படித்து சுவைத்த "கவிதையும் ரசனையும்" செ பாஸ்கரன்

ஸ்டெல்லா புரூஸ் என்ற பிரபல எழுத்தாளர் நாவல்கள், சிறுகதைகள் என்று வெகு ஜன பத்திரிகைகளில் தொடர்கள் எழுதியவர்.  ஆனால் அவர் காளி-தாஸ் என்ற பெயரில் கவிதைகள் எழுதியிருக்கிறார் என்று எவ்வளவு பேருக்குத் தெரியும். 

          அவர் கவிதைகள் பெரும்பாலும் ஆத்மாநாம் உருவாக்கிய ழ என்ற சிற்றேட்டிலும், பின்னால் நவீன விருட்சம் இதழ்களிலும் வெளிவந்திருக்கின்றன.

          ‘நானும் நானும்’ என்ற தலைப்பில் அவர் கவிதைகள் தொகுக்கப்பட்டு மையம் வெளியீடாக ஜøலை 1996 வெளிவந்தது. 

          அவர் கவிதைகள் எளிமையாகவும் புரியும் படியாகவும் எழுதப்பட்டிருக்கும்.  அடிப்படையில் வாழ்க்கையில் நிதர்சன உண்மையைக் கிண்டலாகப் பார்க்கும் தன்மை  இருக்கும்.

          மரணத்தைப் பற்றிய சிந்தனை ஆழமாக அவர் கவிதைகளில் ஓடிக்கொண்டிருக்கும்.  இப்போது அவர் கவிதை ஒன்றிரண்டு பார்க்கலாம்.

“பாடைக் காட்சி”

நான்கு பேர் சுமக்க 

கடற்கரையிலிருந்து பாடை கிளம்பியது 

பேசியபடி நண்பர்கள் சிலர் 

பாடையை தொடர்ந்தார்கள் 

யாருடைய முகத்திலும் வருத்தமில்லை 

ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டு போனார்கள் 

பாடையைத் தூக்கிச் சென்றவர்கள் 

மிகவும் நிதானமாக நடந்தார்கள் 

பாடை குலுங்காமலும் 

அதிகம் அசையாமலும் 

கவனித்துக் கொண்டார்கள் 

நண்பர்கள் சிகரெட் பற்ற வைத்தார்கள் 

சினிமா பற்றியும் அரசியல் பற்றியும் 

விவாதித்தார்கள். 

பஸ்ஸிலும் தெருவிலும் பலர் 

பாடைக் காட்சியை கண்டார்கள் 

சடலத்தின் கழுத்தில் மாலை இல்லை 

பின் போனவர்கள் யாரிடமும் 

மரண காரியம் செய்யும் தோற்றமில்லை 

பீடிக்கு தீ கேட்பது போல 

ரிஷாகாரன் ஒருவன் 

நெருங்கி வந்து கேட்டான் 

செத்துப் போனது யார் ஸார்?

ஒருவரும் அவனுக்குப் பதில் சொல்லவில்லை 

வெகுநேரம் சென்றபின் பாடை 

திண்ணையிட்ட ஒரு வீட்டெதிரில் 

இறக்கப்பட்டது. 

எல்லோரும் மௌனமாக நின்றார்கள் 

பாடையில் இருந்தவர் எழுந்து 

வீட்டிற்குள் போனார் 

தூக்கி வந்தவர்களுக்குப் பணம் தந்துவிட்டு 

நண்பர்கள் உள்ளே சென்றார்கள் 

வீட்டுப் பெண்கள் கலவரமடைந்து கேட்டார்கள் – 

என்ன கர்மம் இது 

ஏனிப்படி பாடையில் வரணும்? 

ரொம்பத்தான் களைப்பாக இருந்தது 

பஸ் டாக்ஸி ரிஷா 

எதிலும் ஏறப் பிடிக்கவில்லை 

பாடையில் படுத்து நன்றாக

தூங்கிக் கொண்டு வந்தேன் என்றார் 

மரணம் நிகழ்ந்த துக்கம் 

முகங்களில் படர 

பெண்கள் நிசப்தமானார்கள் 

களைப்புடன் நண்பர்களும் 

நாற்காலிகளில் சாய்ந்து 

கண்மூட 

வெற்றுப்பாடை 

வீதியில் போனது,           இந்தக் கவிதை எளிதில் படிப்பவருக்குப் புரிந்து விடும்.  அவ்வளவு எளிமையாக எழுதப்பட்டிருக்கிற கவிதை.  ஒருவிதத்தில் அங்கத சுவை கொண்ட கவிதை.   பாடைக்காட்சி என்று படிக்கும்போது ஒரு துனுக்குற மன நிலையைத் தானாகவே உண்டாக்கும். பாடை என்பது மரணத்தைக் குறிக்கும் சொல்லாகவே இருக்கிறது.

          ஆனால் மரணமடைந்தவர்களைப் பாடையில் தூக்கிக்கொண்டு போவதுதான் இயல்பாக நடக்கக் கூடியது.  இங்கு வேறு மாதிரி நடக்கிறது. 

          கடற்கரையிலிருந்து ஒருவன் அவன் வீட்டிற்குப் பாடையில் படுத்துக்கொண்டு வருகிறான்.  கூடவே அவன் நண்பர்கள்.  பாடையைத் தூக்கிக்கொண்டு போகச் சிலர்.

          பாடை நிதானமாகப் பயணம் ஆகிறது.  எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லை. பாடையைத் தூக்கிக்கொண்டு போகிறவர்களுக்கு எந்தத் துக்கமுமில்லை.  அதேபோல் பாடையில் படுத்துக்கொண்டிருப்பவருக்கும் வருத்தமில்லை.  சொகுசாகத் தூங்கிக்கொண்டு வருகிறார். 

          ஆனால் வீட்டில் வந்து இறங்கும்போதுதான் வீட்டில் உள்ளவர்கள் பதட்டமடைகிறார்கள்

.

          பாடையில் படுத்து நன்றாக

          தூங்கிக் கொண்டு வந்தேன் என்றார்

          மரணம் நிகழ்ந்த துக்கம்

          முகங்களில் படர

          பெண்கள் நிசப்தமானார்கள்

என்று எழுதியிருக்கிறார். இன்னொரு இடத்தில் ஒரு ரிக்ஷாக்காரன் நெருங்கி வந்து கேட்கிறான் செத்துப் போனது யார் சார் என்று.   அதுவும் எப்படிக் கேட்கிறான் என்றால், பீடிக்கு தீ கேட்பது போல. செம்ம நகைச்சுவை உணர்வு பொங்க எழுதியிருக்கிறார்.

          பாடையில் சவாரி செய்வதைக் கிண்டலாகக் கொண்டுவந்தாலும் அது தொடர்பாக ஏற்படும் மரண பயத்தையும் குறிப்பிடுகிறார். 

          இறுதியில் வெற்றுப் பாடை வீதியில் போனது என்று முடிக்கிறார்.  மரணம் என்றாலே ஒரு வித பய உணர்ச்சி ஏற்பாட்டாலும் பயத்தையும் வேடிக்கை உணர்வாகவும் மாற்றி விடுகிறார் கவிதையில்.

          இதை ஒரு சர்ரியலிச கவிதையாகக் கருதலாம்.  

          அடுத்தது இன்னொரு கவிதையை எடுத்துக் கொள்வோம்.  மிக எளிமையாக எழுதப்பட்டிருக்கும் இந்தக் கவிதைக்குத் தலைப்பொன்றுமில்லை.  

                              பொழுது விடிந்து

                              தினமும் நான்”

                              வருவேனென்று 

                              கடற்கரை மண்ணெல்லாம்

                              குஞ்சு நண்டுகள்

                              கோலம் வரைந்திருந்தன

          இங்குக் குஞ்சு நண்டுகள் முன்னமே கோலம் வரைந்து விடுகின்றன.  இது இயல்பாக நடக்கக் கூடிய நிகழ்ச்சி.

          இந்த இயல்பான   நிகழ்ச்சியை கவிகுரலோன் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறான்.  சாதாரண விவரணையில் அழுத்தம் கொடுப்பது குஞ்சு நண்டுகள்தான்.

          தினமும் நடைப்பயிற்சிக்காக வருகிற கவிகுலோன் குஞ்சு நண்டுகளின் அட்டகாசத்தைக் கவனித்துப் பூரித்துப் போகிறான்.  

          தனக்குத் தென்படுகிற சின்ன சின்ன சம்பவங்களை அழகாகக் கவிதை ஆக்குகிறார்.  பாடைக் காட்சி மாதிரி சில கவிதைகள் அவரை வேறு விதமாக யோசிக்க வைக்கிறது.  

          எல்லாவற்றிலும் இவர்தான் பாடுபொருளாகத் தென்படுகிறார்.  


nantri puthu.thinnai

1 comment:

Anonymous said...

ஆசிரியர் கவனத்திற்கு - ஏன் ஐயா, இதை உண்மையில் எழுதியவர் அழகியசிங்கர் என்று போடாது, செ.பாஸ்கரன் என்று போட்டிருக்கிறீர்களே?

நன்றி
சுந்தரேசன்