தாமரைச்செல்வியின் “ உயிர்வாசம் “ நாவலுக்கு இலங்கையில் தேசிய சாகித்திய விருது ! படகு மனிதர்களின் ஆத்மாவை புதிய நாவலில் சித்திரித்த படைப்பாளி !! முருகபூபதி


டந்த அரை நூற்றாண்டு காலமாக இலக்கியப்பிரதிகள் எழுதிவரும் தாமரைச்செல்வியின் புதிய நாவலான உயிர்வாசம் நூலுக்கு ( 550 பக்கங்கள் )  இம்முறை இலங்கையின் தேசிய சாகித்திய விருது கிடைத்துள்ளது.

ஏற்கனவே ஆறு நாவல்களும் நான்கு கதைத் தொகுதிகளும் எழுதியிருக்கும் தாமரைச்செல்வி, அவற்றுள் சிலவற்றுக்கும் முன்னர் விருதுகள் பெற்றவர்.

மீண்டும் சாகித்திய விருது பெற்றுள்ள எமது இலக்கியக்


குடும்பத்தின் சகோதரியை வாழ்த்தியவாறே இந்தப்பதிவினை எழுதுகின்றேன்.

தாமரைச்செல்வியின்  முதல்  நாவல்  சுமைகள்   வீரகேசரி  பிரசுரமாக வெளியாகும்போது  அவருக்கு 24  வயதுதான்.    

1970 களில்   சில  பெண்   படைப்பாளிகள்  இலங்கை  வானொலியில்  இசையும்  கதையும் எழுதிக்கொண்டிருந்தார்கள்.    மாலை வேளைகளில்  ஒலிபரப்பாகும் இந்த  நிகழ்ச்சியில்,  சில  கதைகளை  தாமரைச்செல்வியும்  எழுதியிருந்தார்.    கதைக்குப்பொருத்தமான  சில  சினிமா   பாடல்களும் ஒலிக்கும்.    இந்த  நிகழ்ச்சிக்கு  அக்கால  கட்டத்தில்  சிறந்த வரவேற்பிருந்தது.      ஒரு வருடகாலத்திலேயே   அதிலிருந்து  இவர் மீண்டுவிட்டார்.

இவருடைய  முதல்  சிறுகதை  ஒரு  கோபுரம்  சரிகிறது  வீரகேசரியில்    வெளியானபொழுது,  1974  ஆம்  ஆண்டு பிறந்துவிட்டது.    அதனைத்தொடர்ந்து  இலங்கையிலும் தமிழ்நாட்டிலும்   வெளியான  இதழ்களில்  தாமரைச்செல்வியின் சிறுகதைகள்   வெளிவரத்தொடங்கின.

ஆனந்தவிகடன்,   குங்குமம்,   மங்கை   முதலான  இதழ்களிலும் அவருடைய  படைப்புகளை   காண  முடிந்தது.


இவ்வாறு  கடந்த  ஐந்து   தசாப்த  காலமாக  எழுதிக்கொண்டிருக்கும் தாமரைச்செல்வியை   அமைதியான  சாதனையாளர்  என்றுதான் குறிப்பிடவிரும்புகின்றேன்.    கவிதை,  சிறுகதை,  நாவல்,  குறுநாவல் எழுதியிருக்கும்  இவர் , ஓவியத்துறையிலும்  ஈடுபாடுள்ளவர்.  சில இதழ்களில்   இவர்  எழுதிய  கதைகளுக்கு  இவரே  ஓவியமும் வரைந்திருப்பார்.

இருநூறுக்கும்  மேற்பட்ட  சிறுகதைகள் எழுதியிருக்கும் இவரது  இருபதுக்கும் மேற்பட்ட  சிறுகதைகள்   பல   இலக்கியப்போட்டிகளில்  பரிசுபெற்றுள்ளன.

அத்துடன்  தமது  நூல்களுக்கு  அரச  மற்றும்  அமைப்புகளின் விருதுகளும்    தங்கப்பதக்கமும்  பெற்றிருப்பவர்.   அந்த  விபரங்களே தனியான  ஒரு  பட்டியல்.

இவருடைய   சிறுகதைகள்,   நாவல்களில்  வன்னிமண்ணின்  மணம் கமழும்.    பிரதேச  இலக்கியத்தில்  வன்னி   மண்ணின்  மகிமையை எழுதிய  படைப்பாளிகளின்  வரிசையில்  இவருக்கும்  தனியிடம் இருக்கிறது.

சுயமாக   தமது  துறைகளில்    முன்னேறி   சாதனை   புரிந்து  தமது


  ஆளுமைப்பண்பை   காண்பித்த  ஆண்கள்   குறித்து  ஆங்கிலத்தில்  Self-made man  என்பார்கள்.  தாமரைச்செல்வியின்  வாழ்வையும் பணிகளையும்  பார்த்தால்  அவரை   ஒரு  Self-made woman  என்றுதான்  சொல்லவேண்டும்.

பாடசாலையில்   படிக்கும்  காலத்திலேயே   மாணவர்  இலக்கிய மன்றத்திற்கு   நாடகங்கள்  எழுதிக்கொடுத்திருக்கும்  இவர்,  பின்னர் இலங்கை   வானொலிக்கு  இசையும்  கதையும்  எழுதினார். அதிலிருந்து   மீண்டு வந்து  இலங்கைப்பத்திரிகைகள் - இலக்கிய இதழ்கள்   ஈழநாடு,  வீரகேசரி,  சுடர்  மற்றும்  தமிழக  இதழ்களில் எழுதினார்.   ஆயினும்,  ஒரு  விவசாயக்குடும்பத்தில்  பிறந்திருக்கும் இவருக்கு  பரந்தன்  குமர புரத்திற்கு  அப்பால்  வெளியுலகம் தெரியாமலேயே  வானொலி,  பத்திரிகைகள்,  இதழ்கள்  என்று அறிமுகமாகிவிட்டார்.

தமது  ஆரம்பக்கல்வியை  பரந்தன்  இந்து  மகா  வித்தியாலயத்திலும்


அதன்   பின்னர்  யாழ். இந்து  மகளிர்  கல்லூரியிலும் தொடர்ந்திருக்கும்   இவர்,   இலக்கியப்பிரதிகளை  எழுதத்தொடங்கிய காலகட்டத்தில்   வீரகேசரி  பிரசுரங்கள்  வெளியாகத்தொடங்கிவிட்டன.

தமது  முதல்  நாவலுக்கு  தீக்குளிப்பு  என்ற  தலைப்பிட்டு  அதன் மூலப்பிரதியை  வீரகேசரி  அலுவலகத்திற்கு  தபாலில் அனுப்பிவைத்துள்ளார்.    வீரகேசரியின்  Administrative  officer  ஆகவும் வீரகேசரி  பிரசுரங்களின்  பதிப்பாளராகவும்  பணியாற்றிய                    திரு. (அமரர்) பாலச்சந்திரன்   இலக்கிய  ஆர்வம்  மிக்கவர்.   பிரசுரத்துக்கு  வரும்   நாவல்களை  படித்து  தெரிவுசெய்வார்.   அங்கு  விளம்பரப்பிரிவு - விநியோகப்பிரிவு  முகாமையாளராக   பணியாற்றிய  இவருடைய நீண்ட கால  நண்பர்  திரு. து. சிவப்பிரகாசம்   அவர்களும்  நாவல்  தெரிவில்  உடனிருந்தவர்.

தாமரைச்செல்வியின்  முதல்  நாவலான  தீக்குளிப்பை  படித்த பாலச்சந்திரன்   வளர்ந்து  வரும்  ஒரு  பெண்  படைப்பாளியின் ஆற்றலை  இனம்  கண்டு,  அதில்   மேலும் செம்மைப்படுத்துவதற்கான   தேவை   இருப்பதை  தெரிந்துகொண்டு பரந்தனில்  வசித்த  தாமரைச்செல்விக்கு  கடிதம்  எழுதி வசதிப்படும்பொழுது   கொழும்பில்  வீரகேசரி  அலுவலகம்  வந்து சந்திக்குமாறு  கோரியிருந்தார்.

அந்தக்கடிதம்   தாமரைச்செல்விக்கு  ஊக்கமாத்திரைதான்.  ஒரு  பெரிய நிறுவனத்திடமிருந்து   வந்துள்ள  அழைப்பை  ஏற்றுக்கொண்டு  தமது தந்தையாருடன்   வீரகேசரி  அலுவலகம்


  வந்திருக்கிறார்.  தீக்குளிப்பு  நாவல்  தொடர்பாக  தம்மைச் சந்திக்கவந்த தாமரைச்செல்வியிடம்   ஒரு  நாவல்  எவ்வாறு  அமையவேண்டும், வாசகர்களை   ஆர்வமுடன்  படிக்கத்தூண்டும்  அம்சங்கள்  யாவை முதலான  சில  ஆலோசனைகளை   தமது  நீண்ட  கால  வாசிப்பு அனுபவத்திலிருந்து  பாலச்சந்திரன்  தெரிவித்திருக்கிறார்.

சுயமாக  சிறுகதைகள்,  கவிதைகள்  எழுதிக்கொண்டிருந்த   இவருக்கு அந்த   சந்திப்பு  வித்தியாசமான  அனுபவம்தான்.   தன்னை  எவ்வாறு இலக்கியத்துறையில்   வளர்த்துக்கொள்ளவேண்டும்  என்பதை  தாம்  அன்றைய   அந்தச்சந்திப்பில்  பெற்றுக்கொண்டதாக   சமீபத்தில்  அவர் தெரிவித்தார்.

வன்னி   பெருநிலப்பரப்பில்    மழைமேகம் மறைந்து   - நெருப்பும்  கந்தகமும்தான்  சீறிப்பாய்ந்தபோது  தாமரைச்செல்வியின்    போர்க்காலக்கதைகள்    மக்களின்  வலியை பேசியவை.    இடப்பெயர்வை    சித்திரித்தவை.


கிளிநொச்சி     போர்க்காலத்தில்  கேந்திர  முக்கியத்துவம் வாய்ந்திருந்ததை    அறிவோம்.     உயிரைக்கையில்  பிடித்துக்கொண்டு இடம்பெயர்ந்து...இடம்பெயர்ந்து    ஓடிய  மக்கள்   திரளில்  தாமரைச்செல்வியின்   குடும்பமும்   இணைந்திருந்தது.    அந்தப் போர் அவலச்சூழலிலும்   அவர்   இலக்கிய   பிரதிகள்  படித்தார் , எழுதினார். தற்காலிக   குடிசைகள்  அமைத்து  அங்கிருந்து   ஜெனரேட்டரின் உதவியுடன்   பாரதி   படத்தை  பார்த்ததையும்  அகிரா  குரேசேவாவின் படங்களை   ரசித்ததையும் -   ஸ்கந்தபுரம்   என்ற  பிரதேசத்துக்கு அப்பால்   காட்டுப்பகுதியில்   கொட்டில்கள்  அமைத்து  வன்னிப்பிரதேச    இலக்கியவாதிகளுடன்  கலந்துரையாடியதையும் நினைவுகூர்ந்தார்.

நெருக்கடி மிக்க   போர்க்காலச்சூழலிலும்  காலச்சுவடு,   முன்றாவது மனிதன்,  சரிநிகர்  முதலான  கையில்  கிடைக்கும்  இதழ்கள்,  நூல்கள்    பற்றியெல்லாம்    இலக்கிய   நண்பர்கள்    மத்தியில் கலந்துரையாடியிருக்கிறார்.    இயற்கையுடன்   இணைந்து  காட்டுப்பிரதேசத்தில்    இலக்கிய  சந்திப்புகள்  நடத்தியதையும் நினைவுபடுத்தினார்.

தாமரைச்செல்வியின்    கணவரும்  எழுத்தாளர்தான்.   சிறுகதைகள் எழுதியிருப்பவர்.    எனினும்  அவர்  குடும்பத்தலைவனாக  வீட்டையும்   குடும்பத்தையும்    கவனித்தார்.   மனைவியோ   குடும்பத்தையும் கவனித்து    இலக்கியத்திலும்  தனது  ஆளுமையை   பதிவுசெய்தார்.

இந்த  இலக்கிய  தம்பதியரின்  இரண்டு   பெண்செல்வங்களும் அவுஸ்திரேலியாவில்  மருத்துவர்களாக  பணியாற்றுகின்றனர்.

தாமரைச்செல்வியின்  சில  படைப்புகள்  குறும்படங்களாக வெளியாகியிருக்கின்றன.   வன்னிக்கு  வந்துள்ள  இயக்குநர்  'முள்ளும் மலரும் '  மகேந்திரன்   இவருடைய   இடைவெளி   என்ற  சிறு கதையை '  1996 '  என்ற  பெயரில்   குறும்படமாக்கியுள்ளார்.   அத்துடன் மகேந்திரனின்  மகன்  ஜோன்  மகேந்திரன்  இவருடைய  மற்றும்  ஒரு   சிறுகதையான  பாதணியை  குறும்படமாக   எடுத்துள்ளார்.

 தமிழகத்தைச்சேர்ந்த   இமையவரம்பன்,    தாமரைச்செல்வியின்  பசி என்ற  சிறுகதையை  குறும்படமாக்கியிருக்கிறார்.  ( இக்கதை தமிழ்நாட்டில் பாடப் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது )   இப்படம் லண்டனில்   நடந்த   விம்பம்   குறும்பட விழாவில்  காண்பிக்கப்பட்டு பார்வையாளர்  விருது   கிடைத்திருக்கிறது.    இவை  தவிர  மேலும் இவருடைய   சில  சிறுகதைகள்    குறும்படங்களாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்தப்பத்தியின்  தொடக்கத்தில்   தாமரைச்செல்வியை  ஆளுமைமிக்க சாதனையாளர்  என்று  குறிப்பிட்டதற்கான   காரணங்களை   இங்கே பதிவுசெய்கின்றேன்.

ஒரு  மழைக்கால  இரவு - சிறுகதைகள்   ( வடக்கு - கிழக்கு மாகாண சபையின் 1998 ஆம்  ஆண்டிற்குரிய  விருது.

விண்ணில்  அல்ல  விடிவெள்ளி ( யாழ். இலக்கியப்பேரவையின்  பரிசு)

தாகம் - நாவல்  ( கொழும்பு  சுதந்திர   இலக்கிய  அமைப்பின்  சிறந்த நாவல்  விருது  மற்றும்  யாழ். இலக்கியப்பேரவையின்  பரிசு)

வேள்வித்தீ - குறுநாவல்   ( முரசொலி  பத்திரிகையின்  முதல்  பரிசு)

வீதியெல்லாம்  தோரணங்கள் - நாவல் ( வடமாகாண  சபையின்  விருது   மற்றும்  இரசிகமணி   கனகசெந்தி நாதன்   நினைவுப்போட்டியில்   இரண்டாம்  பரிசு)

பச்சை வயல்  கனவு - நாவல்  ( இலங்கை  அரச  சாகித்திய விருது மற்றும்  யாழ். இலக்கியப்பேரவையின் விருது. )

இவை   தவிர வட - கிழக்கு ஆளுனர்  விருதும்  வேறும்   சில  பிரதேச அமைப்புகளின்   இலக்கியத்திற்கான  விருதுகளும்    பெற்றவர். சில சிறுகதைகள்  ஆங்கிலத்திலும்   மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மல்லிகை  2002  மார்ச்  மாத   இதழில்  தாமரைச்செல்வி   அட்டைப்பட அதிதியாக  கௌரவிக்கப்பட்டுள்ளார். 

போரினால்    பாதிக்கப்பட்டவர்கள்   பற்றி  எழுதியதுடன்  நின்றுவிடாமல்,  போர்  தந்த  பரிசுகளான  பெற்றவர்களை  இழந்த குழந்தைகளின்   கல்வி  வளர்ச்சிக்கும்  இவர்  உதவிவருகிறார். இந்தப்பணியில்  இவருடைய  கணவரும்  மகள்மாரும் பக்கத்துணையாக  விளங்குகிறார்கள்.

ரதி தேவி   என்ற  இயற்பெயர்    கொண்ட    இவர்  வன்னி  நிலத்தின் குளங்களில்   மலரும்  தாமரைகளை  தினம்தினம்  ரசித்தமையின் பலன்தான்  ஈழத்து  இலக்கிய  உலகிற்கு   ஒரு   தாமரைச்செல்வி கிடைத்தார்   என்றும்   நான்  நினைத்திருக்கின்றேன்.

 தாமரைச்செல்வியின்   எளிமையான  இயல்புகள்  போற்றத்தக்கவை. அதிர்ந்து  பேசத்தெரியாதவர்.    விவசாய  மக்களினதும் போர்க்காலத்தில்    இடம்பெயர்ந்தவர்களினதும்    வாழ்வை  அருகிருந்து   பார்த்து ,  அவரவர்  இயல்புகளுடனேயே   உயிர்ப்புடன் படைப்பிலக்கியமாக்கியவர்    இந்த  வன்னியாச்சி.

அவுஸ்திரேலியாவுக்கு உயிரைப்பணயம் வைத்து ஆழ்கடலூடாக பிரவேசித்த படகு மனிதர்களின் வாழ்வுக்கோலங்களையும் தாமரைச்செல்வி,   இறுதியாக தாம் எழுதிய  உயிர்வாசம்  நாவலில் சித்திரித்தார்.

பசுமைநிறைந்த வயல் வெளிகளையும், போர்க்காலத்தில் காடுறைந்த மக்களையும், கொல்லப்பட்ட உறவுகளையும் பார்த்து  அழுவதற்கும் நேரம் இல்லாமல், இடம்பெயர்ந்து ஓடியவர்களையும், வன்னிபெருநிலப்பரப்பில் வாழ்ந்த ஆச்சிமாரையும் ,  அவர்களின் வாழ்வுக்கோலங்களையும் பற்றி எழுதிவந்திருக்கும் தாமரைச்செல்வி, அவுஸ்திரேலியாவுக்கு கனவுகளை சுமந்துகொண்டு  படகுகளில்  வந்து வலிகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கும்  ஈழத்தமிழர்களின் கதையை எழுதியிருக்கிறார்.

அவருடைய  உயிர்வாசம் என்ற இந்தப் புதிய நாவல்,   ஐநூறு பக்கங்களைக்கொண்டது.  உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வந்தவர்களின் ஆசைகள் நிராசையாகிவிடலாகாது என்ற அவதிதான்  இந்நாவலின் பக்கங்களில் இழையோடியிருக்கும்  நாம் நுகரும் வாசம்!

காந்தன், மதி, செந்தில், செழியன், சுதா, இளங்கோ, தேவகி, தவம், உருத்திரன், கார்த்தி, செல்வி, செபமாலை, பார்த்தி, நிரஞ்சன், பரஞ்சோதி, குழந்தைகள் துஷி, சாரா உட்பட பலரதும் அகதிவாழ்வுக்கதைகளின் ஊடே நகர்ந்து விரியும் நாவல். அவர்களின் கதைகள் 550  பக்கங்களில் எழுதித்தீராதவை!

 

இவர்களில் பரஞ்சோதி என்பவர் நடுக்கடலில் படகில்  இறந்து ஜலசமாதியாகிறார். உறவுகள், நண்பர்கள் இருந்தும், இறுதி நிகழ்வில் எவருமே இல்லாமல் அனாதைகள் போன்று சமகாலத்தில் உலகெங்கும் ஆயிரக்கணக்கில்  எரிக்கப்படுபவர்கள் புதைக்கப்படுபவர்கள்  கதைகளை கேட்டு  பதற்றத்திலிருக்கும் நாம், படகுகளில் வந்து கடலில் மூழ்கி ஜலசமாதியானவர்கள்  பற்றிய செய்திகளையும்  கடந்து வந்திருக்கின்றோம்.

பசுமை நிறைந்த வயல்வெளிகளின் தென்றல் காற்றை சுவாசித்த மக்களின்   ஆத்மாவை   ஏற்கனவே சித்திரித்திருக்கும் தாமரைச்செல்வி, முதல் தடவையாக  ஆழ்கடலின் உப்புக்காற்றை சுவாசித்து  வந்த  அகதி மக்களின் கதையை உயிர்த்துடிப்போடு வரவாக்கியிருக்கிறார்.

 “உயிர் காக்க படகேறி கடலோடு கரைந்து போனவர்க்கு  “ இந்த நாவலை சமர்ப்பித்துள்ளார்.

 “ இந்த நாவலை   வாசித்து முடிக்கும்போது, நீங்கள் வேறொரு எண்ணமும் சிந்தனையும் பார்வையும் கொண்ட மனிதராக  வெளியே வருவீர்கள் “   என்று யசோதா  பத்மநாதனும்,  “ இந்த நாவல் தமிழ்ச்சூழலுக்கு இன்னொரு  வாசல். இந்த வாசலில் புதிய அறிதல்களையும் அனுபவத்தையும் தாமரைச்செல்வி உண்டக்குகிறார் “ என்று கருணாகரனும், இந்நாவலில் குறிப்புகள் எழுதியுள்ளனர்.

தனது உயிர்வாசம் நாவலுக்காக  தேசிய சாகித்திய விருதுபெற்றுள்ள தாமரைச்செல்விக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

letchumananm@gmail.com

 

 

 

 

 

 

No comments: