மெல்பன் கேசி தமிழ் மன்றத்தின் வாராந்த முற்றம் காணொளி ஒன்றுகூடல், வழமை போன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை 09 ஆம் திகதி மாலை மூன்று மணிக்கு ஆரம்பமானது.
மன்றத்தின் மூத்த அங்கத்தவர்கள் ஒவ்வொருவராக முற்றத்தில் ஒன்று சேர்ந்து ஒருவரோடொருவர் தங்கள் சுக நலன்களை விசாரித்து உரையாடல்களை மிகவும் உற்சாகமாக ஆரம்பித்த வேளையில், நான்கு மணியானபோது திரு ஆவூரான் சந்திரன் அவர்களும் தன் பங்களிப்பில் முன்தோன்றி அனைவருக்கும் வணக்கம் கூறி வானொலியின் ஆரம்ப நிகழ்வாக பிறந்தநாள் வாழ்த்துகளுடன் நிகழ்ச்சியை ஆரம்பித்தார்.
1921 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி பிறந்தவர்தான் கலைவளன் சிசு. நாகேந்திரன். அன்னார் மறைந்த பின்னர் அவருடை 99 ஆவது பிறந்த தினம் அதே ஓகஸ்ட் 09 ஆம் திகதி மன்றத்தின் காணொளி முற்றம் நிகழ்ச்சியில் நினைவுகூரப்பட்டது.
அவர் கேசி தமிழ் மன்றத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரும், கேசி மூத்தோர் ஒன்றுகூடல் நிகழ்வை மூத்தபிரசைகளுக்காக நிறுவுவதில் முனைப்பாக நின்று அதை ஆரம்பித்து தான் இயங்கும் காலம்வரை உடன் இருந்து நடத்தியவரும் ஆவார். கடந்த வருடம் இறுதியில் தனது 98 ஆவது வயதில் சிட்னியில் மறைந்த கலைவளன் சிசு நாகேந்திரன் அய்யாவை நினைவு கூர்ந்து ஒரு பாடலையும் ஒலிக்க வைத்து, அனைவர் நெஞ்சிலும் அய்யா அவர்கள் பற்றிய எண்ண ஓட்டங்களை ஆவூரான் சந்திரன் பதியவைத்தார்.
அடுத்து வந்த வாசகர்வட்டம் நிகழ்வில் மெல்பேர்ன் வாழ் எழுத்தாளர் திரு. கே. எஸ். சுதாகர் எழுதிய “ கற்றுக் கொள்வதற்கு” எனும் சிறுகதையை திருமதி உஷா சந்திரன் அவர்கள், அதன் கதையோடிணைந்த பசுமை நிறைந்த வியட்னாம் நாட்டின் பின்னனி காட்சிகளுடன் வாசித்து சமர்ப்பித்தார்.
அனைவரும் அமைதியாக இருந்து கேட்டு ரசித்துப் பார்த்து மகிழ்ந்தவேளை, கதாசிரியரான திரு. சுதாகர் அவர்களும் தோன்றி, திரு . ஆவூரான் சந்திரன் அவர்களுடன் உரையாடல் மூலம் தான் எழுதிய அக்கதையின் பின்னணியையும், அக்கதை இலங்கையிலிருந்து வெளிவரும் ஞானம் சஞ்சிகை நடத்திய போட்டியில் பரிசு பெற்ற விபரத்தையும் எடுத்துரைத்தார்.
அனைவரும் அவருக்குத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதை தொடர்ந்து, பத்திரிகை, சஞ்சிகைகள் வாசிப்பு தொடர்பான நிகழ்வின்போது தனது ஆரம்பகால வாசிப்பு அனுபவங்களுடன்அனைவராலும் தமிழ்ப்பொடியன் என அறியப்பட்ட திரு. ரமணன் தோன்றி, தனது ஆரம்பகால பத்திரிகை வாசிப்பின் அனுபவங்களை விபரித்தார்.
அந்த நாட்களில் கிராமங்களில் இருந்த கொட்டில் வாசிகசாலைகளின் சம்பவங்களை அனைவரும் மீட்டெடுக்கும் நிகழ்வாக அவரது பேச்சு அமைந்தது. தற்போது தான் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவற்றை வாசகர் நலன் கருதி வைபர் இணையவழி மூலம் வெளியிட்டு வருவதாகவும், எவ்வித கட்டணமுமின்றி விரும்பியவர்கள் வாசித்துப்பயன்பெறலாம் எனவும் எடுத்துரைத்து, தொடர்பாடலுக்குரிய விபரங்களையும் வெளிப்படுத்தினார்.
நெருடல் எனும் தலைப்பில் பேச இணைந்து கொண்ட இளையோர்களான செல்வன் நிருத்தன், மற்றும் செல்வி கீர்த்தனா ஆகிய இருவரும் புலம்பெயர்ந்ததனால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். புலத்தின் நினைவுகளின் தாக்கத்தைவிட தமிழ் இலக்கியம், இலக்கணம் போன்றவற்றை தொடர்ந்து கற்பதற்கு முடியவில்லையே எனும் ஆதங்கத்தை செல்வி கீர்த்தனா வெளிப்படுத்தினார்.
இங்கு தமிழ்ப் பாடசாலைகளில் VCE போட்டிப் பரீட்சைகளுடன் தமிழ் கற்பதற்கு, அதற்கும் அப்பால் மேலதிக ஒழுங்குகள் எதுவும் இல்லாத குறையையும் அவர் முன்வைத்தார். செல்வன் நிருத்தனும் அதே குறையை முன்வைத்தார்.
இவர்களின் உரையை அடுத்து கருத்துக்கூறிய எழுத்தாளர் திரு. முருகபூபதி அவர்களும், நடனம் பழகுபவர்களும் அரங்கேற்றம் முடிந்தவுடன் அந்தப் பக்கம் போவதில்லை என்பது போன்றதுதான் இங்கு தமிழ் கற்பிக்கும் முறையாகவும் இருக்கின்றது, இதை மாற்றி அமைப்பது பற்றி தற்போது பலரும் சிந்தித்துவருவதாகவும், விரைவில் இது பற்றி எம்மவர்கள் கவனமெடுப்பார்கள் என தான் நம்புவதாகவும் கூறினார்.
இன்றைய தேவை பற்றிய நிகழ்வாக இது அமைந்தது.
நகைச்சுவை நாயகன் சபார் நானா என அறியப்பட்ட திரு. ரவி பத்மனாதன் அடுத்துவந்தபோது “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குட்டி வந்ததென்று” என பதினாறு வயதினிலே படத்தில் வரும் பாடலைக் கேட்கச்செய்து தற்போதைய தேர்தல் நிகழ்வோடு அப்பாடலை நகைச்சுவையாக ஒப்பிட்டு கூறிவைத்தார்.
அத்தோடு பழம்பெரும்நடிகர் நடிகவேள் எம்.ஆர். ராதாவின் நையாண்டிப் பேச்சையும் மீட்டெடுத்து, அவர் நடித்த “சொந்தமுமில்லே பந்தமுமில்லே” பாடலையும் கேட்கவைத்தார். அவர் பேச்சில் அனைவரும் லயித்து மகிழ்ந்தனர்.
இறுதி நிகழ்வாக சிறுவர் அரங்கம் இடம்பெற்றது, செல்வி அபிதாரணி சந்திரனின் வழிகாட்டலில் நடந்த இந்நிகழ்வில் ராஜேஸ்குமார் - யசோ தம்பதியினரின் பிள்ளைகளான செல்வன் கவின், செல்வி வர்ணிகா, மற்றும் செல்வி தர்சிகா ஆகியோர் பங்கு பற்றி, செல்வி அபிதாரணியின் கேள்விகளுக்கு அழகாக தமிழில் நன்கு விளக்கி பதிலிறுத்தி, கணநாதா எனும் பாடலையும் பாடி அனைவரையும் தங்கள் தமிழ் பேச்சினால் தம்வயப்படுத்தி பாராட்டுதல்களை அள்ளிக் கொண்டார்கள்.
இடையிடையே செல்வன் துவாரகன் சந்திரனின் உதவியுடன் திரு. ஆவூரான் சந்திரன், பல பாடல்களையும் ஒலிக்கச்செய்து நிகழ்ச்சியை இரண்டு மணித்தியாலங்கள் தொய்வின்றி நடத்திச் சென்று அனவரையும் மகிழ்வித்து அன்றைய மாலைப் பொழுதை பொன்மாலைப் பொழுதாக்கி அனைவரதும் பாராட்டுதல்களையும் பெற்றுக் கொண்டார்.
---0---
No comments:
Post a Comment