பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - தங்கைக்காக - ச. சுந்தரதாஸ் - பகுதி 12

 .

இலங்கை திரை உலகில் கொடி கட்டிப் பறந்தவர் சினிமாஸ் கே குணரத்தினம். இவரது சினிமாஸ் நிறுவனம் ஏராளமான படங்களை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தருவித்து திரையிட்டது. இந்திய பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள் இடையே இவருக்கு தனி செல்வாக்கு இருந்து வந்தது. இலங்கையில் இவரிடம் பணிபுரிந்து பின்னர் இந்தியா சென்ற பெர்னாண்டஸ் என்பவரை முன்னிலைப்படுத்தி 1971 ஆம் ஆண்டு குணரத்தினம் ஒரு படம் உருவாக்கினார். அந்தப் படம்தான் தங்கைக்காக.


இலங்கை குணரெத்தினத்தின் அனுசரணையுடன் இலங்கையைச் சேர்ந்த பெர்னாண்டஸ் தயாரித்த இந்தப் படத்தின் வசனங்களை இலங்கையைச் சேர்ந்த குகநாதன் எழுதினார். சிங்களப் படங்கள் சிலவற்றை டைரக்ட் செய்திருந்தார் டி யோகானந்த் படத்தை டைரக்ட் செய்தார். இவ்வாறு இலங்கையுடன் சம்பந்தப்பட்டவர்களால் உருவான தங்கைக்காக படத்தில் சிவாஜி லட்சுமி இருவரும் பாசமிக்க சகோதரர்களாக நடித்தினர்.


சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் ஏராளமான படங்களில் நடித்திருந்த சிவாஜிக்கு இது மற்றுமொரு படமாக அமைந்தது. ஆனாலும் உணர்ச்சியை காட்ட வேண்டிய இடத்தில் காட்டி பாசத்தை கொட்டி இதிலும் நடித்திருந்தார். தங்கையாக வரும் லட்சுமிக்கு தன் திறனை வெளிக்காட்டும் விதமாக காட்சிகள் அமைந்தன. வில்லன் நம்பியார் இதில் இளமையாக காட்சி அளித்தார் அவர் மேற்கொண்ட உடற்பயிற்சிகள் காரணமாக இருந்திருக்கக்கூடும். முத்துராமனும் படத்தில் இருக்கிறார்.





படத்தின் நகைச்சுவையை நாகேஷ், சச்சு, சுந்தரிபாய், டைப்பிஸ்ட் கோபு ஆகியோர் கவனித்துக் கொண்டனர். உணர்ச்சிகரமான வசனங்களை மட்டுமின்றி நகைச்சுவை வசனங்களையும் தன்னால் சிறப்பாக எழுத முடியும் என்பதை குகநாதன் நிரூபித்தார்.


கவிஞர் கண்ணதாசனின் தாயின் முகம் இங்கு, எதையும் தாங்குவேன் அன்புக்காக, அங்கமுத்து தங்கமுத்து தண்ணிக்கு போனாளாம் பாடல்கள் எம் எஸ் விஸ்வநாதன் இசையில் இனிமையாக ஒலித்தன.



அனுபவமிக்க டி யோகானந்த் படத்தை தொய்வின்றி நகர்த்தி இருந்தார். சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர் வெண்திரை ஆடை நிர்மலா. சிவாஜியின் பல படங்களில் நடித்திருந்த போதிலும் சிவாஜிக்கு ஜோடியாக அவர் நடித்த ஒரே படம் தங்கைக்காகத்தான்  .




No comments: