நல்லைநகர் நாவலர் பெருமான் நமக்கென்றும் வழிகாட்டி !மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... ஆஸ்திரேலியா - 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் 


உலகிலே பிறக்கின்ற மனிதரெலாம் உயர்வு நிலையினை அடைந்து விடுவதும் இல்லை. இலட்சியம் பற்றிச் சிந்திக்கும் நிலை பலரிடம் காணப் படுவதும் இல்லை. பிறந்தோம் வாழுகிறோம் என்னும் பாங்கில் இருப்பவர்கள்தான் பல பேர்களாக இருக்கிறார்கள். வாழும் காலத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள இயலாமல் பிரச்சினைகள் வழியில் சென்று அதனுடன் ஒத்துப்போய் இருப்பவர்களும் இருக்கிறார்கள். அதேவேளை நமக்கு ஏன் இந்தப் போராட்டம். வருகின்ற பிரச்சினைகளை புறந்தள்ளி விட்டு  விட்டு தானாக ஒதுங்கி நமக்கேன் இந்தச்  சிக்கல் ?  ஒதுங்குவதுதான் மேலென எண்ணி இருப்பவர்களும் இருக்கிறார்கள். என்னதான் பிரச்சினைகள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு அவற்றுக்குத் தீர்வு கண்டு அந்தப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினைக் காணும் முயற்சியில் ஈடுபட்டு  முற்போக்காளர்களாக சமூகச் சிந்தனையாளர்களாக இருப்பவர்களும் இருக்கிறார்கள்.

   மூன்றுவகையான சிந்தனை , செயற்பாடு, மிக்கவர்கள் சமூகத்தில் காணப்படும் வேளை; இவர்களில் எந்த வகையினரை சமூகம் நினைத்து பார்க்கும் என எண்ணுகின்ற பொழுதுதான் மனித வாழ்வின் அர்த்தம் தெரியவரும். பிரச்சினைகளுடன் ஒத்துப்போய் கையாலாகாத நிலையில் இருப்போரையோ அல்லது பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க முடியாமல் நமக்கேன் என்று புறந்தள்ளி ஒதுங்கிப் போகின்றவர்களையோ யாரும் எக்காலத்தும் நினைத்துப் பார்க்கவே மாட்டார்கள். சமூகத்தின் பிரச்சினைகளை எதிர்கொண்டு அவற்றுக்கு உகந்த தீர்வுகளைக் கண்டறிந்து அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு சமூக உணர் வினை உள்ளத்துள் இருத்திக் கொண்டு வாழ்ந்தவர்கள்தான் எல்லோராலும் எக்காலத்தும் நினைவு கூரும் நிலைக்கு நிற்பார்கள் என்பது மிகவும் முக்கிய கருத்தெனலாம். இந்த வகையில் பார்க்கும் வேளை ஈழத்தின் வடக்கில் நல்லைநகர் ஆறுமுக நாவலர் பெருமானை எடுத்துக் கொள்ளலாம் அல்லவா ! 

ஆசியாக்கண்டம் பரந்தது விரிந்தது. ஆசியாக்கண்டத்தில்  காணப்படும் கலாசாரத்தின் அடிநாதமாக மெய்யியல் இருப்பதாக அறிஞர்கள் கருதுகின்றார்கள். இந்த மெய்யியல் பல சோதனைகளுக்கும் வேதனைகளுக்கும் ஆளாகி இருப்பதை வரலாற்றால் அறிய முடிகிறது. சோதனைகளையும் வேதனைகளையும் எதிர் கொண்டாலும் மெய்யியலை மட்டும் இழந்துவிட விரும்பாத நிலையில் சூழலுக்கு ஏற்ப ஒரு கலாசாரத்தை ஏற்படுத்தி அதனைவளர்ப்பதற்கும் அதனை வாழ்வுடன் இணைத்து நிற்பதற்கும் முயற்சிகள் நடைபெற்றதையும்அதற்கு தலைமை ஏற்பதற்கு தகுதியானவர் வந்த நிலையினையும் காணமுடிகிறது.இந்த வகையில் ஈழத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் -தமிழையும் சமய இலக்கியத்தையும் சேர்த்துக் கொண்டு வீறுபெற்று ஒரு தனித்துவமான கலாசாரம் எழுவதற்கு நல்லைநகர் நாவலர் பெருமான் காரணகர்த்தாவாக வந்து நிற்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை எனலாம்.

     ஆசியநாட்டில் இந்தியாவின் நிலை மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகும். சமயம் இலக்கியம் ஆன்மீகம். கலைகள்இந்தியாவின் சொத்துக்களாகும்.ஞானிகள் பலரை இந்தியா தந்திருக்கிறது. வேதங்கள்ஆகமங்கள்சாத்திரங்கள்புராணங்கள்இதிகாசங்கள்திருமுறைகள்யாவும் பொக்கி ஷங்களாகி அமைந்திருக்கின்றன. சமணம்பெளத்தம்சைவம்வைஷ்ணவம்என்று மதங்கள் பலவும் அவை சம்பந்தமான கருத்து மோதல்கள் பலவித பிணக்குகள் யாவும் இந்தியாவில் இருந்ததை வரலாற்றால் அறிகிறோம். ஆனால் இப்படியொரு நிலை ஈழத்தில் காணப்படவில்லை. குறிப்பாக       யாழ்ப்பாணத்தில் இருக்கவே இல்லை என்பதும் முக்கியமாகும். யாழ்ப்பாணமும் அங்குவாழ்ந்த தமிழ்மக்களும் இந்தியத் தொடர்பை விட்டுவிடவில்லை. அதே வேளை இந்தியாபோல் இருந்திடவும் நினைக்கவில்லை. இந்திய சிந்தனைகளை உள்வாங்கி அவற்றை வைத்துக் கொண்டு தமக்கென ஒரு பண்பாட்டை  உருவாக்கிட  முனைந்தமை முக்கியத்துவம் மிக்கதெனலாம்.

    தமிழ் இலக்கிய நூல்களும் சமய இலக்கிய நூல்களும் இந்தியாவின் பொக்கிஷங்கள் என்பது மிகவும் பெருமைதான். ஆனால் ஈழத்துத்தமிழர்கள் தமிழ் சமய இலக்கியங்களில் காட்டும் ஈடுபாடும் உறுதிப்பாடும் அங்கு காணப்படும் நிலை சற்று தளப்பமாய் இருக்கிறது என்பதும் நோக்கத்தக்கதாகும். அதற்கு அங்கு காணப்படும் சமூகநிலையும்அரசியல் நிலையும் காரணமாகக் கூட  இருக்கலாம். என்றாலும் இந்தியாவின் அங்கீகாரம் குறிப்பாக தமிழகத்தின் அங்கீகாரம் பெரிய அங்கீகாரமாக அன்றும் தேவைப்பட்டது. இன்றும் அந்த நிலை தொடர்கிறது என்பதும் மனமிருத்த வேண்டிய கருத்து எனலாம். 

   சமணத்தாலோ பெளத்தத்தாலோ  வைஷ்ணவத்தாலோ ஆரியத்தாலோ திராவிடத்தாலோ ஈழத்தவர்கள் குறிப்பாக யாழ்ப்பாணத்து சமூகம் தாக்கமுறும் நிலை ஏற்படவில்லை. அதற்கான சூழலும் அங்கு காணப்படவில்லை. ஆனால் இவையாவும் இந்தியாவில் நிறைந்தே இருந்தது.தமிழகத்தில் இவற்றின் தாக்கம் மிகுந்து காணப்பட்டது என்பதும் கருத்திருத்த வேண்டியது முக்கியமாகும். ஆனால் எங்கிருந்தோ வந்துநின்ற எங்கள் பண்பாட்டுக்கே பொருத்தமில்லா கூட்டத்தால் ஏற்பட்ட வினையால் சமூகத்தில் வேண்டத் தகாத விளைவுகள் வந்துநின்றன. இந்த வினையை வெட்டி எறிந்து தமிழ் சமய பண்பாட்டைக் காப்பாற்றி அப்பண்பாட்டை நிலை நிறுத்த வேண்டிய கட்டாயமே ஈழத்தில் குறிப்பாக யாழ்மண்ணுக்கு தேவையாய் இருந்தது. அந்த நிலையிலே வந்து நிற்கிறார் நாவலர் பெருமான் அவர்கள்.

    போர்த்துக்கேயர்ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என்னும் அன்னியர் வருகையினால் யாழ்ப்பாணத்தின் கோலமே மாறியது. சைவசமயம் பதறியது. கோவில்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டன.கிறீத்தவம் தலைவிரித்து நின்றது. மதம் பரப்பும் போதகர்கள் மதம்பிடித்து நின்றார்கள். சைவமும் தமிழும் தமிழர் தம் வாழ்வும் ஊசலாடியபடியே காணப்பட்டது. அங்கு வாழ்ந்தவர்கள் தங்களின் சமய நடவடிக்கைகளை செய்ய முடியா நிலைக்கு ஆளாக்கப் பட்டார்கள். காலங்காலமாய் கடைப்பிடித்து வந்த பண்பாடு அவர்களின் கண் முன்னாலேயே சிதறுண்டு போகும் நிலையே காணப்பட்டது. 

    சைவத்தைக் கடைப்பிடித்து தமிழ் சமய இலக்கியங்கியங்களை உயிரென்று எண்ணி வாழ்ந்தவர்கள் அன்னியச் சூறாவளியினால் அவதிக்கு ஆட்படும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். கோவில்கள் தோறும் கந்தபுராணம் படிக்கப் பட்டது. கந்தனுக்குரிய விரதங்களை மக்கள் மிகவும் பக்குவமாக அனுட்டித்து வந்தார்கள். தமிழும் சமயமும் மலர்ந்தும் விரிந்தும் நல்லதொரு பண்பாடு ஒளிவிட்டு இருந்தது.ஆனால் அவையாவுமே கேள்விக்குறியாகியதால் மக்கள் திசையறியா கலமாக இருந்தார்கள். 

    சமணத்தை நன்கு கற்று அதன் தலைமைப் பீடத்தில் இருந்தவர்தான் நாவுக்கரசர். அதே நாவுக்கரசர்தான் சைவத்தைக் காத்திட உழவாரப் படையினை கையில் ஏந்தி சமணத்தை எதிர்த்து சைவத்தின் காவலனாக வந்து நின்றார். இதன் காரணத்தால் திருநாவுக்கரசு நாயனார் சைவத்தமிழ் உலகில் இன்று வரை போற்றுதலுக்கு உரியவராக நிற்கிறார்.அப்பர் பெருமான் என்று சைவர்கள் அவரை அழைப்பதில் அகநிறைவு எய்துகிறார்கள் எனலாம்.

     அப்பரைப் போல ஒருவராக ஆறுமுக நாவலரும் அக்கால யாழ்ப்பாண நிலையில் சைவத்தைக் காத்திட வந்து நிற்கிறார். நாவர் ஆங்கிலத்தில் கற்றார். கிறீத்தவ சூழலில் அவர் கற்றல் நிகழ்ந்தது. கிறீத்தவத்தை நன்கு தெரிந்தவர் ஆகிறார். அதனால் கிறீத்தவ வேதாகம நூலான பைபிளை தமிழில் மொழிபெயர்க்கும் ஆற்றலையும் பெற்று நிற்கிறார். முழுக்க முழுக்க கிறீத்தவ சூழலில் நின்ற ஆறுமுகநாவலர் மனம் முழுவதும் சைவமே நிறைந்து நின்றது. இதனால் சைவத்தை காத்திட சைவ தமிழ் இலக்கியங்கியங்களை காத்திட நாவலர் வீறுகொண்டு எழுகின்றார். 

    தமிழ் இலக்கியங்களை தமிழ் இலக்கணத்தை சைவ இலக்கி யங்களை ஆராத காதலுடன் ஐயமகற்றியே ஆறுமுக நாவலர் கற்றார். ஆறுமுகம் என்னும் பெயர்கொண்டவர் தமிழ்நாடு சென்று ஆற்றிய சொற்பெருக்கை கண்ணுற்ற திருவாவடுதுறை ஆதீனமே " நாவலர் " என்னும் பட்டத்தை அளித்து ஆறுமுகத்தை அங்கீகாரம் செய்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து ஆறுமுகமாக சென்றவர் " ஆறுமுகநாவலர் " என்னும் கெளரவத்துடன் திரும்புகின்றார். தமிழகத்தின் அங்கீகாரத்துடன் அவரின் பணிகள் ஆரம்பிக்கப் படுவதும் மனங்கொள்ளத் தக்கதாகும். அங்கீகாரம் பெற்றாலும் யாழ்ப்பாணத்தில் அவரினால் மேற்கொள்ளப் பட்ட பணிகள் ஈழம் முழுவதற்குமே பெரும் பயனை வழங்கியது என்பதை மறுத்துவிட முடியாது.

  பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவிலுள்ள ஏறத்தாள ஐம்பது ஆண்டுகளை நாவலர் காலம் என்று குறிப்பிடலாம். பொதுவாக இக்கால கட்டத்தில் தமிழ்நாட்டிலும் சிறப்பாக ஈழத்திலும் நிலவிய சூழ்நிலையே ஆறுமுக நாவலரைத் தோற்றுவித்தது எனலாம். பல இலட்சம் தமிழ்ச் சைவர்கள் ஆறுமுகநாவலரின் காலத்தில் வாழ்ந்தார்கள்.ஆனால் தமிழ்ச் சைவர்களில் ஒருவரே ஆறுமுகநாவலர் ஆகிவிட முடிந்தது. இங்குதான் நவலரின் பெருமை புலப்பட்டு நிற்கிறது எனலாம்.

   பல்லவர் , பாண்டியர், சோழர், ஆரிய சக்கரவர்த்திகளால் சைவமும் தமிழும் பாராட்டி வளர்க்கப்பட்டன. பாண்டியர் வீழ்ச்சியின் பின்பு சைவத் தமிழ் மன்னரால் தலையெடுக்க முடியாமற் போய்விட்டது.பதினான்காம் நூற்றாண்டின் பின் சைவத் தமிழர் பிறர் தயவில் வாழக் கற்றுக் கொண்டனர்.  பதினேழாம் நூற்றாண்டு முற்பகுதிவரை யாழ்ப்பாணத்தில் சைவத் தமிழர் ஆட்சி இடம் பெற்றிருந்தது. தமிழகத்தில் ஒரு சாராரே சைவராக இருந்தார்கள். அவர்களுள் இன்னொரு சாரார் வைஷ்ணவத்தை தழுவியிருந்தார்கள்.சைவசித்தாம் செல்வாக்கு பெற்றிருந்தாலும் வேதாந்தமும் செல்வாக்குடன் அங்கு விளங்கியது என்பதும் நோக்கத்தக்கதாகும்.இப்படியான ஒரு சூழல் காணப்பட்டாலும் - அங்கிருந்த நிலை பாரம்பரிய தமிழ்க் கலாசாரத்தை விட்டுவிடாமல் அதனுடன் பிணைந்தே இருந்த காரணத்தால் - ஈழத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தோன்றிய சைவத் தமிழ் இயக்கம் போன்ற ஒன்று இந்தியாவில் தோன்ற வில்லை என்பது மனமிருத்த வேண்டிய முக்கிய விடயமாகும். சமரச சன்மார்க்க இயக்கங்கள் உருவாவதற்கே இந்தியச் சூழ்நிலை வழிவகுத்தது எனலாம். 

  இந்தியாவின் செல்வாக்கு ஈழத்தில் காணப்பட்டாலும் ஈழத்தின் சமூகநிலை இந்தியா போன்று இல்லாத காரணத்தால் இங்கு உருவான பண்பாடும் வித்தியாசமானதாகவே அமையும் நிலை  ஏற்பட்டது எனலாம். புராணங்களில் கந்தபுராணத்தைப் போற்றும் மனப்பாங்கு தமிழ்நட்டைவிட யாழ்ப்பாணத்தில் நிறைந்தே  இருந்தது எனலாம். கந்தபுராணத்தைச் சொந்த புராணமாக இங்குள்ள சைவர்கள் போற்றினார்கள். கோவில்கள் தோறும் கந்தபுராணத்தைப் படித்து அதன் விளக்கத்தை விபரமாக எடுத்துரைக்கும் ஒரு பணி தெய்வீகப் பணியாக யாழ்ப்பாண மக்களால் மேற்கொள்ளப் பட்டுவந்தது. 

  போர்த்துக்கேயர் , ஒல்லாந்தர், ஆங்கிலேயர் வருகையால் யாழ்ப்பாணத்தின் நிலையே தலைகீழானது. கோவில்கள் இடிக்கப்பட்டன. மதமார்றம் கட்டாயம் ஆக்கப்பட்டது. கல்வியில் மாற்றம் ஏற்படுத்தப் பட்டது. பாரம்பரிய பண்பாடு கேலிக்கு உரியதாக்கப் பட்டது. சுதேசம் தொலைந்து போகும் நிலை உருவானது.அன்னியரின் கெடுபிடியால் பலர் மதம் மாற்றப் பட்டனர். பணத்துக்கும், பட்டத்துக்கும்,தவிக்கும், உயர் அந்தஸ்த்துக்கும் என்று பலர் மதத்தை பண்பாட்டை துறக்கும் நிலை உருவாக்கப்பட்டது.பயதின் காரணமாயும் இந்த வலைக்குள் பலர் மாட்டுப் பட்டார்கள். களப்பிரர் காலம் போல ஈழத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஒரு இருண்ட காலமே நிலவியது எனலாம்.

   தமிழ் படிக்க முடியாத நிலை. சைவத்தை கைக்கொள்ள முடியாத நிலை. திருமுறைகளை ஓத முடியாத நிலை. விரதங்களை அனுட்டிக்க முடியாத நிலை. சைவர்களாய் தமிழர்களாய் வாழுவதே மிகவும் கஷ்டமாய் ஆகிவிட்ட நிலை.    " வேதநெறி தளைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்க ஒரு குழந்தை புனிதவாய் மலர்ந்து அழுதது",  "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் " என்று ஒரு குரல் எழுந்து நின்றது. அதேபோன்று யாழ்ப்பாணத்தில் அவ்வேளை ஒரு குரல்  எழுந்தது. அந்தக்குரல்தான் ஆறுமுகநாவலர் குரலாகும். 

   நாயன்மார்கள் ஊர்கள்தோறும் சென்று பக்திப் பரவசம் நல்கும் பாடல்களைப் பாடி மக்களிடம் சமய நல்லுணர்வையும் நல் வாழ்க்கை முறைகளையும் சேர்ப்பித்தார்கள். அவர்களின் அர்ப்பணிப்பால் மக்களிடம் நல்லதொரு மாற்றம் ஏற்பட்டது. புத்துணர்ச்சி உருவானது. பக்தியென்னும் இயக்கம் வீறு கொண்டு எழுந்தது. தமிழும் வளர்ந்தது. சமயமும் வளர்ந்தது. சமூகத்திலும் நல்லதொரு மாற்றமும் விளைந்தது. கலங்கிய சமூகம், தடுமாறிய சமூகம், நிதானம் அடைந்தது. மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்னும் நம்பிக்கையும் பிறந்தது. நற்றமிழை நாவாரப் பேச வேண்டும். நற்றமிழால் இறைவனை துதிக்க வேண்டும். நற்றமிழும் சமயமும் இரண்டு கண்கள் என்னும் உணர்வும் எல்லோர் மனதிலும் ஊற்றெடுக்க வைக்கப் பட்டது.

  நாயன்மார்கள் காலம் பாடல்கள் கோலோச்சிய காலம். அதனால் எதைச் சொல்வதாக இருந்தாலும் அதற்கு வழி பாடல் என்னும் ஊடகம்தான். ஆனால் நாவலர் காலம் அப்படியானது அன்று. அதனால் நாவலர் அவர்கள் தனது சமய தமிழ் சமூகப் பணிகளுக்கு உரைநடையினையே உறுதுணை ஆக்கினார். பேச்சு, எழுத்து, விளக்கம், யாவும் நாவலரின் உத்வேகமான உரைநடை போக்கில் வெளிவந்து நின்றது.

  அன்று யாழ்ப்பாணம் இருந்த சூழலில் ஆறுமுகநாவலர் மட்டும் உருவாகி இருக்காவிட்டால் இன்று ஈழத்தில் சைவமே இருந்திருக்காது. தமிழும் அதுசார்ந்த பண்பாடும்,தமிழ் சைவ இலக்கியங்களும் காணாமலேயே போயிருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை எனலாம்

    நாவலர் பெருமானின் வழியானது சைவசமயம் வழிசார்ந்து தமிழ் வளர்ப்பதாக அமைவதை அவரின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் கண்டு கொள்ளமுடிகிறது என்று அறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். சைவ சமயத்தின் குரவராக நாவலர் பெருமான் போற்றப்படுகிறார். தமிழும் சைவமு நாவலர் பெருமானின் இருகண்கள் என்று அறிஞர்கள் விதந்து போற்று வார்கள். " நல்லைநகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல்- சொல்லு  தமிழெங்கே சுருதியெங்கே " என்னும் வாக்கு நாவலரின் பணிக்கு நல்ல ஒரு சான்றாகி நிற்கிறதல்லவா ! கந்தபுராணம்பெரியபுராணம்திருவிளையாடற் புராணம்இவற்றையே அவர் கையில் எடுக்கிறார். இவற்றுக்கு வசனமாய் தமிழில் உரை எழுதுகிறார். சைவ வினாவிடையை தமிழிலே எழுதுகிறார். சைவப் பாடசாலைகள் நிறுவ முயலுகிறார். கோவில்களில் புராண விரிவுரைகள் ஆற்றுகிறார். புராணங்களுக்குப் பயன் சொல்லும் முறையினைப் பரவிடச் செய்கிறார். புராணத்துக்குப் பயன் சொல்லும் பொழுதெல்லாம் தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள் யாவும் அவற்றின் ஊடாக யாவரிடமும் போய்ச் சேரச்செய்து நின்றார்.

 தான் தேர்ந்தெடுத்த சைவத் தமிழ் நூல்களையும்தமிழ் இலக்கிய இலக்கண நூல்களையும் அச்சிட்டு வெளியிட நாவலர் எடுத்த முயற்சி அவரின் தமிழ் வளர்ச்சியில் மிகவும் முக்கிய அம்சமென்றே கருதலாம். சிதம்பரத்தில் அச்சுக்கூடம் நிறுவி பல நூல்களை வெளிக்கொணர்ந்தார்அத்தோடு நில்லாமல் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையிலும் அச்சுக்கூடத்தை ஆரம்பித்து தமிழ் சைவநூல் களையும்,  மாணவர்கள் படிப்பதற்கான பாலபாடப்பு த்தகத்தையும்,  

பெரியபுராண ,   கந்தபுராண திருவிளையாடற் புராண வசன நூல்களையும் அச்சிட்டு வெளியிட்டார். தமிழ் ஏடுகள் பலவற்றைப் பரிசோதித்து எழுத்துப் பிழைகள் இல்லாமல் பழந்தமிழ் நூல்களை நாவலர் பெருமான் அச்சுவாகனமேற்றி அனைவரும் பயன் பெறுவதற்கு பெருமுயற்சிகள் செய்திருக்கிறார்.

அகத்தியர் அருளிய தேவாரத்திரட்டு நூல் தொடக்கம் விநாயக கவசம்  நூல் வரை நாவலரின் கையூடாக எழுதியும் அச்சாகியும் வந்தன எனும் வகையில் அறுபது நூல்களைக் காணமுடிகிறது.நன்னூல் விருத்தி உரைகாண்டிகை உரைஇலக்கணச் சுருக்கம்இலக்கண வினாவிடை இலக்கணம் படிப்பார்க்கு என்றுமே கைகொடுக்கும் நாவலர் பெருமானின் நற்கொடை எனலாம். சாதாரண மக்களும் விளங்கும் வகையில் தமிழ் உரைநடையினை கையா ண்டு வெற்றிகண்டவர் நாவலர் பெருமான் எனலாம். இதனால்த்தான்  " வசனநடை கைவந்த வல்லாளர் " என்று இன்றும் போற்றப்படுகின்றார்.

     பன்மொழி அறிவாளியான நாவலர்பெருமான் தமிழ் வளர்ச்சியில்  தனக்கென ஒரு வழியினை வகுத்துக் கொண்டார்.ஏட்டிலிருந்த பழந்தமிழ் இலக்கியஇலக்கணசமயம்சார்ந்த நூல்களைக் கண்டெடுத்து அவற்றை யாவரும் படித்துப் பயன் அடையும் வண்ணம் காலம் காலமாய் இருக்கும் படி அச்சுவாகனம் ஏற்றி புத்தக நிலைக்குக் கொண்டுவந்தார். படிப்பவர்கள் ஐயம் இன்றி படிப்பதற்கு அரிய தெளிவான விளக்க உரைகளையும் அந்தப் புத்தகங்களில் இடம் பெறச் செய்தார். எழுத்துப் பிழை என்னும் அரக்கனைத் தேடித் தேடி இல்லாமலேயே தனது பதிப்புகளை வெளிக் கொணர்ந்தார். பாடசாலைகளை நிறுவி நல்லதோர் பாடத்திட்டத்தை தயாரித்து யாவரும் கல்வி அறிவு பெறவேண்டும் என்று தன் வாழ்நாள் முழுவதும் ஓயாது உழைத்து நின்றார். எழுத்தாலும்பேச்சாலும்தமிழ் வளர என்னவெல்லாம் தனது ஆற்றலுக்குச் செய்யமுடியுமோ அவற்றையெல்லாம் நாவலர் பெருமான் செய்திருக்கிறார் என்றுதான் கருதமுடிகிறது.
  நாவலர் பெருமான் தனக்கென ஒரு பாதையினை வகுத்துக் கொண்டார். அதன் வழியில் பயணிப் பதில் அவர் துணிவு கொண்டார். செய்யும் அனைத்தும் சிறப்பாக அமையும் வகையில் திட்டங்களையும் வகுத்துக் கொண்டார். பலர் பலவற்றையும் சொல்லுவார்கள். சொல்லியவாறு செய்வதில் பின்னின்று விடுவார்கள். ஆனால் நாவலர் பெருமான் சொல்லுவதைக் கட்டாயம் நிறைவேற்றியே நின்றார். ஆசாரம் பற்றிப் பேசிவிட்டு நிற்கவில்லை. தானே வாழ்ந்து காட்டினார். சைவத்தைக் கடைப்பிடிப்பதில் கையாளப்படவேண்டிய முறைகளை எழுத்தாயும் பேச்சாயும் தந்த நாவலர் பெருமான் அதன் படி தானே வாழ்ந்தார் என்பதுதான் இங்கு மனமிருத்த வேண்டிய விஷயம் எனலாம். தலைமை எப்படி இருக்க வேண்டும் என்பதை நாவலர் பெருமான் சமூகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார் என்பதை எவரும் மறுத்துவிட முடியாது என்பதும் மனமிருத்த வேண்டியதேயாகும்.
 நாவலரின் கல்விச் சிந்தனைகள் பல்கலைக்கழகத்திலும் கற்பிக்கும் அளவுக்கு பெறுமதியாய் இருக்கிறது. நாவலர் சமயத்தைப் பரப்புதற்குத் தமிழினைக் கையாண்ட போதிலும் - தமிழினையும் உயிரெனவே எண்ணினார் என்பதும் மனக்கொள்ளத் தக்கதாகும். இல்லா விட்டால் " நல்லைநகர் நாவலர் பிறந்திலரேல் சொல்லு தமிழெங்கே " என்னும் கரு தோன்றியிருக்க முடியாது அல்லவா ! 
 நாவலர் பெருமானின் பிறப்பு யாழ்ப்பாணச் சமூகத்துக்குக் கிடைத்த பெருவரம் என்பதோடு சைவத்துக்கும் தமிழுக்கும் அமைந்த பெரு வரம் என்றும் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். ஈழத்தின் தேசியத் தலைவராக நாவலர் பெருமான் ஒளிவிட்டு நிற்கிறார் எனும் தமிழரெல்லாம் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள் அல்லவா ! நாவலர் பெருமானின் வாரிசுகளாய் அவரின் வழிநடக்கும் பலரை நாவலர் பெருமான் உருவாக்கிச் சென்றிருக்கிறார். அவர்களில் பலர் இன்றும் எம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நாவலர் பெருமானை நினைக்கும் வேளை எமக்கெல்லாம் ஒரு புத்துணர்ச்சி கட்டாயம் புறப்பட்டே வந்து நிற்கும் ! ஏனென்றால் அவர் ஒரு செயல் வீரர் ! 
 1913 ஆம் ஆண்டிலே நடைபெற்ற சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலை என்னும் பெயருடைய கல்வி நிலையத்தின் விழாவில் பங்கு கொண்ட சென்னை உயர்நீதி மன்றத் தலைவராக விளங்கிய திரு . சதாசிவ ஐயர் அவர்கள் " நாவலரைப் போல முன்னும் இப்பொழுதும் தமிழ் வித்துவான்கள் இல்லை. ஒருவேளை இருந்தாலும் அவரைப் போலத் தமிழ் மொழியையும் , நல்லொழுக்கத்தையும் , சைவத்தையும் , வளர்த்து நல்ல தமிழ் வசன நடையில் நூல்களை எழுதி அச்சிட்டு வெளிப்படுத்தித் தமிழ் நாட்டாருக்கு உதவி செய்தவர் வேறொருவரும் இல்லை. பொருள் வரும்படிக்காகப் பிறரை வணங்காதவர்களும் அவரைப் போல் ஒருவரும் இல்லை " என்று மொழிந்த அந்தக் கூற்றை யாவரும் சிந்தையில் இருத்திடல் நன்றாகும்.

நல்லைநகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல்

சொல்லு தமிழெங்கே சுருதியெங்கே - எல்லவரும்
ஏத்து புராண ஆகமங்கள் எங்கே ப்ரசங்கம் எங்கே
ஆத்தன் அறிவு எங்கே அறை. 

  


No comments: