ஸ்வீட் சிக்ஸ்டி 3 - பட்டினத்தார் - - ச சுந்தரதாஸ்

 .


 தமிழ் சினிமாவின் ஆரம்ப கால இசையமைப்பாளர்களுக்குள் இசை மேதை என்று கருதப்பட்டவர் ஜி ராமநாதன்.இவருடைய இசையில் உருவான ஹரிதாஸ் ,சிவகவி,ஜெகதலப்ரதாபன்,மதுரை வீரன்,அம்பிகாபதி,வீரபாண்டிய கட்டபொம்மன், தூக்கு தூக்கி,போன்ற ஏராளமான படங்கள் பெற்ற வெற்றியில் இவருடைய இசைக்கும் பெரும் பங்கிருந்தது.இசையமைப்பதில் மட்டுமன்றி பாடுவதிலும் தனக்கிருந்த திறமையை பொன்முடி படத்தில் கதாநாயகனுக்கு பின்னணி பாடியதால் மூலம் நிரூபித்திருந்தார் அவர்.அப்படிப்பட்ட இசை மேதை 1962ம் வருடம் சொந்தமாக ஒரு படத்தைத் தயாரித்தார்.அந்தப் படம் தான் பட்டினத்தார்.

உச்ச நடிகர்கள் பலரின் நட்பு அவருக்கிருந்த போதிலும் தனது சொந்த படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு அவர் தேர்ந்தெடுத்தது பிரபல பின்னணிப் பாடகர் டி எம் சௌந்தரராஜனை ஆகும்.மிகவும் பிஸியான பாடகராக திகழ்ந்து கொண்டிருந்த டீ எம் எஸ் , ராமநாதன் மீது கொண்ட மதிப்பின் காரணமாக நடிகராக அவதாரம் எடுத்தார். கதாநாயகனாக டீ எம் எஸ்ஸை ஒப்பந்தம் செய்த ராமநாதன் அடுத்து ஒப்பந்தம் செய்தது நடிகவேள் எம் ஆர் ராதாவை ஆகும்.அவரின் சிபாரிசில் அன்று துணை நடிகையாக வளம் வந்து கொண்டிருந்த ஜெமினி சந்திரா கதாநாயகி ஆனார்.இவர்களுடன் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன்,சி கே சரஸ்வதி ,எஸ் ராமராவ்,எஸ் டி சுப்புலட்சுமி ஆகியோரும் நடித்தனர்.இவர்களுடன் பிற்காலத்தில் பிரபல குணச்சித்திர நடிகராகத் திகழ்ந்த ஒருவரும் இந்த படத்தின் மூலம் சினிமாவில் அடி எடுத்து வைத்தார்.அவர் தான் மேஜர் சுந்தரராஜன்.இப்படத்தில் சோழ மன்னனாக அவர் நடித்திருந்தார்.

மிகுந்த சிக்கனமான முறையில் படம் தயாரானது.பட்டினத்தார் கதை என்பதால் அவ் வேடம் தாங்கிய டீ எம் எஸ்ஸுக்கு படத்தின் பெரும் பகுதி ஒரு வேட்டி மட்டுமே ஆடையானது.படத்தின் வசனத்தை பிரபல நாவலாசிரியர் அகிலன் எழுதியிருந்தார்.நகைச்சுவை பகுதியை கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் எழுதினார்.பட்டினத்தார் பாடல்களுடன் படத்துக்காக மேலும் சில கவிஞர்களின் பாடல்களும் சேர்க்கப் பட்டன.ஒளிப்பதிவை சுந்தரபாபு ஏற்றிருந்தார்.




படத்துக்கு பெரும் துணையாக அமைந்தது படத்தின் பாடல்கள்தான்.ஒரு மட மாது ஒருவனுமாகி,என்ற பட்டினத்தார் பாடல் மனித வாழ்வின் பயணத்தை உணர்த்துவதாக அமைந்து கேட்போர் பார்ப்போர் கண்களை குளமாக்கின.இது தவிர பட்டினத்து அடிகளின் முன்னை இட்ட தீ,ஐயிரண்டு திங்கலாய்,ஒன்ரென்டிரு தெய்வம் உண்டென்றிரு பாடல்கள் தத்துவச் சுரங்கமாக ஒலித்தது.சிவப்பெருமானை புயலில் இருந்து காப்பாற்றுமாறு சிவனிடமே இரைஞ்சும் காப்பதும் பாராமைய்யா பாடலையும் ,பக்தி கொண்டாடுவோம் ,நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ பாடலையும் சுந்தர வாத்தியார் இயற்றியிருந்தார்.



கோடீஸ்வரான பட்டினத்தாருக்கு சிவபெருமானே மகனாக வந்து வளர்ந்து பின்னர் காதற்ற ஊசியும் வாராது காத வழிக்கே என்ற பேருண்மையை உணர்த்தி அவரை ஆட்கொள்வதே படத்தின் கதையாகும்.பாடல்கள் மூலமும் இசையின் மூலமும் படத்தை தூக்கி நிறுத்தியிருந்தார் ஜி ராமநாதன்.டீ எம் சௌந்தரராஜன் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பையும் பாடும் சந்தர்ப்பத்தையும் நன்கு பயன் படுத்திக்க கொண்டார்.படத்துக்கு விறுவிறுப்பை கூட்டுவதற்கு எம் ஆர் ராதா பயன் பட்டார்.உற்ற தாயானாலும் உள்ளதை சொல்லாதே,கட்டிய மனைவி என்றாலும் வட்டியை வாங்கு,ஊரார் சொத்தை உனதென நினை,மனதை செலவிட்டாலும் பணத்தை செலவிடாதே போன்ற எம் ஆர் ராதாவின் பொன்மொழிகள் ரசிகர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன.

பக்திப் படமான பட்டினத்தார் கே சோமுவின் இயக்கத்தில் நேர்த்தியாக உருவாகியிருந்தது.குறைந்த செலவில் உருவான பட்டினத்தார் படம் ஜி ராமநாதனுக்கு வெற்றி படமானது.ஆனாலும் படம் வெளிவந்த அடுத்த ஆண்டு 1963ல் ஜி ராமநாதன் காலமானார்.ஆனாலும் அவர் இசைக்கு ஏது கால எல்லை!


No comments: