பாரதி தரிசனம் – அங்கம் 01 1991 இல் மெல்பனில் மகாகவி பாரதி நாடகம் முருகபூபதி


மகாகவி பாரதியின் பூதவுடல்  மறைந்து நூறு ஆண்டுகளாகிவிட்டன. ஆனால், புகழுடல்  என்றும் மங்காமல் போற்றப்படுகிறது.

ஆரம்பப் பாடசாலைப் பருவத்திலிருந்தே பாரதியிடத்தில் எனக்கு ஈர்ப்பு அதிகம். அந்த ஈர்ப்பு இன்றளவும் குறையவில்லை.  தினம் தினம் பாரதியின் பாடல்களை கேட்டுக்கொண்டே வளர்ந்தமையால் அதில் வரும் வரிகள் தரும் வசீகரமும் சுகானுபவமும்,  சிந்தனையும்  புல்லரிக்கச்செய்பவை.

அதனால், பாரதி சம்பந்தப்பட்ட நூல்களையெல்லாம் வாங்கிச்சேகரிப்பதும்,  படிப்பதும் எனது வாழ்வில் முக்கிய கடமையாகிவிட்டது.

இலங்கையில் வாழ்ந்த காலத்தில் 1982 இல்  பாரதி பிறந்த


நூற்றாண்டு முதல் ,  ஒரு பணியை எவரது ஆலோசனையும் இன்றி,  நானாகவே முன்னெடுத்தேன். பாரதி இலங்கையில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து ஆராய்ந்து குறிப்புகளை சேகரிப்பதே அந்தப்பணி !

எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பாரதி நூற்றாண்டு விழாக்குழுவிலும் இணைந்து வீரகேசரி – தமிழ்நாடு தாமரை இதழ்களிலும் கட்டுரைகள் எழுதினேன்.

1983 கலவரம் வந்தமையால்,  இடப்பெயர்வுக்குள்ளாகியதில் சில குறிப்புகளை தவறவிட்டேன்.  1984 இல் தமிழகம் சென்றபோது எட்டயபுரமும் சென்று பாரதி பற்றிய தரிசனம் பெற்றுவந்து வீரகேசரியில் எழுதினேன்.

இலங்கையில் பாரதி என்ற நூலை எழுதிக்கொண்டிருப்பதாக எனது தந்தை வழி உறவினரும் தமிழகத்தின் மூத்த எழுத்தாளர் – பாரதி இயல் ஆய்வாளருமான  தொ.மு.சி. ரகுநாதனிடம் தெரிவித்து,  நூலின் மூலப்பிரதியின் முதல் பத்து அங்கங்களை அவரிடம் காண்பித்தேன்.

நூலை நிறைவுசெய்யுமாறும், தானே அதற்கு அணிந்துரை எழுதித்தருவதாகவும் அவர் சொன்னார்.

அவர் தந்த ஊக்கத்தினால் தொடர்ந்து எழுதினேன். வீரகேசரி ஓவியர் – நண்பர் மொராயஸ் அந்த நூலுக்கான முகப்பு ஓவியமும் வரைந்து தந்தார்.

எதிர்பாராமல் 1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயரநேரிட்டது. 1990 இல் தமிழகம் சென்றபோது, ரகுநாதன்,  “ என்ன… இலங்கையில் பாரதி ஆய்வை முடிக்கவில்லையா..?     என்று கண்டிப்போடு கேட்டார்.


புகலிடவாழ்வின் சூழலில் அந்த ஆய்வுக்காக நேரம் ஒதுக்குவதற்கு சிரமப்பட்டேன்.  எனினும் பாரதி மனதில் கனன்றுகொண்டேயிருந்தார்.

"கடல்சூழ் கண்டத்தில் தமிழ் வளர்ப்போம், கலை வளர்ப்போம்" என்னும் தாரக மந்திரத்துடன் 1990 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியத் தமிழர் ஒன்றியம்  என்ற  அமைப்பினை,  எமது இலக்கிய குடும்பத்தின் சகோதரி எழுத்தாளர் அருண்.விஜயராணியின் அண்ணனுமான  சட்டத்தரணி செல்லத்துரை ரவீந்திரன் தலைமையில் மெல்பனில்  ஆரம்பித்தோம்.

கலைமகள் விழா, கதம்ப விழா, முத்தமிழ்விழா, பாரதி விழா, கலைவிழா  மற்றும் பரதம்- குச்சுப்புடி முதலான நடனத்துறை சார்ந்த பட்டறை (Workshop) நாடகம் பற்றிய கருத்தரங்கு முதலான நிகழ்ச்சிகளை  எமது  தமிழர் ஒன்றியம்  நடத்தியது.

