நூறாண்டு நினைவில் நனைகிறோம் ! மகாகவி பாரதியின் நூறாவது நினைவு நாள் – 11/09/2021 சைவப்புலவர் முரு.சேமகரன், மெல்பன்

எட்டய புரத்திலோர் உதய சூரியன்

           எழுந்தான் ஒளிதரும் இதய நாயகன்


பட்டிகள் தொட்டிகள் பரவிப் பாயவே

            பாக்களைப் பொழியும் கவிதை வானவன்

கட்டிலாத் தமிழைக் கருத்தினி லேற்றியே

            காலம் கடந்தொரு காவிய மானவன்

மட்டிலாப் புகழும் மாண்புறும் பெருமையும்

            மேதினிக் களித்த பாரதி தானவன்  !

 

இந்தியக் கண்டத்தை இறுக்கிப் பிணைத்து

            இருந்தது வெள்ளையர் ஆதிக்க விலங்கு

சந்ததி பலநூற்றைத் தொடர்ந்தவர் மண்ணைச்


 

சிதைத்தது ஆட்சியர் அதிகாரப் பரம்பு

இந்நிலை கண்டதால் இன்றமிழ்ப் பாவலன்

            இதயம் கொதிக்க எழுத்தாணி யெடுத்தான்

வந்தவர் ஓடவும் மண்ணினை நீங்கவும்

            வண்டமிழ்க் கவியாற் போரொன்று தொடுத்தான் !

 

 

விடுதலை வேட்கையும் வீரத்தின் விழுதும்


            மண்ணிலே நிலைக்க மூடத்தின் வேர்களும்

சடுதியில் நீங்கவே சனங்களைப் பாடியும்

            தமிழியம் பாரிலே நின்று விளங்கவும்

வடுதனை நீங்கிய வளங்கொள் மாந்தராய்

            வாழ்ந்திடத் தமிழரும் அவரது மொழியும்

கடுகியே உலகெலாம் கலந்திடச் செய்தவன்

            கருத்தினில் நிலைத்திடக் கவிமழை பெய்தவன் !

 

பாரதிரப் பார்மீதில் பாடிய பாவலன்

            பாட்டாலே பண்டமிழைக் காத்த காவலன்


பாரதியாம் மாகவியும் பாரினையே விட்டவன்

            போனபின் ஆண்டுகள் நூறுகளு மாயின

சாரதியாய்க் கீதையைத் தரணிக் குரைத்த

            சத்தியவான் போலெம் பாரதியு மாயினன்

வாரீர் பாரதியை மண்மீதில் நினைப்போம்

            வள்ளல் கவிகொண்டு அவன்பாதம் நிறைப்போம் !

 

                                                                        ---0---

No comments: