உரிமைக்கோ அன்றில் விடுதலைப் போராட்டத்திற்கோ
வன்முறை நியாயமானதுதானா..? ஏற்றுக்
கொள்ளப்படக் கூடியதுதானா…? என்ற வாதம்
எப்போழுதுமே காலத்துக்கு காலம் மேலோங்கியிருக்கிறது.
அப்படியான போரில் நின்ற ஒருவனை விடுதலை வீரன் என்று ஒரு பக்கம் பார்க்கும்
அதே சமயம், அதன் மறுமுனையில் அவனை தீவிரவாதி என்று பட்டம் சூட்டுவது சாதாரணம்.
இது பிரபல்யமாக தென்னாபிரிக்கா ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் சரித்திரத்தில்
காணப்பட்டது. தீவிரவாத குற்றவாளியாக
காணப்பட்டு 27 ஆண்டுகள் சிறைவாசம்
அனுபவித்தவர் நெல்சன் மண்டேலா. இந்தத்
தீர்ப்பை ஏற்றுக் கொண்டு பிரித்தானியா, அமெரிக்கா மற்றும்
ஐரோப்பிய நாடுகள் அன்று மௌனம்
சாதித்தன.
தென்னாபிரிக்க கறுப்பர்களுக்கு அவர் விடுதலை கோரினார் என்பது பிழை என்பதனால்
அல்ல, அவரது அரசியல் இயக்கம்
தீவிரவாதத்தால் அரசை பணிய வைக்க முயன்றது என்பதனாலேயே.
ஆனால், அதே நெல்சன் மண்டேலா பின்னாளில் ஜனாதிபதியாகத் தோன்றி, தன்னை முன்னர் தடை செய்த எல்லா
நாடுகளாலும் ஓர் உன்னத மனிதனாக கௌரவிக்கப் பட்டு அழைக்கப்பட்டார்.
அந்த அளவில்லாவிட்டாலும் ஒரு வகையில் இவை கியூபாவின் காஸ்ட்ரோவுக்கும்
சேகுவேராக்கும் பொருந்தும். அவர்கள் இலங்கை வந்தபொழுது தங்கள் நினைவாக மரங்கள் நாட்டிச் சென்றார்கள். அவர்கள் வன்
முறையாளராக பார்க்கப்படவில்லை.
இந்தப் போராட்டங்கள் எல்லாவற்றிலும் எவ்வளவோ கொடூர சம்பங்கள் இடம் பெற்றன. ஆனால், வழிமுறைகள் நோக்கத்தின் அடிப்படையில்
நியாயப்படுத்தப்படுகின்றன என்ற சித்தாந்தம் உண்டு. (
End Justifies the means )
குட்டிமணி, ஜெகன்
எங்களது ஈழ அரசியலின் உரிமைப்
போரில் வன்முறை எப்பொழுது, ஏன் வந்தது என்று பார்க்க வேண்டுமானால் பின்னோக்கிப்
பார்க்க வேண்டும்.
குற்றவாளிகளாகக் காணப்பட்ட குட்டிமணிக்கும், ஜெகனுக்கும் மரண தண்டனை தீர்க்கப்பட்டது. தண்டனைக் குறைப்புக்காக
அவர்கள் ஏதும் சொல்ல விரும்புகிறார்களா என்று கேட்கப்பட்டபோது, அவர்கள் ஆற்றிய உரைகளை மீளப் பார்க்க வேண்டும்.
அதில் ஒரு வசனம் ‘‘ எங்களின் போராட்ட வரலாறு என்றும்
ரீங்காரமிட்டுக்
கொண்டிருக்கும். அவை எந்நேரமும் சிங்கள மக்களின் மனச்சாட்சிகளை சுட்டுக் கொல்லும் ’’.
‘‘நாங்கள் வன்முறையில் காதல் கொண்டவர்களல்லர்’’ என்று பெரிதாகப்
படிக்காத ஒரு போராளியான குட்டிமணி முழங்கினார்.
அந்த வழக்கை விசாரித்துத் தீர்ப்பளித்த நீதிபதி, “ இது ஒரு வித்தியாசமான வழக்கு, எனக்கு பல
சங்கடங்களை தந்தது, இந்தத் தீர்ப்பை உரியவர்கள் பரிசீலித்து, அவர்களது மரண தண்டனையை நீக்கி, அவர்கள் சிறிது
காலத்தில் சிறைவாசத்தை முடிக்க வழி செய்ய வேண்டும் “ என்று பரிந்துரைத்தார்.
அப்படியான ஒரு மனப்பாங்கு தர்மிஷ்டர்
ஜே.ஆரின் ஆட்சியில்
இருந்திருந்தால், எங்களது அரசியல் மாற்றுத்
திசையில் சென்றிருக்கும். ஆனால், ஆட்சியின் ஆணவம் குட்டி மணி உட்பட பல
போராளிகளின் உயிரைப் பறித்தது. அவர்கள்
சொன்னவற்றுக்காக, மறுபரிசீலனை என்ற ஒன்றே இன்றி, சிறிது நாட்களுக்குள் 1983
கலவர நாட்களில் சிறைச்சாலையிலேயே படுகொலை செய்யப்பட்டனர்.
காந்திக்கு வந்த கோபம்
எனவே, விடுதலைப் போராட்டத் தில் வன்முறை நியாயமானது தானா…? ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதா…? என்ற வாதம் எப்பொழுதுமே காலத்துக்கு காலம்
மேலோங்கியிருக்கிறது.
இது அகிம்சாவாதியான காந்திக்கும் ஏற்படாமலில்லை.
எத்தனையோ சந்தர்ப்பங்களில் தனது அகிம்சை வித்தியாசமான விளக்கம்
கொள்ளப்பட்டு மக்களைக் கோழைகளாகவும் பலவீனர்களாகவும் ஆக்கியது என்று அவர் கோபமும் கொண்டார்.
சுதந்திரப் போராட் டத்தை அடக்க, அன்றைய காலனித்துவ ஆங்கில அரசு, ஜாதி, மதமுறையில்
உருவாக்கியிருந்த படைகளை மக்களுக்கு
எதிராக ஏவி விட்டிருந்தது. அப்படிப் பாதிக்கப்பட்ட
பல கிராமங்களுக்கு ஆறுதல் சொல்ல காந்தி சென்றபோது, காந்தி
அந்த மக்களிடம், முக்கியமாக ஆண்கள், இளைஞர்களிடம் ஏன் அட்டூழியம் செய்தவர்களை நீங்கள் திருப்பித் தாக்கவில்லை என்று கேட்பார். “ நீங்கள்தான் அகிம்சையை கடைப்பிடிக்க
வேண்டும் என்று சொன்னீர்களே “ என்பதுதான் பதிலாக வரும்.
“ அது நான் சொன்ன அகிம்சையின்
தத்துவமல்ல, இது பலவீனம், கோழைத்தனம் “ என்று
காந்தி கடிந்தார்.
ஒரு மனிதன் தனது குடும்பம், பொருள், சுற்றம், மானம் என்பன தாக்கப்படும் பொழுது, அவர்களைப் பாதுகாக்க எதிர்த்துப் போராட
வேண்டும். ஒரு தனி மனிதனோ அன்றில் ஒரு சமூகமோ தங்களைப் பாதுகாக்க எடுக்கும்
தற்காப்பு அட்டூழியம் செய்பவரின் அழிவில் முடிந்தாலும் அது வன்முறையாகாது “ என்று
காந்தி விளங்கப்படுத்தினார்.
அந்த நிலைப்பாட்டை, அவரது தத்துவங்களின் விளக்கங்களை பெருமளவில் ஜாலியன்வாலா பாக்கில்
( The Jallianwala
Bagh massacre ) படுகொலைச்
சம்பவங்கள் நடந்தபோது அவர் எதிர்கொண்டார்.
ஜாலியன் வாலாபாக்
படுகொலை அட்டூழியம்
இது 13 ஏப்ரல் 1919
ஆம் திகதி நடந்தது. அதில்
குறைந்தது 379 பேர்,
நிராயுதபாணிகளாக சுட்டுக் கொல்லப்பட்டனர். 1200 இற்கும்
மேலானவர்கள் காயப்படுத்தப்பட் டனர்.
அமிர்தசரஸ் என்ற வடபகுதி மாகாணத்தில் ஜாலியன் வாலா என்ற பெயரில் அறியப்பட்ட
திடலில், மக்கள் சதுக்கத்தில் பெருமளவில் மக்கள் பொதுவாகக் கூடுவார்கள். அன்று அநேகமான இந்துக்கள் தங்களது
வைகாசி பெருவிழாவிற்கு வருகைதந்து
பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் குழுமியி ருந்தனர்.
சதுக்கம் நாலுபக்கமும் சுவரால் அடைக்கப்பட்டிருந்தது. பக்கங்களில்
கதவுகளும், முன்பக்கத்தில் பெரிய கதவு
ஒன்றும் இருந்தது. கதவுகளும் யன்னல்களும் கூடும் மக்களுக்கு காற்றோட்டத்தை தந்தன.
இந்த பெருந்தொகை மக்கள் நிராயுதபாணிகளாக பெருநாளுக்கு
கூடியிருந்தாலும், அமிர்தசரஸில்
சில தினங்களாக, சுதந்திரப் போராட்டங்களால் சில கலவரங்கள் நடந்த வண்ணமேயிருந்தன.
இதனை அடக்க பிரித்தானிய அரசுப்
படைகள் நடவடிக்கைகள் எடுத்தன. இந்திய
சுதந்திரத்துக்காக காந்தியுடன் சேர்ந்து போராடிய சத்தியபால் , சையுதின் கிச்சோர்
என்ற இருவரை அரசு கைது செய்திருந்தது. அவர்களை அமிர்தசரஸிலிருந்து அறி விக்கப்படாத
ஒரு பிரதேசத்துக்கு நாடு கடத்தும் ஏற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் வெள்ளையர்கள் தாக்கப்பட்டும், பல கடைகளும், போக்குவரத்திலிருந்த வாகனங்கள் எரிக்கப்பட்டும் வன்முறைகள் நடந்தன.
இதில் மன வேதனையானது குச்சா குறிஞ்சான் என்ற பகுதியில் அரசு நடத்திய அடக்குமுறை
தான்.
அதையடுத்த பகுதியில் மார்செலா சேர்வூட் என்ற ஆங்கில கிறிஸ்தவ கன்னியாஸ்திரி
ஒருவர் சிறுவர் பள்ளிக் கூடங்களை நடத்தி வந்தார். வன்முறைகள் பரவத் தொடங்கியதும் , பிள்ளைகளின்
பாதுகாப்பு கருதி, பாடசாலை களை மூடும் எண்ணத்தில் படையினர் அங்கு செல்லும்போது வழியில்,
ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலுக்கு ஆளாகினார்.
ஆனால், அவரை கன்னியாஸ்திரியாக
அறிந்திருந்த மக்களின் ஈடுபாட்டாலும், சில பிள்ளைகளின் தந்தையர்கள் கேட்டுக் கொண்டதாலும் மேலும் பாதிப்பு
கொடுக்காமல் அவரை விடுவித்தனர்.
சம்பவத்திற்கு ஆளாகிய மார்செலாவை அன்றிரவு அப்பகுதியின்
படைத் தளபதி ரெஜினோல்ட் டயர் சென்று சந்தித்து ஆறுதல் கூறினான்.
அடுத்த நாள், மார்செலா, தடுத்து வைக்கப்பட்டு கஷ்டப்படுத்தப்பட்ட குச்சா
குறிச்சான் என்ற பகுதி வீதியில் செல்லும் எல்லா ஆண்களும் தவழ்ந்துதான் வீதியை கடக்க வேண்டும் என்ற உத்தரவைப் போட்டு, அதனை அமுல் படுத்தினான் தளபதி டயர். அவனது இறுமாப்பு அவ்வாறு கொடுமையாக இருந்தது. இந்தியர்கள் தங்களது கடவுள்களை முழங்காலில்
தவழ்ந்து வழிபடுவார்கள். ஆங்கிலேயரும் பெண்களும் கடவுளுக்கு சமமாக
நடத்தப்படுகிறார்கள்.
ஆகவே அவர்களை மதிப்பதற்காக இந்த இந்தி
யர்கள் இந்த வீதியில் இப்படி தவழ வேண்டும், அப்பொழுது தான் அவர்கள் புரிந்து
கொள்வார்கள் என்று அகங்காரம் கொண்டான். அதனை அடுத்து, கலவரக்காரர்கள் எதுவித அறிவிப்புகளுமின்றி அடித்து
விரட்டப்படுவார்கள் என்றும் அறிவித்தான்.
இந்த பின்னணியில் இந்த டயருக்கும் அவனுக்கு மேலதிகாரியாக இருந்த மைக்கேல்
டயருக்கும் மக்கள் ஜாலியின் வாலா சதுக்கத்தில் கூடியது ஒரு சவாலாகவும் தங்களது
அதிகாரத்துக்கு எதிர்ப்புமாகப்பட்டது.
அதனை நசுக்கிப் பாடம் புகட்டத் தீர்மானித்தனர்.
மாலை நேரமாகியதும் மக்கள் தொழுகைகளிலும்
பாராயணங்களிலும் இருந்தபோது டயர் துப்பாக்கி தரித்த 500
காலாட் படையினரோடும் பீரங்கிகளோடும் சதுக்கத்தை அடைந்து நாற்புறமும் சுற்றி
வளைத்தான்.
எல்லாப் பக்கத்து கதவுகளையும் இடைமறித்து, அங்கு துப்பாக்கி தரித்த சிப்பாய்களுக்கு
ஒருவரையும் ஓடவிடாது பார்க்குமாறு கட்டளையிட்டு மக்களுக்கு எவ்வித
முன்னறிவித்தலுமின்றி சுடுவதற்கு ஆணையிட்டான்.
துப்பாக்கியை ஆகாயத்தில் சுட்டுப் பயப்படுத்தவில்லை. மக்களுக்குள்ளே
செறிந்த பகுதிகளில் சுடுமாறு பணித்தான். அல்லோல கல்லப்பட்டு ஓடி அவதியுற்ற மக்களை
கதவடியில் நின்ற சிப்பாய்கள் தப்பவிடவில்லை.
சிப்பாய்களிடமிருந்த ரவைகள் தீரும் வரை சுட்டச்சொன்னான். ஆண்கள், பெண்கள், முதியோர், இளைஞர் என்ற
பேதமின்றி நிராயுதபாணிகளாக நின்ற மக்கள் மடிந்து கிடந்தனர்.
செய்தி பரவியது. சுதந்திர தலைவர்களெல்லோரையும் கோபத்திலும் விசனத்திலும்
அது ஆழ்த்தியது. காந்தி வந்தபோது அவர் ஆண்களிடமும் இளைஞர்களிடமும், “ ஏன் திருப்பித் தாக்கவில்லை, உங்களது உறவினர்களின் உயிர்களை
பாதுகாக்கவில்லை..?” என்று கேட்டார். நீங்கள் பத்தாயிரத்திற்கும் மேலானவர்கள் நின்றீர்கள். அவர்கள் ஐநூறு பேர்தான். ஆகக் கூடினால் ஐந்தோ ஆறு பேர் கதவுகளுக்கு
அருகில் நின்றிருப்பார்கள். அவர்களைத்
தாக்கி மக்கள் ஓடுவதற்கு ஏதுவாக கதவுகளை
திறந்து விட்டிருக்கலாமே என்று வினாவினார்.
“ நீங்கள்தானே அகிம்சையை
கடைப்பிடிக்கச் சொன்னீர்கள் “ என அவர்கள் பதிலளித்தார்கள். காந்தி மிகவும்
விசனப்பட்டார்.
படுகொலை அதிர்வுகள்
இந்த ஜாலியின் வாலா படுகொலைகள், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் திருப்பு
முனையாகவும் அமைந்தன. இங்கிலாந்திலும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இந்தியரை அடக்கவும் காலனி அதிகாரத்தை பாதுகாக்கவும் ரெஜினோல்ட்
டயர் செய்தது சரியானது என்று மைக்கேல்
டயரும் சிலாகித்தான். அவனை போலவே இங்கிலாந்தின் மேல்மட்ட வர்க்கத்தினர் (
House of Lords )
டயரை பாதுகாக்க விழைந்தனர். ஆனால்,
பொதுமக்கள் தரப்பும் அவர்களது அவையும் ( House of Commons ) அவன் செய்தது அத்து மீறிய செயல்,
தண்டிக்கபடவேண்டும் என்ற நிலைப்பாட்டில் நின்றன.
விசாரணை கமிஷன் ஒன்று நிறுவப்பட்டு, அதனடிப்படையில் அவன் பதவியிலிருந்து
நிறுத்தப்பட்டான். ஆனாலும் அவன் மேலதிகாரிகளின் உத்தரவோடு (மைக்கல் டயர்)
செயல்பட்டாலும் தன் கடமையில் காலனித்துவ ஆட்சிக்கு விசுவாசமாக நடந்தான்
என்பதற்காகத் தண்டிக்கபடவில்லை. இங்கிலாந்துக்கு அவன் திரும்பியதும் தமது நாட்டிற்கு சேவை புரிந்தவர்களாகவே இவனும்
மைக்கல் டயரும் பார்க்கப்பட்டு பல இடங்களில் பேச்சுக்களுக்கும் கௌரவங்களுக்கும்
அழைக்கப்பட்டனர். விசாரணை கமிஷனில் டயர் எடுத்த நிலைப்பாடு எல்லோரையும்
உலுக்கியது. உறுத்தியது. அவன்தான் மக்களுக்கு ஓடுவதற்கு அறிவிப்போ அவகாசமோ
தரவில்லை என்பதை ஏற்றுக் கொண்டான். அவர்களுக்கு பாடம் புகட்டவே அங்கு போனேன்,
அந்தப் பாடத்தை கற்பித்தேன். எவ்வளவு பேரை கொல்ல முடியுமோ, அவ்வளவு பேரையும் முடிப்பதே எனது
எண்ணம். கொண்டு போன ரவைகள் தீர்ந்ததால் நிறுத்தி விட்டேன். பீரங்கிகளை கொண்டு
செல்ல கதவுகள் இடமளிக்கவில்லை. இயலுமாகவிருந்தால் பீரங்கிகளையும்
பாவித்திருப்பேன். அவர்கள் நிராயுதபாணிகள் என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.
அவர்கள் ஒன்றுகூடக் கூடாது என்று உத்தரவு இருந்தது. ஆனால், மீறினார்கள். அது அவர்களுக்கு ஒரு பாடமென்பதே
எனது கருத்து. என்ற நிலைப்பாட்டில் நின்றான்.
( தொடரும் )
( நன்றி: யாழ். காலைக்கதிர் )
No comments:
Post a Comment