அடிமை இருளகற்ற ஆகிநின்றாய் ஆதவனாய் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்                  

மெல்பேண் ... அவுஸ்திரேலியா

 


வறுமைத் தடாகத்தில் மலர்ந்திட்ட மாமலரே 
தறிகெட்ட மனிதரை குறிபார்த்த மாகவியே 

விடுதலைச் சிறகுகளை விரித்திட்ட பெருங்கவியே 
வீழ்வேனா எனவுரைத்து வித்தானாய் புரட்சிக்கு 
 
முண்டாசுக் கவிஞனே நீ மூச்சுவிட்டால் கவிதைவரும்
பண்டார மாயிருந்து பலகவிதை தந்தாயே
தமிழ்வண்டாக நீயிருந்து தாகமெலாம் தீர்த்தாயே
உண்டாலே அமுதமென உன்கவிதை இருந்ததுவே

மடமைத் தனத்துக்கு மாலையிட்டார் மண்டியிட
அடிமைத் தளையிருந்தார் அலறியே ஓடிவிட 
பொடிவைத்து பாட்டிசைத்து போக்கியே நின்றாயே 
பொல்லாதார் வசையெல்லாம் பொசுங்கிவிடச் செய்தனையே  

 

பாப்பாக்கு பாட்டுரைத்து பலகாரம் கொடுத்தாயே
பாஞ்சாலி கதையெடுத்து பகர்ந்தாயே சுயவுணர்வை 

வருமென்னும் நம்பிக்கை மனமுழுக்க கொண்டதனால்
வருமுன்னே விடுதலைக்கு பாடிவிட்டாய் பள்ளுதனை 

 

வேதத்தில் திளைத்தாலும் வில்லங்கம் வெறுத்தாயே
பாதகத்தை மிதித்துவிட கோபத்தை விரித்தாயே
சோதனைகள் அத்தனையும் சாதனையாய் கொண்டாயே
சுறுசுறுப்பின் உருவாக சுடராக எழுந்தாயே

 

மூடத் தனத்தை முற்றாக வெறுத்திட்டாய்
முத்திக்கு வித்தான பக்குவத்தை விதைத்திட்டாய்
வேண்டாத குப்பைகளை வீசியே எறிந்திட்டாய்
வீண்வாதம் செய்வோரை வெந்தணலில் வீசிட்டாய்

 

பசியுந்தன் கூடவரும் பாட்டதற்கு விருந்தாகும்
பசிகண்டு வெகுண்டதனால் பாரழிப்பேன் என்றாயே
பசிபற்றி நீயறிவாய் பசியழிக்க நீபுகன்றாய்
பாரததத்தின் விடிவுக்காய் பட்டினியை ஏற்றாயே

 

அன்னைத் தமிழின் அக்கினிக் குஞ்சானாய்
அமிழ்த மெனத்தமிழை அரியாசனம் வைத்தாய்
அஞ்சாமைக் குணத்தை ஆளுமையாய் ஆக்கினாய்
அடிமை இருளகற்ற ஆகிநின்றாய் ஆதவனாய்  

No comments: