உலகச் செய்திகள்

தலிபான் ஆட்சியிலிருந்து தப்பிக்கவென பாகிஸ்தான் எல்லைக்கு ஆப்கானியர்கள் நகர்வு

செய்தியாளர்களை சவுக்கால் அடித்து தாக்கிய தலிபான்கள்

ஆப்கானில் இருந்து முதல்முறை வெளிநாட்டினர் வெளியேற்றம்

காபூல் அரசுக்கு பீஜிங் முழுமையான ஆதரவு

மன்னிப்புக் கேட்டார் ஆப்கானின் முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கனி

நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி முதலிடம்

சிறையிலிருந்து தப்பிய பலஸ்தீன கைதிகளின் குடும்பத்தினர் கைது

தலிபான்களின் தடையால் பல்கலைகளில் ஆண் - பெண் மாணவர்கள் நடுவில் திரைச்சீலைதலிபான் ஆட்சியிலிருந்து தப்பிக்கவென பாகிஸ்தான் எல்லைக்கு ஆப்கானியர்கள் நகர்வு

தலிபான் ஆட்சியிலிருந்து தப்பிக்கவென பாகிஸ்தான் எல்லைக்கு ஆப்கானியர்கள் நகர்வு-Afghani Travel Pakistan

தலிபான்களின் ஆட்சியிலிருந்து தப்பிப்பதற்காக அந்நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள், ஆப்கானிஸ்தானின் தெற்கு கந்தஹார் மாகாணத்தில் இருக்கும் ஸ்பின் போல்டாக் மாவட்டத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லைக்கு சுமார் இரு வாரங்களாக நகர்ந்துள்ளனர். அவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட எல்லா வயது மட்டத்தினரும் உள்ளனர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆப்கானிஸ்தானின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த ஆப்கானியர்கள் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். காபூல் தலிபான்களிடம் வீழ்ந்தவுடன் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான் அடையாள அட்டைகள் அல்லது கந்தஹார் அடையாள அட்டைகளை வைத்திருப்பவர்களை மாத்திரமே இஸ்லாமாபாத் அனுமதிக்கிறது என்று 'பஜ்வாக் ஆப்கான் நியூஸ்' குறிப்பிட்டுள்ளது.

ஆப்கானை விட்டு வெளியேறும் நோக்கில் ஸ்பின் போல்டக்குக்கு நகர்ந்துள்ள ஆப்கானியர்களில் ஒருவரான அப்துல் வதுத், 'தலிபான்களின் ஆயுததாரிகளும் பாகிஸ்தான் படைகளும் மக்கள் பாகிஸ்தானுக்குள் பிரவேசிக்க அனுமதி அளிக்க மறுக்கின்றனர். இருப்பினும் பாகிஸ்தானுக்குள் பிரவேசிக்கும் நோக்கில் தினமும் ஆப்கானியர்கள் பாகிஸ்தான் எல்லையில் கூடிவருகின்றனர். ஆனால் அவர்களால் பிரவேசிக்க முடியவில்லை' என்று கூறியுள்ளார்.

ஆப்கானின் வடக்கிலுள்ள நகர்களில் ஒன்றான மசார்-இ-ஷெரீபைச் சேர்ந்த ஒருவர், தலிபான் ஆட்சியில் தம் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து அஞ்சி நாட்டை விட்டு வெளியேறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவ்வாறான முயற்சியில் ஈடுபடும் சில குடும்பங்கள் பாகிஸ்தானுக்குள் பிரவேசிக்கவென கட்டத்தல்காரர்களுக்கு சுமார் ரூ. 5,000, ரூ 6,000 என்றபடி பணம் செலுத்த வேண்டிய கட்டாய நிலையையும் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை தலிபானின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், செய்தி மாநாடொன்றில், ஸ்பின் போல்டாக் மற்றும் டோர்காம் ஊடாக பாகிஸ்தானுக்குள் நுழைய விரும்பும் ஆப்கானியர்களின் எண்ணிக்கை முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ள போதிலும் அவர்களுக்கு பாகிஸ்தான் தரப்பில் அனுமதி அளிக்கப்படுவதில்லை. இவ்வாறு அனுமதிக்கப்படாதவர்களில் நோயாளர்கள், அகதிகள் மற்றும் பாகிஸ்தானில் தடுக்கப்பட்டுள்ள வர்த்தகர்களும் கூட காணப்படுகின்றனர் என்று குறிப்பிட்டதாக ஏ.என்.ஐ சுட்டிக்காட்டியுள்ளது.   நன்றி தினகரன் 
செய்தியாளர்களை சவுக்கால் அடித்து தாக்கிய தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் போராட்டங்களை படமாக்க முயன்ற செய்தியாளர்கள் தடுத்து வைக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

முதுகு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயங்களுடன் செய்தியாளர்கள் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

தான் ஒரு மாவட்ட காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கு தம்மை அவர்கள் அடித்து உதைத்ததாகவும் தகி தர்யாபி என்ற செய்தியாளர் தெரிவித்தார். தம்மை தலிபான்கள் தடியாலும் மின்சாரக் கேபிள்களாலும், சவுக்காலும் அடித்ததாக அவர்கள் கூறுகின்றனர். சில மணி நேரம் கழித்து எந்த விளக்கமும் இல்லாமல் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.எடிலாட்ரோஸ் என்ற செய்தித்தாள் நிறுவனத்தின் இரு செய்தியாளர்கள் போராட்டங்களைப் பற்றி செய்தி சேகரிக்கச் சென்றபோது தலிபான்களால் கைது செய்யப்பட்டனர்.

ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டபோது, “தலை துண்டிக்கப்படாதது உன் அதிர்ஷ்டம்” என்று தலிபான்களில் ஒருவர் கூறியிருக்கிறார். கடந்த இரு நாட்களில் குறைந்தது 14 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருப்பதாக சி.பி.ஜே என்ற பன்னாட்டு அரசு சாரா அமைப்பு கூறியுள்ளது.   நன்றி தினகரன் 
ஆப்கானில் இருந்து முதல்முறை வெளிநாட்டினர் வெளியேற்றம்

அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்னர் தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள காபூல் விமான நிலையத்தின் வழியாக முதல் முறையாக வெளிநாட்டுக்கு பயணிகள் அனுப்பப்பட்டுள்ளனர்.

கட்டார் ஏர்வேஸ் விமானம் மூலம் கட்டார் தலைநகர் டோஹாவுக்கு இந்தப் பயணிகள் அழைத்து வரப்பட்டனர்.

இதில் 113 பேர் இருந்ததாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இவர்களில் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் குடிமக்கள் அடங்குவார்கள்.

அண்மையில் கட்டாருக்குச் சென்றிருந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கென், ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்பதற்கு உதவும்படி கேட்டுக் கொண்டார்.

கனடாவைச் சேர்ந்த 43 பேரும், நெதர்லாந்தைச் சேர்ந்த 13 பேரும் மீட்கப்பட்டிருப்பதாக அந்தந்த நாடுகள் தெரிவித்துள்ளன.

கடந்த ஓகஸ்ட் 15ஆம் திகதி தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், 1.24 இலட்சம் பேர் அங்கிருந்து விமானங்கள் மூலமாக அழைத்து வரப்பட்டனர். வெளியேறுவதற்கான கெடு ஓகஸ்ட் 31ஆம் திகதி முடிந்த பின்னரும் பலர் அங்கு சிக்கியுள்ளனர்.

காபூல் விமானநிலையத்தில் தற்போதைய நிலவரம் குறித்து செய்தி வெளியிட்ட கட்டார் செய்தி நிறுவனம் ஒன்று, “விமானநிலையத்தில் பெண்கள், குழந்தைகள், முதியோர் என நூற்றுக் கணக்கானோர் உடைமைகளுடன் காத்திருக்கின்றனர். காத்திருக்கும் 200 பேருமே அமெரிக்கர்கள் அல்ல. அமெரிக்கர்கள் 100 பேருக்கும் குறைவாகவே இருக்கின்றனர். மற்றவர்கள் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றியவர்கள், ஆப்கானிஸ்தானைச் சாராதவர்கள்” என்று தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கான கட்டார் நாட்டின் சிறப்பு தூதர் முத்லாக் அல் காத்ஹானி கூறுகையில், “இன்றைய தினம் வரலாற்றுச் சிறப்புமிக்க தினம். கட்டார் தொழில்நுட்பக் குழுவினர் ஆப்கான் குழுவினருடன் இணைந்து விமான நிலையத்தை சீரமைத்து வருகிறது. சர்வதேச விமானங்களை இயக்கும் அளவுக்கு விமான நிலையத்தை திறக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

விமான நிலையத்தில் ரேடார், லாண்டிங் தொழில்நுட்பக் கருவிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. தொலைதொடர்பு சாதனங்கள் சரியாக இயங்குகின்றன. நிறைய சவால்களின் ஊடே இது நடந்துள்ளது. இன்னும் சில தொழில்நுட்பப் பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டியுள்ளது” என்றார்.   நன்றி தினகரன் 
காபூல் அரசுக்கு பீஜிங் முழுமையான ஆதரவு

காபூலில் அமையவுள்ள புதிய தலிபான் அரசுக்கு முழுமையான அங்கீகாரமளிக்க சீனா முன்வந்துள்ளது. அதற்கான நிபந்தனைகளையும் அது தலிபான் உயர் பீடத்துக்கு தெரிவித்துள்ளது. வடக்கு கூட்டணிப் படையினரோடு பஞ்ச்சீர் பள்ளத்தாக்கில் தலிபான் படையினர் கடுஞ் சண்டையில் ஈடுபட்டுள்ள நிலையிலும் தன் முழுமையான ஆதரவை சீனா வெளிப்படுத்தியுள்ளது.

சீனாவின் நிபந்தனைகளில் அந்நாட்டின் தேசிய நலன்கள் பாதுகாக்கப்படுவதை ஆப்கான் அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்பது முக்கியமாகக் குறிப்பிடப்பட்டிருப்பதோடு மனித உரிமைகள், பெண் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் எந்தக் குறிப்பும் இல்லை எனத் தெரியவந்துள்ளது. மறுசீரமைப்பு தொடர்பாகவும் சீனா மௌனம் காத்திருக்கிறது.   நன்றி தினகரன் 

மன்னிப்புக் கேட்டார் ஆப்கானின் முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கனி

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதற்காக முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கனி மன்னிப்புக் கேட்டுள்ளார். நாட்டில் அமைதியை உறுதி செய்வதற்காகவே அவ்வாறு செய்தததாக அவர் கூறினார்.

பாதுகாப்புக் குழுவின் ஆலோசனைக்கு ஏற்ப, நாட்டை விட்டு வெளியேறியதாக ட்விட்டரில் கனி பதிவிட்டுள்ளார். துப்பாக்கிகள் வெடிக்காமல் இருக்க தாம் நாட்டைவிட்டு வெளியேறுவது ஒன்றே சிறந்த வழி என்று நம்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தம்முடைய அரசாங்கம் திடீரென வீழ்ந்ததற்கு வருந்துவதாக அவர் தெரிவித்தார். நாட்டிலிருந்து மில்லியன்கணக்கான டொலரை எடுத்துச் செல்லவில்லை என்று கனி கூறினார்.

கடந்த ஓகஸ்ட் 15 ஆம் திகதி ஆப்கான் தலைநகர் காபுலை நோக்கி தலிபான்கள் முன்னேறிய நிலையிலேயே கனி நட்டை விட்டு வெளியேறினார். தமக்கு மக்களை கைவிடும் நோக்கம் இருக்கவில்லை என்றும் அப்போது ஒரே வழியாக அது இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தற்போது, மனிதநேய அடிப்படையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் அடைக்கலமாகியுள்ளார்.   நன்றி தினகரன் 
நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி முதலிடம்

நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்துள்ளது.அதேபோல், சிறந்த கல்லூரிகள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 3 கல்லூரிகள் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன.

மத்திய கல்வி அமைச்சகம் ஆண்டுதோறும் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான 'டாப் 10' பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2021ம் ஆண்டுக்கான பட்டியலை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று வெளியிட்டுள்ளார்.

அதில், ஒட்டுமொத்தமாக சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தில் பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனமும், மூன்றாம் இடத்தில் மும்பை ஐஐடியும் உள்ளன.

சிறந்த பல்கலைகள் பட்டியலில் பெங்களூர் ஐஐடி முதலிடத்திலும், டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலை 2ம் இடத்திலும், வாரணாசியில் உள்ள பணாரஸ் ஹிந்து பல்கலை 3வது இடத்திலும் உள்ளது.

கோவையை சேர்ந்த அமிர்தா விஸ்வ வித்ய பீடம் பல்கலை 5வது இடத்தை பிடித்து உள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்தது. டில்லி ஐஐடி 2ம் இடமும், மும்பை ஐஐடி 3ம் இடமும் பிடித்தது.   நன்றி தினகரன் 
சிறையிலிருந்து தப்பிய பலஸ்தீன கைதிகளின் குடும்பத்தினர் கைது

இஸ்ரேல் சிறையில் இருந்து தப்பிச் சென்ற பலஸ்தீனர்களின் குறைந்தது ஐந்து குடும்ப அங்கத்தவர்களை இஸ்ரேலிய துருப்புகள் கைது செய்திருப்பதாக பலஸ்தீன கைதிகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

வடக்கு இஸ்ரேலில் உள்ள கில்போ சிறையில் இருந்து சுரங்கப்பாதை தோண்டி ஆறு பலஸ்தீன கைதிகள் கடந்த திங்கட்கிழமை தப்பிச் சென்றனர்.

இவர்களை பிடிப்பதற்கு ஆளில்லா விமானங்கள், வீதிச் சோதனைச்சாவடிகள் அமைத்திருக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தப்பிச் சென்றவர்களில் பெரும்பாலானவர்களின் சொந்த ஊரான மேற்குக் கரையின் ஜெனின் நகரில் இராணுவ சுற்றுவளைப்பு சோதனைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த கைதிகள் தப்பிச் செல்வதற்கு மூளையாகச் செயற்பட்டவர் என்று கூறப்படும் முஹமது அர்தாவின் இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பலஸ்தீன கைதிகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

தவிர இஸ்ரேல் இராணுவத்தால் மேலும் மூன்று குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். டொக்டர் நிதால் அர்தாவின் குடும்ப உறுபினர் மற்றும் தப்பிச் சென்ற மற்றொரு கைதியான முனாதல் இன்பயதாவின் தந்தை ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தப்பிச்சென்ற இந்த மூன்று கைதிகளும் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பைச் சேர்ந்தவர்களாவர்.    நன்றி தினகரன் 
தலிபான்களின் தடையால் பல்கலைகளில் ஆண் - பெண் மாணவர்கள் நடுவில் திரைச்சீலை

தலிபான்களின் தடையால் பல்கலைகளில் ஆண் - பெண் மாணவர்கள் நடுவில் திரைச்சீலை-Universities Separated with Curtain-Afghanistan

ஆப்கானிஸ்தானில் ஆண், பெண் மாணவர்கள் ஒரு வகுப்பறையில் கலந்து கல்வி பெறத் தலிபான்கள் தடை விதித்துள்ளதைத் தொடர்ந்து பல்கலைக்கழக வகுப்பறைகள் ஆண், பெண் மாணவர்களுக்கென திரைச் சீலைகள் கொண்டு பிரிக்கப்பட்டுள்ளன.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் 'பஜ்வாக் ஆப்கான் நியூஸ்' என்ற ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனம் டுவீட்டரில் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது. அந்தப் புகைப்படத்தில் ஆண், பெண் மாணவர்கள் கலப்பது திரைச் சீலை கொண்டு பிரிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் கல்விக்கூடங்களின் வகுப்பறைகளில் மாணவ மாணவியர் கலப்பதைத் தவிர்க்கவென சுவர் அமைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும் தலிபான்களுக்கும் இடையில் ஏற்கனவே நடைபெற்ற கூட்டமொன்றில் ஆண், பெண் மாணவர்கள் கலந்து கல்வி கற்பதை தொடர்ந்தும் முன்னெடுக்காது அதனை முடிவுக்கு வர வேண்டும் என்று தலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டிலுள்ள பாடசாலைகளில் ஆண், பெண் மாணவர்களுக்கான தனித்தனி வகுப்பறைகள் உள்ளன. அதேநேரம் ஆண், பெண் மாணவர்கள் கலந்து கல்விகற்கும் அரச தனியார் பல்கலைக்கழகங்களும் இருக்கின்றன என்று ஏ.என்.ஐ. சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான நிலையில் தலிபான்களின் இந்நடவடிக்கை குறித்து அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். 'பொது பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தனித்தனியாக வகுப்புகளை நிர்வகிக்கலாம். ஆனால் தனியார் கல்வி நிறுவனங்களில் பெண் மாணவியர் குறைவாக இருப்பதால் இது சிரமமான காரியமாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

நாட்டின் முக்கிய பல்கலைக்கழகங்களில் வளங்கள் பற்றாக்குறையாக இருப்பதால் பல்வேறு வகுப்புகளை ஏற்பாடு செய்ய முடியாத நிலைமை உள்ளது. அதனால் தலிபான்களின் இந்நடவடிக்கை பெண்கள் உயர் கல்வியை இழக்கும் நிலையை உருவாக்கும் என்று பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை தலிபான் அரசாங்கத்தில் உயர் கல்வி அமைச்சராகப் பதவி வகிக்கும் பாக்கி ஹக்கானி லோயா ஜிர்கா கூடாரத்தில் உரையாற்றும்போது, 'நாட்டின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் ஷரியா சட்டத்தின்படி முன்னெடுக்கப்படும்' என்று கூறியுள்ளார்.   நன்றி தினகரன்No comments: