மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா
உயர்வும் தாழ்வும் ஒருவழி நில்லா
சுழலும் உலகில் சுற்றியே நிக்கும்
நரகம் சொர்க்கம் தூரவே இல்லை
நம்முடை எண்ணம் அனைத்தையும் நல்கும் !
தேவரும் அசுரரும் தேடிட வேண்டாம்
இருவரும் எழுவது எம் அகமாகும்
ஆவேசம் எழுந்தால் அசுரராய் ஆவோம்
அமைதியாய் இருந்தால் தேவராய் தெரிவோம் !
ஆசை என்பதே அவலத்தை அளிக்கும்
ஆசையை அறுத்தால் ஆனந்தம் பெருகும்
ஆசை அகன்றால் அகமது சிறக்கும்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் உண்டு
உணர்ந்திடும் வரைக்கும் ஒன்றுமே தெரியா
தெரிந்திட நாளும் அலைந்திட வேண்டும்
தெளிவது வந்தால் தெரிசனம் நிகழும் !
ஐம்புல வலையை அறுத்திட வேண்டும்
அஞ்செழுத் ததனை அமர்த்திட வேண்டும்
நெஞ்சத்தில் பரம்பொருள் நிறுத்திட வேண்டும்
நிம்மதி வெளிச்சம் நிச்சயம் தெரியும் !
No comments:
Post a Comment