அது ஒரு நிலாக்காலம் (அனுபவக் கதை) .


உஷா ஜவகர்  ( அவுஸ்திரேலியா)     


அது 1983 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் முதற் கிழமையில் ஒரு நாள். அன்று என் மாமா என்னையும் என் தங்கையையும் யாழ்ப்பாணத்தில் கச்சேரி பகுதியில் இருந்த ஒரு ஹாஸ்டெலில் சேர்த்து விட்டார்.21 வருஷங்கள் ஹாஸ்டல் பக்கமே தலை வைத்துப் படுக்காத எனக்கு ஹாஸ்டெலில் போய் சேர பயமாக தானிருந்தது. மனமெங்கும் பீதி நிறைந்து இருந்தது.

கொழும்பிலேயே பிறந்து வளர்ந்த நான் 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொழும்பில் வெடித்த இனக்கலவரத்தால் யாழ்ப்பாணத்திற்கு இடம் பெயர நேர்ந்தது.

 

கொழும்பில் சரஸ்வதி ஹாலில் அமைக்கப்பட்ட அகதி முகாமில் தங்கிவிட்டு கப்பலில் பயணித்து காங்கேசன் துறைமுகத்தை அடைந்தேன்.சிறிது காலம் என் சின்னம்மா வீட்டில் தங்கிவிட்டு CIMA படிப்பதற்காக ஹாஸ்டெலுக்கு சென்றேன்.

உள்ளமெங்கும் பீதி நிறைந்திருக்க ஒரு கையில் என் உடைகளும் புத்தகங்களும் நிறைந்த சூட்கேஸ் ஒன்று இருந்தது.மறு  கையினால் என்னை விட இரண்டு வயதே குறைவான என் தங்கையின் கையை இறுகப் பற்றியிருந்தேன்.எங்கள் இருவரது கைகளும் நடுங்கிக் கொண்டிருந்தன.அவளும் தன மற்றக் கையினால் ஒரு சூட்கேஸை காவிக் கொண்டு நின்றாள்.

 

அப்போது அந்த ஹாஸ்டெலுக்கு பொறுப்பான கன்னியாஸ்திரி அங்கு வந்தார்.அவரை 'மதர்' என்றே எல்லோரும் அழைத்தார்கள்.அவர் எங்களின்ர மாமாவுடன் கதைத்துவிட்டு எங்களை உள்ளே அழைத்துச் சென்றார்.அவரோடு உள்ளே போகும் வழியிலே என் கண்கள் அங்கும் இங்கும் அசைந்து நோட்டம் விட்டன.

 

ஹாஸ்டலின் முன்புறம் அழகான தோட்டம்.தோட்டத்தில் அழகிய மலர்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன.இரண்டு இளம் பெண்கள் வாளியில் தண்ணீர் நிரப்பிக் கொண்டிருந்தார்கள்.தோட்ட மலர்களுக்கு விடுவதற்காயிருக்கும்.

 

ஹாஸ்டெல் கட்டிடத்தின் மேலே மாதா சிலை ஒன்று வீற்றிருந்தது.கீழே படிக்கும் அறைகள்.(study hall ),சாப்பாட்டுக்கூடம்,சமையலறை எல்லாம் இருந்தன.

 

படிக்கட்டில் மேலே ஏறி வலதுபுறம் திரும்பினால் நீண்ட அறை.ஆங்கிலத்தில் டாமெட்ரி (dormitory)  என்று அழைப்பார்கள்.அந்த நீண்ட அறையில் வரிசையாக நாற்பது கட்டில்கள் அடுக்கப்பட்டிருந்தன.

 

ஒவ்வொரு கட்டிலின் மேலும் ஒவ்வொரு இளம்பெண் அமர்ந்து கொண்டோ,படுத்துக் கொண்டோ அல்லது புத்தகம் வாசித்துக் கொண்டோ அல்லது தலை சீவிக் கொண்டோ இருந்தார்கள்.

 

அந்த மதர் எங்களுக்கு இரண்டு கட்டில்களைக் காட்டி,"நீங்க இரண்டு பேரும் இதில படுத்து கொள்ளலாம்.கட்டிலுக்கு கீழே சூட்கேஸ்களை வைத்துக் கொள்ளுங்கோ.ஏதும் தேவை என்றால் என்ர  ஆபீஸ் அறையில் என்னை வந்து சந்தியுங்கோ!" என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

 

எங்களுக்கு உடுப்புகள் வைக்க அலுமாரி ஒண்டும் கிடைக்கேலை.

 

நாங்கள் இருவரும் எங்கள் கட்டில்களில் அமர்ந்து கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்து பார்த்து முழித்துக் கொண்டிருந்தோம்.அடுத்து என்ன செய்வது?யாருடன் கதைப்பது? என்று ஒன்றும் தெரியாத குழப்ப நிலை எங்கள் இருவரிடையே உருவாகியிருந்தது.

 

அதற்குள் வசுந்தரா என்ற பெண் எங்கள் அருகே வந்து."எப்படி இருக்கிறீங்க?" என குசலம் விசாரித்துவிட்டு அங்கிருந்த பெண்கள் எல்லோரையும் எங்களுக்கு அறிமுகப்படுத்தினாள்.

 

எங்கள் இருவரையும் சேர்த்து  40 பெண்கள் அந்த டாமெட்ரியில் தங்கியிருந்தோம்.

 

பிறகு வசுந்தரா எங்களை கான்டீனுக்கு மதிய உணவுக்காக அழைத்து சென்றாள். மதிய உணவு சுமாராகத்தான் இருந்தது.

 

வசுந்தரா தன்னையும் ரமாவையும் அறிமுகப்படுத்தும் போது தங்கள் இருவரது தந்தைமார்களும் இறந்து விட்டதாகத்தான் கூறினாள்.ஆனால் சில நாட்களின் பின்னர் நான் அறிந்து கொண்ட தகவல் இதுதான்.

 

வசுந்தராவினதும் ரமாவினதும் பெற்றோர் விவாகரத்து பெற்று விட்டார்கள்.அதை வெளியே கூற விரும்பாத வசுந்தரா தனது தந்தை இறந்து விட்டதாக கூறியிருந்தாள் என்பதை அறிந்து கொண்டேன்.

 

அந்த ஹாஸ்டலில் இரவு சாப்பாட்டிற்கு பிட்டும் சம்பலும் அல்லது பிட்டும் குழம்பும் தருவார்கள்.சில நேரங்களில் தோசையுடன் சம்பலும் சாம்பாரும் தருவார்கள்.

 

ஹாஸ்டெலில் யுவதிகள் பிட்டை உண்ணும் போது "நாங்க கான்கிரீட்டை சாப்பிடுறோம்" என்பார்கள்.

 

சில வேளைகளில் இரவுச் சாப்பாட்டிற்கு ஆளுக்கு இரண்டு தோசை தருவதற்கு பதிலாக எனக்கும் என் தங்கைக்கும் சேர்த்து இரண்டு தோசைகளை ஒரு கோப்பையில் வைத்துவிட்டு மற்ற கோப்பையால் மூடி வைத்து விடுவார்கள் அந்த கான்டீன் பெண்கள்.நாங்கள் இருவரும் அந்த கான்டீன் பெண்களிடம் போய் சண்டை பிடிக்க பயந்து கொண்டு ஆளுக்கொரு தோசையை சாப்பிட்டுவிட்டு படுத்து விடுவோம்.

 

அந்தச் சமயத்தில் தான்,"இறந்து போன எங்கள் அம்மா உயிரோட இருந்திருந்தா எங்களுக்கு இப்பிடி பட்டினியா படுக்க வேண்டிய நிலை வந்திருக்காதே!" என எங்கள் மனதுள் நினைத்துக் கொள்வோம்.

 

அங்கிருந்தபடி Chartered Institute of Management Accountants டிகிரியில் மூன்றாம் பகுதியை படித்து கொண்டிருந்தேன்.

 

சில வேளைகளில் வகுப்பு இடைவேளையின் போது மாமி சமைத்து நல்ல உணவை அனுப்பி விடுவார்.அதை ஹாஸ்டெலுக்கு கொண்டு வந்து நண்பிகளுடன் பங்கிட்டு உண்பேன்.

 

ஒரு நாள் இரவு நாங்கள் படுக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கையில் என் நண்பி என்னிடம்,"இப்ப முனி சூபர்வைஸ்  பண்ண வர போகுது.எல்லாரும் ஒழுங்கா படுங்க!"என்றாள்.

 

நான் உடனே,"அது யார் முனி?"என்று அப்பாவித்தனமாக கேட்டேன்.உடனே அவள்,"கருப்பு கவுனும் தலைமயிரை மறைச்சு வெள்ளை ஸ்கார்ப்பும் (scarf)  கட்டிக் கொண்டு சிஸ்டர் சில்வியா வருவா.இரவில நாங்க எல்லாரும் லைட்டை அணைத்து விட்டு ஒழுங்கா படுத்திருக்கிறோமா என செக் பண்ண வருவா!

 

அவ அப்படி கருப்பும் வெள்ளையுமா இரவில டார்ச்சோட(torch ) உலாவுறதை பார்த்துட்டு நாங்க அவக்கு முனி எண்டு பட்டப்  பெயர் வைச்சுட்டம்."என்றாள்.நான்," அப்படியா?" என்று கேட்டுவிட்டு பெட்ஷீட்டை இழுத்து மூடிக் கொண்டு படுத்துவிட்டேன்.

 

அப்போதெல்லாம் எனக்கு டீ,காபி அருந்தும் பழக்கம் இருக்கவில்லை. "டார்லிங் "(darling )என்ற பெயரில் வரும் ட்ரிங்க் பாக்கெட்டுகளை வாங்கி வைத்துவிட்டு இரவில் ஒரு பாக்கெட்டை தண்ணீரில் கரைத்துக் குடிப்பேன்.சரியாக ஆரஞ்சு பார்லி (Orange Barley ) சோடா மாதிரி இருக்கும்.

 

அன்று ஒரு நாள் இரண்டு ஹாஸ்டெல் தோழிகள்,"உஷா நீர் கடைக்காரனிடம் போய் டார்லிங் பாக்கெட்  இருக்கா? என்று கேட்டால் கடைக்காரன் நீர் தன்னைத் தான் டார்லிங் எண்டு கூப்பிடுறீர் என நினைக்க போறான்"என்று கூறி கல கல என  சிரித்தார்கள். அவர்கள் சிரிப்பதை பார்த்ததும் எனக்கும் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.

 

ஹாஸ்டெலில் சேர்ந்த சில நாட்களிலேயே ஹாஸ்டெலுக்கு அருகில் இருந்த வீணை ஆசிரியரிடம் சேர்ந்து வீணை கற்று கொள்ள ஆரம்பித்தேன்.கொழும்பில் A /L முடித்துவிட்டு இரண்டு வருடங்கள் வீணை பழகியிருந்தேன்.

 

புது வீணை ஒன்றை எனது கொழும்பு வீணை ஆசிரியை 4000 ரூபாவுக்கு எடுத்து தந்திருந்தார்.அந்த வீணை என் கைகளுக்கு வந்து இரண்டு மாசங்களிலேயே 83ஜூலை கலவரம் ஆரம்பித்து விட்டது.

 

நாங்கள் சரஸ்வதி ஹால் அகதி முகாமில் இருந்தபோது யாரோ என்னிடம் சொன்னார்கள்,"உங்கள் வீட்டுக்கு அருகே வெள்ளவத்தை கடற்கரை ஓரத்தில் ஒரு வீணை அநாதரவாக வீசப்பட்டுக் கிடக்கிறது."

 

அதைக் கேட்டு நான் மிகவும் மனமுடைந்து போனேன்.

 

இப்போது யாழ்ப்பாண ஹாஸ்டெலில் எனக்கு வீணை வாங்கும் அளவுக்கு வசதியிருக்கவில்லை.எனவே எனது நண்பியின் குட்டி பியானோ ஒன்றை எடுத்து " ,ரி,,"என்று தட்டிக் கொண்டிருப்பேன்.

 

ஹாஸ்டெலில் கீழே ஸ்டடி ரூமுக்கு (study room) சில வேளைகளில் சென்று படித்ததுண்டு.இரண்டு தரம் பிளக் அவுட் (black out ) வந்து விட்டது.அதாவது கண்களை திறந்து பார்க்க முடியாதபடி சுற்றி வர இருட்டாய் இருந்த நிலை.போஷாக்கின்மை காரணமாக இருந்திருக்கலாம்.

 

கூடுதலான நேரம் என் கட்டிலில் உட்கார்ந்தபடியே படித்துக் கொண்டிருப்பேன்.

 

என் தங்கை ஹாஸ்டெலில் இரண்டரை மாதங்கள் தங்கிவிட்டு ஹாஸ்டெல் சாப்பாடு பிடிக்காததால் எங்கள் மாமி வீட்டிலேயே தங்கியிருந்து படிக்க சென்றுவிட்டாள்.

 

ஒரு நாள் லதா என்ற பெண்ணுக்கு வயிற்றுவலி ஏற்பட்டது.சிஸ்டர் ஒருவர் அந்தப் பெண்ணை யாழ்ப்பாணம் பெரிய ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்.அங்கு அவளுக்கு அப்பெண்டிக்ஸ் இருக்கிறது எனக் கண்டு பிடித்து அப்பெண்டிக்ஸ் ஆபரேஷனை செய்து விட்டார்கள்.

 

பிறகு சிஸ்டர் சில்வியா எங்களிடம்,"உங்களில் யார் லதாவுக்கு துணையாக ஆஸ்பத்திரியில தங்கியிருக்க சம்மதிக்கிறீங்க?"என்று கேட்டார்.நான் கையை உயர்த்தி,"அதற்கென்ன நான்  லதாவுடன் போய் நிக்கிறன்"என்று கூறிவிட்டு பகல் வேளைகளில் ஒரு சில நாட்கள் லதாவுடன் போய் தங்கியிருந்தேன். லதாவுக்கு தேவையான உதவிகளையும் செய்தேன்.

 

லதா வைத்தியசாலையில் இருக்கும்போது மாலா ஒருநாள் லதாவின் கட்டிலின் மேல் கிடந்த மெத்தையை தூக்கிப் பார்த்தாள்!அவளது மெத்தைக்கு கீழே அவள் மற்றவர்களிடம் இருந்து திருடி வைத்திருந்த பண நோட்டுகள்,பென்சில்கள், அழிறப்பர்கள் போன்றவை எல்லாம் பரந்து விரிந்து கிடந்தன.

 

அவற்றைப் பார்த்ததும் நாங்கள் எல்லோரும் மிகப் பெரிய அதிர்ச்சிக்குள்ளானோம்.பின்னர் யாரோ ஒருத்தி சிஸ்டர் சில்வியாவிடம் இந்த திருட்டு விஷயத்தைக் கூறிவிட்டாள்.பின்னர்  சிஸ்டர், லதா வைத்தியசாலையால் ஹாஸ்டெலுக்கு வந்ததும் லதாவை விசாரித்து அறிவுரை வழங்கியிருந்தார்.

 

இன்னொரு இளம்பெண் அந்த ஹாஸ்டெலில் தங்கியிருந்தாள். அவள் பெயர் ஷீலா. ஷீலாவின் அம்மாவுக்குப் பத்துப் பிள்ளைகள்.ஷீலா மூன்றாவது பிள்ளை.ஷீலாவின் அம்மா வீட்டில் கஷ்டம் என்பதால் குழந்தைகள் இல்லாத தன் தங்கையிடம் ஷீலாவைத் தூக்கி கொடுத்துவிட்டாள்.

 

ஷீலா தன் அம்மா தன்னை சித்தியிடம் தூக்கிக் கொடுத்துவிட்டதால் தன் அம்மா மீது கடுங்கோபம் கொண்டிருந்தாள்.அந்தக் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக ஷீலா தன் சொந்த அம்மா வந்தால் அவருடன் கதைக்க மாட்டாள்.

 

அவள் தன் சித்தி ,சித்தப்பா ஹாஸ்டெலுக்கு வந்தால் அவர்களுடன் கதைப்பாள்.

 

ஷீலாவின் அக்கா கவிதாவும் அதே ஹாஸ்டெலில் தான் தங்கியிருந்தாள்.ஷீலாவின் அம்மா ஹாஸ்டெலுக்கு வந்து கவிதாவை பார்த்து விட்டு போவார்.

 

அந்த சமயத்தில்” சோலை புஷ்பங்களே என் சோகம் கேளுங்களேன்" என்ற சினிமா பாடல் பிரபலமாக இலங்கை வானொலியில் ஒலித்துக் கொண்டிருந்தது.

 

அந்தப்  பாடலை நான் ரசித்துக் கேட்பேன்.அவ்வப்போது அந்தப் பாடலை நான் ஹம்மிங் செய்து கொண்டிருப்பேன்.

 

ஒரு நாள் தோட்டத்தில் அந்தப் பாடலை நான் ஹம்மிங் செய்து கொண்டிருந்த போது ரதி என்ற பெண் என்னிடம்,"ஏன் உஷா நீர் கொழும்பில யாரோ ஒரு ஆணை விரும்பி விட்டுஅவர் நினைவாகவா இந்தப் பாடலை அடிக்கடி பாடுகிறீர்?"எனக் கேட்டாள்.

 

நான் சிரித்தபடியே "இல்லை"என்று தலையசைத்து விட்டு அப்பால் நகர்ந்து விட்டேன்.

 

இந்த ரதி ஒரு நாள் மினிபஸ்ஸில் போய் விட்டு வந்தபோதுமினிபஸ்ஸில் வேலை செய்த ஒரு இளைஞன் இவளிடம் தவறாக நடக்க முயன்றிருக்கிறான்.

 

ரதி அவனிடம்,"நீ அடுத்த முறை இப்பிடி செய்தால் உன்ர தலையில ஒரு குட்டு போட்டுட்டு இறக்கி      விட்டிருவன் " என ஏசிவிட்டு வந்ததாக கூறினாள்.

 

பிறகு ஒருநாள் ஹாஸ்டெலில் 'விதி' என்ற படத்தைப் போட்டார்கள்.மோகன்,பூர்ணிமா,சுஜாதா போன்றோர் நடித்த அருமையான திரைப்படம் அது!

 

அந்த படத்தில 'கல்யாணத்துக்கு முன்னால காதலிக்கிறது என்பது கயித்தில நடக்கிறது மாதிரி'என்ற ஒரு அருமையான வசனம் வரும்.நாங்கள் இளம் பெண்கள் எல்லோரும் கை  தட்டி மகிழ்ச்சியுடன் அந்த காட்சியையும் அந்தப்  படத்தையும் பார்த்து மகிழ்ந்தோம்.

 

அங்கு ஜாஸ்மின் என்று ஒரு பெண் தங்கியிருந்தாள்.அவள் கன்னியாஸ்திரீயாவதற்காக ஏதோ படிப்பு படித்துக் கொண்டிருந்தாள்.ஆனால் சில காலத்தின் பின் மனம் மாறி யாரையோ திருமணம் செய்து கொண்டாள்.

 

நானும் அந்த ஹாஸ்டெலில் ஆறே ஆறு மாதங்கள் தான் தங்கியிருந்தேன்.பின்னர் கொழும்பிற்கு வந்து இன்னொரு ஹாஸ்டெலில் தங்கியபடி படிப்பைத் தொடர்ந்தேன்.

 

யாழ்ப்பாண ஹாஸ்டெலில் தங்கி படித்து நான் எழுதிய CIMA மூன்றாம் பகுதி பரீட்சையில் எனக்கு கிடைத்த பெறுபேறுகள் 3Aயும் 1Bயும் ஆகும்.

 

யாழ்ப்பாண ஹாஸ்டெல் தோழிகள் எனது பெறுபேற்றைப் பார்த்து விட்டு,"உஷா,நீர் படுத்துப் படுத்துப் படிச்சே 3A 1B எடுத்திட்டீர்! படுக்காம படிச்சிருந்தா 4 A எடுத்திருக்கலாம் " என எழுதியிருந்தார்கள்.

 

இந்தக் கதையில் இடம் பெற்றிருக்கும் பெண்கள் அனைவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன.

 

இது வரை நான் எழுதியது என் வாழ்வின் ஒரு அங்கம் தான்! மிகுதி விரைவில் தொடரும்!

 

நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை என்பார்கள்! அது போல அக்கவுண்டன்டாக ஆசைப்பட்ட நான் இப்போது எழுத்தாளராகவும் வானொலி அறிவிப்பாளராகவும் கணக்கு மற்றும் தமிழ்,இந்து சமயம் கற்பிக்கும் ஆசிரியராகவும் கடமையாற்றுகிறேன்.

 

இதுதான் விதி எனக்கு அளித்த பரிசோ என்னவோ?!

 

                                                    xxx     


No comments: