.
திரைப்படங்களை பற்றி எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர் திரு சுந்தரதாஸ் அவர்களின் "பொன்விழா ஆண்டில் இந்தப்படங்கள் " இவ்வாரம் 25வது வெள்ளிவிழா வாரமாக வெளிவருகின்றது. இயந்திர மயமான இந்த புலம் பெயர் வாழ்வில் நேரம் ஒதுக்கி எழுதிக்கொண்டிருக்கும் இவரை தமிழ்முரசு அவுஸ்ரேலியா வாழ்த்துகின்றது . இவர் இலங்கையில் தினகரன், வீரகேசரி , தினபதி, சிந்தாமணி போன்ற பத்திரிகைகளில் எழுதிக்கொண்டிருந்தவர் என்பதும் இங்கு வந்தபின்பும் எழுதிக் கொண்டிருப்பதும் பெருமையான விடயமே . அவரது எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள்.
ஆசிரியர் குழு .
1970ஆம் ஆண்டு மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிப்பில் 5 படங்கள் வெளிவந்தன இவற்றுள் 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கண்ட மாபெரும் வெற்றிப்படம் தான் மாட்டுக்கார வேலன். படத்தயாரிப்பில் நிதி உதவி செய்பவராக விளங்கிய கனகசபை செட்டியார் இப்படத்தை தயாரித்தார். இவருடைய நிதி உதவியினால் புதிய பூமி படத்தை எம்ஜிஆர் நடிப்பில் தயாரித்த கே ஆர் மூவி சாருடன் இவருக்கு மனத்தாங்கல் ஏற்பட்டதால் கே ஆர் மூவி சார் தங்கள் அடுத்த தயாரிப்பை இவரிடம் நிதி உதவி பெறாமல் ஏ வி எம் உதவியுடன் சிவாஜி நடிப்பில் தயாரித்தார்கள் அந்தப் படம்தான் எங்க மாமா. இதனால் எம்ஜிஆரை அணுகிய கனகசபை தனது ஜெயந்தி பிலிம்ஸ் சார்பில் மாட்டுக்கார வேலன் தயாரித்தார். வேலனும் மாமாவும் ஒரேநேர த்தில் பொங்கலன்று வெளியானது.
பிரபல தயாரிப்பாளரும் ஸ்டூடியோ அதிபரும் ஆசிரியருமான ஏ கே வேலன் இப்படத்தின் கதையை எழுதி அது முதலில் கன்னடத்திலும் பிறகு இந்தியிலும் தெலுங்கிலும் வெளிவந்தது. கன்னட தயாரிப்பாளரிடம் பட உரிமையை வாங்கி தமிழில் இப்படம் தயாரானது. இதனால் கதையை எழுதிய தமிழ்ப் புலவரான வேலனுக்கு கதைக்குரிய சன்மானமும் கிடைக்கவில்லை. உரிய சன்மானம் கிடைக்காமல் தமிழ் புலவரான தன் பெயரையே படத்திற்கு மாட்டுக்கார வேலன் என்று சூட்டிவிட்டார்கள் என்று ஆதங்கப்பட்டார் வேலன்.
இரட்டை வேடங்களில் நடிப்பதை மிகுந்த ரசனையுடன் செய்யக்கூடிய எம்ஜிஆர் இப்படத்திலும் வேலனாகவும் வக்கீல் ரகுவாகவும் இரட்டை வேடம் பூண்டு அருமையாக நடித்திருந்தார். அடிக்கடி கழுத்தை தடவி பேசுவதாகட்டும் பெண்ணைப் போல் நாணி கோணி ஒருபக்கம் பார்க்கிறா பாடலில் நடிப்பது ஆகட்டும், ஜெயலலிதா லஷ்மி உடனான காதல் காட்சிகள் சண்டைக்காட்சிகள் எல்லாவற்றிலும் அசத்தியிருந்தார் எம்ஜிஆர். ஜெயலலிதா படம் முழுவதும் சேலை கட்டி குடும்ப பாங்காக காட்சியளித்தார். அதற்கு பதிலாக லக்ஷ்மி விதவிதமான ஆடைகளில் தோன்றினார்.
விகே ராமசாமி எஸ் வரலட்சுமி தோன்றும் காட்சிகள் எல்லாம் கலகலப்பு. சோவும் சச்சுவும் குறை வைக்கவில்லை. படத்தில் வில்லன் அசோகன் அதட்டல் மிரட்டல் என்று வந்து தன் பாணியில் நடித்திருந்தார். சண்டைக்காட்சியில் ஜஸ்டின் தன் திறமையை வெளிப்படுத்தினார்.
கண்ணதாசன் வாலி இருவரின் பாடகளுக்கும் கேவி மகாதேவன் இசை அமைத்தார் சத்தியம் நீயே, பூ வைத்த பூவைக்கு, ஒரு பக்கம் பாக்குறா பாடல்கள் பிரபலமாகின வி ராமமூர்த்தியின் ஒளிப்பதிவு கலரில் பளிச்சிட்டது.
எம்ஜிஆரின் மெய்ப்பாதுகாவலரான கே பி ராமகிருஷ்ணன் இரட்டை வேடங்களில் எம்ஜிஆர் தோன்றும் காட்சிகளில் ஒரு எம்ஜிஆர் ஆக நடித்திருந்தார் எம்ஜிஆரின் சில படங்களுக்கு மட்டும் வசனம் எழுதிய ஏ எல் நாராயணன் இப்படத்துக்கு கருத்துடன் வசனங்களை எழுதியிருந்தார். நீலகண்டன் டைரக்ஷனில் உருவான மாட்டுக்காரவேலன் இலங்கையிலும் 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டது.
No comments:
Post a Comment