25 நவம்பர் 2020
அந்தகாரம், நெட்ஃப்ளிக்ஸில் தமிழிலும் தெலுங்கிலும் வெளியாகியிருக்கும் மேலும் ஓர் அமானுஷ்ய - த்ரில்லர் படம்.
வினோத்தின் (அர்ஜுன் தாஸ்) டெலிஃபோன் பழுதாகிவிட வேறு ஒரு போனை வைக்கிறார்கள் பி.எஸ்.என்.எல்காரர்கள். ஆனால், அந்த போன் வந்ததிலிருந்து வினோதிற்கு பல பிரச்சனைகள் வந்து சேர்கின்றன. யாரோ தொலைபேசியில் அழைத்து, அவரது ஆத்மாவை உடலிலிருந்து விடுவிக்கப் போவதாகச் சொல்கிறார்கள்.
பார்வையில்லாத இளைஞனான செல்வத்திற்கு (வினோத் கிஷன்) சிறுநீரகக் கோளாறு. சிறுநீரகத்தை மாற்றத் தேவைப்படும் ரூபாய்க்காக, ஒரு வீட்டிலிருக்கும் ஆவியை ஓட்டுவதற்கு ஒப்புக்கொள்கிறார் செல்வம். ஆனால், அது விபரீதமாக முடிகிறது.
மனநல நிபுணரான டாக்டர் இந்திரனின் (குமார் நடராஜன்) குடும்பத்தைக் கொன்றுவிட்டு, அவரையும் சுட்டுவிடுகிறார் ஒரு நோயாளி. மீண்டும் வரும் இந்திரன், வேறு மாதிரி நபராகிவிடுகிறார்.
இந்த மூன்று பேரின் கதையும் மற்ற இருவரோடு தொடர்புடையதாக இருக்கிறது. வினோத் பிரச்சனையிலிருந்து விடுபட்டாரா, செல்வம் என்ன ஆனார், மருத்துவர் இந்திரனின் வேறு மாதிரி ஆவது ஏன் என்பதை இந்த மூன்று மணி நேரப் படம் விளக்குகிறது.இந்தப் படத்தின் கதை, திரைக்கதை இரண்டுமே சிக்கலானது. வழக்கமாக 'நான் - லீனியர்' திரைப்படங்களைப் பார்ப்பவர்களுக்கு, இப்படி வெவ்வேறு கதைகள் ஒரு புள்ளியில் இணைவது ஒன்றும் புதிதாக இருக்காது. ஆனால் இந்தப் படத்தில், ஒவ்வொரு கதையின் காலமும் வெவ்வேறாக இருக்கிறது. இம்மாதிரி ஒரு திரைக்கதையை முயற்சிக்கவே மிகுந்த துணிச்சல் வேண்டும். அதைச் செய்திருக்கிறார் விக்னராஜன்.
ஆனால், முதல் பார்வையில் படத்தின் பல காட்சிகள் குழப்பமாக இருக்கின்றன. நிறைய பாத்திரங்கள் தொடர்ந்து அறிமுகமாவது, திரைக்கதை அடுத்தடுத்து வெவ்வேறு பாத்திரங்களை பின்தொடர்வது ஆகியவை மிகவும் தொந்தரவாக அமைகின்றன.
பார்வையாளர்கள் எந்த பாத்திரத்தைப் பிரதானமாக பின்தொடர வேண்டும், படத்தில் வரும் பல சிக்கல்களில் எது பிரதானமான சிக்கல் என்பதெல்லாம் வெகுநேரத்திற்குப் புரியவில்லை.
மேலும், பல காட்சிகள் மிக மெதுவாக நகர்கின்றன. ஒரு காட்சியில் ஒருவர் லிஃப்டில் ஏறி ஆறாவது மாடிக்குச் செல்கிறார் என்றால், நிஜமாகவே ஆறாவது மாடிக்கு செல்வதற்கு எவ்வளவு நேரம் ஆகுமோ அந்த அளவுக்கு அந்தக் காட்சி நீள்கிறது. அம்மாதிரி காட்சிகளில், ஏதாவது நடந்தாலாவது பரவாயில்லை. இப்படி நீளும் பல காட்சிகள், நம் பொறுமையைக் கடுமையாக சோதிக்கின்றன.
படத்தின் துவக்கத்திலிருந்து மிரட்டப்படுகிறார் வினோத். ஆனால், படத்தின் முடிவில் அதற்காகச் சொல்லப்படும் காரணம் உப்புச்சப்பில்லாமல் இருக்கிறது.
அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், குமார் நடராஜன் என படத்தில் வரும் எல்லோருமே நன்றாகவே நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு, பின்னணி இசை ஆகியவையும் பொருத்தமாக இருக்கின்றன.
மேலே சொன்ன பிரச்சனைகளை புறந்தள்ளிவிட்டு, பொறுமையாக தொடர்ந்து பார்த்தால், படம் நிறைவடையும்போது 'அட, பரவாயில்லையே' என்று தோன்றும். அமானுஷ்ய - த்ரில்லர் பட ரசிகர்கள் பார்க்கலாம்.
நன்றி பிபிசி தமிழ்
No comments:
Post a Comment