இதன் முதலாவது தலைவராக சட்டத்தரணி செ. ரவீந்திரனும்


செயலாளராக விஜயகுமாரும்  நிதிச்செயலாளராக பாலச்சந்திரனும்  இயங்கினர். மாநிலத்தலைவர்களும் இருந்தனர். குவின்ஸ்லாந்தில் வானொலி ஊடகவியலாளர் சண்முகநாதன் வாசுதேவனும், நியூசவுத்வேல்ஸிற்கு துரைசிங்கமும் மேற்கு அவுஸ்திரேலியாவுக்கு சாந்தி ரமணனும் தெரிவாகியிருந்தனர்.

இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட மக்களின்  வாழ்வாதாரத்திற்காக தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த நடன நர்த்தகிகள்  வள்ளி சுப்பையா, காயத்ரி லக்‌ஷ்மணன்  ஆகியோரின்  நிகழ்ச்சியும் மெல்பனில் லத்ரோப் பல்கலைக்கழகத்தின் அகோரா தியேட்டரில் நடத்தப்பட்டு, திருகோணமலை மாவட்டத்திற்கு உதவி வழங்கப்பட்டது.

தமிழர் ஒன்றியத்தின் மாத இதழாக அவுஸ்திரேலிய முரசு என்னும் ஏடும் வெளியானது. அதற்கான முகப்பு ஓவியத்தை தமிழகத்தின் பிரபல ஓவியர் மணியம் செல்வன் வரைந்து தந்திருந்தார். அவுஸ்திரேலிய முரசுவின் ஆசிரியர் அருண். விஜயராணி.

இந்த அமைப்பின் கலாசார செயலாளர்களாக திருமதி சுமதி சத்தியமூர்த்தி , திருமதி ரேணுகா சிவகுமாரன் ஆகியோரும் இயங்கியிருக்கின்றனர். வருடாந்தம் நாவன்மைப்போட்டிகளும் நடந்திருக்கின்றன. குறிப்பிட்ட போட்டிகளின் நடுவர்களாக திருமதி பாலம் லக்‌ஷ்மணன், யாழ். பல்கலைக்கழகத்தின் இந்து நாகரீக பீடத்தின் முன்னாள்   தலைவர் கைலாசநாத குருக்கள், மற்றும் ரத்தினம் கந்தசாமி, பொன். குமாரலிங்கம், சிவசுப்பிரமணியம், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவை முன்னாள் பணிப்பாளர் திருமதி பொன்மணி குலசிங்கம், ஐயாத்துரை மாஸ்டர், பாடும்மீன் ஶ்ரீகந்தராஜா   ஆகியோரும் பணியாற்றியிருக்கின்றனர்.

நாவன்மைப்போட்டிகளிலும் ஒன்றியத்தின் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற பல குழந்தைகள் இன்று திருமணமாகி குடும்பத்தலைவர்களுமாகிவிட்டனர்.


ஒன்றியத்தின் பாரதி விழா மெல்பன் பார்க்வில் பல்கலைக்கழக கல்லூரியில் 16-02-1991  ஆம் திகதி நடந்தது. சிட்னியிலிருந்து மூத்த எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை பிரதம விருந்தினராக வருகை தந்து விழாவில் நடந்த பட்டிமன்றத்திலும் நடுவராக உரையாற்றினார்.

நான் இளமையில் கல்வி கற்ற நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியிலும் அதன்பின்னர் கற்ற யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக்கல்லூரியிலும்  நீர்கொழும்பு அல்- ஹிலால் மகா வித்தியாலயத்திலும் , நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் பௌர்ணமி விழாக்களிலும் நாடகம் எழுதி இயக்கி நானும் நடித்திருக்கின்றேன். படைப்பிலக்கிய பிரதிகள் எழுதுவதற்கு முன்னர் நாடகங்கள் எழுதுவதில்தான் எனக்கு ஆர்வமிருந்தது.

இலங்கை வானொலியிலும் எனது நாடகங்கள் ஒலிபரப்பாகியிருக்கின்றன. மக்கள் விடுதலை முன்னணியில் 1978 இணைந்திருந்த காலத்தில் கேரளா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் இயக்கிய நாடகம் ஒன்றிலும் நடித்திருக்கின்றேன். அந்த நாடகத்தில் தமயந்திபொன்சேக்கா, டில்ருக்‌ஷி முதலான சிங்கள  திரைப்பட நடிகைகளும் தமிழ் நாடக நடிகர்களும் இடம்பெற்றனர்.

குறிப்பிட்ட நாடகம் 1980 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் மேடையேறியது. மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் தோழர் லயனல் போப்பகே இந்நாடக அரங்கேற்றத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

அதுவே இலங்கையில் நான்  இறுதியாக நடித்த நாடகம்.  அதன் பின்னர் 1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு வந்ததும் சிறுகதைகள்,  நாவல்கள், கட்டுரைகள், விமர்சனங்கள், செய்திகள் மாத்திரமே எழுதுகின்றேன்.

எமது தமிழர் ஒன்றியத்தின் பாரதி விழாவில் ஒரு நாடகம் மேடையேற்றினால் சிறப்பாகவிருக்கும் என்று அருண் விஜயராணி தெரிவித்தார். எனக்கு மகாகவி பாரதியிடத்தில் மிகுந்த ஈர்ப்பு இருந்தமையால், சுதந்திரத்திற்கு முந்திய  பிரிட்டிஷ் இந்தியாவில் புதுச்சேரியில் பாரதி வாழ்ந்த வாழ்க்கையை சித்திரிக்கும் மகாகவி பாரதி என்ற நாடகத்தை எழுதினேன். இன்றும் என்வசம் அந்த நாடகப்பிரதி பத்திரமாக இருக்கிறது.

எழுதியபின்னர் அதில் நடிப்பதற்குப்பொருத்தமானவர்களை சில வாரங்களாகத்தேடி,  இறுதியில் சிலரைத் தெரிவுசெய்தேன். பாரதியாக எஸ். கிருஷ்ணமூர்த்தியும்                       ( இவர்தான் தற்போது மயூர் வீடியோ விஷன் ஒளிப்பதிவாளர் ) செல்லம்மாவாக கோகிலவாணி நவநீதராஜாவும், பாரதி பூநூல் சடங்கு செய்வித்த  இளைஞனாக பிரகாஷ் அந்தோனிப்பிள்ளையும் பாரதியின் மகள் தங்கம்மாவாக செல்வி  காயத்திரி குமாரலிங்கமும் வா.வே.சு. அய்யராக வித்தியானந்தனும் அரவிந்தராக தமிழரசனும் செட்டியாராக நவநீதராஜாவும் நடித்தனர்.

நண்பர் நவநீதராஜா அப்பொழுது மெல்பனில் Deadening இல்  குடும்பத்தினருடன் ஒரு வாடகைவீட்டில் குடியிருந்தார். அவருக்கு மகாகவி பாரதி நாடகப்பிரதி மிகவும் பிடித்துக்கொண்டது.

செட்டியார் வேடத்தில் தாமாகவே நடிக்க முன்வந்ததுடன் தமது வீட்டை நாடக ஒத்திகைக்கும் தந்து உதவினார். பிரதி சனி, ஞாயிறு தினங்களில் தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் ஒத்திகை நடந்தது.

அவ்வேளையில் நவநீதராஜாவும் அவரது குடும்பத்தினரும் எமக்கு வழங்கிய ஆதரவையும் ஒத்துழைப்பையும் மறக்க முடியாது. பாரதிக்குத்தேவைப்பட்ட  தலைப்பாகையை திருமதி நேசா இலியேஸர் செய்து தந்தார். செல்லம்மா பாரதிக்கு மடிசார் சேலையை திருமதி மஹாலக்‌ஷ்மி சங்கரன் அணிவித்தார். இதர பாத்திரங்களுக்கும் பாரதிக்கும் நண்பர் கண்ணன் ஒப்பனை செய்தார்.  நாடகத்திற்கான ஒலி, ஒளி சார்ந்த பணிகளை நண்பர் இலேடியஸ் பெர்னாண்டோ கவனித்தார்.

பாரதி விழாவை  முன்னிட்டு நடத்தப்பட்ட நாவன்மைப்போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு முதல் பரிசிலாக தங்கப்பதக்கமும் அணிவிக்கப்பட்டது.

மெல்பனில் நான் எழுதித்தயாரித்து இயக்கிய முதலும் கடைசியுமான நாடகம்தான் மகாகவி பாரதி. அதன்பின்னர் நாடகம் எழுதவில்லை.

குறிப்பிட்ட பாரதிவிழா தொடர்பாக சிட்னியிலிருந்த  (அமரர்) கலாநிதி ஆ. கந்தையா அவர்களும் தமது நூலொன்றில் பதிவுசெய்துள்ளார்.

அதுவே அவுஸ்திரேலியாவில் நடந்த முதலாவது பாரதி விழாவாகும்.

---0---

letchumananm@gmail.com

 

 

 

No comments: