………….. பல்வைத்தியகலாநிதி பாரதி இளமுருகனார்
பள்ளிதனிற்
கற்பதுவும் பட்டம் பெறவே
பலவிடங்கள் ஓடியோடிக் கற்பதும் சரியே!
வள்ளுவனார் சொன்னபடி வாழ்
வழங்குவதோ சமயநெறிக் கல்வி அன்றோ?
துள்ளியலைய விடாதென்றும் மனதை நல்ல
தூயவெண்ணங் கொண்டுசெய லாற்ற வேண்டி
எள்ளிநகை ஆடாது பிள்ளை களுக்கு
ஏற்றசமய அறிவுதனைப் புகட்ட வேண்டும்!
இளங்கன்று பயமறியா தென்று சொன்னோர்
‘ இளமையிற்கல்’ என்றதையும் சொல்லிப் போந்தார்
வளமிக்க
வாழ்விற்குக் கல்வியின் தேவையை
வலியுறுத்தி வாழ்ந்திட்ட தமிழன் ‘சமயம்
வழங்கிவரும் நெறிக்கல்வி அவசியம் என்று
வழிவழியாய்ப்
போதித்து வருதல் கண்டோம்’
தெளிவுடனே நாமுமெங்கள் இளைய சமுகம்
சீர்சமயக்
கல்விகற்று உயரச் செய்வோம்.
இனிமையாகப் பேசுதற்குத் தமிழில் நல்ல
இதமான சொற்களுக்கா பஞ்ச மில்லை?
கனிவாகப் பதில்சொன்னால் கடுங்கோ பத்தைக்
காட்டுவேரும் திருந்திவிட வாய்ப்பு உண்டே!
புனிதமனத் துடனேமுதி யோரை மதித்துப்
புரிந்துணர்வும் பரந்தநோக்கும் மலரச் செய்தால்
மனிதநேயம் வளர்த்துமாண்பு காத்து வந்தால்
மண்ணில்நல் லவண்ணந்தான் வாழ லாமே!
வாழ்க்கையிலே முடிந்தவற்றை வருந்தி நினைத்தல்!
வசதிக்கு எட்டாப் போகத் திற்(கு) ஏங்கல்!
காழ்ப்புணர்ச்சி யுடன்மனதைக் கலங்க வைத்தல்!
கடுங்கோபம் பேராசை காமம் வளர்த்தல்!
தாழ்வான இவைபோன்ற செய்கை தவிர்த்துத்
தலையாய இறைநினைவாற் சிந்தை நிறைத்தால்
வாழ்வாங்கு மண்ணில்நல் லவண்ணம் வாழலாம்
வாழநினைப் போருக்கு வழிதா னிலையா?
அறுகுணசீர் அமைப்பதனை அகில மெங்கும்
ஆற்றுப்படுத் திமக்களெலாம் உய்யும் வழியில்
மறுபேச்சுக் கிடமில்லை என்றுவே தாத்திரி
மகரிஷியும் முயன்றுதிட்டம் தீட்டி நின்றார்
பெறுபேறு பெறவேண்டி அணிதி ரட்டிப்
பெரிதளவில் சேவாசங் கங்கள் மூலம்
நறுஞ்சேவை செய்துவந்தார்! தொடர்ந்தப் பணிக்கு
நாமுமுயிர் கொடுத்திடுதல் நம்கட னன்றோ?
ஆழ்மனதிற் பதிந்திருக்கும் தீய எண்ணம்
அத்தனையும் நீக்கிவிடும் பழக்கம் வேண்டும்!
வாழ்வியலுக் குகந்தநற் சிந்தனை பலதை
வலிந்துதினம் மனமதிலே நிறைக்க வேண்டும்!
தாழ்வுமனப் பான்மைதனை நீக்க வேண்டும்
தரணியிலே தோல்விகண்டு துவழா தென்றும்
வீழ்ந்தாலும் மறுபடியும் எழுவேன் என்ற
வேட்கைதனை வளர்த்துவெற்றி காண வேண்டும்!
மீண்டுந்தொ டங்குமென்மிடுக் கெனறு எழுந்து
மீட்டிடுவேன் இழந்ததெலாம் என்னும் உறுதி
பூண்டுசெயல் ஆற்றுந்திட மனதை வளர்த்துப்
புத்துணர்வு பொலிந்திடவே வாழ்க்கை தன்னை
ஆண்டாண்டாய்க் காத்துவந்த விழுமி யங்கள்
அணிசெய்யப் போதுமென்ற பொன்மனத் தோடு
மாண்புடனே அன்பெனும்நீர் வற்றாது பாய்ச்சி
மண்ணில்நல் லவண்ணந்தான் வாழ லாமே!
புறவழிபா டியற்றுமுறை புரிய வைப்போம்!
புலனடக்கி மனவமைதி அடையும் வழியை
அறநெறியாய்ப் பயிற்றுவிப்போம்! சிறுவர் தம்மை
அன்புவழி ஓம்பிமனப் பக்குவம் அடைந்தபின
சிறந்தவழி பாடான அகவழி பாட்டைத்
தினஞ்செய்து சிவனைத்தம் சிந்தை தன்னில்
மறந்திடாது தியானிக்கும் வழிஓம்ப வைக்க
மண்ணில்நல் லவண்ணந்தான் வாழ லாமே!
ஆழநினைந் தவன்புகழைப் பாடிப் பாடி
அன்புநீரை அர்சனையாய் விழியுஞ் சிந்த
பாழுமிந்த மனதிலெழும் ‘நான்’எனும் மமதையும்
பாசந்தரும் ’எனது’எனும் தன்மு னைப்பும்
மாழும்வினைபோல் நீங்கிவிடத் தூய மனதில்
மார்க்கமாய்ப் பக்திவழி சிறந்து தோன்றும்!
வேழமுகத் தானருளை நினைந்தே வேண்டி
மிகநல்ல வண்ணந்தான் வாழ லாமே!
பொல்லாத பாவத்தீச் செயலை நீக்கிப்
புண்ணியங்கள் நன்மைதரப் புரிய வேண்டும்!
கல்லாத புல்லியர்கள் உறவைத் தவிர்த்துக்
கற்றோரின் அன்பதனை நாட வேண்டும்!
இல்லாதோர் வாழநிதி ஈய வேண்டும்!
எவரிடத்தும் யாசிக்கா திருத்தல் வேண்டும்!
தொல்லைதீரத் திருக்கோளறு பதிகம் பாடித்
துயரின்றி; நல்லவண்ணம் வாழ லாமே!
என்செயலெலாம்
இறைவனவன் செயல்தான்
என்றும்
எனக்குள்நின் றவனேசெய் விப்பான் என்றும்
என்கையில் ஒன்றுமில்லை எல்லாம் அவனருள்
என்றுதினம் நினைவார்வினை தீரும் என்றும்
அன்பினைநாம் காட்டுகின்ற அனைத்து உயிர்கள்
அகத்துள்ளே பரம்பொருளே உறைகிறான் என்றும்
துன்பச்செயல் நினைத்தாலே பாவம் என்றும்
சொல்லிவாழ்வர் வாழ்வாங்கு வாழ்வர் அன்றோ?.
வாழ்த்துவதால் வாழ்த்தும்மனம் அமைதி பெறும்!
மகத்தான உயர்நிலையை எய்தி நிற்கும்!
வாழ்த்தினொலி அலையலையாய் வாழ்த்தப் பெற்றோர்
மனம்புகுந்து வாழ்த்தினோரை வாழ வைக்கும்!
வாழ்த்ததனால் வாழ்த்தப்பெற்ற வுள்ளம் மகிழும்
மனதாலே வாழ்கவள முடனே என்று
வாழ்த்திடுவீர் ! வாழ்த்துவதாற் குறைவொன் றுமில்லை!
வாழ்த்துவதால் தெய்வீகம் மலரும் அன்றோ?
No comments:
Post a Comment