இலங்கைச் செய்திகள்

 தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக பிரச்சினைகளை அணுகும் டக்ளஸ்

யாழ்., கிளிநொச்சி மாவட்டங்களில் 10 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு

புரவி சூறாவளி: 6 மாவட்டங்களைச் சேர்ந்த 12,252 பேர் பாதிப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் கிண்ணியா விஜயம்

யாழில் 240 இடைத்தங்கல் முகாம்கள் தயார் நிலையில்

புரவி சூறாவளி: அக்கராயன்குளத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சி

பிரசாந்தனின் பதவிக்கு ஜெயராஜ் நியமனம்

அனைத்து சுற்றுலா விடுதிகளும் இன்று முதல் திறக்கப்படும்

புரவி: 13,368 குடும்பங்களைச் சேர்ந்த 44,848 பேர் பாதிப்பு

புலம்பெயர் தமிழ் தொழிலதிபர்கள் நாட்டில் முதலீடு செய்வதற்கு தயார்

வௌ்ளை மாளிகையின் உயர் பதவிக்கு யாழ். பெண்


 தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக பிரச்சினைகளை அணுகும் டக்ளஸ்

அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்கு அமெரிக்க துாதுவர் பாராட்டு

தேசிய நல்லிணக்கம் மற்றும் நிலைபேறான அபிவிருத்திக்கு அமெரிக்கா பூரண ஒத்துழைப்பை வழங்குமென்றும் கடற்றொழிலாளர்களின் வாழ்க்ைகத் தரத்தை உயர்த்துவதற்கான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் (Alaina B. Teplitz) அலெய்னா பி ரெப்லிட்ஸ் உறுதியளித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்று (01) மாளிகாவத்தையிலுள்ள கடற்றொழில் அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

காலநிலை மாற்றத்திற்கேற்ப உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கை அடிப்படையிலான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இந் நிலையில், இந்த அபிவிருத்தி திட்டத்தினுள் உள்ளடக்கப்பட வேண்டிய கடற்றொழில் சார் விடயங்கள் தொடர்பாக அறிந்து கொள்வதே இன்றைய சந்திப்பின் பிரதான நோக்கமாக அமைந்திருந்திருந்தது.

இதன்போது, இலங்கையின் வரவு - செலவுத் திட்டத்தில் மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் பருத்தித்துறை, குருநகர், - பேசாலை போன்ற மீன்பிடித் துறைமுகங்களையும் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா, நீர் வேளாண்மையை விருத்தி செய்வதிலும் ஆர்வம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். அத்துடன் துறைசார் அதிகாரிகளுடன் கலந்தரையாடி காலநிலை மாற்றம் தொடர்பான அபிவிருத்தித் திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பான முன்மொழிவை வழங்குவதாகவும் தெரிவித்தார். இக் கலந்துரையாடலின் போது, கடற்றொழில் செயற்பாடுகளில் காணப்படும் சவால்கள், கடற்றொழிலாளர்களின் வாழ்கைத் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் இலங்கையின் தற்போதைய நிலைரங்கள் தொடர்பாகவும் அமெரிக்க தூதுவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடினார்.

இதன்போது, தேசிய நல்லிணக்கத்தினூடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைய முடியுமென்று தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், தன்னைப் பொறுத்த வரையில் இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற மாகாண சபை முறைமையை முழுமையாக பயன்படுத்துவதை ஆரம்பமாகக் கொண்டு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை பூரணமாக அடைந்து கொள்வதை நோக்கி நகர முடியுமெனவும் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் சில தமிழ் தலைமைகளின் சுயநலன் சார்ந்த – தவறான அணுகுமுறைகளே தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்வதற்கு காரணமாக இருப்பதனை தன்னால் அனுபவ ரீதியாக உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் கருத்து தெரிவித்த அமெரிக்கத் தூதுவர், Alaina B. Teplitz,

தேசிய நல்லிணக்தின் மூலமே பிரச்சினைகளை அணுக முடியும் என்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்தை பாராட்டியதுடன், அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்ற தமிழர் என்ற அடிப்படையிலும் பாராளுன்ற பேரவையின் உறுப்பினர் என்ற வகையிலும் தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பு அமைச்சருக்கு இருப்பதாகவும் அதற்கான ஒத்துழைப்புக்களை அமெரிக்கா வழங்குமெனவும் தெரிவித்தார்.   நன்றி தினகரன் யாழ்., கிளிநொச்சி மாவட்டங்களில் 10 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு

2021 ஆம் ஆண்டில் யாழ். மாவட்டத்தில் 08 பாடசாலைகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் 02 பாடசாலைகளும் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட இருப்பதாக பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவரும் யாழ். மாவட்ட எம்.பி. யுமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நகர பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

வரவு செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,

பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் மாணவர்களின் தொகையை அரசு அதிகரித்துள்ளது. 10 நகர பல்கலைக்கழகங்களையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்திலும் இன்னொன்று நுவரெலியா மாவட்டத்திலும் அமைக்கப்படவுள்ளன.

முன்பள்ளிக்கல்வி தொடர்பில் எந்த அரசும் இதுவரை கவனம் செலுத்தவில்லை. எமது அரசு முன்பள்ளிக்கல்வியை அரச கட்டமைப்புக்குள் உள்ளீர்த்து நிதி ஒதுக்கீடுகளையும் மேற்கொண்டுள்ளது. முன்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு அரச நியமனங்களை வழங்குவதுடன் நிரந்தர சம்பளத்தையும் வழங்க வேண்டும். 1,000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் யாழ் மாவட்டத்தில் 8 பாடசாலைகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் 2 பாடசாலைகளும் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படும். அதேவேளை யாழ் தீவகப்பகுதி மற்றும் கிளிநொச்சியிலுள்ள கஷ்டப் பிரதேசங்களையும் கல்வி அமைச்சு கவனத்தில் செலுத்த வேண்டும். .

இலங்கை பல்கலைக்கழகங்களின் தரப்படுத்தலில் யாழ் பல்கலைக்கழகம் மூன்றாம் இடத்தைப்பிடித்துள்ளது. அத்துடன் இராமநாதன் நுண்கலைக் கல்லூரி, சித்த மருத்துவ பிரிவு ஆகியவற்றை பீடங்களாக்க வேண்டும். அதேபோன்று உடற்கல்வி பட்டப்படிப்பையும் ஆரம்பிக்க வேண்டும்.

எல்.பி.எல் .கிரிக்கெட் போட்டியில் ''ஜப்னா ஸ்ரான்லியன்ஸ்'' என்ற பெயரில் அணி உருவாக்கப்பட்டமைக்கும் அந்த அணியில் வடக்கு மாகாண வீரக்கள் உள்வாங்கப்பட்டமைக்கும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிற்கு எனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கிறேன். இது வடக்கு இளைஞர்களை ஊக்குவிக்கும் செயற்பாடு என்றும் அவர் கூறினார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்ரமணியம் நிசாந்தன் - நன்றி தினகரன் 


புரவி சூறாவளி: 6 மாவட்டங்களைச் சேர்ந்த 12,252 பேர் பாதிப்பு

புரவி சூறாவளி: 6 மாவட்டங்களைச் சேர்ந்த 12,252 பேர் பாதிப்பு-Burevi-2252 People in 6 Districts Affected

- யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களே அதிக பாதிப்பு
- ஒருவரை காணவில்லை

- 207 வீடுகள் சேதம்
- கடலுக்குச் செல்ல வேண்டாமென எச்சரிக்கை

புரவி சூறாவளி காரணமாக ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் இதுவரை 6 மாவட்டங்களைச் சேர்ந்த 12,252 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 2,911 குடும்பங்களைச் சேர்ந்த, 10,336 பேர் 79 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது வரை மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை ஆகிய 6 மாவட்டங்கள் இவ்வனர்த்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஒப்பீட்டளவில் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களே அதிக பாதிப்புக்களை சந்தித்துள்ளன.

அத்துடன் 15 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளதோடு, யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே குறித்த வீடுகள் அனைத்தும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 152 வீடுகள் உள்ளிட்ட 192 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக இதுவரை கணக்கிடப்பட்டுள்ளது.

9 சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இதனால் சேதமடைந்துள்ளதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலகங்கள் ஊடாக உரிய நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலுக்குச் செல்ல வேண்டாம்!
இதேவேளை, புரவி சூறாவளியானது (இலங்கையை விட்டு) நகர்ந்து கொண்டிருப்பதால், கொழும்பிலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடல் பிரதேசங்களுக்கு செல்ல வேண்டாமென, மீனவர்கள் உள்ளிட்ட கடற்றொழிலில் ஈடுபடுவோருக்கு, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.    நன்றி தினகரன் 

கிழக்கு மாகாண ஆளுநர் கிண்ணியா விஜயம்

கிழக்கு மாகாண ஆளுநர் கிண்ணியா விஜயம்-Eastern Province Governor Anuradha Yahampath-Visits Kinniya

புரவி புயல் தாக்கத்தினால் கிண்ணியாவில் பாதிக்கப்பட்ட  இடங்களை இன்று (03) கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் மற்றும்  திருகோணமலை  மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பாண்டிகோரள ஆகியோர்  பார்வையிட்டனர்.

கிண்ணியா பிரதேச செயலாளர் முகமது கனியின் வேண்டுகோளுக்கிணங்க, இவர்கள்  கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட  இடிமன் மற்றும் குறிஞ்சாக்கேணி   போன்ற இடங்களில் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டதோடு பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களையும் விசாரித்து அறிந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண ஆளுநர் கிண்ணியா விஜயம்-Eastern Province Governor Anuradha Yahampath-Visits Kinniya

இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலகப் பிரிவுகளிலும்  பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இருந்து  680 குடும்பங்கள் 237 இடைத்தங்கல் முகாம்களில் பாதுகாப்புக்காக தஞ்சமடைந்திருந்தனர் என மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். அவர்களுக்கு சமைத்து உணவும் வழங்கப்பட்டன.

1,145  குடும்பங்கள் பாதுகாப்பு தேடி அவர்களது உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்திருந்தனர்

இவர்கள் இன்று காலை தங்களுடைய வீடுகளுக்கு திரும்பியிருந்தனர்.

திருகோணமலை மாவட்டத்தில் 17 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

(கிண்ணியா மத்திய நிருபர் - கியாஸ்) - நன்றி தினகரன் 


யாழில் 240 இடைத்தங்கல் முகாம்கள் தயார் நிலையில்

- முல்லைத்தீவில் 440  பேர் இடைத்தங்கல் முகாமில்

காலநிலை சீரின்மையால் யாழ்.மாவட்டம் பாதிப்பினை எதிர்கொள்ளும் என எதிர்வு கூறப்பட்டுள்ளமையால் மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவுறுத்தியுள்ளார்.

நேற்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

நேற்று முன்தினம் யாழ்.மாவட்டத்திற்கும் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவத்துடன் இணைந்து முன்னெடுத்துள்ளோம்.

கடற்படை, இராணுவம், பொலிசார் மற்றும் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் இணைந்து ஒரு செயற்படுத்துகை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 24 மணி நேரம் கடமையில் இருந்து நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டு இருப்பார்கள். அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த 30ஆம் திகதி முதல் மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளோம்.

தொழிலாளர்கள் தமது படகுகளை பாதுகாப்பாக தரித்து விடுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளோம். தாழ் நில பகுதிகளில் வசிக்கும் மக்களை தேவை ஏற்படின் அவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றி வேறு இடங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். அவ்வாறாக யாழ் .மாவட்டத்தில் 240 மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

கரையோர மக்கள் விழிப்பாக கால நிலைகளை உன்னிப்பாக அவதானிக்குமாறு அறிவுறுத்தி உள்ளோம். தாழ் நில பகுதிகளில் வசிப்போர் விரும்பின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கு சென்று தற்காலிகமாக தங்க முடியும்.

அவ்வாறு தங்க வசதி இல்லாதோர் பொது கட்டடங்களில் தங்க முடியும்.

பொது இடங்களில் தங்க செல்வோர் தற்போதைய கொவிட் -19 நோய் தொற்று தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும். சுகாதார பிரிவினர் அவை தொடர்பில் கண்காணிப்பார்கள். வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வெளியேறும் போது அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் போய் தங்குமாறு கோருகின்றோம். அது அவர்களையும் பாதுகாக்கும் இந்த சமூகத்தையும் பாதுகாக்கும்.

ஆபத்தான மரங்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும், அதேவேளை மின்சார தடைகள் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் தொடர்பில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும். திடீர் வெள்ளப் பெருக்கு உள்ளிட்டவற்றுக்கு முகம் கொடுக்க அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

முல்லைத்தீவில் 440 பேர் இடைத்தங்கல் முகாமில்

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்துடன் கூடிய சூறாவளியால் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கப்பட்ட நிலையில் 440 பேர் மூன்று பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் க.விமலநாதன் தெரிவித்தார்.

கொக்குளாய் கிழக்கு,மேற்கினை சேர்ந்த மக்கள் இவ்வாறு வீடுகளிலிருந்து பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அரச அதிபர் மேலும் கூறுகையில்,

கரையோர பகுதியினை சேர்ந்த கொக்குளாய் கிழக்கு, மேற்கு பகுதியினை சேர்ந்த 440 பேர் கொக்குத்தொடுவாய் அ.த.க பாடசாலை, கருநாட்டுக்கேணி அ.த.க.பாடசாலை,கொக்குளாய் அ.த.க.பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். தொடர்ச்சியான நிலமையின் பின்னர் அவர்களை வீடுகளுக்கு அனுப்புவது தொடர்பில் தீர்மானிக்கப்படும்.

இவர்களுக்கான சமைத்த உணவு மற்றும் உதவிகளை மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள் என்றார்.

யாழ்.விசேட நிருபர், புதுக்குடியிருப்பு விசேட நிருபர் - நன்றி தினகரன் 


புரவி சூறாவளி: அக்கராயன்குளத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சி

புரவி சூறாவளி: அக்கராயன்குளத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சி-Burevi-Rainfalls in Last 24-Heavy Rainfall in Akkarayan Kulam
சாவகச்சேரியில்... (படம்: சாவகச்சேரி விசேட நிருபர் - தவராசா சுபேசன்)

புரவி புயல் காரணமாக ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையைத் தொடர்ந்து கடந்த 24 மணித்தியாலங்களில் வட மாகாணத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அதற்கமைய, கிளிநொச்சி, அக்கராயன்குளத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 279.8 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக வட மாகாணத்தில் சாவகச்சேரி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் ஆகிய பகுதிகளில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று மு.ப. 8.30 வரையான 24 மணித். நாட்டில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவான இடங்கள்

  • அக்கராயன்குளம் - 279.8mm
  • சாவக்கச்சேரி - 260mm
  • யாழ்ப்பாணம் - 260mm
  • கிளிநொச்சி - 233.9mm
  • முல்லைத்தீவு - 224mm
  • ஒட்டுசுட்டான் - 202mm
  • பதவி சிறிபுர - 199mm
  • உடையார்கட்டு - 190mm
  • வெலிஓயா - 186mm

நன்றி தினகரன் 


பிரசாந்தனின் பதவிக்கு ஜெயராஜ் நியமனம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது பதவிக்கு கட்சியின் உப செயலாளர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஊடகச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பிரசாந்தன் தற்போது விளக்கமறியலில் இருப்பதன் காரணமாக கட்சி செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்காக அவருக்கு பதிலாக பிரதிச் செயலாளர் ஜெகநாதன் ஜெயராஜ் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக தலைமை பணியகத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார் என அவர் ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன், கடந்த மாதம் 9ஆம் திகதி காலை கொழும்பில் இருந்து சென்ற சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டார்.

ஆரையம்பதியில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த அவர், ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய பிரசாந்தன் மீண்டும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.    நன்றி தினகரன் 


அனைத்து சுற்றுலா விடுதிகளும் இன்று முதல் திறக்கப்படும்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு சொந்தமான அனைத்து சுற்றுலா விடுதிகள் மற்றும் சுற்றுலா முகாம்களும் இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அந்த திணைக்களம் தெவித்துள்ளது. அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம். ஜி. சி. சூரிய பண்டார அது தொடர்பில் தெரிவிக்கையில், டிசம்பர் மாதத்திற்காக மேற்படி சுற்றுலா விடுதிகளை முன்பதிவு செய்திருந்த சுற்றுலா பயணிகள் குறித்த தினத்தில் அங்கு வந்து தங்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை நவம்பர் இரண்டாம் திகதி முதல் டிசம்பர் 3ஆம் திகதி வரை மேற்படி விடுதிகளை முன்பதிவு செய்துகொண்ட சுற்றுலாபயணிகள் அதற்கு பதிலாக எதிர் வரும் மார்ச் 31ஆம் திகதிவரை வந்து தங்க முடியும் எனவும் அதற்குள் திகதிகளை அவர்கள் முடிவு செய்து சுற்றுலா விடுதிகளை பதிவு செய்து கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு வருகை தரும் சுற்றுலா பயணிகள் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம் - நன்றி தினகரன் 


புரவி: 13,368 குடும்பங்களைச் சேர்ந்த 44,848 பேர் பாதிப்பு

வடக்கு, கிழக்கை புரட்டியெடுத்த புரவி சூறாவளி
- ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்

புரவி சூறாவளி காரணமாக நாட்டின் 12 மாவட்டங்களில் 13,368 குடும்பங்களைச் சேர்ந்த 44,848 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

குறிப்பாக, வடக்கு, கிழக்கு பகுதிகளில் 1,3131 குடும்பங்களைச் சேர்ந்த 44,079 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.

திருகோணமலை மாவட்டத்தில் 79 குடும்பங்களைச் சேர்ந்த 265 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்தது.

கரவெட்டி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் காணாமல் போய் உள்ளதுடன் காயமடைந்த நால்வரும் பருத்தித்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டதாகவும் அந்த நிலையம் தெரிவித்தது. அதேவேளை கொடிகாமம் பகுதியில் நபர் ஒருவர் வெள்ளத்தில் அகப்பட்டு மரணமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளத்தில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்ட அவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என பொலீசார் தெரிவித்தனர்.

குறிப்பாக வட மாகாணத்தின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டதுடன் 12 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்தது.

மேற்படி சூறாவளியினால் யாழ் மாவட்டத்தில் 9,346 குடும்பங்களைச் சேர்ந்த 31,703 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மழை வெள்ளம் காரணமாக யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்றைய தினம் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்ததாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு துணுக்காய் பகுதிகளிலேயே நேற்றையதினம் மழைவீழ்ச்சி அதிகமாக பதிவாகியுள்ள நிலையில் துணுக்காய் பகுதியில் 392 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் அப்பகுதி வீதிகளில் போக்குவரத்துக்கு பெரும் தடை ஏற்பட்டது

முல்லைத்தீவு மாவட்டத்தில் 405 குடும்பங்களைச் சேர்ந்த 1,149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 282 குடும்பங்களைச் சேர்ந்த 722 பேர் 04 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. கிளிநொச்சி மாவட்டத்தில் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் ஆனையிறவு பகுதியில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது.

வீதிகளில் மரங்கள் சரிந்து உள்ளதால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில்

தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்திலும் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் நேற்று பிற்பகல் மழை வீழ்ச்சி குறைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன

அதேவேளை புத்தளம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று கடும் மழை பெய்துள்ளது. சில பிரதேசங்களில் கடலில் பெரும் கொந்தளிப்பு காணப்பட்டதாகவும் மறு அறிவித்தல் வரை மீனவர்கள் கடல் தொழிலுக்கு செல்ல கூடாது என்று அங்கு அறிவித்தல் விடுக்கப்பட்டது.

எவ்வாறெனினும் வடக்கு வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடை மழை பெய்யும் என்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்படி கடல் பிரதேசங்களில்காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்றும் மணித்தியாலத்துக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்தது.

அதேவேளை புரவி சூறாவளி காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் முழுமையாக 48 வீடுகளும் பகுதியளவில் 152 வீடுகளும், மன்னார் மாவட்டத்தில் பகுதியளவில் 06 வீடுகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு வீடு முழமையாகவும் 136 வீடுகள் பகுதியளவிலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு வீடு பகுதியளவிலும், வவுனியா மாவட்டத்தில் 57 வீடுகள் பகுதியளவிலும் என மொத்தமாக வடக்கில் 49 வீடுகள் முழுமையாகவும், 2,026 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் தெரிவித்தது. 

திருகோணமலை மாவட்டத்தில் 67 வீடுகளும் சேதமடைந்துள்ளதுடன் மொத்தமாக வடக்கு கிழக்கில் 2,000 இற்கும் அதிக வீடுகள் சேதமடைந்துள்ளதாக அந்நிலையம் தெரிவித்தது.

அதேவேளை அதற்கு மேலதிகமாக வடக்கில் 9 வர்த்தக நிலையங்களும் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

புரவி சூறாவளி நேற்றைய தினம் குறைந்த வேகத்துடன் நாட்டுக்கு வெளியே நகர்ந்ததாகவும் அதன் பாதிப்புகள் நாட்டில் குறைந்து வருவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

லோரன்ஸ் செல்வநாயகம் - நன்றி தினகரன் 


புலம்பெயர் தமிழ் தொழிலதிபர்கள் நாட்டில் முதலீடு செய்வதற்கு தயார்

அச்சத்தை போக்குவது அரசாங்கத்தின் கடமை , எவ்விதமான அச்சமும் கொள்ளத் தேவையில்லை

சிறிதரன் எம்.பியின் கோரிக்கைக்கு அமைச்சர் விமல் சாதகமான பதில்

ஆனையிறவு உப்புக் கூட்டுத்தாபனத்தை சுவீகரிக்க அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. விரைவில் அது சார்ந்த அபிவிருத்தி பணிகளை உப்புக் கூட்டுத்தாபனத்தின் கீழ் ஆரம்பிக்க இருக்கிறோம். வாழைச்சேனை பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஒட்டுசுட்டான் பணி கொரோனாவினால் பிற்போடப்பட்டது. பரந்தன் இரசாயன கைத்தொழில் பேட்டை ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் எஸ்.ஸ்ரீதரனின் கேள்விக்கு பதிளிக்கும் போதே இவ்வாறு கூறினார்.

புலம் பெயர் நாடுகளிலுள்ள தமிழர்களும் தொழிலதிபர்களும் இங்கு வந்து முதலீடு செய்யத் தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கான நம்பிக்கை குறைவாக உள்ளதால் அவர்களை கவர்ந்து உள்ளீர்க்கும் வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமென யாழ். மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்தார்.

வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீள ஆரம்பிக்குமாறும் கைத்தொழில் வலயமொன்றை உருவாக்க வேண்டுமெனவும் அவர் கோரினார்.

வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய ஸ்ரீதரன் எம்.பி,

4,000 பேர் வேலை செய்த வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலையில் இன்று 50 பேர் தான் பணியாற்றுகின்றனர். ஆணையிறவு உப்பளம் வெள்ளையுப்புக்கு உலகளவில் பிரபலமானது.அங்கு கண்ணிவெடிகள் அகற்றப்படாததால் தொழில் முயற்சிகளை ஆரம்பிக்க முடியவில்லையெனக் கூறப்படுகிறது.வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வழங்க இவற்றை இயக்க வேண்டும்.முன்பு அரசாங்கத்தினால் வடக்கு, கிழக்கில் இயங்கிய பல கூட்டுத்தாபனங்கள் இன்று மூடப்பட்டுள்ளன.

இந்தியாவிலிருந்து கூட தொழிலதிபர்கள் வந்து இடங்களை பார்வையிட்டனர். காங்கேசன் சீமெந்து தொழிற்சாலையை வேறு இடத்தில் ஆரம்பிக்க முடியும். 400 ஏக்கர் கொண்ட விவசாயப் பண்ணை மூடப்பட்டுள்ளது. ஆணையிறவு உப்புக் கூட்டுத்தாபனத்தில் திறந்த அடிப்படையில் தொழிலாளர்கள் உள்ளீர்க்கப்படுவதில்லை என்றார்.

அவரின் கோரிக்கை தொடர்பில் கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச தொடர்ந்து பதிலளித்தார்.

ஆணையிறவு உப்புக் கூட்டுத்தாபனத்தை சுவீகரிக்க அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. விரைவில் அது சார்ந்த அபிவிருத்தி பணிகளை உப்புக் கூட்டுத்தாபனத்தின் கீழ் ஆரம்பிக்க இருக்கிறோம். வாழைச்சேனை பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஒட்டுசுட்டாண் பணி கொரோனாவினால் பின்போடப்பட்டது. பரந்தன் இரசாயன கைத்தொழில் பேட்டை ஆரம்பிக்கப்படும்.

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை அண்டியதாக தமிழ், முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கே தொழில் வழங்கப்பட்டது. விரைவில் ஆரம்பிக்கப்படும். உங்கள் பிரதேச இளைஞர், யுவதிகளுக்கு தான் தொழில் வாய்ப்பு வழங்கப்படும்.

பரந்தன் மக்களுக்கோ பிரதேசத்திற்கோ பாதிப்பு ஏற்படும் தொழிற்சாலைகளை முன்னெடுக்க மாட்டோம். சூழல் அறிக்கை பெற்றே பணிகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

ஸ்ரீதரன் எம்.பி கூறுகையில்,

இப்பகுதிகளில் கைத்தொழில் வலயங்களை ஆரம்பித்தால் 20 ற்கும் மேற்பட்ட தொழில் முயற்சிகளை ஆரம்பிக்கலாம். குறிஞ்சாத்தீவு உப்பளத்தை தனியார் கைக்கு செல்லாமல் அரச சொத்தாக முன்னெடுக்க வேண்டும்.புலம் பெயர் நாடுகளிலுள்ள தமிழர்கள் இங்கு வந்து முதலீடு செய்யத் தயாராக இருக்கிறார்கள். வேலையில்லாப் பிரச்சினையை நீக்க தமிழ் தொழிலதிபர்கள் கூட இங்கு முதலிட தயாராக இருக்கிறார்கள்.

அவர்களுக்கான நம்பிக்கை குறைவாக உள்ளது.இங்கு வந்து முதலீடு செய்வதற்கு அச்சப்படுகின்றனர். அவர்களை கவரக்கூடிய வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிசாந்தன் - நன்றி தினகரன் வௌ்ளை மாளிகையின் உயர் பதவிக்கு யாழ். பெண்

உப ஜனாதிபதியின் உள்நாட்டு கொள்கை ஆலோசகர்

அமெரிக்காவின் உப ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஷின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழரான ரோஹினி கொஸக்லுவை (Rohini Kosoglu) நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.

உப ஜனாதிபதியின் Domestic Policy Advisor உள்ளக கொள்கை ஆலோசகர் என்ற இந்த நியமனம் எதிர்வரும் ஜனவரி மாதம் 20ம் திகதி முதல்  நடைமுறைக்கு வருகின்றது.

தற்போது பைடன் -ஹரிஸ் ஆட்சிமாற்றக் குழுவில் கமலா ஹரிஸின் சிரேஸ்ட ஆலோசகராக பதவிவகிக்கும் ரோஹிணி முன்னதாக பைடன் -ஹரிஸ் பிரசாரக் குழுவில் சிரேஷ்ட ஆலோசகராக பதவிவகித்திருந்தார்.

இதற்கு முன்பாக இவ்வருட ஆரம்பத்தில் ஹாவார்ட் பல்கலைக்ககழகத்தில் முக்கிய கல்வித்துறைப் பதவியை வகித்திருந்தார் ரோஹிணி.

கலிபோர்னியா மாநிலத்தின் செனட்டராக கமலா ஹரிஸ் பதவி வகித்தபோது அவரது பணிக்குழு பிரதானியாக Chief of Staff பதவி வகித்த ரோஹிணி கொஸக்லு அதன் பின்னர் 2019ம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்காக கமலா ஹரிஸ் போட்டியிட்டபோதும் அவரது பணிக்குழு பிரதானியாக திகழ்ந்தார்.

மூன்று இளம் பிள்ளைகளின் தாயாரான ரோஹிணி கொஸக்லு திருமணமாக முன்னர் ரோஹிணி லக்ஸ்மி ரவீந்திரன் என அழைக்கப்பட்டிருந்தார்.

அவரது பெற்றோர் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  நன்றி தினகரன் 


No comments: