இலங்கைச் செய்திகள்

பனை உற்பத்திப் பொருட்கள் விநியோகஸ்தர்கள் நியமனம்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட டயகம பாலம், ஆலயத்தை பாதுகாக்க நடவடிக்கை

அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ யாழில் பல்வேறு தேவைகள் தொடர்பில் பேச்சு

தடுப்பூசி வழங்கும் விடயத்தில் இலங்கை தொடர்ந்தும் முதலிடத்தில்!

பருத்தித்துறை வைத்தியசாலையிலும் சடலங்கள் தேக்கம்

எம்.கே. சிவாலிங்கத்திற்கும் கொரோனா தொற்று

செப்டெம்பர் 21 முதல் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி
பனை உற்பத்திப் பொருட்கள் விநியோகஸ்தர்கள் நியமனம்

பனை அபிவிருத்திச் சபையின் முயற்சியின் பயனாகவும் வரலாற்றில் முதன் முறையாகவும், பிரான்ஸ், ஜேர்மன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு விநியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு, விடயத்துக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தலைமையில், கரிஸ் நகரில் நடைபெற்றது.

பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் கிருஷாந்த பதிராஜ மற்றும் விநியோகஸ்தர்களாக நியமனம் பெற்றுள்ள டியூக் இளங்கோ, அருமைதுரை சிவராவூரன் ஆகியோருக்கு இடையிலான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.   நன்றி தினகரன் 
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட டயகம பாலம், ஆலயத்தை பாதுகாக்க நடவடிக்கை

இராஜங்க அமைச்சர் ஜீவனுக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு

டயகம பிரதான பாதையினை இணைக்கும் பாதை புனரமைக்கப்படவுள்ளது. சுமார் ஐந்து தோட்டங்களுக்கு செல்லும் பிரதான பாதையாக இது காணப்படுகின்றது. இந்த பாதையின் பாலம் மற்றும் ஆலயம் என்பன கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியது.  இதனால் பாலம் மற்றும் ஆற்றின் அருகாமையில் அமைந்துள்ள ஆலயம் என்பன உடைந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுெதாடர்பில் இராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து பாலத்தினையும் ஆலயத்தினையும் பாதுகாக்கும் முகமாக சுமார் 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாரிய மதில் ஒன்றினை அமைக்க இராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அரசாங்கம்  கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியிலும் மலையக பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

அதற்கமைய  டயகம இரண்டாம் பிரிவு டயகம கொலனி, டயகம மோனிங்டன், கீழ் பிரிவு மேல்பிரிவு உள்ளிட்ட தோட்டங்களைச் சேர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பாதையை பயன்படுத்துகின்றனர். இப்பிரிவிலிருந்து நகர பாடசாலைக்கு வரும் மாணவர்களும் இந்த பாலத்தினூடாகவே பயணம் செய்துவந்தனர். மழை காலங்களில் வெள்ள நீர் இப்பாலத்தினையும் கோயில் பக்கத்திலுள்ள மண் திட்டினையும்  அரித்து செல்வதனால் பாலத்திற்கும் ஆலயத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மழை காலங்களில் மக்கள் பாரிய அச்சத்திலேயே குறித்த பாலத்தில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே குறித்த பாலத்தினையும் ஆலயத்தினையும் பாதுகாப்பதற்கு பாதுகாப்பு மதில் அமைத்து தருமாறு பிரதேசவாசிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க  இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து இராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு அரசாங்கத்திற்கும் பொது மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில் இந்த ஆலயமானது பொது மக்களின் உழைப்பினால் உருவானது. ஆனால் அண்மைக்காலமாக  ஆற்றில் வெள்ளம் ஏற்படும் போது இந்த ஆலயத்துக்கு சேதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்தோடு இந்த பாலமும் உடைந்து போகும் நிலையில் காணப்பட்டது ஆகவே நாங்கள் இது குறித்து இராஜங்க அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து இந்த இரண்டையும் பாதுக்காக்கும் வகையில் பல இலட்சம் ரூபா செலவில் மதில் ஒன்றினை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.  இது குறித்து அவருக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவிக்கின்றோம் என மக்கள் தெரிவித்தனர்.

ஹற்றன் விசேட நிருபர்   -  நன்றி தினகரன் 
அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ யாழில் பல்வேறு தேவைகள் தொடர்பில் பேச்சு

யாழில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ பார்வையிட்டதுடன், எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்தார்.

நேற்று (09) நண்பகல் யாழிற்கு விஜயம் மேற்கொண்ட இளைஞர் விவகார மற்றும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ யாழ்ப்பாணம் மருதடி வீதியில் புனரமைப்புச் செய்யப்பட்ட குளத்தைப் பார்வையிட்டதுடன், நீர் விநியோகம் மற்றும் பயன்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

அதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் கொட்டடி வீதியில் புதிதாக அமைக்கப்படும் கட்டுமானத்தையும் பார்வையிட்டதுடன், யாழ்.மாநகர சபைக்கென புதிதாக அமைக்கப்படும் கட்டடத்தின் கட்டுமானத்தைப் பார்வையிட்டதுடன், கட்டுமானத்தில் ஏற்படும் தாமதங்கள், நிதி தொடர்பாகவும், கேட்டறிந்து கொண்டதுடன், கட்டுமானங்களை நிறைவேற்றுவது தொடர்பாகவும், அதிகாரிகளுடனும், பொறியியலாளர்களுடனும் கலந்துரையாடினார்.

அதன்பின்னர், யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் காணிகளற்றவர்களுக்கான, வீட்டுத்திட்டங்கள் தொடர்பாகவும், அளவெட்டி அருணோதயா கல்லூரிக்கும் விஜயம் செய்து, பாடசாலை அபிவிருத்தி மற்றும், விளையாட்டு மைதானம் தொடர்பில் ஆலோசனை நடாத்தினார், பின்னர், நாவற்குழி பகுதியில் உள்ள யாழ்ப்பாணம் கிளிநொச்சி,நீர் விநியோகம் தொடர்பிலும், ஆராய்ந்தார்.

இந்த கலந்துரையாடலில், பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், யாழ்.பிரதேச செயலாளர் எஸ். சுதர்சன் மற்றும் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - நன்றி தினகரன் 
தடுப்பூசி வழங்கும் விடயத்தில் இலங்கை தொடர்ந்தும் முதலிடத்தில்!

உலகளாவிய கொவிட் தடுப்பூசி கண்காணிப்பு பிரிவு தகவல்

ஆவணங்களை கையளித்தார் அமைச்சர் நாமல்

உலக ரீதியில் இரண்டாவது வாரமாகவும் இலங்கையானது தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளில் முன்னணி வகித்துள்ளது. தடுப்பூசி வழங்கலில் கடந்த வாரமும் உலகளாவிய ரீதியில்  இலங்கையே முன்னணி வகித்தது.

இலங்கையின் சனத்தொகையில் நூற்றுக்கு 11.6 வீதமானோருக்கு கடந்த வாரத்தில் மட்டும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக உலக கொரோனா வைரஸ் நிலைமை தொடர்பில் கணிப்புகளை மேற்கொண்டு அறிக்கை வெளியிடும் 'அவர் வோர்ல்ட் இன் டேடா'இணையத்தள கணிப்பீட்டு பிரிவின் தலைவர் எட்வர்ட் மெத்திவ் தனது ட்விட்டர் செய்தியில் பதிவிட்டுள்ளார்.

அந்த இணையதளத்தில் அறிக்கைக்கு இணங்க நியூஸிலாந்து மற்றும் கியூபா ஆகியன முறையே இரண்டாவது மூன்றாவது இடத்தில் உள்ளன. ஈக்குவடோர் மற்றும் பனாமா நாடுகள் 4-வது மற்றும் 5-வது இடங்களில் உள்ளன.

அதேவேளை, 20 வயதிற்கும் 29 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் மேல் மாகாணம் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சாத்தியமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 28 மத்திய நிலையங்களில் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கம்பஹா மாவட்டத்தில் 30 மத்திய நிலையங்களிலும் களுத்துறை மாவட்டத்தில் 38 மத்திய நிலையங்களிலும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம் - நன்றி தினகரன் 
பருத்தித்துறை வைத்தியசாலையிலும் சடலங்கள் தேக்கம்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் கொரோனோவால் மரணமடைந்தவர்களின் சடலங்களை குளிரூட்டியில் வைத்து பேண முடியாத நிலையில் சடலங்கள் தேங்கி காணப்படுவதால் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக வைத்திய சாலை பதில் பணிப்பாளர் வே.கமலநாதன் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

எமது வைத்திய சாலையில் கடந்த மே மாதம் 17ஆம் திகதி கொரோனோ நோயாளர் விடுதி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 556 பேர் கொரோனோ தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுள்ளனர்.

அவர்களில் 21 பேர் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 20 பேர் வெளிநோயாளர் பிரிவில் உயிரிழந்துள்ளனர்.

கொரோனோ தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மின் தகனம் செய்வதற்கு உள்ள நெருக்கடி நிலைமைகள் காரணமாக வைத்திய சாலை பிரேத அறையில் சடலங்கள் தேங்கி காணப்பட்டுகின்றன.

பிரேத அறையில் 6 சடலங்களையே குளிரூட்டியில் வைத்து பாதுகாக்கக் கூடிய வசதிகள் உள்ள நிலையில் 11 சடலங்கள் காணப்படுகின்றன. எதிர்வரும் நாட்களில் மரணங்கள் ஏற்பட்டால் சடலங்களை பாதுகாப்பதில் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

யாழில் ஒரு மின் தகன மயானம் உள்ளது. அதிலையே யாழ். மாவட்டத்தில் கொரோனோ தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பவர்களின் சடலங்கள் எரியூட்டப்பட்டு வருவதனாலையே சடலங்களை எரியூட்டுவதில் தாமதங்கள் ஏற்படுகின்றன.

தாமதங்களை கருத்தில் கொண்டு வெளி மாகாணத்தில் உள்ள மின் தகன மயானங்களுக்கு சடலங்களை கொண்டு சென்று எரியூட்டுவதற்கு உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சம்மதம் தெரிவிக்கின்றனர் இல்லை.

அதேவேளை, தியாகி அறக்கொடை நிறுவன ஸ்தாபகர் , வெளி மாகாணங்களில் சடலங்களை அடக்கம் செய்வதற்கு உறவினர்கள் சம்மதம் தெரிவித்தால் , அதற்கான போக்குவரத்து செலவுகள் உள்ளிட்டவற்றை தாம் பொறுப்பேற்பதாக முன் வந்துள்ளார்.

அதேவேளை, உயிரிழந்தவர் வறுமை கோட்டிற்கு உட்பட்டவர் எனில் மின் தகன செலவு உள்ளடங்கலாக அனைத்து செலவுகளையும் தாம் பொறுப்பேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

யாழ்.விசேட நிருபர் - நன்றி தினகரன் 

எம்.கே. சிவாலிங்கத்திற்கும் கொரோனா தொற்று

எம்.கே. சிவாலிங்கத்திற்கும் கொரோனா தொற்று-MK Shivajilingam Tested Positive for COVID19

தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் கொவிட்-19 நோய்த்தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் உள்ள சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுகயீனம் காரணமாக வல்வெட்டித்துறை பிரதேச மருத்துவமனைக்கு நேற்று (11) முற்பகல் சென்ற அவருக்கு முன்னெடுக்கப்பட்ட Rapid Antigen பரிசோதனையில் அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, 60 வயதைக் கடந்தவர் எனும் வகையில், எம்.கே. சிவாஜிலிங்கம் அம்புலன்ஸ் வாகனத்தில் கோப்பாய் சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

(யாழ். விசேட நிருபர் - மயூரப்பிரியன்)நன்றி தினகரன் 

செப்டெம்பர் 21 முதல் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி

செப்டெம்பர் 21 முதல் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி-COVID19 Vaccine for Children Aboce 12 Years and Above From September 21

செப்டெம்பர் 21 முதல் 12 வயதுக்கு மேற்பட்ட நாட்பட்ட நோய்களைக் கொண்ட சிறுவர்களுக்கு Pfizer கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க வைத்தியசாலைகளில் இதற்கான தடுப்பூசி இடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, இலங்கை சிறுவர் மருத்துவ நிபுணர்களின் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதுவரை உலகளாவிய ரீதியில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு Pfizer தடுப்பூசியே பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  நன்றி தினகரன் 


No comments: