இலங்கைச் செய்திகள்

தமிழர் பகுதிகளில் மீளவும் துரித கதியில் அபிவிருத்திகள் ஆரம்பம் 

தேசியப் பட்டியல் விவகாரம் குறித்து மனோ FBயில் கவலை

இது படமல்ல; உண்மை

25 புதிய அமைச்சுகள் மற்றும் அமைச்சரவை செயலாளர் நியமனம்

ஜீவன் தொண்டமான் கடமைகளை பொறுப்பேற்பு

இந்தியாவின் சுதந்திர தினம்; பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

ரணிலுடன் முறுகல்; செயற்குழு கூட்டத்தை தவிர்த்தார் அகில



தமிழர் பகுதிகளில் மீளவும் துரித கதியில் அபிவிருத்திகள் ஆரம்பம் 

இந்திய புரொன்ட்லைன் சஞ்சிகைக்கு பிரதமர் பேட்டி

வடக்கு, கிழக்கு உட்பட தமிழர் பகுதிகளில் தடைப்பட்டுப் போன அபிவிருத்தித் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு துரிதப்படுத்தப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் புரொன்ட்லைன் சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அந்த சஞ்சிகைக்கு அவர் மேலும் கூறுகையில்,

எனது முன்னைய ஆட்சியின் போது வடபகுதியில் இருந்த கடுமையான சூழ்நிலைகளின் மத்தியிலும் பெருமளவு அபிவிருத்தி பணிகளை செய்தேன். துரதிஷ்டவசமாக கடந்த சில வருடங்களாக குழப்பப்பட்ட இந்த அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் முன்னெடுக்கவுள்ளோம், துரிதப்படுத்தவுள்ளோம்.

இனம் மற்றும் கலாசார பின்னணிகளை கடந்து எங்கள் அரசாங்கம் அனைத்து பிரஜைகளினதும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் செயற்படும். மக்களின் வாழ்வாதாரம், விவசாயத்திற்கான நீர்ப்பாசனம், ஏற்றுமதிகளை தரமுயர்த்துதல், கல்வி மற்றும் மருத்துவமனைகளின் வசதிகள் தொடர்பில் அவசர முன்னுரிமைகள் வழங்குவதற்கான திட்டங்கள் எங்களிடம் உள்ளன எனக் கூறியுள்ளார்.   நன்றி தினகரன் 





தேசியப் பட்டியல் விவகாரம் குறித்து மனோ FBயில் கவலை

நமது மக்களில் இத்தனை நிறங்களா?

ஒரு கட்சி அமைத்து, இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்து, உயிர் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்து, சக தலைமை நண்பர்களுடன் இணைந்து, எமது அந்த அரசியல் இயந்திரத்தை, பல மாவட்டங்களுக்கு கூட்டணியாக வியாபித்து, தேசிய கூட்டணியின் பெரும்பான்மை தலைவர்களுடன் நட்புடன் வாதாடி, நியமனங்களை பெற்று, சொந்த சொத்துகளை விற்று, பல கோடி ரூபா தேர்தல் நிதியை கொட்டி, பற்பல ஆண்டுகளாக தேர்தல் பிரசாரங்களை தொடர்ச்சியாக செய்து, மக்களை வீடு வீடாக போய் சந்தித்து, வாக்காளர்களாக இருந்தும், தேர்தல்களில் எதிர்பார்த்த அளவு வாக்கை அளிக்காமல் சும்மாவே வீட்டில் "தல, தளபதி, நயன்தாரா" படம் பார்த்துக்கொண்டு இருந்த வாக்காள மக்களால் மனம் நொந்து, தேர்தலுக்கு பிறகு, தேசிய பட்டியல் தொடர்பில், அதே தேசிய கூட்டணி பெரும்பான்மை தலைமையுடன் முரண்பட்டு, வாதாடி கொண்டிருக்கிறேன். கொண்டிருக்கிறோம்.

இந்நிலையில் எமக்காக ஒரு துரும்பும்கூட எடுத்து போடாத, ஒரு சமூக ஊடக பதிவுகூட போடாத, எமது நடைமுறை கஷ்டங்களை உணராத, அதையும் மீறி சென்று, எமக்கு எதிராக பொய் பதிவுகளை எழுதி, பணம் வாங்கிக்கொண்டு, எமக்கு எதிரான அணியில் சேர்ந்து, கூசாமல் எமது வாக்கை சிதறடித்த, பாமரரில் இருந்து சுயாதீன மீடியாகாரர்கள் வரை, பலர் இன்று வலிக்காமல், “தேசிய பட்டியலை சண்டையிட்டு எடுங்கள்” என்றும், அதை எடுத்து, “இவருக்கு கொடுங்கள்” என்றும், “அவருக்கு கொடுக்க வேண்டாம்” என்றும் கூக்குரலிடுவதை பார்க்கும் போது, நமது மக்களில் இத்தனை நிறங்களா? என்றும், எமக்கு வேண்டிய வேளைகளில் இந்த “போராளிகள்” எங்கே போனார்கள்? என்று உரக்கக் கத்தி கேட்க தோன்றுகிறது.

(என் உடல் பலமாக இருந்தாலும், உள்ளம் முழுக்க சலிப்பு தட்டுகிறது..! அட சே, சீக்கிரம் விடை பெற்று செல்ல தோன்றுகிறது...)   நன்றி தினகரன் 






இது படமல்ல; உண்மை

முகநூலில் மனோ கணேசன் எம்.பி பாராட்டு

பிரதமர் பதவியேற்பு நிகழ்வில் கோட்டாபய ராஜபக்‌ஷ நடந்துகொண்ட விதத்தினை பார்த்து 'எனக்கு இப்படி ஒரு தம்பி இல்லையே' என ஏக்கமாக இருக்கிறது என  தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

பிறப்பால் "அண்ணா" என கூட வந்தவர்களும் சரி, இடையில் "அண்ணா" என கூட வந்தவர்களும் சரி, என்னை பயன்படுத்தி அரங்குக்கு வந்து விட்டு என் முதுகில் அல்லவா குத்துகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் 14ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று முன்தினம் பதவியேற்றார். இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ  தனது அண்ணனான பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை தலை சாய்த்து வணக்கம் தெரிவித்திருந்தார்.இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள மனோகணேசன், 'ராஜபக்ச சகோதரர் மத்தியில் முரண்பாடு. சும்மா படம் காட்டுகிறார்கள்' என்று எவரும் சொல்லலாம். ஆனால் இவ்வளவு நாள் படம் ஓட்ட முடியாது. இந்த பாசம்தான் இவர்களது வெற்றிக்கு அடிப்படை எனவும் அவர் குறிப்பிட்டார்.   நன்றி தினகரன் 






25 புதிய அமைச்சுகள் மற்றும் அமைச்சரவை செயலாளர் நியமனம்

25 புதிய அமைச்சுகள் மற்றும் அமைச்சரவை செயலாளர் நியமனம்--25-Ministry-Secretaries-Appointed
சுற்றாடல் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட வைத்தியர் அனில் ஜாசிங்க தனது நியமனக் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடமிருந்து பெற்றுக் கொண்ட போது...

புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்கள் 25இற்கு நியமிக்கப்பட்டுள்ள செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்  இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

அத்துடன் அமைச்சரவைச் செயலாளராக, டப்ளியு.எம்.டீ.ஜே. பெனாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் (12) அமைச்சரவை பதவிப்பிரமாணம் மேற்கொண்டதோடு, இதில் 28 அமைச்சுகள் மற்றும் 39 இராஜாங்க அமைச்சுகள் வழங்கப்பட்டிருந்தன.

அந்த வகையில் ஜனாதிபதியின் கீழ் பாதுகாப்பு அமைச்சும், பிரதமரின் கீழ் நிதி அமைச்சு உள்ளிட்ட 3 அமைச்சுகளும் வழங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் தற்போது 25 அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள,  புத்தசாசன, சமய மற்றும்‌ கலாசார அலுவல்கள்‌ அமைச்சு, அமைச்சர் அலி சப்ரிக்கு வழங்கப்பட்டுள்ள நீதி அமைச்சு, அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவிற்கு வழங்கப்பட்டுள்ள, துறைமுகங்கள்‌ மற்றும்‌ கற்பற்றுறை அமைச்சு ஆகியவற்றுக்கு செயலாளர்கள் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்கத்கது.

இதில் பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட ஒருசில அமைச்சுகளின் செயலாளர்கள் ஏற்கனவே அதே அமைச்சில் நியமிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சுகளின் செயலாளர்கள் விபரங்கள் பின்வருமாறு.
1. ஆர்.டப்ளியு.ஆர். பேமசிரி - நெடுஞ்சாலைகள் அமைச்சு
2. எஸ்.ஆர். ஆட்டிகல - நிதி அமைச்சு
3. ஜே.ஜே. ரத்னசிறி - அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
4. ஜகத் பீ. விஜேவீர - வெகுசன ஊடக அமைச்சு
5. ரவீந்திர ஹேவாவிதாரன - பெருந்தோட்டத்துறை அமைச்சு
6. டீ.எம். அநுர திஸாநாயக்க - நீர்ப்பாசன அமைச்சு
7. டப்ளியு..ஏ. சூலானந்த பெரேரா - கைத்தொழில் அமைச்சு
8. திருமதி. வசந்தா பெரேரா - மின்சக்தி அமைச்சு
9. எஸ். ஹெட்டியாரச்சி - சுற்றுலா அமைச்சு
10. ஆர்.ஏ.ஏ.கே. ரணவக - காணி அமைச்சு
11. எம்.பீ.டீ.யு.கே. மாபா பதிரண - தொழில் அமைச்சு
12. திருமதி. ஆர்.எம்.ஐ. ரத்நாயக்க - கடற்றொழில் அமைச்சு
13. மேஜர் ஜெனரால் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன - பாதுகாப்பு அமைச்சு
14. எம்.கே.பீ. ஹரிஸ்சந்திர - வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு
15. என்.பீ. மொன்டி ரணதுங்க - போக்குவரத்து அமைச்சு
16. கலாநிதி பிரியத் பந்து விக்ரம - நீர்வழங்கல் அமைச்சு
17. திருமதி. ஜே.எம்.பீ. ஜயவர்தன - வர்த்தக அமைச்சு
18. மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்ஹ - சுகாதார அமைச்சு
19. மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஏ.கே. சுமேத பெரேரா - கமத்தொழில் அமைச்சு
20. அநுராத விஜேகோன் - இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு
21. திருமதி. கே.டீ.ஆர். ஒல்கா - வலுசக்தி அமைச்சு
22. அத்மிரால் (ஓய்வுபெற்ற) ஜயநாத் கொலம்பகே - வெளிநாட்டலுவல்கள் அமைச்சு
23. வைத்தியர் அனில் ஜாசிங்க - சுற்றாடல் அமைச்சு
24. பேராசிரியர் கபில பெரேரா - கல்வி அமைச்சு
25. சிறிநிமல் பெரேரா - நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சு

நன்றி தினகரன் 






ஜீவன் தொண்டமான் கடமைகளை பொறுப்பேற்பு

படம் - கெலும் லியனகே

- “வேலை செய்யக்கூடிய நல்ல அமைச்சு ஒன்று கிடைத்துள்ளது”

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற ஜீவன் தொண்டமான், இன்று (14) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

கொழும்பு,கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் அவர் கடமை பொறுப்பேற்கும் நிகழ்வு இடம்பெற்றது.

கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், தோட்ட மக்களுக்கும் ஏனைய மக்களுக்கும் வேலை செய்யக்கூடிய நல்ல அமைச்சு ஒன்று இன்று எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த அமைச்சின் மூலம் எம் மீது நம்பிக்கை வைத்த தோட்ட மக்களுக்கும் அனைத்தின மக்களுக்கும் நல்லதொரு எதிர்காலத்தினை உருவாக்குவேன் என்றார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இந்த வேளையில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நன்றி கூற வேண்டும். என் மீது நம்பிக்கை வைத்து எனது தந்தையின் அமைச்சினை எனக்கு வழங்கியதற்காக. ஆகவே இந்த  அமைச்சின் மூலமாக மலையக மக்களுக்கும் ஏனைய மக்களுக்கும் சிறந்த ஒரு சேவையினை முன்னெடுப்பேன். இந்த நேரத்தில் எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கவும் கடமைப்பட்டுள்ளேன் என தெரிவித்தார்.

(ஹட்டன் கே.சுந்தரலிங்கம்) - நன்றி தினகரன் 







இந்தியாவின் சுதந்திர தினம்; பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

இந்தியாவின் 74 ஆவது சுதந்திர தினத்தையிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜ பக் ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அத்துடன் தற்போதைய நிலைமை சவாலான காலகட்டமாக இருக்கின்றபோதும் எமது இனங்களின் இறைமை மற்றும் சுதந்திரத்தை போற்றுவது இன்னும் முக்கியமானது என்பதுடன் இரு நாடுகளுக்கிடையேயுமுள்ள உறவுகள், நட்பு மேலும் வலுப்பெற வேண்டுமென்றும் ஜனாதிபதியும் பிரதமரும் தெரிவித்துள்ளனர். 

பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தினூடாகவே இந்த வாழ்த்தை அவர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச,பிரதமர் மஹிந்தவின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 'உங்கள் நல்வாழ்த்துக்களுக்காக நன்றி' இலங்கையுடன் நாங்கள் பகிர்ந்து கொள்ளும் நட்பின் சிறப்புப் பிணைப்புகளில் உறுதியாக இருக்கிறோம்.” என்றும் தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 







ரணிலுடன் முறுகல்; செயற்குழு கூட்டத்தை தவிர்த்தார் அகில

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் கலந்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்த செயற்குழுக் கூட்டம் நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அகில விராஜ் காரியவசத்திற்குமிடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையான நிலைமையை அடிப்படையாகக் கொண்டே அவர் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துக்கொள்ளவில்லையென கூறப்படுகிறது. 

ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக அகில விராஜ் ஊடகங்களிடம் கூறியமை தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க, கடுமையாக அவரை சாடியதாக தெரியவருகிறது. இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு வழங்குவது குறித்து ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தி வருவதாக பேசப்படுகிறது. சாகல ரத்நாயக்க, மிக நீண்டகாலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.   நன்றி தினகரன் 





No comments: