ஷொப்பிங் சென்ரரில், சண்முகத்தையும் தேவியையும் கடந்து ஒரு பையனும் பெண்ணும் விரைந்து போனார்கள். அன்றாடம் பழகிய பெண்ணின் முகம் போன்றிருந்தது தேவிக்கு.
“உதிலை
போறது வைஷ்ணவிதானே!” கணவனிடம் கேட்டாள் தேவி.
“கொரோனா
வந்து, மாஸ்க் போட வைத்து, மனிசரை மனிசரே அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் கிடக்கு” சலிப்படைந்தார்
சண்முகம்.
அந்தப்
பெண்ணும் இவர்களையே திரும்பித் திரும்பிப் பார்த்தபடி சென்றாள். தேவியும் தன்னைப் பார்ப்பதைக்
கண்டவுடன், நடையை நிறுத்தினாள். அந்தப் பையனிடம் ஏதோ சொல்லிவிட்டு, இவர்களை நோக்கி
விரைவு நடையில் வந்தாள்.
“அன்ரி...!
என்ன ஷொப்பிங்குக்கு வெளிக்கிட்டியள் போல...” முகமனுடன் விசாரித்தாள் வைஷ்ணவி. முகத்தை
மூடிய மறைப்பையும் தாண்டி இருவரையும் அடையாளம் காண வைத்த உறவு எது? சிறிது நேரம் உரையாடிவிட்டு,
மான்குட்டி போல துள்ளிச்சென்று, அந்தப் பையனுடன் இணைந்து கொண்டாள் வைஷ்ணவி. அவனும்
காத்திருந்தது போல, வைஷ்ணவியின் கையை இணைத்துக்
கொண்டான். இருவரும் கைகளை ஊஞ்சல் போல ஆட்டி, வானவில் போல வில்லாக வளைத்தார்கள். தேவிக்கு
அந்தக் காட்சியைப் பார்த்தவுடன் காலிலே தேள் கொட்டியது போன்றிருந்தது.
”இவளும்
ஒரு பெண்ணா? நிரஞ்சனையல்லவா திருமணம் செய்வாள் என நினைத்தேன்!” தேவி கவலை கொண்டாள்.
நிரஞ்சன், சண்முகம் தேவியின் அருமந்த புத்திரன். புலம்பெயர்ந்த காலம் தொட்டு அருகருகாகக் குடியிருக்கின்றார்கள். வைஷ்ணவியும் நிரஞ்சனும் சிறுவயது முதல், நகமும் சதையும் போல ஒன்றாக விளையாடித் திரிந்தவர்கள்.
“நல்ல
சோடிகள். வளந்தாப் போல கலியாணம் செய்யட்டும்” – இரண்டு குடும்பத்தினரும் தங்களுக்குள்
மனதார எண்ணிக் கொண்டார்கள். அதற்கு அமைவாக வைஷ்ணவி, இவர்களை `அன்ரி... அங்கிள்’ என்று
குழைவதும், நிரஞ்சன் அவளின் பெற்றோர்களுக்குப் பின்னால் வாலாட்டித் திரிவதுமாக இருப்பார்கள்.
நேற்றுக்கூட
நிரஞ்சனும் வைஷ்ணவியும் இரவிரவாக மொபைல்போனில் கதைத்து சிரித்துக் கொண்டிருந்தார்களே!
இப்ப வைஷ்ணவி இப்படி ஒருவனுடன் கை கோர்த்துக் கொண்டு நடப்பதென்றால்? ஒருவேளை நண்பனாக
இருக்குமோ?
”நிரஞ்சன்...
உனக்கு வைஷ்ணவியைக் கலியாணம் பேசிச் செய்யலாமெண்டு யோசிக்கிறம்...” நிரஞ்சன் வேலையால்
வந்ததும், தேவி தூண்டில் போட்டாள்.
“வைஷ்ணவிக்கு
போய்ஃபிரண்ட் இருக்கே அம்மா...” நிரஞ்சன் பிடி குடுக்காமல் வெள்ளந்தியாகச் சிரித்தான்.
தேவிக்கு அவன் கவலையாக இருப்பது போல் தோன்றியது. வைஷ்ணவி அவனை ஏமாற்றிவிட்டதாகவே நினைத்தாள்.
”என்ரை
மகனிலை என்ன குறை? அவனைவிடக் கொஞ்சம் படிச்சிட்டாய் எண்ட திமிரோ? அடிக்கடி வீட்டுக்கு
வாறவள் தானே! வரட்டும் இக்கணம்... கேக்கிறன்” மனதினுள் கறுவிக் கொண்டாள் தேவி. சொல்லி
வைத்தாற்போல் அன்றிரவு ஏதோ ஒரு சாப்பாட்டுடன் நிரஞ்சனின் வீட்டிற்கு வந்தாள் வைஷ்ணவி.
“அம்மா
தந்துவிட்டவா...” வாசலில் நின்ற சண்முகத்திடம் நீட்டினாள்.
“பிள்ளை...
அன்ரி குசினிக்கை நிக்கிறா. அவவிட்டைக் குடும்” என்றார் சண்முகம்.
குசினிக்குள்
தனியாக நின்றார் தேவி. தருணம் அறிந்து, “ஏன் பிள்ளை, உமக்கு நிரஞ்சனைப் பிடிக்கேல்லை?”
பட்டெனவே கேட்டார். வைஷ்ணவி இதனைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை
“அன்ரி....
நான் வெட்கத்தை விட்டுச் சொல்லுறன். எனக்கு நிரஞ்சனை நல்லாவே பிடிக்கும். நான் என்னுடைய
காதலை நிரஞ்சனுக்குச் சொன்னபோது, அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். என்னைத் தன் தங்கை
போல என்று சொல்கின்றார்” மூக்கை உறுஞ்சியபடி, கொண்டுவந்ததைக் குசினித்தட்டில் வைத்துவிட்டு
தேவியை நிமிர்ந்து பார்த்தாள் வைஷ்ணவி. தேவி இந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை.
“அதுக்காக
அன்ரி... உலகம் இடிஞ்சு என்ரை தலைமேலை விழுந்திட்டமாதிரி இருக்கமாட்டன்” சொல்லிவிட்டு
விறுவிறெண்டு வெளியேறினாள் வைஷ்ணவி.
No comments:
Post a Comment