மகாகவி பாரதி மறைந்த நூற்றாண்டு - செப்டெம்பர் 11 பாரதி மறைந்து நூறு வருடங்கள் - முருகபூபதி


மகாகவி பாரதி…அவர்களே…. வணக்கம்.


நீங்கள் எமக்கெல்லாம் ஆதர்சமான சிந்தனையாளன்,
 கவிஞன், படைப்பாளி. பத்திரிகையாளன். நான் உங்களை எனது பால்யகாலம் முதல் படிக்கின்றேன். இன்னும் முற்றுப்பெறவில்லை. உங்களைப்பற்றி பேசுகிறேன். எழுதுகிறேன். எனது தாய்நாட்டில் உங்களுக்காக எங்கள் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய நூற்றாண்டு விழாக்களில் பங்கேற்றேன். தென்னிலங்கை, வடக்கு, கிழக்கு, மலையகம் எங்கும் விழாவும் ஆய்வரங்கும் நடத்தினோம். உங்களை உங்கள் எழுத்துக்கள் ஊடாக மாத்திரம் தெரிந்துகொண்டதுடன் ஏனைய பாரதி இயல் ஆய்வாளர்களின் பதிவுகளின் மூலமாகவும் அறிந்துகொண்டேன்.

இலங்கையில் நீங்கள் ஏற்படுத்திய தாக்கம் பற்றி ஒரு விரிவான  தொடரை  எழுதினேன்.

உங்களது சுயசரிதையில்,   உங்களது ஞானகுருவாக நீங்கள் வர்ணித்து போற்றியிருக்கும் யாழ்பாணத்து ஈசன் என்று வர்ணித்திருக்கும்  ஞானகுரு  யாழ்ப்பாணத்துச்சாமி அருளம்பலம்  அவர்களின் சமாதிக்கோயிலையும் வடமராட்சியில் தரிசித்திருக்கின்றேன்.


அதே யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும்  காலைக்கதிர் நாளேட்டின் வாரப்பதிப்பில்தான் அந்தத் தொடரை நாற்பது வாரங்கள் எழுதினேன்.  பின்னர் அது நூலாக வெளிவந்தபோது, தலைநகரில் அதனை வெளியிட்டு வைத்தேன்.

நீங்கள் பிறந்த  நூற்றாண்டுகாலம்  1982 இல் வந்தபோது,  நான் கண்ட பாரதி என்ற தொடரை  இலங்கை பத்திரிகை சிந்தாமணியில் எழுதிய அதன் ஆசிரியர் எஸ். டி. சிவநாயகம் அய்யாவின் ஊடகப்பாசறையில் வளர்ந்த வித்தியாதரன்  பிரதம ஆசிரியராக பணியாற்றும் யாழ். காலைக்கதிரில்தான்  எனது அந்தத் தொடர் வெளிவந்தது.

பின்னர் அது தனி நூலாக வெளிவந்தபோதும் வித்தியாதரன் வருகைதந்து வெளியிட்டு வைத்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி இந்நிகழ்வு கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடந்தது. 

அங்கிருக்கும் உங்கள் சிலைக்கு மாலையும் பொன்னாடையும்


அணிவித்து நிகழ்ச்சியை தொடக்கினோம்.

நீங்கள் பிறந்த நூற்றாண்டை கொண்டாடியதுபோன்று இறந்த நூற்றாண்டையும் உலகெங்கும் கொண்டாடுகின்றவேளையில் இந்த மடலை உங்களுக்கு எழுதுகின்றேன்.

எனது மனதை நீண்டகாலமாக நெருடிக்கொண்டிருக்கும் விடயங்களை உங்களிடம் வருவதற்கு முன்னர் கொட்டிவிடவேண்டும் என்பதற்காகவும் எழுதுகின்றேன்.

ஏனென்றால் நீங்கள் விளக்கம் தருவதற்கும் தயாராக இருக்கவேண்டும் அல்லவா.. ?

பெண்அடிமைத்தனத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர் நீங்கள். ஆனால்,  உங்கள் மறைவுக்குப்பின்னர், உங்கள் அருமை மனைவி செல்லம்மாவை, நீங்கள் காதலுணர்வுடன் கைகோர்த்து எட்டயபுர வீதிகளில் அழைத்துச்சென்ற உங்கள் செல்லம்மாவின் தலையை மழித்து மொட்டை அடித்து மூலையில் அமர்த்திவிட்டார்களாம் உங்களது குலத்தில் வந்த சநாதானிகள்.


உங்களுக்காக உங்கள் ஊர் எட்டயபுரத்தில் மணிமண்டபம் அமைத்து அதன் திறப்புவிழாவுக்கு வந்த உங்கள் மனைவியை யார் என்று தெரியாமல் பாதுகாவல் கடமையிலிருந்தவர்கள்,
        “ தூரப்போ..” என்று களைத்தார்களாம்.
“ அட நாந்தானப்பா அந்த பாரதியின் மனைவி செல்லம்மா…” எனச்சொன்னபிறகுதான் மேடைக்கருகே செல்ல அனுமதித்தார்களாம்.

இதனையெல்லாம் உங்கள் ஆன்மா  கேட்டு,  உங்கள் நெஞ்சுபொறுத்துக்கொண்டதா?


எங்கள் தாயகம் இலங்கையை நீங்கள் சிங்களத்தீவு என்று பாடிவிட்டதனால் இங்கு தமிழ்தேசியவாதிகளுக்கு உங்கள் மீது சற்று அல்ல அதிகம் கோபம்.

ஒரு கவிதையில் “ ஈனப்பறையர்கள் என்றபோதும்… என்று


எழுதிவிட்டீர்கள். பறையர்கள் என்பதுடன் நீங்கள் நிறுத்தியிருக்கலாமாம். அது என்ன ஈனம்.? நாங்கள் ஈனப்பிறவிகளா? எனக்கேட்கிறார்கள். அதனால் தலித் மக்களுக்கும் சற்று கடுப்பு.

உங்களை மறுவாசிப்புக்குட்படுத்தவேண்டும் என்கின்றனர். அது சாத்தியமா? நீங்கள் பெருங்கடல். அங்கே முத்துக்குளிக்கலாம். பவளப்பாறைகளை அகழ்ந்து வரலாம். பெரும்பாலான பேராசிரியர்கள் ஆய்வாளர்கள் உங்களினால் வாழ்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் வருமானம் தேடித்தந்த பரோபகாரிதான்.

ஷேக்ஸ்பியரினால் இன்றும் பலர் வாழ்ந்துகொண்டிருப்பதுபோன்று உங்களாலும் பலர் வாழ்கிறார்கள்.


உங்கள் கவிதைகளை படிப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல் நீங்கள் பிறந்த ஊரையும் பார்ப்பதற்கு உங்கள் பிறந்த  நூற்றாண்டு முடிந்து மறு ஆண்டு சென்றேன். அதாவது 1984 இல் உங்கள் கால்கள் நடமாடிய அந்த எட்டயபுரத்துக்குத்தான்.

நீங்கள் பாரதி பட்டம் பெற்ற அரண்மனையை தரிசித்தேன். அங்கு பராமரிப்பு குறைவு. அங்கு கிடைத்த வேலையையும் உதறிவிட்டு தேசாந்தரியாக அலைந்தவர் அல்லவா நீங்கள்.
உங்கள் அப்பாவின் தொழிற்சாலை பாழடைந்துவிட்டது. நீங்கள் அமர்ந்து கவிபாடிய அந்தத்தெப்பக்குளம் அப்படியே இருக்கிறது.

நீங்கள் பிறந்த வீடு நினைவில்லமாகியிருக்கிறது. உங்களுக்காக


நிர்மாணிக்கப்பட்ட மணிமண்டபமும் பார்த்தேன். அந்தக்கட்டிடம் அமைக்கப்பட்டபொழுது, கல்லும் மண்ணும் சுமந்த கிருஷ்ணமூர்த்தி என்ற ஒரு பாரதி பக்தனை சந்தித்தேன். அவரிடம்தான் அந்த மணிமண்டபத்தின் வாயில் கதவு சாவி இருந்தது. தூரத்தில் வயல்காட்டில் நின்று வெய்யிலில் வெந்து வேலைசெய்துகொண்டிருந்தவர் எமது வருகை அறிந்து ஓடிவந்து திறந்து,  உள்ளே அழைத்துச்சென்று காண்பித்தார்.

அந்த ஏழை மனிதருக்கு அதற்காக எதுவித வேதனமும் இல்லை என்பதையும் அறிந்தேன்.
என்னிடமிருந்த சொற்ப பணத்தை அவரது கைச்செலவிற்கு கொடுத்துவிட்டு விடைபெற்றேன். தற்போது அவர் என்ன செய்கிறார்..? என்பதும் தெரியவில்லை.!

அச்சமயம் இமயமலை சாரலில் ஒரு ஒலிபரப்பு கோபுரம் அமைக்கப்பட்டது. அதன் தொடக்கவிழாவில் உங்களது தீராதவிளையாட்டுப்பிள்ளை பாடல் இந்தியாவெங்கும் ஒரேசமயத்தில் ஒலிபரப்பினார்கள்.

உங்கள் மணிமண்டபத்துக்கு கல்லும் மண்ணும் சுமந்து மணிமண்டபத்தை காத்துவரும் பக்தன் ஏழை விவசாயி கிருஷ்ணமூர்த்திக்கு மாதவேதனம் தருவதற்கு வக்கற்ற அரசுக்கு ஒலிபரப்புக்கோபுரமும் உங்கள் பாடலும் மாத்திரம் தேவையாக இருந்திருக்கிறது என்று இலங்கை இதழில் அன்றே பதிவுசெய்தேன். இதெல்லாம் பழைய கதை. இன்றைய வாசகர்களுக்கு சொல்ல மறந்த கதை.

சரிபோகட்டும்…

நான் தற்போது வாழும் அவுஸ்திரேலியாவிலும் உங்களுக்கு விழா எடுத்தோம். உங்கள் பெயரில் இங்கும் ஒரு பாடசாலை நீண்டகாலமாக இயங்குகிறது. உங்களைப்பற்றி எங்கள் குழந்தைகள் நாவன்மைப்போட்டிகளில் பேசுகிறார்கள். விழாக்களில் உங்கள் பாடல்களை பாடுகிறார்கள். கோயில்களில் திருமண வைபவங்களில் உங்கள் பாடல்கள் நாதஸ்வரத்தில் நிச்சயம் இடம்பெற்று எங்கள் செவிப்புலனை குளிர்விக்கும்.

அரங்கேற்றங்களிலும் உங்கள் பாடலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. தமிழனும் தமிழும் வாழும்காலம் வரை நீங்கள் நீக்கமற நிறைந்திருப்பீர்கள்.

ஆனால்,  ஒரு சம்பவம் மனதை இன்றும் நெருடுகிறது.
உங்கள் மகள் வயிற்றுப்பேத்தியின் மகள் மீராவுடன் அதாவது உங்கள் கொள்ளுப்பேத்தியுடன் ஒரு சந்தர்ப்பத்தில் தொலைபேசி ஊடாக உரையாடினேன். அவர் தற்போது அமெரிக்காவில் வாழ்கிறார்.
அப்பொழுது அவர் அவுஸ்திரேலியா சிட்னிக்கு வந்திருந்தார். தகவல் அறிந்து தொடர்புகொண்டேன். உங்கள் பேத்தி விஜயபாரதியின் மகள்தான் மீரா. தனது கணவர் சுந்தரராஜனுடன் விஜயபாரதி இலங்கையில் எங்கள் ஊருக்கும் வந்து பேசியிருக்கிறார். உங்கள் பாடல்களை இனிமையாகப் பாட வல்லவர். சிட்னி வந்த அவரது மகள் மீராவுடன் தமிழில்தான் பேசினேன்.

“  மன்னிக்கவேண்டும் என்னால் தமிழில்  சரளமாகப் பேசமுடியாது.  “  என்று ஆங்கிலத்தில் சொன்னார்.  

“ஓ….பாரதி…”  என்று உரத்துக்கத்தினேன் மனதுக்குள்.

 நான் திகைத்தேன்.

“அப்படியென்றால் என்ன செய்கிறீர்கள்? எனக்கேட்டேன்.
உங்களது ஆங்கிலக்கட்டுரைகளை தான் ஆய்வுசெய்வதாகச்சொன்னார். அந்தளவில் ஆறுதல் பெற்றேன். அவர் வாழும் அமெரிக்கச்சூழல் அவருடைய பேச்சுமொழியில் தமிழை அந்நியப்படுத்திவிட்டிருக்கலாம். இக்காலத்தில் தமிழர் புகலிட நாடுகளில் பெரும்பாலான தமிழ் வீடுகளில் இதுதான் நிலைமை. இந்த இலட்சணத்தில் வெளிநாடுகளில் -  தமிழர் புலம்பெயர்ந்த தேசங்களில் எதிர்காலத்தில் தமிழ் வாழுமா..? தாழுமா…?  என்று எம்மவர்கள் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால்,  “ நீங்களோ…தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்திடுவோம்  “ என்றும்  “  தெருவெங்கும் தமிழ்முழக்கம் செய்வோம்  “ என்றும் பாடிவைத்துவிட்டுப் போய்விட்டீர்கள். நீங்கள் பிறந்து வளர்ந்து மறைந்த பொன்னாட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தமிழுக்கு பஞ்சம் வந்துகொண்டிருக்கிறது.

மகாகவியே….உங்களது எட்டயபுரம் தரிசித்தேன். நீங்கள் இறுதியாக வாழ்ந்த திருவல்லிக்கேணி இல்லத்தையும் நீங்கள் வாழைப்பழம் உண்ணக்கொடுத்த மதம்கொண்ட யானை வாழ்ந்த பார்த்தசாரதி கோயிலையும் தரிசிக்க வந்தேன். உங்களை உங்கள் நண்பர் குவளைக்கண்ணன் அச்சமயம் யானையிடமிருந்து மீட்டதாக வராலாறு சொல்கிறது. எனினும் காலன் உங்களை அழைத்துக்கொண்டான். காலனையே தூரப்போ என்று கவியால் கலைத்தவர் நீங்கள்.


உங்கள் இறுதிமூச்சு விடப்பட்ட திருவல்லிக்கேணி இல்லத்தை தொட்டு வணங்கியவாறே உள்ளே சென்றேன்.  நான் சென்றபோது அன்றைய முதல்வர் அம்மாதான் !

முதல்வர் அம்மாவின் படங்கள். சென்னையில் திரும்பிய பக்கமெல்லாம்   காணப்பட்ட காலம் அது.  எங்கும் அவரது உருவம்தான். வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் என்ற சுவரொட்டிகள்தான். அவரது காலில்விழுந்து ஆசிபெற்றவர்களை அறிவீர்களா..?

பாரதி இல்லத்தையும் அந்த அம்மா அன்று ஆக்கிரமித்திருந்தார்!  அவரது அமைச்சரவையில் தகவல் அமைச்சும் இருந்தது. அந்த அமைச்சுதான் உங்கள்  இல்லத்தையும்  அன்று பராமரித்தது. அதனால் தகவல் அமைச்சின் தகவல் பலகையில் அம்மா ஆரோகணித்துவிட்டார்கள்.

அந்த இல்லம் புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டசமயத்திலும் அம்மாதான் ஆட்சிக்கட்டிலில். அதனால் அவரது படங்களுக்கு அங்கு முன்னுரிமை.

உங்களை பார்ப்பான் என வர்ணித்து வைத திராவிட இயக்கத்தில் வந்தவர்கள் கவனிக்கவில்லை. புறக்கணித்தார்கள். ஆனால்,  அந்த அம்மா திருவள்ளுவர் ஆண்டு 2024 புரட்டாசித்திங்கள் 16 ஆம் நாள் அதாவது 2-10-1993 ஆம் திகதியன்று அந்த இல்லத்தை சம்பிரதாயபூர்வமாகத்திறந்துவைத்து தகவல் அமைச்சிடம் பாராமரிப்புக்கு ஒப்படைத்துவிட்டார்.  அதனாலும் அம்மா ஜெயலலிதா அங்கே காட்சிப்படுத்தப்பட்டிருந்தார்.

அந்த இல்லத்தில் ஏராளமான ஒளிப்படங்களைப்  பார்த்தேன். உங்களுடன் வாழ்ந்தவர்கள் மட்டுமன்றி உங்களுக்காக வாழ்ந்தவர்களும் உங்கள் புகழை பரப்பியவர்களும் அவற்றில் இருக்கிறார்கள். உங்கள் நூற்றாண்டு காலத்தில் டில்லியில் முன்னாள் பாரதப்பிரதமர் ராஜீவ் காந்தியும் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரும் உங்கள் சிலையை திறந்துவைத்திருக்கிறார்கள்.

சுருக்கமாகச்சொன்னால் அது ஒரு ஆவணகாட்சியகம்தான்.
ஒரு நூலகத்தை அங்கு நடத்துகிறார்கள். வெளிவிறாந்தையில் தினசரி வெளியாகும் பத்திரிகைகள் படிப்பதற்கு ஒரு பெரியமேசையும் கதிரைகளும் வைத்து வாசகர்களின் தேவையை பூர்த்திசெய்கிறார்கள்.

நூலகம் என்றால் அங்கு அமைதிபேணப்படல் வேண்டும். ஆனால்,  உள்ளே இருக்கும் மேசைகளை சுற்றிவர அமர்ந்துள்ள அலுவலர்கள் ஊர்வம்பு பேசிக்கொண்டிருந்தார்கள். நான் அமைதியாக அந்த புனித இல்லத்தை சுற்றிவந்தேன்.
ஒரு அலுவலரிடம் சென்று அந்த இல்லத்தின் தோற்றம் வரலாறு பற்றிய ஏதும் பிரசுரம் இருக்கிறதா? எனக்கேட்டேன்.
“அப்படி ஒன்றும் இல்லை” என்றார்.
ஏமாற்றம்தான் !

நீங்கள் வாழ்ந்த காலத்தில் பலரால் ஏமாற்றப்பட்டவர் நீங்கள். ஆயினும்,  “ தேடிச் சோறு நிதந்தின்னும் வேடிக்கை மனிதரைப்போல வீழ்ந்துவிடுவேன் என நினைத்தாயோ “  என்று நெஞ்சை நிமிர்த்தி கேட்டவர் நீங்கள்.

அந்தவரிகள்தான் எமக்கு ஆன்மபலம் தருகிறது.

என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்… என்று ஏங்கியவர் நீங்கள். ஒரு நாள் நள்ளிரவிலேயே நீங்கள் நிரந்தரமாக கண்களை மூடினீர்கள். பல ஆண்டுகள் கழித்து ஒரு நள்ளிரவு வேளையில்தான் உங்கள் கனவு நனவாகியது. பாரத நாடு சுதந்திரம் பெற்றது.
உங்கள் வாரிசாக வந்த ஒரு கவிஞர் இப்படி எழுதினார். அது அப்போது பெரிதும் பேசப்பட்ட புதுக்கவிதை.

சுதந்திரம்

இரவிலே வாங்கினோம்.
இன்னும் விடியவே இல்லை.

பாரதியே…. உங்கள் கனவுகள் பல இன்னும் நனவாகவில்லை. காத்திருக்கிறோம்.
---0---

letchumananm@gmail.com

 


No comments: