அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 43 – பாண்டில் அல்லது தாளம் – சரவண பிரபு ராமமூர்த்தி


பாண்டில் அல்லது தாளம் – கஞ்சக்கருவி


உலோகங்களால் வார்க்கப்படுபவை கஞ்சக்கருவிகள். ஜால்ரா, சிங்கி,


மணி, ஜாலர் என பல பெயர்களால் அழைக்கப்படும் தாளம், கஞ்சக்கருவிகள் வகையைச் சேர்ந்தது.  இசையின் கால அளவுகளை சீர்படுத்தி நேர்க்கோட்டில் பயணிக்கச் செய்வதே தாளம். இசையும் தாளமும் உடலும் உயிரும் போன்றது. பிரித்தால் இரண்டுமே இறந்துபோகும். நாதசுரம், மிருதங்கம், கடம், கஞ்சிரா, ஆகிய எல்லா லய வாத்தியங்களையும் தாளம் தான் கட்டுப்படுத்துகிறது. பழங்குடி மக்களின் நாட்டியத்தில் இருந்தே தாளம் பிறந்ததாகச் சொல்கிறார்கள் இசையறிஞர்கள். வேட்டையாடிக் கிளர்ந்த மகிழ்வு அதிர அவர்கள் ஆடும் நடனத்தில், பாடலுக்குத் தகுந்தவாறு பாதங்களைக் கொண்டு செய்த கணக்கீடே 'தாளம்’ என்றானதாம். ஆஸ்திரேலிய பழங்குடிகள் ஒரு சிறிய கல்லில் கட்டைக்கொண்டு தட்டி தாளமிடுகிறார்கள்.

 

காலப்போக்கில், தாளத்திற்கென ஒரு இசைக்கருவி வடிவமைக்கப்பட்டது. இரண்டு உலோகத் துண்டுகள் அல்லது கட்டைகளே முதலில் தாளமாக பயன்படுத்தப்பட்டன. அதன்பின் இலக்கண சுத்தியோடு நவீன தாளக்கருவிகள் வந்தன. இலைதாளம், குழிதாளம் என தரத்துக்கும் தன்மைக்கும் ஏற்ப பெயர்களும் உருவாயின.  ஓதுவார்கள், நட்டுவனார்கள், நாட்டுப்புற பாடகர்கள் என இசையோடு தொடர்புடைய பலரும் தாளக்கருவியைப் பயன்படுத்துகிறார்கள். தெருக்கூத்து, கோலாட்டம், வில்லுப்பாட்டு, கனியான் கூத்து, எருதுகட்டு மேளம், பழங்குடியினர் இசை


, கொங்கு நாட்டின் கொட்டுத்தவுல் சாமி அழைப்பு, நாடகங்கள் போன்றவற்றிலும் இது முதன்மை பெற்றிருந்தது. திரிபுடை தாளம் முழங்க, நாதசுரக்காரர் இசைக்கும் மல்லாரி ராகத்தை வைத்தே பல கிலோமீட்டர்களுக்கு அப்பால் வசிக்கும் மக்கள், இறைவன் வீதியுலா தொடங்கியதைத் தெரிந்து கொள்வார்கள். இன்று பெரும்பாலான கோயில்களில் மின்சார இசைக்கருவிகள் வந்துவிட்டதால், மரபுரீதியான இந்த நிகழ்வுகள் மறைந்து விட்டன.

 

தாளம் இசைக்கும் சிவ பூதகணங்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் தனி சிற்பங்களையும், தோரண சிற்பங்களையும் நாம் தமிழ்நாட்டில் பல கோவில்களில் காணலாம். மிகப் பழமையான வெட்டுவான் கோவில் குடவரையில் தாளம் இசைக்கும் பூதகண சிற்பம் உள்ளது. "மத்தளி மூன்றும் கரடிகை ஒன்றும் தாளம் ஓரணையும்" என்பது சீனிவாசநல்லூர் குரங்குநாதர் கோயில் கல்வெட்டுத் தொடர். வேள்விக்குடி அருள்மிகு சொன்னவாறு அறிவார் கோவில்(கல்யாணசுந்தரேசுவரர் தற்காலப் பெயர்) கல்வெட்டில் அக்கோவிலில் வழிபாடு நடக்கும் நேரங்களில் பறை ஒன்று, மத்தளம் நான்கு, சங்கு இரண்டு, காளம் இரண்டு, செகண்டிகை ஒன்று, தாளம் ஒன்று, கைம்மணி இரண்டு இவைகள் ஒலிக்கப்பெற்று வந்த செய்தியைக் கூறுகிறது.

 

செம்பு மற்றும் வெள்ளீயக் கலவையால் தாளம் செய்கிறார்கள். வெண்கலம், ஐம்பொன்னால் செய்யும் மரபும் இருந்தது. நாதஸ்வரத்துக்கு நரசிங்கம்பேட்டை போல தாளத்துக்கு நாச்சியார்கோவில். உலோகத்தை நீராக உருக்கி அதை வார்க்க வேண்டும். தாளம் வார்க்க வண்டல் மண் அவசியம். இந்த நாச்சியார் கோவில் பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது. இந்த வண்டல் மண்ணைச் சலித்து சாக்கில் கட்டி விற்பனைச் செய்கிறார்கள். அந்த மண்ணை வாங்கி மரச்சட்ட அச்சில் தாளத்தின் வடிவத்தை வைத்து அந்த மண்ணால் நிரப்பி தட்டிக் கெட்டிப்படுத்த அச்சு தயார். பின்பு  அடுப்பில் கொதிக்கும் உலோகத்தைக் கரண்டியில் அள்ளி ஊற்றி ஆர வைக்கிறார்கள். 10 நிமிடம் கழித்து மண்ணைக் கொட்டினால் கொத்தாக வந்துவிடுகிறது தாளம். பிறகு ஓரத்தைத் தட்டி கடைசல் பட்டறையில் கடைந்து பாலிஷ் போட தாளம் தயார். 40 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விலை போகிறது.

 

‘‘ஒரு காலத்தில் 500&க்கும் அதிகமானோர் தாளக்கருவி உற்பத்தி செய்தார்கள். இப்போது எல்லோரும் குத்துவிளக்கு, பாத்திரத் தயாரிப்புக்கு மாறிவிட்டார்கள். எப்போதாவது ஓரிருவர் வந்து கேட்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் செய்து கொடுக்கிறோம்’’ என்கிறார் நாச்சியார் கோவிலைச் சேர்ந்த குமரேசன். விற்பனை இன்மை, அங்கீகாரம் இன்மை காரணமாக இசைக்கருவிகள் செய்து வந்த பலர் இப்பொழுது வேறு தொழில் நாடிச் சென்று விட்டார்கள். இப்போது தொழில் செய்யும் பலரும் அடுத்த தலைமுறைக்குப் பயிற்றுவிக்க விரும்பவில்லை. தமிழர்களின் கலாச்சாரத்தை சார்ந்த தொழில்கள் அழிய விடாமல் காக்க வேண்டியது அரசின் கடமையாக இருக்கிறது. ஆனால் தமிழக அரசாங்கம் இதைப் பற்றி எல்லாம் என்றுமே கலவலைப்படாது.

 

தாளத்தின் அமைப்பு, அளவு, வார்க்கப்படும் உலோக கலவை, பயன்பாடு


ஆகியவற்றை வைத்து பல்வேறு தாளங்கள் புழக்கத்தில் உள்ளது.

 

அடர்பாண்டில் (அ) குழித்தாளம்: குழித்தாளம் வெண்கலத்தால் ஆனது. சற்று கனமாக இருக்கும். நன்கு அடர்த்தியாக குழியாக வார்க்கப்படும்.. இத்தாளத்தை தேவாரம் திருப்புகழ் பாடுவோர் பயன்படுத்துகின்றனர். திருமுறைகளைப் பண் ஒன்ற பாடும் ஒதுவார்களின் பன்னிசைக்குப் பக்க துணையாக இருப்பது இந்த குழித்தாளம் தான். இவ்வோசை மிக அழுத்தமாகவும் இனிமையாக இருக்கும்.

 

திருவரங்கத்தில் நடைபெறும் அரையர் சேவையில் இத்தாளக் கருவியே பிரதான இடத்தைப் பிடிக்கிறது. அரையர் சேவையின் இனிமைக்கு இசைக்கருவியே பக்கத் துணையாக இருக்கின்றது. திருவரங்கம், திருவில்லிபுத்தூர் மற்றும் ஆழ்வார் திருநகரி ஆகிய ஊர்களில் வசித்து வருபவர்கள் அரையர்கள். வைணவர்களாகிய இவர்கள் குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்களாக வழிவழியாக இக்கலையைப் பேணுபவர்களாக உள்ளனர். இவர்கள் இக்கலையை வெளி ஆட்களுக்கோ அல்லது தங்கள் சாதியைச் சார்ந்த மற்றவர்களுக்கோ கற்பிப்பதில்லை. மாறாத இதைத் தங்கள் குடும்பத்திற்கு உள்ளே வைத்துப் பேணி வருகிறார்கள். இதுவே இதன்


அழிவுக்கு ஒரு காரணமாகவும் அமைகிறது. அரையர் சேவை என்பது ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்தம் எனப்படும் தமிழ் பாடல்களை இயல், இசை, நாடகம் எனும் மூவகை கலைகள் மூலமும் இம்மூன்று கோவில்களில் உள்ள இறை திருமேனிகள் முன்பு நிகழ்த்தப்படும் ஒரு கோவில் நிகழ்த்துக் கலை ஆகும். திருவரங்கத்தில் அறையர் சேவை வருடம் முழுவதும் பாடல் வடிவத்தில் மட்டும் நடைபெற்று வருகிறது. இசை, நாடகம், இயல் என்கிற முறையில் மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி நடைபெறும் பகல் பத்து ராப்பத்து விழா நாட்களில் நடைபெறுகிறது. அப்போது அரையர் குடும்பத்தினர் குழுவாக பாடல்களை முதலில் பாடுவர், பிறகு மெல்ல பாடி நடித்துக் காட்டுவர், பிறகு அந்த பாசுரத்திற்கு உரை கூறுவர். பாடும் பொழுது அதிக சீரான வேகத்தில் தாளம் இசைக்கப்படும். நடிப்பின் பொழுது தாளம் மிக மெல்ல கதியில் இசைக்கப்படும். விளக்கவுரை அல்லது வியாக்கியானம் கூறும்பொழுது தாளம் நிறுத்தப்படும். மிக இனிமையான இந்த தமிழ்க் கலை திருவரங்கம்

தவிர மற்ற கோவில்களில் அழிவின் விளிம்பில் உள்ளது
.

https://www.youtube.com/watch?v=siHGzAEcoMI

https://www.youtube.com/watch?v=JB6NQD92HIw

https://www.youtube.com/watch?v=Q2cPtXHTvtk

 

நட்டுவத்தாளம்: நட்டுவானர்கள் பயன்படுத்தும் தாளம் இது. இரும்பும் பித்தளையும் சேர்த்து சற்று சிறிதாக வார்க்கப்படும். குழித்தாளம் போல் கனம் இருக்காது. சதிர் நிகழ்வுகளில் பயன்படும்.

 

இரும்பு பாண்டில் இலைத்தாளம்: இது தமிழ்நாட்டில் வழக்கொழிந்து விட்டது. கேரளத்தில் செண்டை மேளக்குழுவிலும் கோவில்களிலும் பயன்படுகிறது.

https://www.youtube.com/watch?v=vz2kVgj9t8k

https://www.youtube.com/watch?v=Tz2MnAllFK4

 

ஜால்ரா அல்லது கைமணி தாளம்: இது மேளக்குழுக்களில் பயன்படும் தாளம்.


பித்தளையால் ஆனது. ஜிங் ஜிங் என்று மேளத்துடன் ஓலிக்கும் அபூர்வ இசைக்கருவி இதுவே. மேள தாளத்துடன் என்ற சொல்லாடல் நாம் அனைவரும் பயன்படுத்தும் ஒன்று தான். ஆனால் பெரும்பாலும் இன்றைய சூழலில் தாள இசைக்கருவி மிகவும் அபூர்வமாகத் தான் பயன்பாட்டில் உள்ளது. தாளம் இசைக்கும் கலைஞருக்கு அவ்வளவு மரியாதை இல்லை. ஜால்ராக்காரன் அல்லது தாளக்காரன் என்று நகையாடுகிறார்கள். சோத்துக்கு சிங்கி தான் அடிக்கனும் என்று சொல்லாடலும் நமதிடையே உண்டு. இவையாவும் தாள இசைக்கலைஞனைத் தாழ்த்தும் சொல்லாடல்களே. தாளம் இசைக்க பண் அறிவும் லய ஞானமும் அதிபுத்திசாலித்தனமும் தேவை. தாளக்காரர் கணநொடி தவறு செய்தாலும் இசை வேறொரு திசைக்கு இழுத்துக்கொண்டு போய்விடும். ஒரு காலத்தில் தாளக்காரர்கள் இல்லாத இசை நிகழ்ச்சிகளே இல்லை. நாதசுர கச்சேரிகளில் இன்றியமையாத பகுதியாக இருந்த தாளம் இன்று மெல்ல மறைந்து வருகின்றது. இப்போது நாதஸ்வர நிகழ்ச்சிகளில் கூட தாளக்காரர்களைப் பார்க்க முடிவதில்லை. காரணம், எவ்வித அங்கீகாரமும் இவர்களுக்கு இல்லை.

கொங்கு நாட்டில் சிறுதாளம் அல்லது ஜால்ரா அல்லது  சொய்யாங் என்று அழைக்கப்படுகிறது தாளம்.  பறை, கொட்டுத்தவுல் இசையுடன் சேர்ந்து ஒலிக்கும். சில இடங்களில் சிறியதாகவும் சில இடங்களில் இலைத்தாளம் அளவிற்கும் இருக்கும்.

 

https://www.youtube.com/watch?v=8r2SBFPgitU

https://www.youtube.com/watch?v=JP52qqv8SQE

https://www.youtube.com/watch?v=atW6D_aDu1Y

https://www.youtube.com/watch?v=2Gt4ndNq0eg

 

கூத்துத்தாளம்: தெருக்கூத்துக்களில் பயன்படும் தாளம் இது. நாதசுர குழுவில் பயன்படும் தாளத்தை விடச் சற்றுப் பெரியதாகவும் கனமாகவும் இருக்கும்  தெருக்கூத்து பாடல்களுக்கு மெருகு சேர்ப்பத்தில் தாளத்திற்கு முக்கிய இடமுண்டு. இரவு நேர அமைதியில் கோவில் திடலில் சல் சல் என்று ஒலிக்கும் இந்த தாளம் இங்கே தெருக்கூத்து ஆரம்பித்து விட்டது என்பதை ஊர் மக்களுக்குத் தெரிவித்து அவர்களை திடல் நோக்கி இழுக்கும் ஆற்றல் இந்த  கூத்துத்தாளத்திற்கு உண்டு.

https://www.youtube.com/watch?v=dbLYpKjFiJE

https://www.youtube.com/watch?v=-pQwVFkB3CU

https://www.youtube.com/watch?v=d57od6qsS_I

 

பிரம்ம தாளம்: பிருகத் தாளம் , அதாவது பெரிய தாளம் என்று பொருள். இது தான் மருவி பிரம்ம தாளம் அல்லது பிரத்தாளம் ஆகிவிட்டது. தாளங்களில் மிகப் பெரியது இதுவே. பித்தளை/வெண்கலம் இவைகளால் ஆனது. இதன் எடை 5 கிலோ வரை இருக்கும். கைக்கு அடங்காத பெரும் வட்ட வடிவிலான இரு பாகங்களைக் கொண்டது. இரண்டையும் சேர்ந்து தட்டி தாளம் எழுப்புவர்.  கைலாய இசைக்குழுக்கள், திருவண்ணாமலை மற்றும் திருக்குறுங்குடி போன்ற கோவில்களில் இக்கருவி இசைக்கப்படும்.

https://www.youtube.com/watch?v=2rfL--tKY7s

https://www.youtube.com/watch?v=bKCbHQijfBk&t=10s

https://www.youtube.com/watch?v=N2okNVwCeQw

 

சிப்ளாக்கட்டை: இது மரத்தில் செய்யப்படுவது. செப்பு அல்லது இரும்பு சலங்கை அல்லது வட்டத் தகடுகள் மரத்தின் இடையில் பொருத்தப்பட்டு சல் சல் என்ற இசை வெளிப்படும். பஜனைகளில் பயன்படுவது.

https://www.youtube.com/watch?v=ZmDJb1OelRQ

 

கட்டைத்தாளம்: இணையான இரண்டு மரத்துண்டுகளைத் தட்ட எழும் இனிய ஓசை தரும் இசைக்கருவியே கட்டைத்தாளம்.    கருங்காலி     மரத்துண்டுகளே     பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. நீள்சதுர வடிவில் கைக்கு அடக்கமாக இது அமைந்திருக்கும். முதன்மையாக தென் தமிழ்நாட்டின் வில்லுப்பாட்டில் இது பயன்படுகிறது.

https://www.youtube.com/watch?v=2uHzcSm5o3I

https://www.youtube.com/watch?v=XOKPoiuxhnU

https://www.youtube.com/watch?v=2eyItFT-Z4c

 

பண்டலபுர தாளம்: இவ்வகை தாளம் பஜனை நிகழ்வுகளில் புழக்கத்தில் உள்ளது. குழித்தாளத்தை விடப் பெரியது.தட்டையானது.

https://www.youtube.com/watch?v=GdoSWbc11Jw

 

2 ஆயிரம் ஆண்டு பாரம்பரியம் மிக்கது தமிழர் இசையும் இசைக்கருவிகளும் என்று சொல்லும்போது நமக்கு நா இனிக்கிறது. அந்த இசையை வளர்த்தெடுத்து, வாய்ப்பில்லாமல் வாடும் கலைஞர்களுக்கு வாழ்வளித்து மீட்காமல், அந்தப் பழம்பெருமையை மெல்ல மெல்ல இழந்து வருகிறோம் என்பதுதான் கசப்பான உண்மை.

 

பாடல்:

தண்டுந் தாளமுங் குழலுந் தண்ணுமைக் கருவியும் புறவில்

கொண்ட பூதமும் உடையார் கோலமும் பலபல வுடையார்

கண்டு கோடலும் அரியார் காட்சியும் அரியதோர் கரந்தை

வண்டு வாழ்பதி உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. 2.94.06

 

-சரவண பிரபு ராமமூர்த்தி

 நன்றி:

  1. முனைவர் ஸ்ரீனிவாசன் கலியமூர்த்தி அவர்கள், ஆஸ்தான வித்வான், அருள்மிகு வக்ரதுண்ட பிள்ளையார் கோவில், மெல்பர்ன், ஆஸ்த்ரேலியா
  2. பல்லடம் திரு க.பொன்னுசாமி அவர்கள்வரலாற்று ஆய்வாளர்பல்லடம்

 

  


No comments: