மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதவியேற்ற பிரபாகரன் குமாரட்ணம்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பிரபாகரன் குமாரட்ணம் நேற்று (01/12/2020) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். கண்டி மாவட்டத்தின் புசல்லாவ நகரில் பிறந்த இவர், தலவாக்கலை, தேவிசிறிபுர குமாரரட்ணம் மற்றும் காலஞ்சென்ற லீலாவதி ஆகியோரின் புதல்வராவார்.

புசல்லாவ பரிசுத்த திருத்துவக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், தலவாக்கலை சுமண மகாவித்தியாலயத்தில் உயர்தரக் கல்வியையும் கற்ற இவர், கொழும்பு பல்கலைக்கழக சட்டபீடத்திற்கு தெரிவாகி சட்டஇளமாணி பட்டத்தை பெற்றார். 1993ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். அதன் பின்னர் காலஞ்சென்ற ஜனாதிபதி சட்டத்தரணி ஏ.ஊ மோதிலால் நேருவின் கனிஷ்ட சட்டத்தரணியாகப் பணியாற்றினார்.

1990/1991ம் ஆண்டுகளில் கொழும்பு பல்கலைக்கழக காற்பந்தாட்ட அணியின் தலைவராக இருந்தார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் தொழிற்சட்டம், குற்றவியல் நீதி, சர்வதேச மனித உரிமைகள் சட்டம் ஆகியவற்றைப் பயின்று தனது சட்டமுதுமாணி பட்டத்தை நிறைவு செய்ததுடன் பீஜி தீவு நீதிமன்றங்களில் பரிஸ்ரராகவும் சொலிசிற்றராகவும் பதவிப்பிரமாணம் பெற்றுள்ளார்.

1995ஆம் ஆண்டு சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் அரச சட்டவாதியாக இணைந்து கொண்ட பி.குமாரட்ணம் தனது மும்மொழி ஆற்றலாலும், விடாமுயற்சியாலும் 2005ஆம் ஆண்டு சிரேஷ்ட அரச சட்டவாதியாகவும், 2014ஆம் ஆண்டு பிரதி சொலிசிற்றர் ஜெனரலாகவும், 2018ஆம் ஆண்டு சிரேஷ்ட பிரதி சொலிசிற்றர் ஜெனரலாகவும் பதவி உயர்வுகளைப் பெற்றுக் கொண்டார்.

சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் கடமையாற்றிய காலப் பகுதியில் மோட்டார் போக்குவரத்துப் பிரிவு, பொதுமக்கள் பிராதுப்பிரிவு, சிறுவர்களுக்கெதிரான துஷ்பிரயோகப் பிரிவு, குடியவரவு மற்றும் குடியகல்வுப் பிரிவு ஆகிய பிரிவுகளை மேற்பார்வை புரிந்ததுடன் வடக்கு, கிழக்கு களுத்துறை மற்றும் நீர்கொழும்பு மேல்நீதிமன்ற வலயங்களை மேற்பார்வை செய்யும் பணியையும் நிறைவேற்றியுள்ளார்.

இவர் நாடாளவிய ரீதியில் நீதிவான் நீதிமன்றம் முதற்கொண்டு உயர்நீதிமன்றம் வரை பல நீதிமன்றங்களிலும் தோன்றி ஆயிரக்கணக்கான வழக்குகளில் வாதிட்டுள்ளார். பொலிஸ் திணைக்களம், மதுவரித் திணைக்களம் உள்ளிட்ட பல திணைக்களங்களுக்கு பயிற்சிக் கருத்தரங்குகளை வழங்கியுள்ளார்.

2015ஆம் ஆண்டு புங்குடுதீவில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வித்யா சிவலோகநாதன் வழக்கில் யாழ்ப்பாணத்தில் மூன்று நீதிபதிகள் முன்னிலையில் தீர்ப்பாயத்தில் தோன்றி எண்மருக்கு மரணதண்டனையை பெற்றுக் கொடுத்தார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில், பாராளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரன் கொலை வழக்கிலும் சிறப்பு வழக்குத் தொடுநராகத் தோன்றியதுடன், மட்டக்களப்பு மயிலந்தனை படுகொலைகள் வழக்கிலும் கனிஷ்ட சட்டவாதியாகத் தோன்றியுள்ளார்.

உள்நாட்டில் மாத்திரமின்றி வெளிநாட்டிலும் தனது சேவையை ஆற்றியுள்ளார். 2012_ -2014 வரையான காலப்பகுதியில் பீஜி தீவின் மேல்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் நீதிபதியாகக் கடமையாற்றி முந்நூறுக்கும் மேற்பட்ட கட்டளைகளையும், தீர்ப்புகளையும் வழங்கியுள்ளார்.

2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாத காலப் பகுதியில் பீஜி தீவின் உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பணிபுரிந்துள்ளார். 2000ஆம் ஆண்டு தொடக்கம் 2011ஆம் ஆண்டு வரை இலங்கை சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வின் பரீட்சகராகவும் 2016ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரை இலங்கை சட்டக் கல்லூரியின் சட்ட மாணவர்களின் பரீட்சகராகவும் பணிபுரிந்துள்ளார்.

பி. குமாரரட்ணம் சட்ட மாஅதிபரால் ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவிற்கு உதவி புரிய பல்வேறு சந்தர்ப்பங்களில் சட்டவாதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜப்பான், வியட்னாம், இந்தோனேசியா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல சர்வதேச நாடுகளில் நடைபெற்ற கருத்தரங்குகள், சர்வதேச சட்ட மாநாடுகள் பயிற்சிகளில் பங்கேற்று தனது கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். நன்றி தினகரன் 

No comments: