இந்திய-சீன எல்லையில் உருவான இரு தரப்பு மோதலின் பின்னணி

 Saturday, August 15, 2020 - 6:00am

இருபது வீரர்கள் கொல்லப்பட்டமை மோடிக்கு ஏற்பட்ட பின்னடைவு

இந்தியாவின் வடக்கில் உள்ள லடாக் பிரதேசத்தில் இந்திய- சீன எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே அமைந்துள்ள இந்தியாவின் கல்வான பள்ளத்தாக்கில் இந்திய- சீனப் படைகளுக்கு இடையே கடந்த மே 5 ஆம் திகதி ஆரம்பித்த மோதல் கடந்த ஜூன் 15ம் திகதி உச்சக் கட்டத்தை அடைந்தது.

கல்வான் பள்ளத்தாக்கில் முன்னேறிய சீனப் படையினரை தடுத்து நிறுத்துவதற்காக இந்தியப் படைகள் ஜூன் 15 மற்றும் 16 ஆகிய தினங்களில் சீனப்படையினருடன் கைகலப்பில் ஈடுபட்டன.

எல்லைக் கோட்டுக்கு 2 கிலோ மீற்றர் தூரத்தினுள் துப்பாக்கி மற்றும் குண்டுகளை பாவிக்கக் கூடாது என்று 1996 இல் இரு நாடுகளும் ஒப்பந்தத்தை செய்துகொண்டிருந்ததால் இரு நாட்டுப் படையினரும் கற்கள், தடிகள் மற்றும் இரும்பு கம்பிகளைக் கொண்டு தாக்கிக் கொண்டனர்.

இந்த இரு நாள் மோதலில் இந்திய தரப்பில் ஒரு இராணுவ அதிகாரி உள்ளிட்ட 20 வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்திய அரசு அறிக்கை வெளியிட்டது. சீனாவின் தரப்பில் ஒரு இராணுவ அதிகாரி உள்ளிட்ட 43 வீரர்கள் காயமடைந்தோ அல்லது கொல்லப்பட்டோ இருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கூறின. மோதலின் போது சீனப் படையினர் பிடித்து வைத்திருந்த 10 இந்திய வீரர்கள் மற்றும் 4 அதிகாரிகளை சீன இராணுவம் ஜுன் 17 ஆம் திகதி விடுவித்தது.

இந்திய- சீன எல்லை மோதல்கள் நடைபெறுவதைத் தடுக்க கடந்த ஜுலை 5 ஆம் திகதி இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவுத் துறை அமைச்சருடன் இரண்டு மணி நேரம் தொலைபேசியில் பேசினார். இதனையடுத்து எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிலிருந்து சீனப் படைகள் இரண்டு கிலோமீற்றர் தூரத்துக்கு பின்வாங்கினர்.

இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே திடீரென இவ்வாறான மோதல் போக்கு ஏற்பட என்ன காரணம்?

கொரோனாவுக்குப் பிறகு உலக பங்குச் சந்தைகளில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. தெற்காசியாவில் உள்ள இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளின் உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப தேவைகளுக்காக சீனா பெருமளவில் கடன் கொடுக்கிறது. கடனைத் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், அதனை மூதலீடாக வைத்து நிலங்களையும், திட்டங்களையும் தனதாக்கிக் கொள்கிறது சீனா.

இந்நிலையில் இந்தியா திடீரென தனது அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகுக்கு பெரும் தீங்கை விளைவித்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் எங்கிருந்து ஆரம்பித்தது என்பது பற்றி சீனாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று 194 நாடுகள் அங்கம் வகிக்கும் உலக சுகாதார அமைப்பில் ஒரு தீர்மானம் முன்வைக்கப்பட்டது. பிற நாடுகளைப் போலவே இந்தியாவும் இந்த முன்மொழிவுக்கு ஆதரவு தெரிவித்தது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான கடந்த ஜூன் மாத மோதலுக்கு இவை காரணங்களாக இருக்கலாம். அத்துடன் வேறு காரணங்களும் இருக்கலாம். சீனாவும் பாகிஸ்தானும் எப்போதுமே இந்தியாவுடன் பகைமை உணர்வுடன் உள்ள நாடுகள்.

இந்த கோடை காலத்தில் சீனாவின் பெருமளவு அதிகரித்த சமூக ஊடக கணக்குகளில் இந்தியாவுடனான எல்லை மோதல்கள் தொடர்பாக போலித் தகவல்கள் வெளியாகின. இந்த போலித் தகவல்களின் பின்னணியில் பாகிஸ்தான் இயங்கி வந்திருப்பதாக இப்போது தெரிய வந்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போலித் தகவல்கள் டிவிட்டர், முகப்புத்தகம் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

டிவிட்டர் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் சீனாவை மையப்படுத்திய டிவிட்டர் கணக்குகள் பாகிஸ்தானியர்களினால் ஏற்படுத்தப்பட்ட கணக்குகளாகும். இவ்வாறான சில கணக்குகள் உருது மொழியிலும் இருந்தன. இதன்படி சீனா இராணுவ ரீதியிலும், பாகிஸ்தான் இணைய தளங்கள் மூலமாகவும் இந்தியாவுக்கு எதிராக தாக்குதலையும் மறுபுறம் போலித் தகவல் பிரசாரங்களையும் செய்து வந்துள்ளன.

வடக்கில் இந்திய – சீன இராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த கைகலப்புத் தாக்குதல் பாகிஸ்தானில் பெரிதும் பேசப்பட்ட ஒரு செய்தியாக இருந்தது. 45 வருடங்களில் முதல் முறையாக 20 இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்த செய்தி பாகிஸ்தான் மக்களிடையே மிகுந்த கவனத்தைப் பெற்றது.

இந்த நிகழ்வு குறித்த செய்திகள் சமூக ஊடகங்களில் வெளியாகின. டிவிட்டரில் வெளியான முதல் பத்து செய்திகளில் ஏழு லடாக் கைகலப்பு பற்றியதாக இருந்தது.

பாகிஸ்தானில் மேற்படி செயற்பாடு தொடர்பாக பலர் சமூக ஊடகங்களில் நகைச்சுவையாகவும் நையாண்டியாகவும் பதிவிட்டிருந்தனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசியல்வாதிகள் மற்றும் ஆய்வாளர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி பல டிவிட்கள் செய்யப்பட்டன.

சீனாவுக்கும் அதன் படைகளுக்கும் சவால் கொடுக்காமல் ஏன் இந்தியா அமைதி காக்கிறது என்று உசுப்பேற்றும் டிவிட்களும் செய்யப்பட்டிருந்தன. அத்துடன் இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சியின் வெளியுறவுக் கொள்கை பற்றியும் தீவிரமான கேள்விகள் எழுப்பப்பட்டன.

பல ஊடகங்களில் இந்த விவகாரம் முக்கியத் தலைப்புச் செய்தியாக இருந்தது. தொலைக்காட்சிகளின் முக்கிய நிகழ்ச்சிகளில் இந்த விவகாரத்துக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்றம் சுமத்தப்பட்டது. அத்துடன் மோடியின் விரிவாக்க கொள்கைகளின் விளைவாக இந்தியாவின் அனைத்து அண்டை நாடுகளுடனும் பதற்றம் நிலவுவதாக கூறப்பட்டது.

பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் றா மெஹமூத் குரேஷி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் ஏற்பட்ட மோதல் இந்திய அரசின் இந்துத்வா கொள்கையின் விளைவாக ஏற்பட்டது என்று கூறியிருந்தார். மே 9 ஆம் திகதி ஏற்பட்ட சிறு சண்டை இதனால்தான் இங்கு பெரிதாக மாறியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியிருந்தார்.

இந்தியா தனது அண்டை நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடிப்பது பாகிஸ்தானுக்கு சாதகமான விடயம் என்று பாகிஸ்தானிய செனட்டா முஸாஹித் ஹுசைன் சபித் தெரிவித்தார்.

லடாக்கில் தற்போது நிலவும் சூழல் காஷ்மீரில் ஓகஸ்ட் 5 ஆம் திகதி முதல் நிலவும் சூழலில் இருந்து ஆரம்பமாகிறது. இந்தியா வலுக்கட்டாயமாக காஷ்மீரையும் லடாக்கையும் பறித்தது. சீனாவும் லடாக்கில் உரிமை கோருகிறது. சீனாவில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான எந்த முயற்சியாக இருந்தாலும், அது ​ெஹாங்கொங்கோ, தாய்வானோ அல்லது இந்தியாவுடனான எல்லைப் பகுதியோ எதுவாக இருந்தாலும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

லடாக் பகுதியில் இந்தியா சவாலை முறியடிக்க அதன் இராணுவத்தை விரிவுபடுத்தியுள்ளது. ஆனால் அந்தப் பகுதி சீனாவின ‘வன் பெல்ட்- வன் ரோட்’ என்ற கட்டமைப்பு வளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதி. எனவே அவர்கள் தங்கள் பகுதியை மட்டும் பாதுகாக்கவில்லை. வளர்ச்சித் திட்டத்தையும் பாதுகாக்கின்றனர் என்று பாகிஸ்தானின் ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் குலாம் முஸ்தபா கூறியுள்ளார்.

அதேநேரம் பாகிஸ்தானில் வெளியான அனைத்து ஆங்கில மற்றும் உருது செய்தித் தாள்களிலும் இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டதுதான் முதற் பக்க செய்தியாக இருந்தது. சீன இராணுவத்தை தாக்கியதால் இந்தியர்கள் பெரும் விளைவை எதிர்கொண்டனர் என்று டெய்லி நவா-கி-வாக்ட் என்ற பத்திரிகை கூறியது.

இந்தியர்கள் இருமுறை எல்லைக் கோட்டை கடந்தனர். இதன் மூலம் சீன இராணுவத்தை தூண்டி விட்டனர் என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்தி தொடர்பாளர் சாவ் லிஜான் கூறியதாக இன்னொரு பத்திரிகை தெரிவித்தது.

(THE HINDU)
தமிழில்: என்.ராமலிங்கம்
நன்றி தினகரன் 

No comments: