எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 58 நஞ்சை உட்கொண்ட அச்சுக்கோப்பாளர்கள் ! எனது “ கதாநாயகிகளின் கதை “ நாய்வேடம் தரித்து, நாய் விற்ற காசு குரைக்குமா..? முருகபூபதி


பத்திரிகைகள்,  வெள்ளீய அச்சுக்களினால் வெளிவந்த காலம் மலையேறிவிட்டது.  தற்போது டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் கணினி வழங்கிய வரப்பிரசாதத்தினால்,  எமது இலங்கையில் ஏராளமான பத்திரிகைகள் வெளியாகின்றன.

அவற்றில் பல எனக்கும் மின்னஞ்சல் ஊடாகவும், வாட்ஸ்அப்பிலும் தினமும் வந்துகொண்டிருக்கின்றன என்று கடந்த அங்கத்தில் சொல்லியிருந்தேன்.

ஏற்கனவே கொழும்பிலிருந்து நீண்டகாலமாக வெளியாகும் வீரகேசரி, தினகரன், தினக்குரல் ஆகியனவற்றைத் தொடர்ந்து தமிழ் Mirror , தமிழன் என்பனவற்றுடன், தேசம்  ( இவை தலைநகர் பத்திரிகைகள் )  யாழ்ப்பாணத்திலிருந்து காலைக்கதிர், ஈழநாடு, உதயன், வலம்புரி, யாழ். தினக்குரல் என்பனவும்  உரிமை, சுபீட்சம், ஆகியனவும், வவுனியாவிலிருந்து தினப்புயலும், தென்மராட்சியிலிருந்து தென்மர் என்ற பத்திரிகையும் வந்துகொண்டிருக்கின்றன.

மேலும் இருக்கின்றன. நான் தவறவிட்டிருந்தால், எதனைப்படிப்பது எதனை தவிர்ப்பது என்பதில் ஏற்பட்ட மயக்கம்தான் அதற்குக் காரணம்.

வீட்டின் அறையிலிருந்து எவரும் பத்திரிகை நடத்தி, மின்னஞ்சல்


ஊடாக அனுப்பும்  காலம் கனிந்துவிட்டது.

இவைதவிர,  இணையத்தளங்கள் ஏராளம்.

ஆனால்,  நான் வீரகேசரியில் பணியாற்றிய காலப்பகுதியில், அச்சுக்கோப்பாளர்களும் பக்க வடிவமைப்பாளர்களும் இல்லையென்றால் பத்திரிகைகளும் இல்லை.

எனது இந்தத் தொடரில் வீரகேசரியில் அப்போது பணியிலிருந்த ஆசிரியர்கள் – துணை ஆசிரியர்கள்,  அலுவலக நிருபர்கள், பிரதேச நிருபர்கள் பற்றியெல்லாம் முடிந்தவரையில் பதிவிட்டிருந்தேன்.

எனது எழுத்துலக வாழ்வில் அவர்கள் மாத்திரமல்ல அச்சுக்கோப்பாளர்களும் முக்கிய பங்கு வகித்தார்கள். அவர்களை நினைவுபடுத்தாமல் கடந்துசெல்லமுடியாது.


நான் வீரகேசரியில் பணியாற்றிய காலப்பகுதியில் வீரகேசரி நாளிதழ், வாரவெளியீடு, மித்திரன் நாளிதழ், வார மலர் ஆகியனவற்றில் பல அச்சுக்கோப்பாளர்கள் பணியாற்றினார்கள்.

வெள்ளீய அச்சு எழுத்துக்களில் நச்சுத்தன்மையும் இருக்கிறது.

விரல் நகக்கண்களின் ஊடாக கண்ணுக்குத் தெரியாமலேயே அந்த நஞ்சு இரத்தத்தில் கலந்துவிடும்.  அதனால் அச்சுக்கோப்பாளர்கள் உணவருந்துவதற்கு முன்னர் தமது கைவிரல்களை நன்றாக சுத்தம் செய்துகொள்ளவேண்டும்.

அந்த நஞ்சை Lead Poison என்பார்கள்.  அதனால், நிருவாகம் அச்சுக்கோப்பாளர்களுக்கு  தினமும் மாலைவேளையில் ஒரு கப் பால் அருந்தக்கொடுத்தது.

அவர்களில் சிலர் இரவில் தங்கள் உடல் அசதியைப் போக்குவதற்கு மற்றும்  ஒரு மருந்து அருந்துவார்கள் என்பது வேறு விடயம்.

தினமும் கால் கடுக்க நின்று பணியாற்றும் அவர்கள் மீது மிகுந்த அனுதாபம் கொண்டிருந்தேன்.  அவர்களையும் எனது உடன் பிறப்புகளாக நேசித்தேன்.

வீரகேசரியில்  அச்சுக்கோப்பாளர்களை மேற்பார்வை செய்பவராக இருந்தவர் செல்வரத்தினம்.  இவர் பெரும்பாலும் பகல் பொழுதில் பணியாற்றுவார். இவரது சகோதரர் கு. இராமச்சந்திரன் எனது நல்ல நண்பர்.  இலங்கை வானொலிக்காக நாடகங்கள்  எழுதியவர். எழுத்தாளர்.

சிரித்திரன் சிவஞானசுந்தரத்தை இந்த இராமச்சந்திரன்தான் ஒரு நாள் கொழும்பில் எனக்கு  அறிமுகப்படுத்தினார்.

எனது நினைவில் தங்கியிருக்கும் இதர அச்சுக்கோப்பாளர்களை இங்கு பட்டியலிடுகின்றேன்.

தம்பிராஜா, ஸ் டீஃபன், சின்னத்தம்பி, கதிர்வேலு, விக்டர், தில்லைநாதன், பிலிஃப்,  கந்தநாதன், நித்தியானந்தன், நவரட்ணம்,


இராஜேந்திரன், ஶ்ரீபாலன், பாஸி நானா, தர்மா, விக்டர், பாலச்சந்திரன், பாலா, நெவில் அந்தனி, அன்டன், கிறேஷியன்… இப்படிப் பலர்.

இவர்களுடன் குறும்புத்தனங்களும் செய்வோம்.  வாக்குவாதங்களும் வரும். ஆனால், அந்தக்கோபங்கள்  அடுத்த கணம் மறைந்துவிடும்.  இவர்களில் சிலர் ஊடகவியலாளர்கள், ஒப்புநோக்காளர்கள் விடும் தவறுகளையும் கண்டுபிடிக்கும் ஆற்றல் மிக்கவர்கள்.

அத்தகைய ஒருவர்தான் நெவில் அந்தனி. அவர் தற்போது வீரகேசரி ஆசிரியர் பீடத்தில் பணியாற்றுகிறார்.

விக்டரும் – தர்மாவும் சகோதரர்கள். அன்டன் பாலசிங்கத்தின் மருமகன்மார்.


தர்மா எமது ஆபத்பாந்தவன். இவரிடம்தான் நாம் வட்டிக்கு பணம் வாங்குவோம். காரணம் எமக்கு கிடைத்த மாத வருமானத்தின் இலட்சணம்தான்.

நூறு ரூபாவுக்கு மாதம் ஒன்றுக்கு வட்டி பத்து ரூபா.

நான் பலதடவை தர்மாவிடம் வட்டிக்கு கடன் வாங்கியிருக்கின்றேன். 

வருமான பற்றாக்குறை, வீரகேசரி ஆசிரிய பீடத்திற்கு சென்றபின்னரும் நீங்கவில்லை.  அங்கு இணைந்து ஒரு மாதம் முடிந்தபின்னர் எனக்கு கிடைத்த சம்பளத்தை பார்த்தேன். அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.

இதுபற்றி பிரதம ஆசிரியர் சிவநேசச்செல்வனிடம் முறையிட்டேன்.  நிருவாகத்திடம் பேசுவதாகத்தான் சொன்னார். ஆனால், மாற்றம் எதுவும் நிகழவில்லை.  ஒரு நாள் என்னை அழைத்து,  “ ஐ ஸே… நீர் கதைகள் எழுதுவீர்தானே..? மித்திரனுக்கு மர்மக்கதை , துப்பறியும் கதை எழுதிக்கொடும். ஒரு அத்தியாயத்திற்கு பதினைந்து ரூபா கிடைக்கச்செய்கின்றேன்.  “ என்றார்.

அடக்கஷ்ட காலமே !   சிறந்த சிறுகதைகள் எழுதியமைக்காக முதல்
தொகுதிக்கே தேசிய சாகித்திய விருது பெற்ற என்னிடம் த்ரில்லான கதை எழுதச்சொல்கிறாரே..?! என்று யோசித்தேன்.

 அங்கிருந்த  நாடாளுமன்ற ஊடகவியலாளர்கள் தியாகராஜா, அஸ்வர் ஆகியோரிடம் இது பற்றிச்சொன்னேன். அவர்கள் இருவரும்,  “ நாய்வேடம் தரித்தால் குரைக்கத்தான் வேண்டும்  “ என்றார்கள்.  அச்சமயம் அஸ்வர் நானா, மித்திரனின் நடுப்பக்கத்தில் வெளிவரும் திகில் கதைகளை கவனித்துக்கொண்டிருந்தார்.

அதில் முன்னர் வீரகேசரி பிரதம ஆசிரியர் கே. வி. எஸ். வாஸ். ரஜனி என்ற புனைபெயரில்  பல மர்மக்கதைகளை தொடர்ந்து எழுதியவர். அவர் ஓய்வுபெற்றுச்சென்றதும் அவ்விடத்தை ஜி. நேசன் நிரப்பினார். இவர்தான் பட்லி, ஜமேலா, பூலான்தேவி பற்றிய  தொடர் கதைகளை எழுதியவர்.

இவருடன் கே. நித்தியானந்தன், திவ்வியராஜன், வி.  ஆர். வரதராஜா ஆகியோரும் அத்தகைய தொடர்களை எழுதினார்கள். இவர்கள் ஈழத்து இலக்கியத்திற்கு வளம் சேர்த்து, சேவையாற்ற வந்தவர்கள் அல்ல. எல்லாம் வயிற்றுப்பாட்டுக்குத்தான்.

ஒரு அத்தியாயத்திற்கு பதினைந்து ரூபா கிடைத்தால், மாதம் முடியும்போது, குறைந்தது 360 ரூபா கிடைக்குமல்லவா..?

இதற்கிடையில் வீரகேசரியின் இரண்டாம் பக்கத்தை கவனித்துவந்த பற்றீஷியா ஆரோக்கிய நாதர், அதற்கு கட்டுரைகள் கேட்டார். அதில் எழுதினாலும் பதினைந்து ரூபா நிச்சயம் கிடைக்கும்.

 எனது இரண்டு பெண்குழந்தைகளும்தான் அப்போது மனதில்


தோன்றினார்கள். பல சந்தர்ப்பங்களில் குழந்தைகளுக்கு பால் மா வாங்கவும் பணம் இல்லாமல்,  அச்சுக்கோப்பாளர் தர்மாவிடம் வட்டிக்கு பணம் வாங்கியிருக்கின்றேன்.

சிவநேசச்செல்வன் எனக்கு தந்த ஆலோசனையின் பிரகாரமும்  தியாகராஜா,  அஸ்வர் நானா சொன்னவாறும் நானும் நாய்வேஷம் தரித்து குரைக்கத்தொடங்கினேன்.

மித்திரனுக்காக  ஒரு புனைபெயரில் தொடர்கதைகள் எழுதினேன்.

அதில் ஒன்று அந்த முப்பது நாட்கள்.  மர்மம், திகில் நிறைந்த கதை.  அதற்கு படம் வரைந்தார் ஓவியர் மொராயஸ்.

அவர் அமர்ந்திருக்கும் ஆசனம் எனக்கு அருகில்.  எனது தொடரை  இரண்டு நாட்களுக்கு முன்பே எழுதி, அஸ்வர் நானாவிடம் கொடுத்துவிடுவேன். அவர் வாசித்துவிட்டு ஓவியர் மொராயஸிடம் அந்தப்பிரதியை கொடுப்பார்.

மொராயஸ் அதற்கு ஏற்ப படம் வரைவார். அக்கதையில் வரும் கதாநாயகனின் தோற்றம் என்னைப்போலவே இருக்கும்.  தினமும் என்னை பார்த்துவரும் அவர், எனது முகம் சிகையலங்காரம், உடை அனைத்தையும் அச்சொட்டாக பதிவுசெய்து வரைந்துவிடுவார்.

அந்தத் தொடர்கதைக்கு அலுவலகத்திலும் வாசகர்கள் கிடைத்தனர். வெளியே எத்தனைபேர் என்பது தெரியாது,

ஆனால்,  அதனை ஒரு பெரிய வர்த்தகப்புள்ளி தொடர்ந்து படித்துவருகிறார் என்பது  சில நாட்களில் தெரியவந்தது.  

ஒருநாள் காலையில் ஆசிரியர் சிவநேசச்செல்வன் என்னை தமது அறைக்கு அழைத்தார்.

 “ ஐஸே…  நீர்தானே அந்த முப்பது நாட்கள் எழுதுவது..?  அதனை ஒரு பெரிய மனிதர் படித்துவருகிறார். யார் இந்த எழுத்தாளர்..? என்று அவர் இன்று காலையில் நேரடியாகவே கேட்டார்  “ என்றார்.

  யார்..? “ 

 “ உட்காரும் சொல்கிறேன்,  நான் வெள்ளவத்தை லில்லி அவனியூவில் வசிக்கும் வீதியில்தான் எங்கள் வீரகேசரி சேர்மன் ஞானமும் வசிக்கிறார்.  தினமும் காலையில் அருகிலிருக்கும் கடற்கரைக்கு நாமிருவரும் ஒன்றாக நடைப்பயிற்சிக்குச்செல்வோம்.  அரசியல் முதல் உலகவிவகாரங்கள் பற்றியெல்லாம்  பேசிக்கொண்டே நடப்போம். இன்று காலையில் அவர் அதனையெல்லாம் விட்டுவிட்டு, இந்தத்  தொடர்கதையைப் பற்றித்தான் பேசினார்.    என்றார் சிவநேசச்செல்வன்.

மேசையில் மித்திரனின்  அந்தப்பக்கம் திறந்திருந்தது.

 “ எல்லாப்புகழும் உங்களுக்கே…  ஆனால், இதனை வெளியே சொல்லிவிடாதீர்கள்.  எமது இலக்கிய நண்பர்கள் கைகொட்டி சிரிப்பார்கள்.  “ என்றேன்.

  சும்மா போம் ஐஸே… அவர்களா உமக்கு வருமானம் தரப்போகிறார்கள்.  எழுதும்… எழுதும்… இனித்தான் நானும் இந்தத் தொடரை படிக்கப்போகின்றேன்.  “ என்றார்.

அவருக்காக அல்ல, எனது குழந்தைகளுக்காக அதன்பின்னரும்  தொடர்ந்து மர்மக்கதைகள் எழுதினேன்.

அவற்றின் பெயர்கள் : மீண்டும் ஷீலா – கதாநாயகிகள்.

கதாநாயகிகள் தொடர்கதையை எழுதிக்கொண்டிருக்கும்போது, நான் வீரகேசரியிலிருந்து வெளியேறும் காலம் நெருங்கிவிட்டது.

1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் நான் விடைபெறும் வகையில் விலகல் கடிதத்தை சிவநேசச்செல்வனிடம்  ஒரு மாதத்திற்கு முன்பே 1986 டிசம்பர் மாதம் கொடுத்திருந்தேன்.

ஆனால், அவர் அதனை நிருவாகத்திற்கு                                                               ( பொதுமுகாமையாளரிடம்  ) வழங்காமல் தனது மேசை லாச்சியிலேயே வைத்திருந்தார் என்பதை 1987 ஜனவரி 30 ஆம் திகதிதான் அறிந்தேன்.

எவருக்கும் தெரியாமல் நான் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு இன்னமும் ஏழு நாட்கள்தான் இருந்தன.  கையில் அவுஸ்திரேலியா செல்வதற்கான விசா.

எழுதி முடித்து கொடுக்கவேண்டிய கதாநாயகிகள் தொடர்கதை.

எனது தொடர்கதைகளை வெளியிடும்போது ஊக்கமளித்த அஸ்வர் நானாவுக்கும் நான் நிரந்தரமாக வெளியேறப்போகும் தகவல் தெரியாது,  ஆனால், நான் எனது தம்பியுடன் இணைந்து வர்த்தகத்தில் ஈடுபடப்போகின்றேன் என்ற எனது முழுப்பொய்யை மாத்திரம் அங்கிருந்த அனைவரும் நம்பினார்கள்.

  ஒருநாள் சிவநேசச்செல்வன்,  “ ஐ ஸே….உமக்கு என்ன பிஸினஸ் தெரியும்..?  பேனையையும் பேப்பரையும் தவிர வேறு என்ன தெரியும் உமக்கு….? !  சும்மா இரும்  “ என்றார்.

இந்தச்செய்தி எப்படியோ  வெளியே கசிந்து ஏரிக்கரை பத்திரிகை நிறுவனத்தில்  தினகரன் ஆசிரியர் சிவகுருநாதனுக்கும் சென்றுவிட்டது.

அவ்வேளையில் கொழும்பு கமலா மோடி மண்டபத்தில் எழுத்தாளரும் எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமைக்குழுவிலிருந்தவருமான சோமகாந்தனின் ஆகுதி சிறுகதைத் தொகுதி அறிமுக அரங்கு நடந்தது.

அதன் வெளியீட்டு அரங்கு இரண்டு  மாதங்களுக்கு முன்னர்  1986 நவம்பரில் யாழ்ப்பாணத்தில் நடந்தது. அதிலும் நான் உரையாற்றினேன். அந்தக்கூட்டத்தில், எழுத்தாளர்கள் நந்தி, மெளனகுரு, பிரேம்ஜி, சொக்கன், முருகையன்,  சுப்பிரமணிய ஐயர், மல்லிகை ஜீவா ஆகியோரும் பேசினார்கள்.  மல்லிகைப்பந்தல் சார்பாக அந்த நிகழ்வு நடந்தது.

கமலாமோடி மண்டபத்தில் நடந்த அறிமுகவிழாவில், சோமகாந்தன் என்னை தனியே அழைத்து,   “ பூபதி,  தினகரன் சிவகுருநாதன் உம்மை தன்னிடம் அழைக்கிறார்.  வீரகேசரியைவிட அதிகம் சம்பளம் தரப்படும் என்கிறார்.  உமக்கும் பிஸினஸுக்கும் சரிவராது.  உம்மை ஊடகத்துறையிலிருந்து இழப்பதற்கு நாம் எவரும் தயாரில்லை. உமது முடிவை மீண்டும் பரிசீலனை செய்யும்.  “ என்றார்.

கையிலே விசாவும் விமானப்பயணச்சீட்டையும் வைத்துக்கொண்டு நான் என்ன செய்யமுடியும்? ! மெளனமாக இருந்தேன்.

1985 ஆம் ஆண்டு நான் சோவியத்தின் அழைப்பின்பேரில் மாஸ்கோ சென்று திரும்பியிருந்தமையால்,  கொழும்பிலிருக்கும் சோவியத் தகவல் பிரிவில் வேலைக்குச்சேரப்போகின்றேன் என்றும் சிவநேசச்செல்வன் நம்பினார்.

மீண்டும் என்னை அழைத்து,  விலகும் முடிவை கைவிடச்சொன்னார்.  எனது திடீர் முடிவு அங்கிருந்தவர்களுக்கு சற்று ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தந்திருந்தது.

அது வடக்கில் போர்மேகங்கள் சூழ்ந்திருந்த காலம். வவுனியாவுக்கு அப்பால் ரயில் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

வீரகேசரியில் பணியாற்றிய சகோதரிகள் அன்னலட்சுமி இராஜதுரை, உதயா பொன்னுத்துரை, வசந்தி ஜோய் ஜெயக்குமார் ஆகியோர் யாழ்ப்பாணம் புறப்படும்போது,  அவர்களுக்காக எமது தொடர்பாடல்களின் ஊடாக ரயில் – பஸ் போக்குவரத்துக்களை அறிந்துகொள்வோம்.

என்னிடமும் அலுவலக நிருபர் கனக . அரசரத்தினமிடமும் பெரும்பாலான ரயில் நிலைய அதிபர்களின் தொலைபேசி இலக்கங்கள் இருந்தன.

அவர்களுடன் தினமும் தொடர்பிலிருந்தமையால், அவர்கள் ஊடாகவும் வடபகுதி போக்குவரத்து பற்றிய செய்திகளை பெற்றுவிடுவோம்.

எமது சகோதரிகள் புறப்படும்போது,  “ உங்களை நம்பித்தான் செல்கின்றோம் “  என்பார்கள்.

கொழும்பிலிருந்து புறப்படும் ரயில்,  வவுனியாவுடன்  நின்றுவிடும். ஆனால், அதற்கும் யாழ்தேவி என்றுதான் பெயர் !  அங்கிருந்து பஸ்ஸில்தான் யாழ்ப்பாணம் செல்லவேண்டும்.  வவுனியா ரயில் நிலைய அதிபருக்கு முன்கூட்டியே சொல்லி எத்தனை பஸ் டிக்கட்டுக்கள் எடுத்துவைத்து ஆசனமும் ஏற்பாடு செய்துகொடுக்கவேண்டும் என்று சொல்லிவிடுவோம்.

சகோதரிகள் ரயிலில் புறப்பட்டதும்.  கொழும்பிலிருந்து வவுனியா வரையில் வரும் முக்கிய ரயில் நிலைய அதிபர்களுடன் தொலைபேசியில் அடுத்தடுத்து தொடர்புகொண்டு,   ரயில் வந்துவிட்டதா ..? கடந்துவிட்டதா..?    என்று கேட்டு அறிந்துகொள்வோம்.

ஏனென்றால், எமது இன விடுதலை வீரர்கள் தண்டவாளங்களையும் சிலிப்பர் கட்டைகளையும்  பெயர்த்து எடுத்து தங்களுடைய பங்கர்களுக்கு பாதுகாப்பு அரண்களை அமைத்துக் கொண்டிருந்த காலம்தான் அது.

வடக்கிற்கான ரயில் போக்குவரத்து அக்காலப்பகுதியில் எத்தகைய நெருக்கடிகளை சந்தித்தது என்பது பற்றி பின்னாளில் எமது நண்பர் -  திரைப்பட இயக்குநர் தர்மசேன பத்திராஜா, எடுத்த ஆவணப்படம் In Search of a Roadஒரு பாதையைத்தேடி சித்திரித்துள்ளது.

எமது சகோதரிகள் வவுனியாவில் இறங்கி,  யாழ்ப்பாணம் சென்றபின்னர், அவர்கள் வசிக்கும் இருப்பிடத்திற்கும் தொடர்புகொண்டு, நலமாக வந்து சேர்ந்துவிட்டார்களா..? என்பதையும்  அறிவோம்.

இத்தகைய சகோதரத்துவம் அன்றிருந்தது.

அதனால், நான் அங்கிருந்து விலகுவதை அவர்கள் விரும்பவில்லை.

நான் நாட்டை விட்டு வெளியேறும் காலம் நெருங்கிக்கொண்டிருந்தது. மித்திரன் தொடர் -   “கதாநாயகிகள்  முடியவில்லை. அதனை முடிப்பதற்கு மேலும் பத்து அத்தியாயங்கள் தேவைப்பட்டது.

அதுவரையில் எனது தொடர்கதைக்கு களம் வழங்கிய அஸ்வர் நானாவின் குடும்பத்தில் புதிய வரவு அறிமுகமானது. அஸ்வர் தம்பதியருக்கு பெண்குழந்தை பிறந்திருந்தது.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் அந்தக்குழந்தைக்கு சில பரிசுப்பொருட்களும் வாங்கிக்கொண்டு,  எமது நண்பர் – வீரகேசரி ஊடகவியலாளர் ( சட்டத்தரணி ) இ . தம்பையாவையும் அழைத்துக்கொண்டு , அஸ்வர் நானா வசித்த மாளிகாவத்தை தொடர்மாடிக்குடியிருப்புக்குச் சென்றேன்.

எம்மை வரவேற்று உபசரித்த அவர்,  “ பூபதி…. தொடர்கதையை விட்டுவிடவேண்டாம்.  வேலையை விட்டுச்சென்றாலும் மிகுதியை எழுதித்தாருங்கள் ..”  என்றார்.

அந்த வீட்டின் படிக்கட்டுகளில்  இறங்கி வரும்போதும் மனதில் குற்றவுணர்வு. உடன் வந்த நண்பர் தம்பையாவிடமும் எனது பயணம் பற்றி மூச்சுக்காட்டவில்லை.

வீடு திரும்பியதும் எஞ்சிய அத்தியாயங்களை எழுதினேன். எனினும் முடியவில்லை. குடும்பத்தினரை, குறிப்பாக குழந்தைகளை விட்டு விடைபெறுவதை எண்ணி மனதிற்குள் கலங்கியவாறு இருந்தமையால், அந்தத் தொடரை எழுதி நிறைவுசெய்யமுடியாமல் திணறிக்கொண்டிருந்தேன்.

1987 பெப்ரவரி மாதம் 06 ஆம் திகதி முற்பகல் தாய் ஏயார் வேய்ஸ் விமானத்தில் ஏறவேண்டும்.  புறப்படும்போது  எழுதும் காகிதங்களை எடுத்துவைத்துக்கொண்டேன். விமானத்தில் ஏறி அமர்ந்ததும் எஞ்சிய அத்தியாயங்களை எழுதினேன்.  அடிக்கடி என் அருகில் வந்த விமானப்பணிப்பெண்கள், எமது தமிழ் எழுத்தை பார்த்தும், நான் எழுதும் வேகத்தை அவதானித்தும் விசாரித்து சிரித்தனர்.

பாங்கொக் விமான நிலையத்தில் ட்ரான்ஸிட்டுக்காக அன்று மாலை இறங்கியவேளையிலும்,  கதாநாயகிகள் தொடர்  எழுதிமுடியவில்லை.

இனி மறுநாள்தான் எனக்கு மெல்பனுக்கான விமானம்.  சுமார் பன்னிரண்டு மணிநேரம் இருந்தது.  வெளியே செல்லாமல் அங்கிருந்தே தொடரை எழுதி முடித்தேன்.

கையிலிருந்த அமெரிக்க டொலரை விமான நிலையத்தில் மாற்றி, அங்கிருந்த தபால் நிலையத்திலேயே கடித உறையும் போதியளவு அஞ்சல் தலைகளும் வாங்கி, வீரகேசரி முகவரிக்கு அஸ்வர் நானாவுக்கு தொடர்கதையின் இறுதி அத்தியாயங்களை அனுப்பினேன்.

எனது கதை முடிந்தது.  அதற்கான சன்மானத்தை எங்கள் நீர்கொழும்பு வீட்டு முகவரிக்கு அனுப்புங்கள்.  அவுஸ்திரேலியா சென்றபின்னர் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் விரிவான கடிதங்கள் எழுதுவேன். உங்கள் குழந்தைக்கும் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள் என்று கடிதமும் எழுதிவைத்து அனுப்பினேன்.

கதாநாயகிகள் நிறைவுபெற்று சில மாதங்களின் பின்னர் வீட்டுக்கு காசோலை சென்றது.

 “ இந்தக்கதைக்குத்தானா… இந்தக்காசோலை என்று வீட்டிலிருந்து வந்த கடிதத்திற்கு,   “ நாய் விற்ற காசு குரைக்காது  “ என்று பதில் எழுதினேன்.

பின்னாளில் அஸ்வர் நானாவின் மனைவி ஒரு வாகன விபத்தில் இறந்தார்.  அஸ்வர் நானா, கொழும்பில் நவமணி இதழின் ஆசிரியராகவிருந்துவிட்டு சிறிது காலத்தில் மறைந்தார்.

அவரது பெண்குழந்தை வளர்ந்து பெரியவளாகி மணமுடித்திருக்கவேண்டும்.  எனது கதாநாயகிகள் தொடர்கதையும் இதர தொடர்களும்  வெளிவந்த மித்திரன் இதழ்கள் கொழும்பு தேசிய சுவடிகள் திணைக்களத்திலோ, வீரகேசரி பணிமனையின் களஞ்சிய சாலையிலோ இருக்கலாம்.

என்னை மர்மக்கதை எழுதச்சொன்ன ஆ. சிவநேசச்செல்வன் தற்போது கனடாவில் என்ன செய்கிறாரோ தெரியவில்லை.

எனது தொடர்களுக்கு படம் வரைந்த ஓவியர் மொராயஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு கொழும்பில் மறைந்தார்.  அந்த மரணச்சடங்கிலும் கலந்துகொண்டேன்.

எனது இலங்கையில் பாரதி ஆய்வு நூலுக்கான முகப்பினை வரைந்தவரும் அவர்தான். ஆனால், அந்த நூலைப்பார்க்காமலேயே அவர் கண்களை நிரந்தரமாக  மூடிக்கொண்டார்.

இந்தத் தொடரில் எழுதப்படுவது அனைத்தும் நினைவிலிருந்து வருபவை.  அதனால் நிஜம்தான் நிறைந்திருக்கும்.

( தொடரும்  )

letchumananm@gmail.com

 

 

 

 

 

No comments: