வாசகர் முற்றம் – அங்கம் 13 கெக்கிராவையிலிருந்து மற்றும் ஒரு பெண் படைப்பாளி ரஞ்சிதா ! சிங்களப்பிரதேசத்திலிருந்து சிறகடிக்கும் தமிழ்குயில் !! முருகபூபதி


லங்கையில் வடக்கு கிழக்கு தமிழ்ப்பிரதேசங்களுக்கு அப்பால், மேற்கிலங்கை, தென்னிலங்கை ,  வடமத்திய மற்றும்  வடமேற்கு பிரதேசங்களிலும்   தமிழ் இலக்கியவாதிகளும் கலைஞர்களும்  உருவாகிவருவதை இனம்கண்டுகொண்ட மல்லிகை ஆசிரியர்  டொமினிக்ஜீவா, அவர்களை  மல்லிகையில் அறிமுகப்படுத்தி களம் அமைத்துக்கொடுத்து ஊக்கமளித்தார்.

1970 களில் மேற்குறிப்பிட்ட பிரதேசங்களிலிருந்து  புதுக்கவிதை எழுதும் கவிஞர்கள்  புற்றீசலாக புறப்பட்டனர்.  திக்குவல்லையிலிருந்து கமால்

, நீள்கரை நம்பி   உட்பட பல எழுத்தாளர்களும் புத்தளத்திலிருந்து சோலைக்குமரன் என்ற ஜவாத் மரைக்காரும்,  தில்லையடிச்செல்வனும் உடப்பிலிருந்து வீரசொக்கனும், அநுராதபுரத்திலிருந்து அன்பு ஜவர்ஷா, கெக்கிராவையிலிருந்து சஹானா,   சுலைகா  நீர்கொழும்பிலிருந்து முருகபூபதி, தேவா, செல்வரத்தினம், தருமலிங்கம், மினுவாங்கொடையிலிருந்து  நிலாம் , கொழும்பிலிருந்து மேமன்கவி ஆகியோரும் இலக்கிய உலகில் அறிமுகமானார்கள்.

இவர்கள் அறிமுகமான அதே காலப்பகுதியில் மு. பஷீர், நீர்கொழும்பூர் முத்துலிங்கம் ஆகியோரும் இலக்கியத்துறையில் பங்களிப்பு வழங்கினர்.   இந்தப்பின்னணிகளிலிருந்துதான், எனது வாசகர் முற்றம் தொடரின் 13  ஆவது அங்கத்தில் ஒரு புதிய இளம்தலைமுறை வாசகராகவும்,  வளர்ந்துவரும் எழுத்தாளராகவும் ஒருவரை அடையாளம் காண்பிக்க முன்வந்துள்ளேன்.

கடந்த மாதம் லண்டனில் வதியும் நூலகர் நடராஜா செல்வராஜாவின்  ஈழத்தின்  தமிழ் நாவல் இயல் – ஓர் ஆய்வுக்கையேடு நூல் வெளிவந்தபோது, அதுபற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை  “ படித்தோம் சொல்கின்றோம்  “ என்ற தொடரில் எழுதியிருந்தேன்.
அதனைப்படித்திருக்கும் சிவனேஸ் ரஞ்சிதா என்பவர் எனது மின்னஞ்சலில் தொடர்புகொண்டு குறிப்பிட்ட நூல்  பற்றி விசாரித்தார். அவருடைய வேண்டுகோளில் அவரது தேடல் உணர்வு வெளிப்பட்டது. அநேகமாக அவர் ஒரு பல்கலைக்கழக மாணவியாக அல்லது, விரிவுரையாளராக அப்படியும் இல்லாவிட்டால் ஆசிரியராக இருக்கலாம் என்று கற்பனை செய்துகொண்டு,  எங்கே இருந்து தொடர்புகொள்கிறீர்கள்...?  எனக்கேட்டேன்.

தான் அநுராதபுரத்திற்கு சமீபமாக இருக்கும் நகரமும் அற்ற கிராமமும் அற்ற கெக்கிராவ என்ற பிரதேசத்தை பூர்வீகமாக கொண்டிருக்கும் ஆசிரியை என்று அறிமுகப்படுத்தினார்.

எழுத்தாளர்கள் கெக்கிராவ சகானா, கெக்கிராவ சுலைகா ஆகியோரைத் தெரியுமா..? எனக்கேட்டிருந்தேன். அவர்கள் இருவரும் தனது ஆசிரியர்கள் என்ற பதில் வந்தது.

அதனையடுத்து ரஞ்சிதா ஒரு சிறுகதை எழுதி எனது பார்வைக்கு அனுப்பினார்.

அதில் எதிர்பாராமல் நேர்ந்திருந்த சிறு சிறு எழுத்துப்பிழைகளை திருத்திவிட்டு,   ஏதேனும் ஈழத்து இதழ்களுக்கு அல்லது இணைய இதழ்களுக்கு அனுப்புமாறு தெரிவித்து பதில் எழுதினேன்.

அதற்கான தொடர்பு மின்னஞ்சல் விபரங்கள் கேட்டிருந்தார். அவற்றையும் அனுப்பியிருந்தேன்.

இதுவெல்லாம் நிகழ்ந்து சுமார் ஒருவார காலத்தில் ரஞ்சிதாவிடமிருந்து


வந்திருந்த மற்றும் ஒரு பதிலில், மகிழ்ச்சியான செய்தியொன்றும் இணைந்திருந்தது.

அவர் எழுதியிருந்த குறிப்பிட்ட சிறுகதை இலங்கை தினக்குரல் வார இதழில் வெளியாகியிருக்கிறது. 

ரஞ்சிதாவின் பூர்வீகமே கெக்கிராவதான்.

தனது ஆரம்பக் கல்வியையும் இடைநிலைக்கல்வியையும் கெக்கிராவை பெப்டிஸ் தமிழ் வித்தியாலயத்திலும் உயர் கல்வியை கெக்கிராவை முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் பெற்றுக்கொண்டவர்.  பின்னர் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் தமிழ் மொழியை சிறப்பு பாடமாக நான்கு வருடங்கள் கற்றவர்.  தற்பொழுது களனிப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் மொழிப் பாடமாக சிங்களத்தை பயின்று வருவதோடு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதுத்தத்துவமாணி கற்கைக்கான பதிவை செய்துவிட்டு பாடநெறியை தொடர்வதற்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

மாணவப்பருவத்தில் எத்தகைய நூல்களை படிப்பதில் ஆர்வம் காண்பித்தீர்கள்..? எனக்கேட்டதும்,

 “ மாணவப் பருவத்தில் நூல்கள் மீது விருப்பம் இருந்தபோதும் பரீட்சையை மையமிட்ட கல்விமுறையால் மாணவப்பருவத்தில் சஞ்சிகைகளையோ படைப்பிலக்கியங்களையோ படிப்பதற்கு வாய்ப்புகிடைக்கவில்லை. ஆனால் மாணவர்களுக்கான கட்டுரை மஞ்சரிகளை வாசித்துள்ளேன். “ என்றார்.

 

ரஞ்சிதாவுக்கு  வாசிக்கும் பழக்கத்தை தூண்டியது யார்..?  எனக்கேட்டேன்.

வர் சொல்கிறார்:

 “ வீட்டுச் சூழலில் வாசிக்கும் பழக்கம் எனக்கு ஏற்படவில்லை. பாடசாலை நாட்களிலும் படிப்பு, விளையாட்டு என நாட்கள் கடந்தன.


பல்கலைக்கழகம் செல்வது எனது குறிக்கோளாக இருந்தமையால் பாடநூல்களே எனது உலகமாக இருந்தது. பல்கலைக்கழகம் சென்ற பின்னர் தமிழ்த்துறையில் கற்பித்த விரிவுரையாளர்களின் வழிகாட்டலினூடாக புனைகதை இலக்கியங்களை பாடநெறிக்காக கற்கும் கட்டாயத்தின்பேரில் வாசிக்கமுற்பட்டு,  பின்னர் தமிழ் படைப்பிலக்கியங்கள்பால் ஈடுபாடுகொண்டு நானாகவே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டேன்.

பின்னர் பத்திரிகை, சஞ்சிகைகளில்  சிறுகதை, கட்டுரை என பலவற்றையும்  வாசிக்கத்தொடங்கினேன். பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தூண்டுதலே என்னை வாசிப்பை நேசிக்க வைத்தது. அதன் பின்னர் எனது வாசிப்பித்திறனையும் கட்டுரை, சிறுகதை ஆகியவற்றை எழுதும் திறனையும் அவற்றை படைக்கும் நுட்பங்களையும் கற்றுத்தந்தது என்னுடைய மதிப்பிற்குரிய ஆசானும், எழுத்தாளரும், ஆய்வாளருமான  புயல். பெ.ஸ்ரீகந்தநேசன் அவர்கள் ஆவார்.

ஆசான் என்னும்போது சற்று இடைவெளியுடனேயே அவரது கற்பித்தலையும் வழிகாட்டலையும் ஒரு மாணவர்  பெறமுடியும். பயமும் மரியாதையும் சில தருணங்களில் ஐயங்களை தெளிவதற்கு தடையாக இருந்துவிடும். ஆனால் ஆசான் என்னும் புனிதமான உறவுக்கு அப்பால் சிறந்த நண்பனாக பழகும் எனது குருவின் சுபாவத்தினால் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் படைப்பிலக்கியங்கள் குறித்த விமர்சனங்களை துணிச்சலாக முன்வைக்க துணைநின்றது.

இன்றுவரை எனது எழுத்துக்களின் குறைநிறைகளை சுட்டிக்காட்டி எனது எழுத்தாளுமைக்கும் வாசிப்பு ஆர்வத்திற்கும் என்னுடைய ஆசான்வழிகாட்டியாக இருக்கின்றார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன்.

ஆக்க இலக்கிய பிரதிகளை எக்கால கட்டத்தில் படிக்கத் தொடங்கினீர்கள்…?

ஆக்க இலக்கிய பிரதிகளை வாசிக்கத்தொடங்கியது பல்கலைக்கழக காலகட்டத்தில்தான். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஜானகிராமன், மு.வரதராஜன், செங்கைஆழியான், கே.டானியல் என பல படைப்பாளிகளின் படைப்புக்களை வாசிக்கும் வாய்ப்பு பொன்னான பல்கலைக்கழக நாட்களில் மட்டுமே எனக்குக்  கிடைத்தது. முற்று முழுதாக நான் சிங்கள பிரதேசத்தில் வசித்துவருவதால் நூல்களைத் தேடிப் படிப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. ஆசைக்கு ஒரு தமிழ் நூலகம்கூட இப்பகுதியில் இல்லாதது வருத்தம் அளிப்பதுடன் கவலையாகவும் உள்ளது. சந்தர்ப்பம் கிடைக்கும்போது இணையத்தளங்களில் ஈழத்து நூல்களை தரவிறக்கம் செய்து மடிக்கணினியில் ஏற்றி வாசிக்கின்றேன்.

தொடக்கத்தில் உங்களுக்கு பிடித்தமான எழுத்தாளர் யார்..? ஏன்…?

கடந்தகாலகட்டங்களில் தமிழகத்திலும் இலங்கையிலும்  படைப்பிலக்கியங்களை எழுதி வந்த, வருகின்ற எழுத்தாளர்களுக்கு எல்லாம் ஞான குருவாக விளங்கியவர் ஜெயகாந்தன்தான். இதற்கு தக்க சான்றாக கெக்கிராவ சஹானா என்னும் படைப்பாளி ஜெயகாந்தனின் படைப்புக்களை பற்றி எழுதிய “சூழ ஓடும் நதி” என்னும் ஆய்வு நூலை குறிப்பிடலாம். என்னையும் ஜெயகாந்தனின் படைப்பிலக்கியங்கள் வெகுவாக பாதித்திருந்தது. அவர் எழுதிய அக்கினிப் பிரவேசம் என்னும் சிறுகதையை வாசித்தவுடன் மனதில் ஏற்பட்ட தாக்கம் பல சிறுகதைகளை தேடிச்செல்ல வழிசமைத்தது. தவறுகள் குற்றங்கள் அல்ல, அந்தரங்கம் புனிதமானது, தாம்பத்யம், இரண்டு குழந்தைகள், குறைபிறவி என அவரது  பல சிறுகதைகளை வாசிக்கும்போது அவரது பாத்திரங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் மீண்டும் மீண்டும் அவரது படைப்பிலக்கியங்களை வாசிக்கத்தூண்டியது.

இச்சிறுகதைகள் சமூகத்தில் நடைபெறும் அவலங்களை, தனிமனித உணர்வுகளை யதார்த்தபூர்வமாக தத்துவார்த்த நடையில் அவரவர் பக்கம் இருக்கும் நியாயங்களை கூறுகிற அதே தருணத்தில்,  கதையின் இறுதித் தருவாயில் ஏதோவொரு பாத்திரம் தனது தவறுக்காக வருந்துவதையும் சொல்லாமல் சொல்லிவிட்டுச் செல்கின்றது. இதனால் ஜெயகாந்தனின் படைப்பிலக்கியங்களை வாசிக்கும் ஆர்வம் எனக்குள் அரும்பியது.

முதலில் ஏதும் இதழ்களில் இலக்கிய பிரதிகள் எழுதிய அனுபவம் ஏதும் இருக்கிறதா..?

என்னுடைய எழுத்தாற்றலுக்கு முதல் முதல் அஸ்திவாரம் இட்டு வாய்ப்பு தந்தது. ஸ்ரீதர்சனம் என்னும் சஞ்சிகையாகும். என்னுடைய குரு புயல்,பெ.ஸ்ரீகந்தநேசன் அவர்களால் நடத்தப்பட்ட சஞ்சிகையில் “சர்வதேச அரங்கில் பெண்கள்” என்னும் கட்டுரையை எழுதினேன். உயர்தரம் படித்துவிட்டு பல்கலைக்கழக அனுமதிக்காக காத்துகொண்டிருக்கும்போதே எழுதும் முயற்சியில் ஈடுபட எனது குருவின் வழிகாட்டல் கிடைத்தது. அதன்பின்னர் இரண்டு கட்டுரைகளை ஸ்ரீதர்சனம் சஞ்சிகையில் எழுதினேன். அதன் பின்னர் யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் காலப்பகுதியில் உதயன், செஞ்சக்தி ஆகிய  பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி வந்தேன். அவற்றையும் என்னுடைய குருவின் உதவியோடு பிரசுரமாக்கும் வாய்ப்பு எட்டியது. பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளிவரும் முற்றம் என்னும் சஞ்சிகையிலும் எனது ஆய்வுக்கட்டுரை ஒன்று வெளிவந்தது. கீற்று இணையத்தளத்திற்கும் பல கட்டுரைகளை எழுதியுள்ளேன். தற்பொழுது யாழ்ப்பாணத்தில் வெளிவந்துகொண்டிருக்கும் ஜீவநதி சஞ்சிகையில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதிவருகிறேன். தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் தமிழ்விங் என்னும் இணையத்தளத்திலும் என்னுடைய பல சிறுகதைகள் வெளிவந்துள்ளன.

தொழில் துறையின் பின்னணி…?

பல்கலைக்கழக கல்வியை முடித்துக்கொண்டு ஒருவருடம் இலங்கை, களனிப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் சிங்கள மாணவர்களுக்கு தமிழ் மொழியை இரண்டாம் மொழியாக கற்பிக்கும் உதவி விரிவுரையாளராக பணியாற்றினேன். தற்பொழுது அரச சேவையில் ஒரு வருடகால பட்டதாரி பயிலுநராக பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கிறேன்.

வாசிப்பினால் கிடைக்கும் நன்மைகள்..?

வாசிப்பு மனித மூளையின் விருத்திக்கும் சிந்தனை வளர்ச்சிக்கும் சமூக மாற்றத்திற்கும் வழிகாட்டும் சிறந்த ஆசான். வாசிப்பதை எவன் ஒருவன் நிறுத்திவிடுகின்றானோ அவன் இப்பூமியில் நடைப்பிணமாக திரிகின்றான் என்பதே எனது கருத்து. ஒருவன் தன்னுடைய எழுத்தாற்றலை வளப்படுத்திக்கொள்ளவும் புதுமையான சிந்தனைகளை உருவாக்கிக்கொள்ளவும் புதிய படைப்பிலக்கியங்களை படைப்பதற்கும் உலக நடப்புக்களை அறிந்துகொள்ளவும் பேச்சாற்றலை விமர்சன ஆற்றலை மேம்படுத்திக்கொள்ளவும்  வாசிப்புத் திறன் அவசியமாகின்றது.

சமூக வலைத்தலங்கள் ( முகநூல் – வாட்ஸ் அப் ) தொடர்பாக உங்கள் அவதானம் என்ன..?  அவற்றின் சாதகம் – பாதகம் பற்றி சொல்லுங்கள் எனக்கேட்டதும், ரஞ்சிதா சொன்ன பதில்:

விஞ்ஞானத் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக இன்று உலகத்தை உள்ளங்கையில்கொண்டு வந்து பூகோலமயமாகியுள்ள உலகத்தில் சமூக வலைத்தளங்கள் எமது செயற்பாடுகளை, தேடல்களை, தொடர்பாடல்களை இலகுபடுத்தியுள்ளது என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. இவ்வாறான வளர்ச்சி மாற்றங்கள் எம்மை வளர்த்துக்கொள்வதற்காகவே அறிமுகப்படுத்தப்பட்டன. இணையத்திலே மின்நூல் வடிவில் நூல்களை வாசிக்க, நூல்களை பதிவிறக்கம் செய்ய, பத்திரிகைகளை வாசிக்க, உலக நடப்புகளை அறிய  சமூக வலைத்தளங்கள் துணைபுரிகின்றன. ஆனால் இன்று இச்சமூக வலைத்தளங்களே எமக்கு இயமனாக மாறிவிட்டதை பாலியல் ரீதியான வன்முறைகள், காணொளிகள், புகைப்படங்கள் முதலிய நாகரிகமற்ற செயல்கள் இளைஞர்களை பள்ளத்திற்குள் தள்ளிவிட்டுள்ளன. என்னைப் பொறுத்தவரையில் இன்றைய சமூக வலைத்தளங்களை ஒரு தனிமனிதன் சுதந்திரமாக பயன்படுத்தி பயனை பெற்றுக்கொள்வது பெரும் சவாலுக்குரிய ஒன்றாக மாறியுள்ளது. கையடக்கத் தொலைபேசிகளின் மீதான மோகம், சமூகவலைத்தளங்களின் தாக்கம் வளர்ந்து வரும் இளைய தலைமுறையினரின் வாசிப்பு பழக்கத்திற்கும் கல்வி அறிவிற்கும் பெரும் இடையூறாக மாறியுள்ளது.

தற்போது நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் படைப்பு..?

தற்பொழுது நான் அங்கர் சாம்ராஜ்யம் பற்றி கூறும் “அங்கஹாரம்” என்னும் வரலாற்று நாவல் ஒன்றை வாசித்துக்கொண்டிருக்கிறேன். சந்தர்ப்பம் கிடைக்கும்போது ஈழத்து படைப்புக்களையும் ஈழத்து படைப்பிலக்கிய கர்த்தாக்கள் பற்றியும் வாசித்துவருகின்றேன்.

கெக்கிரா ரஞ்சிதாவிடத்தில் இலக்கிய உலகம் மேலும் நிறைய எதிர்பார்க்கிறது. அவரால்  ஈழத்து இலக்கியத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்கமுடியும் என்ற நம்பிக்கையும் துளிர்க்கிறது.

ரஞ்சிதாவுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

---0---

  


No comments: