நாவலர் பெருமான்
'தங்கத் தாத்தா' நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அருளியது.
திருவருள் செய்த தமிழ்வள நாடு
செய்ய தவப் பயனே!
செந்தமிழ் மக்கள் புந்தியி னிக்குந்
தெள்ளமு தேதேனே!
வரமருள் சைவத் திருநெறி யுய்ய
வந்தருள் தேசிகனே!
வாடிய பழைய தமிழ்மொழி தழைய
மழைபொழி கலைமுகிலே!
பரமத திமிரக் குரைகடல் சுவறப்
பருகிடு தவமுனியே!
பரனருள் நீறுஞ்சிவமொழி வீறும்
பரவிட வருள்குருவே!
அருவளர் மதுரத் தமிழுரை நடைசெய்
ஐயா அடிபோற்றி
அறுமுகப் பெரும நாவல நாமத்
தரசே யடிபோற்றி!
தருமறை முறையுஞ் சிவமத நெறியுஞ்
தாய்மொழியும் வேறாய்த்
தவவழி மாறிப் பவவழி மீறித்
தலைதடு மாறுங்கால்
இருவரு முணரா வொருவன தருளால்
யாழ்ப்பா ணந்தழைய
இகபர முதவுங் திருநலை யூரில்
எழுதரு சூரியனே!
பரவரு பிரமச் சரியநன் னிலையிற்
பயிறரு சீரியனே
பலபல தமிழ்நல் பிழையற வுலகம்
பயனுற வருள்குரவா!
அருவளர் மதுரத் தமிழுரை நடைசெய்
ஐயா அடிபோற்றி
அறுமுகப் பெரும நாவல நாமத்
தரசே யடிபோற்றி!
வஞ்ச மனத்தர்க் கஞ்சா வுரனும்
மாறா மனநிலையும்
வைதிக சைவ நன்னெறி தழைய
வைத்திடு பேரன்பும்
செஞ்சொ லரங்கின் மஞ்சின் முழங்கிச்
சேரா ருளங்கூரச்
செப்பிடு மதுரச் சற்பிர சங்கத்
திப்பிய நாவலமும்
விஞ்சு மதிப்பும் நெஞ்சி னினைக்கின்
வேறெவ ருக்குண்டோ
மேவல ருட்குந் தூய்மை யொழுக்கம்
மேவிய பாவலனே!
அஞ்சு வளர்த்துச் செஞ்சொல் வளர்த்த
ஐயா அடிபோற்றி
அறுமுகப் பெரும நாவல நாமத்
தரசே யடிபோற்றி!
மந்திர ஞானப் புண்டர நீறு
மருவிய திருநுதலும்
மாசறு கண்ணின் மணியணி வடமும்
மலர்தரு மதிமுகமும்
தந்திர மெய்ந்நூல் வந்துறை கரமும்
தற்பர னருள்நாமத்
தருமறை யோதுந் திருமணி வாயுந்
தவசிவ வழகொழுகுஞ்
சுந்தர வடிவுங் கண்டுள மகிழுந்
தூய வரந்தருவாய்
சொற்பயில் கழகம் பற்பல நிறுவுந்
தொண்டர்க ளனுகூலா
அந்தமில் பெருமைக் கந்தபுராணத்
தன்பா வடிபோற்றி
அறுமுகப் பெரும நாவல நாமத்
தரசே யடிபோற்றி!
சொற்பெறு கடவுண் மெய்ப்பொரு ளென்பார்
சுத்தப் பொய்யென்பார்
துயருறு முயிரே பரசிவ மென்பார்
தொன்மைகள் பிழையென்பார்
நற்றமி ழிகழ்வார் ராரிய மிகழ்வார்
நல்லருண் மருளென்பார்
நலமிகு தொண்ட ரவலிரு முண்டே
நவையென வசை புகல்வார்
பற்பல விதமாய் மற்பொரு கின்றார்
பாரிலுள் ளோர்களெலாம்
பவமற விருமைப் பயனுற வொருநற்
பாதை தெரிந்தருளும்
அற்புத மதுரச் சொற்பயில் வுதவும்
ஐயா அடிபோற்றி
அறுமுகப் பெரும நாவல நாமத்
தரசே யடிபோற்றி!
வேறு
தெண்ணிலவு மலர்ந்தசடைச் சிவபெருமா
னருள்சைவச் சேவல்கூவ
எண்ணிலவு பரசமய விருள்விடிய
நீற்றினொளி யெங்கு மேவப்
பண்ணிலவு முத்தமிழ்ப்பங் கயமலர
வைந்தெழுத்துப் பணில மார்ப்ப
மண்ணிலவு நல்லைவரு நாவலனாஞ்
செழுஞ்சுடரை வணக்கஞ் செய்வாம்.
சீர்செய்த வாகமநூற் சிவநெறிசெய்
தவப்பயனுந் திருவார் நல்லை
ஊர்செய்த தவப்பயனு மொண்டமிழ்செய்
தவப்பயனு மோத வேலிப்
பார்செய்த தவப்பயனு மொன்றாகி
நல்லறிஞர் பரவி யேத்தும்
பேர்செய்த நாவலனா யவதரித்த
தெனும்பெருமை பேணி வாழ்வாம்.
அன்னநடை படியினடை யழகுநடை
யல்லவென வகற்றி யந்நாட்
பன்னமுது புலவரிடஞ் செய்யுணடை
பயின்றதமிழ்ப் பாவை யாட்கு
வன்னநடை வழங்குநடை வசனநடை
யெனப்பயிற்றி வைத்த வாசான்
மன்னுமருள் நாவலன்றன் னழியாநல்
லொழுக்கநடை வாழி! வாழி!.
சீர்தட்டும் புறச்சமயஞ் சேர்ந்தார்க
ளறுக்காறு செற்ற முள்ளோர்
ஆர்தட்டிப் பேசிடினு மொருசிறிது
மஞ்சாது முகில்போ லார்த்து
நேர்தட்டி விடையிறுத்துச் சபைநடுவே
யரியேறு நிகர்ப்ப நின்று
மார்தட்டிப் பிரசங்க மழைபொழியு
நாவலன்றாள் வாழி! வாழி!!.
மண்ணினாற் பெண்ணினாற் பொன்னினால்
வருகின்ற மாசு மூன்றுட்
பெண்ணினால் வருமாசு பெருகவருள்
புரிவேனிற் பெம்மான் றன்னை
வெண்ணிலா மலர்ந்த கொன்றை வேணியான்
முன்நாளில் வென்ற வாறு
கண்ணினா லன்றியுள்ளக் கருத்தினால்
வென்றவன்றாட் கமலம் வாழி!.
பார்மதித்த செந்தமிழ்நூ லேடுகளை
யாராய்ந்து பதிப்பித் தோர்கள்
ஆர்பதிப்பித் தாலுமங்கே பிழைநுழைத
லுண்டாகு மவைக ளின்றிச்
சீர்பதித்த நற்பதிப்பு நாவலர்தம்
பதிப்பென்று செப்பு மேன்மைப்
பேர்பதித்த பெருங்கல்விச் செல்வனிரு
சேவடிகள் பெரிதும் வாழி!.
தன்னவரும் பிறருமென்று சாராமே
நடுவுநிலை சார்ந்து நின்றே
அன்னவர்கள் வழுவியவை யஞ்சாது
வெளிப்படுத்தி யறிவை யூட்டு
முன்னவனே தமிழ்மக்கள் முதுநிதியே
கற்பகமே முடியாக் கல்வி
மன்னவனே யெனவாழ்த்த வந்துதித்த
நாவலன்றாள் வாழி! வாழி!!.
திருச்சிற்றம்பலம்.
'தமிழ் வளர்த்த சான்றோர் விழா' என்ற வரிசையிலே முதல் விழாவாக நல்லைநகர் தந்த ஆறுமுக நாவலர் பெருமானையும் நவாலியூர் தந்த 'தங்கத்தாத்தா' சோமசுந்தரப் புலவர் அவர்களையும் நினைவு கூர்ந்து 2013 ஆம் ஆண்டு சிட்னியிலே மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப் பெற்றது
No comments:
Post a Comment