எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் -02 சோதனைகள் : தாயகம் - புகலிடம் . “ காலமும் கணங்களும் “ நெடுங்கதையின் முதல் அத்தியாயம்


எனது எழுத்தும் வாழ்க்கையும் தெடரின் முதல் பாகத்தின் முதல் அங்கத்தை, 1972 இல் மல்லிகையில் வெளியான எனது முதலாவது கனவுகள் ஆயிரம் சிறுகதையுடன் ஆரம்பித்திருந்தேன்.

கடந்த வாரம் தொடங்கப்பட்டிருக்கும் இரண்டாம் பாகத்தின் இரண்டாம் அங்கத்தை  (  அவுஸ்திரேலியா வாழ்க்கை ) காலமும் கணங்களும் என்ற நெடுங்கதையுடன்  தொடங்குகின்றேன்.

இக்கதை 35 ஆண்டுகளுக்கு முன்னர் நான் மேற்கு அவுஸ்திரேலியா மாநிலத்தில் இறங்கி, விக்ரோரியா மாநிலத்திற்கு புறப்பட்டது வரையிலான சில நாட்களை சித்திரிக்கிறது.

1987 பெப்ரவரி மாதம் முதல் நான் கருவில் சுமந்து 1988 ஜூலையில்


எழுதி முடித்த கதை இது.

இனி வாசகர்களை கதைக்குள் அழைக்கின்றேன்.

காலமும் கணங்களும்

பேர்த் விமான நிலையம் , ஓடுபாதையில் விமானம் இறங்கி ஊர்ந்தபோது நேரத்தைப்பார்த்தான் சந்திரன்.

சீட் பெல்டை கழற்றவேண்டிய அவசியம் அவனுக்கில்லை. விமானப்பணிப்பெண் அருகே வந்து சொன்னபோதும் அலட்சியப்புன்னகையை உதிர்த்துவிட்டு பக்கத்து கண்ணாடியூடாக விமான நிலையத்தை பார்த்தவன் சந்திரன்.

ஒவ்வொரு பயணிகளும் இறங்கும் வரையில் காத்திருந்தான்.

மேற்கு அவுஸ்திரேலியா மாநிலத்தின் வெளிகளும் குடியிருப்புகளும் பசுமை படர்ந்த சோலைகளும் தெரியத் தொடங்கும்போதே குதூகலத்துடன் எழுந்து எழுந்து அமர்ந்து எரிச்சலூட்டி பக்கத்து சீட்காரர் சந்திரனிடம் கைகுலுக்கி விடைபெற்றார்.

முன்பின் தெரியாத கண்டத்தில் காலடி எடுத்து வைக்கிறோம் என்ற உணர்வைத்தவிர,  வேறு எந்த உணர்வுகளுமின்றி, ட்ரவலிங் பேக்கை தோளில் மாட்டிக்கொண்டு உற்சாகமாக நடந்தான் சந்திரன்.

பாஸ்போர்ட், டிக்ளரேஷன் ஃபோர்ம் ஆகியனவற்றை மீண்டும் ஒருமுறை எடுத்துக்கொண்டான். குடிவரவு அதிகாரிகள் அமர்ந்திருந்த ஒவ்வொரு கௌன்டர்களின் முன்னால் அவனுடன் வந்த பயணிகள் வரிசையாக நிற்கிறார்கள்.


வோக்கி டோக்கி சகிதம் ஒருவன் அவனை ஏற இறங்கப்பார்த்துக்கொண்டு நவக்கிரகங்களை வலம் வருபவன் போன்று சுற்றிச் சுற்றி வருகிறான்.

 “யார் இவன் ?  “ சந்திரன் இரண்டு தடவைகள் அவனைப்  பார்த்தாலும், தொடர்ந்து அவனைப்பார்க்கத் தயங்கியவனாக அடுத்த வரிசையில் நிற்பவர்களை  பார்த்தான்.

 லோ… “ குரல் வந்த பக்கம் திரும்பினான் சந்திரன். அதே வோக்கி டோக்கிக்காரன் முகத்தில் புன்னகையை தேக்கியவாறு – சந்திரனுக்கு அது இயல்பாகத் தோன்றவில்லை. – அருகே வந்து  “ ஹவ் ஆர்… யூ… ஆர் யூ.. கம்… டுடே…  “ என்றான்.

அந்த ஆங்கில உச்சரிப்பை சந்திரனால் ஆங்கில உச்சரிப்பாகவே அனுமானிக்க முடியவில்லை.

 “ இறப்பதற்காகத்தான் வந்தாயா… “ என்று கேட்பதாகவே பட்டது.

 “ ஆர்… யூ… கம்… டு..டை  “என்றானா…? அல்லது  “ ஆர்… யூ. கம் டு… டே… என்றானா..?

சந்திரனின் பதில்  “யெஸ்  “ஆக இருந்தது.

அந்த வோக்கிடோக்கிகாரனின்  “வெல்கம்  “ மட்டும் நன்றாகப் புரிந்தது.

             “ அவுஸ்திரேலியர்கள் பண்பாகப் பேசுவார்கள். பழகுவார்கள்.  “ புறப்படுவதற்கு முன்னர் ஊரில் சனசமூக நிலைய வாசல் வம்பளப்பில் ஒருவன் சொன்னது சரிதானா..?

ஒவ்வொருவராக நகர்ந்த பின்பு இவன் முறை வந்தது.

அந்த அதிகாரியும் “ ஹலோ… ஹவ் ஆர்… யூ…  “ என்றுதான் வரவேற்கிறான். கடமையிலிருக்கும் எவருமே எரிந்து விழாமல் காட்சியளிப்பது சந்திரனுக்கு இதமாக இருக்கிறது.

 “ யெஸ்…

 “ ஜஸ்ட் ஏ… மினிட் 

 “ யெஸ் 

இந்த மண்ணில் இறங்கிய பின்னர் எத்தனை  “யெஸ்  “ ஸை வீணாக்கியிருப்பேன்.  “ யெஸ்    “நோ  “ மட்டும் சொல்லத் தெரிந்து ஊரில் பெரிய வர்த்தகப்புள்ளியாகவும் சமாதான நீதிவானாகவும் நடமாடி  சமூக சேவையாளர் முத்திரையுடன் அண்மையில் மறைந்த ஊர் பிரமுகரின் முகம் மனதில் தோன்றியது.

 “ மா ஓ சேதுங்கிற்கும்  ஆங்கிலம் தெரியாதாம் !  “ சனசமூக நிலையத்தில் சிவத்த புத்தகங்களும் வைக்கவேண்டுமென்று சண்டை பிடித்த ஜெயராஜா,  இப்போது கலிபோர்னியாவில் என்ன செய்துகொண்டிருப்பான்…?

ஏன்… இப்போது அவர்கள் எல்லோரும் நினைவுக்கு வருகிறார்கள்..? . நினைப்பதற்கு வேறு எதுவும் இல்லாத காரணத்தினாலா..? ஒரே சமயத்தில் பலதையும் நினைக்கும் இந்த மனோபாவத்துக்கு முற்றுப்புள்ளி இடமுடியாதா..?

 “ஜஸ்ட் ஏ மினிட்  “ சொன்னவன், உள்ளே சென்று இன்னுமொருவனுடன் திரும்புகிறான்.

நல்லூர் கந்தசுவாமி கோயில் வாசலில் தேங்காய் உடைத்து கற்பூரம் கொளுத்தி,  நெற்றியில் திருநீறு பூசி முத்தமிட்டு வழியனுப்பி வைத்த அம்மா இப்போது என்ன செய்துகொண்டிருப்பா..? அம்மா அதற்கு முன்பு எப்போது அப்படி முத்தம் கொடுத்தா..?

 “ உன்னைத்தான் ராசா நம்பியிருக்கிறன்.  போனதும் கடிதம் எழுதிப்போட்டுடு…. மறந்திடாத…  “ அம்மாவின் கண்ணீரை பல முறை பார்த்திருக்கிறான். அம்மா… அழுவதற்காகத்தான் பிறந்தாவா..? அம்மாவின் பிரார்த்தனை வீண்போகுமா..?

மூன்று மாதங்களுக்குத்தானே  ‘விஸா  ‘ .  அதற்கப்புறம்…?

கௌண்டரின் பக்கத்து கதவைத் திறந்துகொண்டு வந்த அதிகாரி,  தன்னுடன் அழைத்துவந்த மற்றவனுக்கு சந்திரனை காட்டினான்.

 “ ஹவ் ஆர்… யூ… 

 “ குட்   

 “ ஆம்  “ என்ற சந்திரன், முதலில் தனது பாஸ்போர்டை வாங்கிக் கவனித்த அதிகாரியை பார்த்தான்.

அவனோ, நடந்ததெல்லாம் மறந்தவனாக தள்ளு கதவைத் திறந்துகொண்டு அகன்றுவிட்டான்.

அவனால், அழைத்துவரப்பட்டவன், முகத்தில் புன்னகையை                   ( இதற்கு அர்த்தம் என்ன? ) தேக்கிக்கொண்டு பாஸ்போர்டின் பக்கங்களைப் பார்க்கிறான்.

 “ சிறிதுநேரம் பொறுக்கவேண்டும்.  ஶ்ரீலங்காவிலிருந்து விஸிட் விஸாவில் வருபவர்கள் திரும்பிச்செல்வதில்லை. 

 “ அதனால்…? 

 “ அதனால் ஒன்றுமில்லை.  ஆனாலும் எமக்குச் சில கடமைகள் உண்டு. உங்கள் பாஸ்போர்டை ஃபோட்டோ பிரதி எடுத்துவிட்டு தருகிறேன். அதுவரையில் நீங்கள் போய் உங்கள் லக்கேஜை எடுத்துக்கொள்ளலாம் 

சந்திரனின் பதிலுக்கும் காத்திராமல், அந்த அதிகாரி போய்விட்டான்.

இனி பாஸ்போர்ட் திரும்பி கைக்கு வராதா..? வராவிட்டால்..? வந்தால்…!

கட்டுநாயக்காவில் வழியனுப்ப வந்த நண்பர்கள்,                                                   

            “ எந்தக்கட்டத்திலும் பதட்டப்படாதே… நிதானமாக செயற்படு.  “ என்று கூறிய புத்திமதிகள் அவசியமானதுதான்.  அப்போது அலட்சியமானதாக இருந்தாலும் நியாயமானதுதான்.

ஊதா நிறபேக் எங்கே வருகிறது..? சந்திரன் நோட்டம் விட்டபடியே தன்னிடம் பாஸ்போர்ட்டை வாங்கிச்சென்றவன் வருகிறானா என்பதை  இடைக்கிடை கவனித்துக்கொண்டான்.

பேக்குகள், சூட்கேஸ்கள் என்று நகர்ந்து வந்துகொண்டிருந்த பொதிகளை அடையாளம் கண்டு எடுக்கும் பயணிகளுடன் சந்திரன் நின்ற போதிலும், தனது பேக்கைவிட மிக முக்கியமான வஸ்து பாஸ்போர்ட்தானே..? என்ற உணர்வுடன் அந்த அதிகாரி சென்ற திசைப்பக்கமே பார்த்தான்.

ஐந்து நிமிடத்தில் அவனது ஊதா நிற பேக் வந்தது. அதனை குழந்தையை தூக்குவதுபோல் வெகு பக்குவமாக தூக்கிக்கொண்டான்.

இடப்புறம் தொங்கிய ட்ரவலிங் பேக்  வலப்புறம் மாறியது.

இரண்டு பேக்குகள் மீதும் அவனுக்கு பச்சாதாபம். இதுவரையில் இவற்றை எத்தனை இடங்களில் திறந்து காட்டியாயிற்று.

நாவற்குழி, ஆனையிறவு, மாங்குளம், வவுனியா, மதவாச்சி, நொச்சியாகம, பத்துல ஓயா,  களனி பாலம், பிறகு கட்டுநாயக்கா விமான நிலைய கனடா நட்புறவு வீதி – விமான நிலையம்… அப்பாடா… இனி இந்தக்கண்டத்தில்…!

தங்கை மாலதி பக்குவமாக அயன் செய்து மடித்து வைத்த உடைகள், அம்மா கை உளைய பிடித்து உருட்டி பக்கட் செய்த லட்டுகள். பெத்தம்மா, புறப்படும் தருவாயில், பொலிதீன் பேக்கில் சுற்றிக்கொண்டு வந்த புழுக்கொடியல்கள்.

இந்த இரண்டு பேக்குகளும் அவற்றுள் தாறுமாறாக அடங்கி மூச்சுவிடும் அப்பொருட்களும் என்ன பாவம் செய்தன…? வாய்பேச முடியாத ஜடங்கள்.

பாஸ்போர்ட்டுடன் அந்த அதிகாரி திரும்பி வந்தது சந்திரனின் வாயில் பால் வார்த்தது.

 “ தாங்ஸ்  “ சொல்லி வாங்கிக்கொண்டான்.

அந்த அதிகாரியே இப்போது சுங்க அதிகாரியாகவும் செயல்பட்டது சந்திரனுக்கு விநோதமாக இருந்தது.  இவர்களுக்கென்று குறிப்பிட்ட  வேலை இல்லையா..?

அந்த அதிகாரியின் முன்னால் தனது பேக்குகளை பதினொராவது தடவையாக மீண்டும் திறந்தான் சந்திரன்.

மிகுந்த அக்கறையுடன் நிதானமாக ஒவ்வொன்றையும் வெளியில் எடுத்து வைக்கும் அழகை ரசிக்கும் மனநிலையில் சந்திரன் இல்லை. எந்தப் பரபரப்பும் இன்றி அமைதியாக கடமையாற்றும் கலையை இவர்கள் எங்கே கற்றுக்கொண்டார்கள்..? சந்திரனுக்கு உண்மையிலேயே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

அவர்கள் கடமையின்போது புன்னகையை தேக்கிவைத்திருக்கிறார்கள் என்பதற்காக எதனையும் சொல்லி சமாளிக்கலாம் என நினைப்பது தவறாகக் கூட இருக்கலாம் என சந்திரனின் மனதுக்குப்பட்டது.

 “ நிதானமாக செயல்படுபவர்கள் ஆழமானவர்கள்  “ வம்பளப்புகளில் நண்பர்களின் வாயில் அபூர்வமாக உதிர்ந்துவிடும் வார்த்தைகள் கூட சில சமயங்களில் இப்படி நேரடி அனுபவங்களில் சரியாகத்தான் இருக்கிறது.

பேக்கிலிருந்த உடைகளை வேறாகவும் வீட்டாரின் லட்டு , ஒடியல், பைத்தம் உருண்டை,  பலகார பட்சணங்களை வேறாகவும் பிரித்துவைத்துவிட்டு நிமிர்ந்தான் அதிகாரி.

 “ இவைகள் என்ன..?

 “ உணவுப் பொருட்கள் 

 “ என்ன மாதிரியான உணவுப்பொருட்கள்…?  “ அந்தக்கேள்வி புரியவில்லை.

நாவற்குழி முகாமுக்கு முன்பாக லட்டையும் பைத்தம் உருண்டையையும் உருட்டி உருட்டிப்பார்த்து  “ பொடி போம்பத  “ ( சிறிய குண்டா ) சிரிப்புடன் கேட்ட ஆர்மிக்காரன், உண்மையிலேயே அவற்றினை முன்பு ருசி பார்த்திருக்கமாட்டானா..? அதுபோல், இந்த அவுஸ்திரேலியனும் சீவியத்திலேயே இதனைக்கண்டிருக்கவே மாட்டானா..?

வேற்று இனத்தவர்களிடம் தமிழர் உணவுப் பதார்தங்களை விளக்குவதற்கே தனியாக கற்றுக்கொண்டு வரவேண்டிய தலைவிதியை என்னவென்பது?

முகங்கள் அந்நியம் - காற்று அந்நியம் – தண்ணீர் அந்நியம். எல்லாமே அந்நியமாகிவிட்ட மண்ணில், சொந்த நாட்டின் சொந்த மண்ணின்,  சொந்த கலாசாரத்தின் உணவுப்பதார்த்தங்களை என்ன சொல்லி விளக்குவது…? 

 “ இவை எங்கள் உணவுப் பதார்த்தங்கள்.. சிற்றுண்டிகள் 

 “ ஓ… ஐஸீ…  “ வேற்று மொழியை அதனை உச்சரிக்கும்போது, உதட்டிலும் உடலிலும் தோன்றி மறையும்   ‘அக்‌ஷன்  ‘களை ரசனையுடன் அவதானித்தான் சந்திரன்.

சகல பயணிகளும் நிம்மதியாக வெளியேறிய பின்னர், தான் மட்டும் அனாதையாக நின்று இவன் கேள்விகளுக்கு விளக்கம் தேடும் பரிதாபத்திற்கு ஆளாகியதை நினைக்கையில் – தாழ்வுச்சிக்கல் முளைவிட்டது.

புழுக்கொடியலை எடுத்து இரண்டாக ஒடித்து முகர்ந்து  பார்க்கிறான். அதில் என்ன  வாசம் வரும்..? சந்திரனுக்கு சாப்பிட்டு பழக்கம் உண்டு.  சூத்தைப் பல்லுக்குள் சிக்கிக்கொண்ட ஒடியல் தும்பை அகற்ற அம்மாவிடமும் மாலதியிடமும்  ‘ பின்  ‘ கேட்டு அலைந்து  பழக்கம்  உண்டு. இப்படி இவனைப்போல் ஒடியலை இரண்டாக ஒடித்து முகர்ந்து பார்த்து பழக்கம் இல்லை.

 “ இது ஒருவகைத் தாவரமா…? 

 “ இல்லை… இல்லை… ஆமாம் 

ஒடியல்

வடமாகாண தமிழ் மக்களின் பொருளாதார வளங்களில் ஒன்று. இந்தக்கண்டத்தில் இப்படியும் கேள்விகள் உதிக்குமென்று தெரிந்திருப்பின், நட்டத்தில் இயங்கும் பனம்பொருள் அபிவிருத்திச் சபையிடம் இதற்கு விளக்கம் கேட்டுக்கொண்டு வந்திருக்கலாம்.

எதற்கு விளக்கம்..?

பயணத்திற்கு முதல்நாள் பெரிய கடைக்கு ஓடிப்போய் ஒடியல் வாங்கிக்கொண்டு, பெரியகடை புதினங்களும் சுமந்து வந்து வீட்டில் கொட்டிய பெத்தம்மாவை வாய் ஓயத்திட்டவேண்டும் போலிருக்கிறது.

 “ நான் ஒரு வெஜிடேரியன்.  “ பொய்யை சொல்லி சமாளிக்க விரும்பினான் சந்திரன்.

 “ ஓ.. வெறிகுட்… ஹிட்லரும் வெஜிடேரியன்தான்.    உலக சரித்திரம் படித்துள்ளவனிடம்,  ஒடியல் சரித்திரத்தை விளக்கத் தெரியாமல், அட்டன்பரோவின் காந்தி படத்தை ஞாபகத்தில் வைத்து,  “ எங்கள் காந்தியும் வெஜிடேரியன்தான்    என்றான் சந்திரன்.

 “ நோ…. அவர் உங்கள் காந்தியல்ல…! இந்தியர்களின் காந்தி. யூ… ஶ்ரீலங்கா… “ அதிகாரியின் குதர்க்கம் ரசிக்கத்தக்கதாய் இருக்கிறது.

 “யெஸ் 

 டிக்ளரேஷன் படிவத்தை ஒரு முறைக்கு இருமுறை திருப்பி திருப்பி பார்த்துவிட்டு, ஏதோ எழுதி கையொப்பம் இட்ட அந்த அவுஸ்திரேலிய சுங்க அதிகாரி சந்திரனின் உடைமைகளை அழகுடன் அமைதியாக சீராக அடுக்கி பேக்குகளை மூடிக்கொடுத்து – கையை நீட்டி குலுக்கி  “ வெல்கம் டு  ஒஸ்ரேலியா  “ என்றான்.

யாழ். – கொழும்பு மார்க்கத்தில்  “ ஆயிரத்தெட்டு தடவை இறக்கி ஏற்றி – சோதித்து துவளவைக்கும் ஆர்மிக்காரர்களுக்கும் – ஊர்காவல் படைகளுக்கும் முன்னால், இந்த வெள்ளைத் தோல்கள் எவ்வளவோ மேல்.  ஜொனிவோர்க்கருக்கும் வி. எஸ். ஓ. வுக்கும் ஷாண்டி என்ன கலக்கினால் பொருத்தமாயிருக்கும் என்பதை மட்டும்தான் இந்த வெள்ளைக்காரர்களிடம் நம்மவர்கள் கற்றுள்ளனரே தவிர, ஒரு மனிதனை எப்படி சோதிக்கவேண்டும்..? எப்படி ஆராயவேண்டும்…? என்பதை இன்னும் கற்றுக்கொள்ளவில்லைத்தான். இல்லையேல், களனி பாலத்தருகே சிங்கப்பூர் உல்லாசப்பயணிகளிடம் ,                                       “ இலங்கையின் தேசிய அடையாள அட்டையை காட்டு பார்க்கலாம்    என்று அந்த சீருடைகள் நச்சரித்திருக்கமாட்டா.

கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு தாரக மந்திரம் சென்னை மரீனா பீச்சின் காற்றில் மட்டும் பரவாமல், அதற்கு வேறு உருவம் கொடுத்து,  “ தார்மீகம்  “ என்றும்  “ தர்மிஷ்ட சமாஜய  “ என்றும் காலிமுகத்திடலிலும் காற்றோடு காற்றாய் பரவிக்கொண்டிருக்கையில்… இந்தக்கண்டத்தில் அச்சொற்களுக்கு அர்த்தமே தெரியாமல் செயலுருப்பெருகின்றனவா..?

சந்திரனால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. இப்போதுதானே இந்த மண்ணில் கால்  பதித்திருக்கிறோம். போகப்போகத்தான் அதன் நெகடிவ்வும் பொஸிட்டிவ்வும் தெரியும்.

( தொடரும் )

No comments: