன்
அப்போது சிறு பையன். அவரும் சில வேளைகளில் வந்து என்னோடு சேர்ந்து ஆடிப் பழகுவார்.
கார்த்திகா மிஸ் வீட்டில் நான் சாப்பிட்ட நாட்களும் நிறைய உண்டு. நான் ‘நேரம் போட்டுது மிஸ், பஸ் பிடிக்க வேணும் ‘ என்று சொன்னாலும் ‘கொஞ்சம் சாப்பிட்டுப்போம்’ என்று சாப்பாடு தந்துதான் விடுவார்.
வகுப்பு முடிந்த பின்னர் பல விடயங்களைப் பற்றியும் பேசுவோம். அவர் நாட்டியமேதை பத்மஸ்ரீ வழுவூர் ராமையாபிள்ளை அவர்களிடம் தான் குருகுலவாசம் செய்து பரதநாட்டியம் பயின்ற அனுபவங்களையெல்லாம் சொல்லுவார். அவர் வீட்டிற்கு வருகின்ற பிரபலமான கலைஞர்களுக்கெல்லாம் கார்த்திகா மிஸ்ஸை இலங்கைப் பொண்ணு, தன்னுடைய சிஷ்யை, மகள் போல என்றெல்லாம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். தான் போகும் கச்சேரிகளுக்கெல்லாம் இவரைக் கூட்டிப்போகும் அளவுக்கு அவருடைய அபிமான சிஷ்யையாக எமது மிஸ் இருந்திருக்கிறார்.
கார்த்திகா மிஸ்ஸின் கணவர் கணேசர் அங்கிள் இடதுசாரி கொள்கைகளில்
நம்பிக்கை கொண்டவர். மிகவும் புரிந்துணர்வு உள்ளவர். திருமணம் ஆன பின்னர் கார்த்திகா
மிஸ் இந்தியா சென்று நாட்டியப் பயிற்சியைத் தொடர மிகவும் ஊக்கமளித்தவர். இவர்கள் வீட்டில்
பெரிய புத்தக அலுமாரியில் நிறையப் புத்தகங்கள் இருக்கும். எனக்கு சிறு வயதில் இருந்தே
புத்தகங்கள் வாசிக்கப் பிடிக்கும். மிஸ் வீட்டில் இருந்து புத்தகங்களை இரவல் வாங்குவேன்.
‘கவனமாகத் திருப்பிக் கொண்டு வாரும்’ என்று கணேசர் அங்கிள் ஒரு சிறு கண்டிப்புடன்தான்
தருவார். செ. கணேசலிங்கன், மு. தளையசிங்கம் போன்ற காத்திரமான எழுத்தாளர்களின் புத்தகங்களை
எல்லாம் கொண்டுபோய் வாசித்திருக்கிறேன்.
கார்த்திகா மிஸ் மிக வித்தியாசமான சிந்தனைப் போக்குக் கொண்டவர்.
அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைக்காமல் நாட்டியத்தில் புதுமைகளைப் புகுத்தியவர்.
இது 70 களின்
ஆரம்பத்திலேயே தொடங்கிவிட்டது. பழைய கதையாக இருந்தாலும் அதற்குப் புதுவடிவம் கொடுத்து பல நாட்டிய நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றியுள்ளார்.
1974 ஆம் ஆண்டு அதாவது 47 வருடங்களுக்கு முன்னர் கார்த்திகா
மிஸ் ‘கானகம் ஏகிய ராகவன்’ என்ற நாட்டிய நாடகத்தை வடிவமைப்புச் செய்து கொழும்பு சென்ற் பிறிட்ஜட்ஸ் கொன்வென்ட் மாணவிகளை வைத்துத் தயாரித்து அப் பாடசாலை மண்டபத்தில் மேடையேற்றியிருந்தார்.
இது ராமாயணத்தின் முதல் பகுதி ஆகும். மேடைக்குப் பின்னணியில்
உதவி செய்ய நானும் போயிருந்தேன். இந்த நாட்டிய
நாடகத்தினைப் பார்த்த பேராசிரியர் க. இந்திரபாலா, எழுத்தாளர் செ. கணேசலிங்கன் போன்றோர்
நல்ல விமர்சனங்களை எழுதியதோடு, இதனை முழு நீள
நாட்டிய நாடகமாகத் தயாரிக்கும்படியும் கார்த்திகா மிஸ்ஸைக் கேட்டுக் கொண்டனர்.
இராமாயணத்தை அவர் முழுநீள நாட்டிய நாடகமாகத் தயாரித்த போது
அதில் நான் இராமராக நடனமாடியிருந்தேன். இதில் வரும் குதிரையேற்றம், இராம - இராவண யுத்தம்,
வானரப் படைகளின் போர் ஆகியவற்றிற்கு நாட்டுக்கூத்தினை இணைந்திருந்தார். இதற்காக பேராசிரியர்
மௌனகுரு அவர்களை வரவழைத்து அவர் எங்களுக்கு சில தினங்கள் வடமோடி ஆட்டத்தினைப் பழக்கினார்.
பொதுவாக ஆண்கள் ஆடுகின்ற மிகவும் கடினமான அடவுகள் இவை. எமக்குக் களைப்பாக இருந்த போதும்
விடாமல் ஆடினோம்.
மிகப் பிரமாண்டமான முறையில் மேடையேறிய ‘இராமாயணம்’ நாட்டிய நாடகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. நல்ல விமர்சனங்கள்
எழுதப்பட்டன. அதே நேரத்தில் பாரம்பரிய நடனத்தில் இருந்து விலகுகிறார் கார்த்திகா கணேசர்
என கண்டனங்களும் எழாமல் இல்லை.
வித்தியாசமான படைப்புகள் வரும்போது இப்படிச் சிலவேளைகளில்
நடப்பதுண்டு. அதிலும் அவை வெற்றிகரமாக மேடையேறி பெரும் பாராட்டுகளைப் பெறும்போது இன்னும்
கூட கண்டனங்கள் வரும். போட்டி பொறாமையும் ஒரு
காரணம் என்று சொல்லலாம். ஆனால் கார்த்திகா
மிஸ், இதனால் சோர்ந்துவிடவில்லை. இன்னும் வீரியத்துடன்
பல இடங்களில் மேடையேற்றினார். இந்தத் தயாரிப்பினை யாழ்ப்பாணத்தில் நகரசபை மண்டபத்தில் மேடையேற்றியது எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது.
நான் கார்த்திகா மிஸ்ஸின் திண்ணவேலி வீட்டில் தங்கியதும் எனக்கு நினைவிருக்கிறது.
‘இராமயணம்’ நாட்டிய
நாடகத்தில் நான் இராமராக நடனமாடினேன் என்று சொல்லியிருந்தேன். இதில் சீதையாக நடனமாடியவர்
பெயரும் ஆனந்தராணி. இரண்டு ஆனந்தராணிகள். கார்த்திகா மிஸ் என்னை பெரிய ராணி என்றும்
அவரை சின்ன ராணி என்றும் அழைக்க எல்லோரும் அப்படியே கூப்பிடத் தொடங்கி விட்டார்கள்.
‘இராமாயணம்’ வெற்றியைத் தொடர்ந்து ‘எல்லாளன்-துட்டகாமினி’
நாட்டிய நாடகத்தை மிஸ் தயாரித்தார். இதில் நான் துட்டகாமினியின் தாயார் விகாரமாதேவியாக
நடனமாடினேன். புதிய சிந்தனைத் தளத்தில் உருவான இந்த நாட்டிய நாடகமும் சர்ச்சைகளைக்
கிளப்பியதை நான் அறிவேன். ‘கிருஷ்ணலீலா’ நாட்டிய நாடகத்திலும் யசோதாவாக ஆடினேன். இந்த
நாட்டிய நாடகங்களில் நான் பங்கு கொண்டது பின்னர் நான் மேடை நாடகங்களில் நடிக்கவும்
உதவியாக இருந்தது. நாட்டியத்துக்கும் பேசி நடிக்கும் நாடகங்களுக்குமான வித்தியாசத்தை
நான் நன்கு உணர்ந்துதான் நடித்தேன். அந்த நேரங்களில் நான் நடித்த மேடை நாடகங்களையும்
மிஸ் வந்து பார்த்தார். பாலேந்திராவும் மிஸ்ஸிற்கு அறிமுகமானார்.
‘உதயம்’ என்றொரு நாட்டிய நாடகத்தை கார்த்திகா மிஸ் கனிஷ்ட
பிரிவு மாணவிகளைக் கொண்டு மேடையேற்றியிருந்தார். அராஜகத்தை எதிர்த்து ஒற்றுமையாகப்
போராடும் தன்மையை விலங்குகள் பறவைகள் மூலமாக குறியீட்டு முறையில் விளக்கிய நாட்டிய
நாடகம் இது. இப்படி இவரின் தயாரிப்புகள் பல மற்றைய நாட்டிய நிகழ்ச்சிகளில் இருந்து
வேறுபட்டிருந்தன. ஆனால் மிஸ் பாரம்பரிய நடன வடிவங்களையும் கை விடவில்லை. அவையும் மிக
அங்க சுத்தியுடன் நேர்த்தியாக மேடையேற்றப்பட்டன.
பண்டாரவளையில் நடைபெற்ற ஒரு பொங்கல் விழா ஞாபகம் வருகிறது.
அதில் நடனமாடுவதற்காக மிஸ் என்னையும் எனது அக்காவையும் இன்னுமொரு மாணவியையும் கூட்டிப்
போனார். குளிர் என்றால் எப்படியிருக்கும் என்பதை அன்றுதான் முதன் முதலில் அனுபவரீதியாக
அறிந்து கொண்டோம். குளிருக்கான ஆடைகள் எதுவும் நாங்கள் கொண்டு போகவில்லை. நடன உடுப்புகளை
அணிந்து கொண்டு இரவு படுக்கப் போர்த்திய கம்பளிகளைச் சுற்றிக் கொண்டு போனபோது, “அது நடனம் ஆடத்
தொடங்க உடம்பெல்லாம் சூடா வந்திடும் “ என்று
மிஸ் எங்களுக்குத் தைரியம் தந்து உற்சாகப்படுத்தியது
நினைவில் இருக்கிறது. ஆனால் அவர் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தார்.
கார்த்திகா மிஸ் தான் கற்ற கலையை நூறு வீதத்திற்கும் மேலாக
தனது மாணவிகளுக்கு வழங்கினார். தனது ஆரம்பப் பிரிவு மாணவிகளுக்கு என்னை நடனம் பழக்கச்
சொன்னார். நடன வடிவமைப்புச் செய்யவும் என்னை ஊக்கப்படுத்தினார். நட்டுவாங்கமும் சொல்லித்
தந்தார். இது பின்னர் நான் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் நடன ஆசிரியையாகப்
பணியாற்றியபோது பெரிதும் உதவி செய்தது.
கார்த்திகா மிஸ் தனியே ஒரு நடன ஆசிரியராக மட்டுமல்லாது நல்ல
எழுத்தாளராகவும் மிளிர்கிறார். நாட்டியத்தில் இவருக்குள்ள ஆழமான அறிவும் பரந்த தேடலும்
இவரைப் பல கட்டுரைகளை எழுத வைத்துள்ளது. தனது
22ஆவது
வயதில் ‘தமிழர் வளர்த்த ஆடற்கலை’ என்ற தொடர் கட்டுரையை தினகரன் பத்திரிகையில் பல வாரங்கள்
எழுதியிருக்கிறார். இது பின்னர் புத்தகமாக வெளிவந்தது. இளவயதில் தொடங்கிய இவரது எழுத்தாற்றல்
காலந்தோறும் நாட்டியக் கலை, நாட்டியக் கடலில் புதிய அலைகள் எனத் தொடர்ந்தது. காலந்தோறும் நாட்டியக் கலை என்ற நூல் – 1982இல்
தமிழக அரசின் முதற் பரிசு பெற்றது. மூன்று பதிவுகள் வெளிவந்துள்ளன.
இள வயதில் நடனம் பழக்க ஆரம்பித்த கார்த்திகா மிஸ் இன்றும்
பழக்குகிறார். அன்று எழுத ஆரம்பித்தவர் இன்றும் தொடர்ந்து எழுதுகிறார். இது சிலருக்குத்தான்
முடியும். இவரின் பரந்துபட்ட அறிவு காரணமாக தனியே நாட்டியம் மட்டுமல்லாது பல விடயங்களையும்
எழுதுகிறார். இது மட்டுமா? அறிவிப்புத் துறையையும் இவர் விட்டுவைக்கவில்லை. ஒஸ்ரேலிய
ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தனித்துவமான அறிவிப்பாளர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்.
நான் கார்த்திகா மிஸ்ஸுடன் வட்ஸ்அப்பில் தினமும் தொடர்பில் இருந்து வருகிறேன். “ ராணி. நான் ரேடியோ ஸ்ரேசனில்
நிற்கிறேன். பிறகு பதில் அனுப்புகிறேன் “
என்று குறுஞ்செய்தி வரும். பார்த்தால் அதிகாலையிலேயே அங்கு போய்விடுவார்.
நான் 1982 இல் புலம்பெயர்ந்து
லண்டன் வந்த பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 1996 ஆம்
ஆண்டு கார்த்திகா மிஸ்ஸைச் சந்தித்தேன். எமது நாடக விழாவை சிட்னியில் நடத்தியிருந்தோம்.
அவருக்கு அன்று இன்னொரு நிகழ்ச்சிக்குப் போகவேண்டி இருந்தது. இருந்தும் என்னையும் பாலேந்திராவையும்
கட்டாயம் பார்க்க வேண்டும் என்று வந்து சந்தித்து இடைவேளை வரை இருந்து சென்றார். பின்னர்
2019
இல்
இரண்டு வருடங்களுக்கு முன்னர் மிஸ்ஸை மீண்டும் சிட்னியில் சந்தித்தோம். அதே இளமையுடன்,
அதே கம்பீரத்துடன், அதே சிரிப்புடன், அதே அன்புடன் பாலா – ராணி என்று மிக மகிழ்ச்சியாக
வரவேற்று பழைய நினைவுகளை மீட்டுக் கொண்டார்.
இவ்வளவு ஆளுமை மிக்க பெண்ணாக, தனித்துவமான ஒருவராக இருந்த
போதும் மிகவும் தன்னடக்கமும் எளிமையும் உள்ளவர்.
போட்டி பொறாமையின்றி நல்லவற்றைப் பாராட்டும் பண்பு கொண்டவர்.
எல்லோர் வாழ்க்கையிலும் மறக்க முடியாதவர்கள் என்று சிலர்தான்
இருப்பார்கள். என்னுடைய வாழ்க்கையிலும் நான்
மறக்க முடியாத சிலரில் கார்த்திகா மிஸ்ஸும் ஒருவர். இன்றும் என்னுடன் ஒரு சகோதரியாக,
ஒரு நண்பியாகப் பழகிக் கொண்டிருக்கும் கார்த்திகா மிஸ் நல்ல தேகசுகத்தோடு மகிழ்ச்சியாக
நீண்ட காலம் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நல்வாழ்த்துகள் மிஸ்.
No comments:
Post a Comment