உ

   சிவமயம்

சிவத்திரு நாவலர் பெருமான் 'பிறந்திரலேல் சொல்லு தமிழெங்கே? சுருதி எங்கே? சிவாகமங்கள் எங்கே? ஏத்தும் புராணங்கள் எங்கே? பிரசங்கங்கள் எங்கே? ஆத்தனறிவு எங்கே?' என்று பாராட்டப் பெற்றதுடன் 'வைதாலும் வழுவின்றி வையாரே நாவலனார்' எனப் போற்றப்பெற்று வந்த சிவத்திரு ஆறுமுக நாவலனாரின் நினைவு நாளை(7 - 12 - 2020) ஒட்டியே இந்தக் கவிதை இடம் பெறுகிறது. ......


சிவப்பழமாய்ச் சிவனார் ஈய்ந்த செந்தண்மை அந்தணன் நாவலன் தாள் தொழுவாம்!.


      ............ பல்வைத்திய கலாநிதி  பாரதி இளமுருகனார்.


படையெடுத்து மதம்மாற்றிய 'பறங்கியர்' செயலும்

       பண்பற்ற ஆரியர்செய் வடமொழிக் கலப்பும்

இடையினிலே தாக்கியதால் நலிவுற்ற தமிழை

       எழுச்சிமிகு பேச்சாலும் எழுத்தி னாலும்

நடைமாற்றிச் சீர்செய்து நறுந்தூய தமிழாய்

       நம்மவர்க்குப் புதுப்பித்து அளித்த செம்மல்!

கிடைத்ததோர் சிவப்பழமாய்ச் சிவனார் ஈய்ந்த

       செந்தண்மை அந்தணன் நாவலன் தாள் தொழுவாம்!.


எழுந்திடுவேன்! என்றென்றும் வீழேன்! வெல்வேன்!

       எனவன்று முழக்கமிட்டு ஆட்சியர்க்(கு) அஞ்சி

விழுந்தழியும் நிலையுற்ற சைவரை எழுப்பி

       விளங்குமெம்மதம் உயர்ந்ததந்தோ என்றவர் மனங்களை

'உழுது'அங்கே வாடிநின்ற செஞ்சாலியாம் சைவம்

       உயிர்த்தெழக்கண் நீரூற்றி வளர்த்தே ஒழுக்கம்

வழுவாது ஒளிகால எழுந்த சூரியனாம்

       வளநல்லை நாவலனை நினைந்து வாழ்வாம்!.கீரிமலையில் ஊற்றெடுத்துக் கிரிவல மாகக்

       கீழுறை மாவைக் கந்தன்  பக்;தி மாந்தி

வீரியம்பெற நல்லைஞானி ஆசி பெற்று

       வேகத்தொடு வைசமென்னும் ஒளி மரகதமும்

பாரிற்பல மொழியீன்ற பைந்தமிழ் வைரமும்

       வாரியிறைத்து நாவலன்நல் ஒழுக லாறாய்

ஏரிகுளம் கரையுடைத்து ஏற்போர் சிந்தையில்

       இணையில்லாச் சிவநெறியொடு சைவத்தமிழ் நிறைத்ததே!.          வேறு


அந்தமில் சைவமும்  ஆதித் தமிழும் 

         ஆற்றிய தவத்தின் பயனாலே

  அழிவு வந்தன்று சூழ்ந்திட் டபோது 

           அவதரித் தசிவ தூதுவனோ?

சிந்தையிற் செந்தமிழ்ச் சீரிய மொழியையும் 

        சிவநெறி காட்டும் மாண்பினையும்  

  சிறுவய திருந்து ஓம்பி வளர்த்துச் 

           செய்வன செய்த திருமகனோ?

விந்தையாய்ப்  பலபல சிவநெறி நூல்களை  

        யாத்த வித்தகன் இவன்;தானோ?

 வீறுகொண் டெழுந்து மதம்மாற் றியோரை 

       விரைந்தே சாடியே நின்றதுடன்

கந்தபு ராணப் படிப்பினைத் தொடக்கியும் 

        காதலால் நூல்பல பதிப்பித்தும்

 காலத் தால்அழி யாதன செய்த

    காவலன் நாவலன் வாழியவே!No comments: