உலகச் செய்திகள்

 அணு செயற்பாட்டை பலப்படுத்த ஈரானிய பாராளுமன்றம் அழைப்பு

தொலை இயக்க தொழில்நுட்பம் மூலம் ஈரானின் அணு விஞ்ஞானி படுகொலை

பிரிட்டனில் அடுத்த வாரத்தில் தடுப்பூசி பயன்படுத்த வாய்ப்பு

ரொஹிங்கிய அகதிகளை ஆபத்தான தீவுக்கு அனுப்பும் பணிகள் ஆரம்பம்

பொதுமக்கள் முன்னிலையில் தடுப்பூசி போட பைடன் திட்டம்

ஆப்கான் அமைதி பேச்சில் முதல் கட்ட உடன்படிக்கை


 அணு செயற்பாட்டை பலப்படுத்த ஈரானிய பாராளுமன்றம் அழைப்பு

ஈரானின் முன்னணி அணு விஞ்ஞானி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து நாட்டின் அணு நிலையங்கள் மீதான சர்வதேச கண்காணிப்பை நிறுத்தும்படி ஈரான் பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

பாராளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் கையெழுத்திட்டு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், முன்னணி விஞ்ஞானி மொஹசன் பக்ரிசாதஹ்வின் கொலையில் கொலைகார சியோனிச அரசு தொடர்புபட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைநகர் டெஹ்ரானில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் பக்ரிசாதஹ் கொல்லப்பட்டார்.

வெளிநாட்டு அக்கிரமிப்பு செயற்பாடுகளுக்கு உடன் பதிலடி கொடுப்பதற்கு எமது நாட்டில் மிகச் சிறந்த அணு சக்தி தொழிற்துறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

இந்த இலக்கை எட்டுவதற்கு அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஒழுங்குமுறைகளை முடிவுக்குக் கொண்டுவந்து சர்வதேச அணு சக்தி நிறுவனத்தின் கண்காணிப்பை நிறுத்த வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உலக வல்லரசு நாடுகளுடன் ஈரான் 2015இல் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி தனது அணுத் திட்டங்களை குறைப்பதற்கு ஈரான் இணங்கியமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன்   






தொலை இயக்க தொழில்நுட்பம் மூலம் ஈரானின் அணு விஞ்ஞானி படுகொலை

ஈரான் அதிகாரிகள் புது விளக்கம்

இஸ்ரேலிய கொலையாளிகள் தொலை இயக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே ஈரான் அணு விஞ்ஞானி மொஹ்சன் பக்ரிசதஹ்வை படுகொலை செய்திருப்பதாக ஈரான் குறிப்பிட்டுள்ளது.

‘துரதிருஷ்டவசமாக இந்தத் தாக்குதல் திட்டம் சிக்கல் கொண்டதாக இருப்பதோடு மின் உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் சம்பவ இடத்தில் யாரும் இருக்கவில்லை’ என்று ஈரான் உயர் பாதுகாப்பு கௌன்சிலின் செயலாளர் அலி ஷம்கானி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற பக்ரிசதஹ்வின் இறுதிச் சடங்கின்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இந்தத் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் மற்றும் அதன் தேசிய உளவு நிறுவனமான மொசத் இருப்பது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று ஷம்கானி கூறினார்.

கடந்த 20 ஆண்டுகளாக பக்ரிசதஹ்வை கொல்ல இஸ்ரேல் முயன்று வந்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார். ‘இறுதியில் இந்த முறை எதிரிகள் முழுமையாக தொழில்முறை கொண்ட, சிக்கலான, புதிய முறையை கையாண்டு வெற்றி பெற்றுள்ளனர்’ என்றார்.

இந்தத் தாக்குதலில் வெளிநாட்டைத் தளமாகக் கொண்ட ஈரானில் ஆட்சி மாற்றம் ஒன்றுக்கு முயலும் முஜாஹிதீனே கல்க் என்ற குழுவும் பங்கேற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டார். எனினும் அது எவ்வாறு என்று அவர் விளக்கவில்லை.

இந்தக் குழுவை ஒரு தீவிரவாத அமைப்பாக ஈரான் கருதுவதோடு இதன் அங்கத்தவர்களுக்கு பல ஐரோப்பிய நாடுகளும் அடைக்கலம் வழங்குவதாக குற்றம்சாட்டுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு அருகில் பட்டப்பகலில் தானியக்க துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு தாக்குதல் மூலம் முன்னணி அணு விஞ்ஞானியான பக்ரிசதஹ் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த படுகொலை தொடர்பில் ஈரான் ஆரம்பத்தில் கூறிய விளக்கத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாக தற்போதைய விளக்கம் உள்ளது. ஆரம்பித்தல் பக்ரிசதஹ்வின் கார் மீது துப்பாக்கிதாரிகள் சரமாரி தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டிருந்தது.

இந்தக் கொலைக்கு பழிதீர்க்கப்படும் என்று ஈரான் உறுதியாகக் கூறியுள்ளது.

பக்ரிசதஹ்வை கொன்றவர்களை பழி தீர்ப்பதில் தீர்மானமாக இருக்கிறோம் என ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெனரல் அமிர் ஹடாமி, பக்ரிசதஹ்வின் அஞ்சலிக் கூட்டத்தில் கூறினார்.

எந்த ஒரு குற்றத்துக்கும், தீவிரவாத நடவடிக்கைகளுக்கும், முட்டாள் தனமான செயல்பாடுகளுக்கும் ஈரான் மக்கள் விடை கொடுக்காமல் இருக்கமாட்டார்கள். இது எதிரிகளுக்கும் தெரியும். நான் ஒரு இராணுவ வீரனாக இதைக் கூறுகிறேன் என்றார் ஹடாமி.

ஈரானின் பாதுகாப்புத் துறையின் புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் தலைவராக இருந்த பக்ரிசதஹ், அணு சக்தி பாதுகாப்பில், பிரமாதமான பணிகளைச் செய்து இருக்கிறார். மொஹ்சன் பக்ரிசதஹ்வின் பாதையை இன்னும் வேகமாகவும், இன்னும் பலமாகவும் தொடர, இந்த அமைப்புக்கு ஈரான் அரசு கொடுக்கும் பணத்தை இரண்டு மடங்கு அதிகரிக்கும் எனவும் ஜெனரல் ஹடாமி குறிப்பிட்டார்.    நன்றி தினகரன் 






பிரிட்டனில் அடுத்த வாரத்தில் தடுப்பூசி பயன்படுத்த வாய்ப்பு

பிரிட்டன் மருத்துவமனைகள் முதற்கட்டமாக டிசம்பர் 7 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு மருந்துகளைப் பெறக்கூடும் என்று செய்தி வெளியாகியுள்ளது.

பயோடெக், பைசர் ஆகிய நிறுவனங்களின் தடுப்பு மருந்துகளுக்கு பிரிட்டன் மருந்து, சுகாதாரப் பராமரிப்புப் பொருட்களின் தயாரிப்பு ஒழுங்குமுறை ஆணையம் சில நாட்களுக்குள் ஒப்புதல் வழங்கும் என்று தெரிகிறது. வைரஸ் தொற்று தொடர்பான கட்டுப்பாடுகள் உரிய பலனைத் தராவிட்டால், வரும் வாரங்களில் மூன்றாம் கட்ட நோய்ப்பரவல் நேரலாம் என்று பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டோமினிக் ராப் எச்சரித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடப்பில் உள்ள முடக்கம் வரும் புதன்கிழமை நள்ளிரவில் முடிவுக்கு வரும். பின்னர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மூன்றாக வகைப்படுத்தப்படும். கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்காக டிசம்பர் 22 லிருந்து 27 ஆம் திகதி வரை, சமூக ஒன்றுகூடல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார். மூன்று குடும்பங்கள் வரை ஒன்று கூட அனுமதிக்கப்படும்.

ஆனால் அதன் மூலம் வைரஸ் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை உயரக்கூடும் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.    நன்றி தினகரன்  






ரொஹிங்கிய அகதிகளை ஆபத்தான தீவுக்கு அனுப்பும் பணிகள் ஆரம்பம்

வெள்ளம் மற்றும் சூறாவளிகளால் மோசமாக பாதிக்கப்படக் கூடிய தாழ்வான தீவு ஒன்றுக்கு ரொஹிங்கிய அகதிகளை அனுப்பும் நடவடிக்கையை பங்களாதேஷ் ஆரம்பித்துள்ளது.

இதன் முதல் கட்டமாக பல நூறு அகதிகளை அனுப்பும் ஏற்பாடுகளை பங்களாதேஷ் அரசு நேற்று மேற்கொண்டது. இதற்கு ஐ.நா மற்றும் மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

இராணுவ தாக்குதல் ஒன்றை அடுத்து அண்டை நாடான மியன்மாரில் இருந்து 2017 இல் தப்பி வந்த சுமார் ஒரு மில்லியன் ரொஹிங்கிய அகதிகள் தற்போது தென் கிழக்கு பங்களாதேஷின் மோசமான நிலையில் இருக்கும் மிகப்பெரிய அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

தமது பாதுகாப்பு மற்றும் உரிமையை தரும் வரை மியன்மார் திரும்ப பலரும் மறுத்து வருகின்றனர். எனினும் அகதி முகாம்களில் அதிகரித்து வரும் வன்முறைகள் மற்றும் போதைக் கடத்தல் கும்பல்களால் அந்த முகாம்களை அகற்றுவதற்கு பங்களாதேஷ் அரசு முயன்று வருகிறது.

இந்நிலையில் கொக்ஸ் பசார் பிராந்தியத்தில் இருக்கும் முகாம்களில் இருந்து குறைந்தது 10 பஸ் வண்டிகள் சிட்டகொங் துறைமுகத்தை நோக்கி நேற்று பயணத்தை ஆரம்பித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

‘சுமார் 400 பேரை ஏற்றிய பத்து பஸ் வண்டிகளை தீவை நோக்கிச் சென்றன’ என்று உள்ளூர் பொலிஸ் தலைவர் அஹமது சுன்ஜுர் மொர்சத் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார். சிட்டகொங் துறைமுகத்தில் இருந்து இந்த அகதிகள் இராணுவப் படகுகள் மூலம் பசான் சார் தீவுக்கு இன்று அழைத்துச் செல்லப்படவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

52 சதுர கிலோமீற்றர் பகுதி கொண்ட பசான் சார் தீவில், பிராந்தியத்தில் அடிக்கடி ஏற்படும் சூறாவளியால் நான்கு, ஐந்து மீற்றர் உயரத்திற்கு வெள்ளம் ஏற்படுவதாக உள்ளூர் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அந்தத் தீவில் 100,000 பேருக்காக வீடுகள் கட்டப்பட்டிருப்பதாகவும் கடல் அமைதியாக இருக்கும் நவம்பர் தொடக்கம் ஏப்ரல் வரையான வரண்ட பருவத்தில் அவர்களை குடியமர்த்துவதற்கு நிர்வாகம் எதிர்பார்த்துள்ளது என்றும் பங்களாதேஷ் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த குடியமர்த்தல் தொடர்பான போதிய தகவல்களை வெளியிடவில்லை என்று குறிப்பிட்டிருக்கும் ஐ.நா, இதற்கான ஏற்பாடுகளில் பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டம் குறுகிய பார்வை கொண்டது என்றும் மனிதாபிமானம் அற்றது என்றும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட சர்வதேச அகதிகள் குழு தெரிவித்துள்ளது.

“மசான் சாருக்கு அதிக அகதிகளை இடம்பெயரச் செய்வதை நிர்வாகம் உடன் நிறுத்த வேண்டும்” என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியாவுக்கான பிரச்சாரகர் சாத் ஹம்மாதி அறிக்கை ஒன்றை வெளியிட்டு வலியுறுத்தியுள்ளார்.   நன்றி தினகரன்  






பொதுமக்கள் முன்னிலையில் தடுப்பூசி போட பைடன் திட்டம்

அமெரிக்காவில் தடுப்பு மருந்தின் பாதுகாப்புக் குறித்துப் பொதுமக்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாகப் பொதுமக்கள் முன்னிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு ஜோ பைடன் திட்டமிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளான பராக் ஒபாமா, ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் ஆகியோரும் அதேபோன்று பொதுமக்கள் முன்னிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்துள்ளனர்.

அத்துடன், தாம் பதவியேற்ற முதல் 100 நாட்களுக்கு முகக்கவசம் அணியும்படி அமெரிக்கர்களைக் கேட்டுக்கொள்ளப் போவதாக பைடன் கூறியுள்ளார்.

அரசாங்கக் கட்டடங்களில் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று உத்தரவிடவிருப்பதாகவும் சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் அவர் குறிப்பிட்டார்.

கடந்த நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டி இருக்கும் ஜோ பைடன் எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ளார்.

தமது நிர்வாகத்தின் கொவிட்–19 தொற்று எதிர்ப்புப் பணிக்குழுவிற்குத் தலைமை ஆலோசகராக மருத்துவர் அண்டனி பௌச்சி நீடிப்பார் என்றும் பைடன் கூறினார். கொரோனா தொற்றினால் உலகில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக இருக்கும் அமெரிக்காவில் 14.1 மில்லியன் நோய்த் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 276,000 பேர் உயிரிழந்துள்ளனர்.   நன்றி தினகரன்  






ஆப்கான் அமைதி பேச்சில் முதல் கட்ட உடன்படிக்கை

ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்களுக்கு இடையே இடம்பெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தையில் முதல்கட்ட உடன்பாடு ஒன்று எட்டப்பட்டதாக இரு தரப்பும் கடந்த புதன்கிழமை அறிவித்துள்ளன.

இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு எட்டப்பட்டிருக்கும் இந்த உடன்பாடு, போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவது உட்பட முக்கிய விடயங்கள் பற்றி பேசுவதற்கு வகைசெய்துள்ளது.

‘பேச்சுவார்த்தையில் முதற்கட்ட நிகழ்ச்சி நிரல் இறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதிலிருந்து அந்த நிகழ்ச்சி நிரலுக்கு அமைய பேச்சுவார்த்தைகள் இடம்பெறும்’ என்று ஆப்கான் அரசு பேச்சுவார்த்தைக் குழுவின் உறுப்பினரான நாதர் நதரி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

இதனை தலிபான்களும் ட்விட்டர் பதிவு ஒன்றின் மூலம் உறுதி செய்துள்ளனர். அமெரிக்காவின் ஆதரவுடன் கட்டார் தலைநகர் டோஹாவில் பல மாதங்கள் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னரே இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. எனினும் ஆப்கானில் இரு தரப்பும் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றன. அரச படைகள் மீதான தலிபான்களின் தாக்குதல்கள் குறைவின்றி நீடித்து வருகின்றன.   நன்றி தினகரன்  





No comments: